ஒரு முறை ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
நேரம் ஆக ஆக அழுகை அதிகரித்தது. விசாரித்ததில் பக்கத்துப் பெட்டியில் இருக்கும் குழந்தை பசிக்காக அழுவதாகவும் கொண்டுவந்த பால் பவுடரைக் கலக்க முயற்சித்தும் குடுவையில் இருந்த சுடு தண்ணீர் தேவையான சூட்டில் இல்லை என்பதும் தெரிந்தது.
என்னென்னவோ செய்தும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை.
சில நிமிடங்கள் கழித்து ஒரு பெண் வந்தார். அந்தக் குழந்தையின் அம்மாவின் அருகே சென்றார்.
“நானும் ஒரு பாலுட்டும் தாய்தான். உங்களுக்குப் பிரச்னை இல்லைனா நானே குழந்தைக்குப் பால் கொடுக்கவா” என்றார்.
குழந்தையின் அழுகையை நிறுத்த வேறு வழி தெரியாத குழந்தையின் பெற்றோரும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
பால் குடிக்க ஆரம்பித்ததும் குழந்தை அழுகையை நிறுத்தியது.
பத்து வருடங்களுக்கு முன் இந்தச் சம்பவத்தை நேரில் கண்டு சிலிர்த்து நின்றேன். தாய்ப்பாலின் அருமையை எண்ணி வியந்தேன்.
“ம்ம்மாஆ ங்கா..” என்று என் மகள் அழுவது யாருக்கு எப்படிக் கேட்கிறதோ தெரியவில்லை. பிறந்து மூன்றாவது நாள் அவளின் அழுகை சத்தம் அம்மா ங்கா பால் கொடு என்றுதான் எனக்குப் புரிந்தது.
குழந்தை பிறந்து முதல் நாள் மயக்கத்திலே இருந்தேன். இரண்டாவது நாள் ஓரிரு முறை பால் கொடுக்க முயற்சித்தேன். உடல் வலி ஒருபுறம் இருக்க எழுந்து உட்கார முடியாமல் அந்த அளவிற்கு பால் கொடுக்க முடியவில்லை.
மூன்றாவது நாள் மார்பில் நெறி கட்டத் தொடங்கியது. கையில் அழுத்தி பீய்ச்சி பால் எடுத்தேன். சொட்டு சொட்டாகத்தான் பால் வந்தது. சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுத்து ஒவ்வொரு சொட்டையும் அழுத்தி எடுப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்தது. எடுத்த பாலைச் சங்கடையில் ஊற்றினார்கள். அப்போதே என் தாய்ப்பாலை பற்றிய விமர்சனங்களைச் சொல்ல ஆரம்பித்தனர்.
“என்ன பால் தண்ணி மாதிரி இருக்கு?”
“அரை டம்ளர்கூட வரல.. இது எப்படிப் பத்தும்?”
பிறந்த குழந்தைக்கு இன்னும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்கிறார்களோ!
இவர்கள் ஏற்படுத்தும் பதற்றத்தில் நிம்மதியாகப் பால்கூட எடுக்க முடியாது.
எப்படியோ என் குழந்தையைத் தானே வாய் வைத்து தாய்ப்பால் குடிக்கும்படிச் செய்தேன்.
“என்ன கொஞ்ச நேரம்தான் குடிக்கிறா இது எப்படிப் போதும்?”
“உடனே யூரின் போய்ட்டா இப்போ வயித்துல என்ன இருக்கும்”
“பால் குடிச்சும் அழுதுட்டே இருக்கே, பால் பத்தலையோ?”
இந்த விமர்சனங்களால் மனம் உடையும். வரும் தாய்ப்பால்கூட வராமல் போகும்.
நான் சரியான அம்மா இல்லை. என் குழந்தையின் வயிறு நிரம்பவில்லை. என்னால் தாய்ப்பால் தர முடியாது..
இது போன்ற எண்ணங்கள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
மருத்துவரிடம் சென்று குழந்தைக்கு என்ன தருவது எனக் கேட்டால் தாய்ப்பால் தவிர வேற எதுவுமே ஆறு மாதங்கள் வரை தரக்கூடாது என்கிறார். தாயின் உடல் நிலை சரியில்லாத போது, வெளியில் செல்லும் போது அவ்வப்போது தேவையான சமயங்களில் மட்டும் பவுடர் பால் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள். தாயின் பாலே குழந்தைக்குப் போதுமானதாக இருக்குமாம்.
ஆனால் பெரியவர்கள் குழந்தை பிறந்த நாளில் இருந்தே மாட்டுப் பால் கொடுக்க வற்புறுத்துகிறார்கள்.
இந்தத் தலைமுறை இடைவெளி இருக்கக் காரணம் என்ன?
அவர்கள் தங்கள் மகளுக்கும் மகனுக்கும் பேரனுக்கும் பேத்திக்கும் அப்படிக் கொடுத்துதான் வளர்த்திருக்கிறார்கள்.
