“குழந்தைய எங்க கிட்ட கொடுத்துட்டு நீங்க கொஞ்சம் வெளிய இருங்க…”

“இல்ல நானும் கூடவே இருக்கேன்…”

“நீங்க பார்த்தா உங்களுக்குக் கஷ்டமா இருக்கும். உங்களை யாரு சமாதானம் பண்றது… வெளிய வெயிட் பண்ணுங்க.. ஐ.வி லைன் போட்டுட்டு கூப்பிட்றோம்” என்றார் செவிலியர்.

எங்களை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, கதவை மூடினார்கள். அறைக்குள் இருந்து அழும் சத்தம் கேட்டது. போகப்போகச் சத்தம் அதிகரித்துக் கொண்டே போனது.

அழுதேன்.

பதினைந்து நிமிடங்கள் இப்படியே நீண்டது. மகளின் அழுகைச் சத்தத்தைக் கேட்க முடியாமல் தவித்தேன். பின் கதவைத் திறந்தார்கள்.

“ரொம்ப அழுதுட்டா.. போய்ப் பால் கொடுங்க.. கை பத்திரம்.. ப்ளட் டெஸ்ட் எடுத்துட்டு இன்ஜெக்‌ஷன்லாம் அதுலதான் போடுவோம். எல்லாம் ஓகேனா ரிமூவ் பண்ணிடுவோம்.. அதுவரை பத்திரமா பாத்துக்கோங்க.. கையை ரொம்ப ஆட்டிடப் போறா” என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நான் உள்ளே ஓடினேன். என் கணவர் மீதியைக் கேட்டுக் கொண்டார்.

கையில் ஐ.வி. லைன் போட்டு அது ஆடாமல் அசையாமல் இருக்க ஸ்கேல் ஒன்றில் கட்டி வைத்திருந்தனர். அழுது அழுது அவள் முகமே வீங்கி இருந்தது. பால் குடிக்கத் தொடங்கியதும்தான் அமைதியானாள்.

என்னால் அமைதியாக முடியவில்லை. ஏற்கெனவே அவளுக்குக் காய்ச்சல். இப்போது இந்த ஊசியின் வலியை எப்படித் தாங்குவாள்? இன்னும் எவ்வளவு நேரத்திற்கு அவளை இப்படி நான் பார்ப்பது?

அவளை அணைத்துப் பிடிக்கக்கூட முடியவில்லை. கையில் இருக்கும் ஸ்கேல் இடித்தது. ஒரே பக்கமாக அவளைப் படுக்க வைத்து மிகவும் சிரமப்பட்டு, பால் கொடுத்தேன்.

“ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் வந்துடுச்சு ப்லேட்லட் கம்மியா இருக்கு.. குழந்தைக்கு இன்ஃபக்சன் ஆயிருக்கு.. ரெண்டு நாள் வெயிட் பண்ணிப் பார்ப்போம். நார்மல் ஆனப்புறம்தான் டிஸ்சார்ஜ் பண்ண முடியும்.”

“என்ன சொல்றீங்க.. பாப்பாக்கு என்ன பிரச்னை?”

“காய்ச்சல் இருக்கு.. கம்மியாகலா.. ப்லேட்லட் கம்மியாகுது.. டெங்கு டெஸ்ட் எடுக்கணும்…”

“ஒண்ணும் பிரச்னை இல்லல்ல டாக்டர், சரியாகிடும்ல.. ஏன் திடிர்னு இப்படி?”

“நீங்க பயப்பட வேண்டாம்.. பேபிக்கு பீட் பண்ணிட்டே இருங்க.. உங்க மில்க் ரொம்ப சப்போர்ட்டா இருக்கும்.. நாங்களும் மெடிசின் கொடுக்கறோம்.. வெயிட் பண்ணிப் பாப்போம்” என்று கூறிய மருத்துவர் அறையை விட்டுக் கிளம்பினார்.

என் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

என்ன தவறு செய்தோம்? ஏன் இவள் இங்கே இப்படி இருக்கிறாள்? அவளைத் தூக்கக்கூட சுதந்திரம் இல்லாமல் இப்படிப் படுத்திருக்கிறாள்.

அடுத்து சில நாட்களும் ரத்த அணுக்களின் எண்ணிக்கைக் குறையத்தான் செய்தது. டெங்குவும் இல்லை ஏன் குறைகிறது எனத் தெரியவில்லை. மற்ற சோதனைகளும் செய்து பார்ப்போம் என்றார் மருத்துவர்.

மருத்துவமனையின் கழிவறையிலேயே குளித்து,  அங்கேயே படுத்திருந்தேன். சாப்பிடப் பிடிக்கவில்லை.

இதுதான் புத்திர சோகமா!

விடிய விடிய தூங்க முடியவில்லை. அவள் கையில் இருக்கும் ட்ரிப்ஸில் மருந்து இறங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். தீர சிறிது நேரம் இருக்கும் போது செவிலியர்களை அழைப்பேன். அவர்கள் மாற்றிவிட்டுச் சென்ற பிறகும் தூக்கம் வராமல் கையையே பார்த்துக் கொண்டிருப்பேன். தூங்காததில் தலை கனத்து வலித்தது.