இன்னும் பல பழக்கவழக்கங்களை இரண்டு தலைமுறைகளாகச் செய்துள்ளனர். நாங்களும் நன்றாகத்தான் வளர்ந்துள்ளோம். பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் சில விஷயங்கள் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உதாரணத்திற்கு அந்தக் காலத்தில் குழந்தைக்கு மாட்டுப்பால் கொடுத்தார்கள் தேன் கொடுத்தார்கள் பவுடர் அடித்து, பொட்டு வைத்தார்கள்.
மாட்டுப்பாலை ஒரு வயதிற்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குக் கொடுத்தால் அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பால் செரிமானக் கோளாறு ஏற்படலாம் என்கிறார்கள் தற்போதைய மருத்துவர்கள்.
பவுடர் அடிப்பதால் சுவாசக் குழாய் கோளாறுகள் ஏற்படும் என்கின்றனர். முந்தைய தலைமுறை குழந்தைகள் அதையும் எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்திருக்கலாம். அதனால் பவுடர் எதுவும் செய்யாமல் இருந்திருக்கலாம். ஓரிருவருக்கு இதனால் சுவாசப் பிரச்னை ஏற்பட்டும் இருக்கலாம். இப்போது அதெல்லாம் தவறு எனத் தெரிந்தும் ஏன் செய்ய வேண்டும்?
இதில் இருந்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க எவ்வளவு போராட வேண்டியுள்ளது.
முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலை மட்டும் கொடுக்க எவ்வளவு வாக்குவாதங்கள் செய்ய வேண்டியுள்ளது.
பாலைக் கொடுத்துவிட்டு அவளைத் தட்டிக் கொடுப்பேன். அப்போது அவள் சிறிது பாலைக் கக்குவாள். அப்படி அவள் செய்வதை என் வீட்டாரும் உறவினர்களும் காண வேண்டும் என அவள் வாயைத் துடைக்காமலே வைத்திருப்பேன். அப்போதாவது அவர்கள் குழந்தைக்கு வயிறு நிரம்பிவிட்டது என வாய் பேசாமல் இருப்பார்கள் என்பதற்காக. இந்த மாதிரி என்னென்னவெல்லாம் செய்து அவர்களுக்கு நிரூபிக்க வேண்டியுள்ளது.
உடல் எடை கூடவில்லை என்றால் அவ்வளவுதான். “உன் பாலில் ஒன்றுமே இல்லை. மாட்டுப் பாலோ பவுடர் பாலோ வேறு ஏதாவதோ கொடுத்தால்தான் எடை போடும்” என்பார்கள்.
யாரோ எங்கேயோ எதையோ கலந்து செய்யும் பவுடர் மேல் வைக்கும் நம்பிக்கை தாயின் மேல் இல்லையா?
தாய்ப்பாலின் மகிமையை இன்னுமா இந்த உலகிற்குக் கத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது?
சிலர் அதன் நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி அறிந்திருந்தாலும் பலர் இன்னும் தாய்ப்பால் நிகழ்த்தும் அற்புதங்களை அறிந்திருக்கவில்லை.
உடல்நிலை முடியாத போதும் இரவில் கண் விழித்துக் கொடுக்க முடியாதபோதும் பவுடர் பால் பெரும் உதவியாக இருந்துள்ளது. ஆனால் அதற்கும் பேச்சுகள் வரும்.
“குழந்தை அலறுது மீறி எப்படித்தான் தூக்கம் வருதோ?“ என்பார்கள்.
கஷ்டப்பட்டு முடிந்த வரை ஐந்து மாதங்கள் பால் மட்டும் கொடுத்துவிட்டு, ஆறாவது மாதம் திட உணவைக் குழந்தைக்கு ஊட்ட ஆரம்பிக்கும்போது அடுத்த அறிவுரை, “போதும் உன் பால நிறுத்திடு. அப்போதான் குழந்தை மத்த சாப்பாடு சாப்பிடும், உடம்பு போடும். இல்லைனா உன் பாலே குடிச்சிட்டு இருக்கும்.”
இதெல்லாம் யார் பிரச்னை… குழந்தையின் தாய் பார்த்துக்கொள்ள மாட்டாரா?
இவ்வளவையும் தாண்டி ஒரு பெண் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கப் போராடுகிறாளே… உண்மையில் தாய்ப்பால் கொடுப்பதில் அவள் உடலுக்கும் மனதுக்கும் எத்தனை சோதனைகள் இருக்கின்றன என்பதை அறிவீர்களா?
(சவால்களைச் சந்திப்போம்)
படைப்பாளர்:

ரேவதி பாலாஜி
சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.
அவசியமான கட்டுரை. இப்பொதெல்லாம் பாலூட்டும் தாய்மார்களுக்கு ( பால் எடுத்து வைப்பதற்கு) அலுவலகத்தில் இதற்காக தனி அறையும் குளிர்சாதன பெட்டியும் கொடுக்க வேண்டும் என்ற விதிகள் அமெரிக்காவில் வந்துவிட்டன.