“நீ என்னடி கொண்டு வந்த? நானும் ரசம்தான்.. இல்லை ஆர்டர் பண்ணலாமா?” சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் செவிலியர்கள்.

சரிதானே.. அவர்கள் ஏன் சோகமாக இருக்க வேண்டும்?  அப்படியென்றால் தினம் தினம் அவர்கள் பல நோயாளிகளைப் பார்க்கிறார்கள், எல்லா நேரமும் பதட்டத்தோடு இருக்க வேண்டும் என்றால் அவர்கள் நிலை என்ன ஆவது?

நான் சோகமாக இருக்கிறேன் என்பதற்காக உலகமே இப்போது அப்படித்தான் இருக்க வேண்டும் என ஏன் எண்ண வேண்டும்.

மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்தார்கள். ஒவ்வொரு பரிசோதனை முடிவின் போதும் பதட்டத்துடன் அங்கும் இங்கும் அலைந்தேன். எப்போது இங்கிருந்து செல்வது?

“பாப்பாவுக்கு எல்லாம் ஓகேயா.. காய்ச்சல் பரவால்ல தானே.. எப்போ வீட்டுக்குப் போலாம்?” என்கிற கேள்வியை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

“டாக்டர் சொல்வாரு.. வெயிட் பண்ணுங்க” என்கிற பதில்தான் மீண்டும் மீண்டும் கிடைத்தது.

“ஐயோ யாராச்சம் வாங்களேன் என் புள்ளைக்கு தலைல இருந்து ரத்தம் கொட்டுது” என்று வெளியில் இருந்து ஒர் அம்மா கத்திக்கொண்டே உள்ளே ஓடி வந்தார். அவருடன் மூன்று வயது மகன் தலையில் ரத்தம் சொட்ட வந்தான்.

அவன் அழவில்லை. அவனுக்கும் சேர்த்து அந்த தாயே அழுது கொண்டிருந்தார்.

“ஏன்மா விழற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க.. இவ்ளோ ரத்தம் போயிருக்கு”  என்று ஏற்கெனவே அழுது கொண்டிருக்கும் அம்மா இந்த கேள்வியை எதிர்கொண்டார்.

இதை எப்படிப் பார்ப்பது? எந்தத் தாயாவது குழந்தை விழுவதைக் கண் எதிரே பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா?

போன மாதம்கூட என் மகள் நின்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாகச் சாய்ந்துவிட்டாள். தலையில் அடி, இரண்டு நாட்கள் கழித்துதான் வீக்கம் சரியானது. அவளுடன்தான் அமர்ந்திருந்தேன், கண் இமைக்கும் நொடியில் நிற்க முயற்சி செய்து தொப்பென விழுந்தாள்.

அதே மாதிரி ஏதோ ஒரு சூழலில்தானே இந்தக் குழந்தையும் விழுந்திருக்கும். குழந்தையைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்தான். அதற்காக இருபத்தி நான்கு மணி நேரமும் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? ஏற்கெனவே மகனின் ரத்தத்தைப் பார்த்து நொந்து கொண்டிருக்கும் தாயை மேலும் நோகடித்தனர்.

சிறிது நேரத்தில் ரத்தத்தைச் சுத்தம் செய்து, கட்டு போடப்பட்டு வெளியில் வந்தான். அதுவரை அந்தத் தாய் அழுதுகொண்டே இருந்தார். வெளியில் வந்தவனைக் கட்டிக்கொண்டார்.

மருத்துவமனையில் பல தாய்மார்கள் ஈரமான கண்களுடன்தான் இருந்தனர். பெற்றப் பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் தாயின் வாழ்வே மகிழ்வற்றுப் போகிறது. இன்னும் பல பிரச்னைகளுடன் பலரை மருத்துவமனையில் சந்திக்க நேர்ந்தது.

தொடர் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகள் மாத மாதம் மருத்துவமனைக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் குழந்தைகளைக் காணும் போது அவர்கள் குடும்பத்தாரை நினைத்து மனம் வருந்தியது.

“இப்போ எடுத்த ப்ளட் டெஸ்ட்ல ப்ளேட்லட் அதிகரிக்க ஆரம்பிச்சுடுச்சி.. டெம்பரேச்சர் நார்மலா இருக்கு.. இன்ஃபக்சன் ரேட்டும் கம்மியாடுச்சி.. பெட்டரா இருக்கா. இன்னிக்கிப் பார்த்துட்டு நாளைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்”  என்று மகளின் இதயத் துடிப்பைப் பரிசோதித்துக் கொண்டே மருத்துவர் கூறினார்.

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்.”

இனிமேல் மகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அது சரி, நம் கவனம் மட்டும் போதுமா! நம் கையில்தான் எல்லாம் உள்ளதா என்ன!

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.