“முன் எப்போதும் இல்லாத பேரழகை வயிற்றில் இருக்கும் குழந்தை எப்படித்தான் கர்ப்பிணிகளுக்கு அள்ளிக் கொடுக்கிறதோ!”

“முகத்தில் அப்படியொரு லட்சணம். தோலில் மினுமினுப்பு. கண்களில் ஒரு வசீகரம். இப்படித் தாய்மை பெண்களை எப்படி இவ்வளவு அழகாக்குகிறது?”

இப்படி எல்லாம் கருவுற்ற பெண்களை ‘அழகு’ என்று வர்ணிக்கிறது உலகம்.

கண்ணாடி வளையல்களின் சத்தத்தோடும் நிறைந்த வயிரோடும் நடந்து வரும் பெண்களைக் கண்டு வியந்துள்ளேன். பெண்களே பெண்களை ரசிக்கும் தருணம் என நினைத்திருக்கிறேன்.

எனக்கும் அப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்கிற ஆசை எட்டிப் பார்க்கும். திருமணம் ஆனவுடன் நெருங்கிய தோழிகள் என்னிடம் சில அறிவுரைகளைக் கூறினார்கள்.

“கொஞ்ச நாள் கழிச்சே குழந்தை பெத்துக்கோ.”

“குழந்தை பொறந்துட்டா நீ எங்கயும் போக முடியாது, இப்பவே நல்லா ஊர் சுத்திக்கோ.”

“குழந்தை வந்ததுக்கு அப்புறம் உனக்குத் தோன்றதெல்லாம் பண்ண முடியாது. உன் கரியர கொஞ்சம் டெவலப் பண்ணிட்டுப் பெத்துக்கோ.”

இவர்கள் இப்படிக் கூறும்போது ஒருவித பயம் தோன்றினாலும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை அப்படியே இருந்தது.

ஒவ்வொருவர் சூழலும் ஒவ்வொரு மாதிரி, எதுவாயினும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியம். அதையும் தாண்டி குழந்தை மீதான ஏக்கம்.

குழந்தை இருக்கும் வீடு என்றாலே சந்தோஷம்தானே! அதனுடைய முகமும் வாசனையும் சிரிப்பும் மென்மையும் அனுபவிக்க நாட்கள் போதுமா!

திருமணம் ஆன நான்கு, ஐந்து மாதங்களுக்கு விருந்துகளுக்கும் சுற்றுலாக்களுக்கும் சென்று வந்தோம். அதுவரை எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. பின் ஆறாவது மாதத்தில் இருந்து குழந்தைப் பேறை நினைத்து ஏங்க ஆரம்பித்தது மனம். நான் மனதளவில் அம்மா ஸ்தானத்தைப் பெறத் தயாரானேன. சில மாதங்களில் கர்ப்பமும் உறுதி ஆனது.

எல்லாரும் கேட்டப்படி குட் நியூஸ் சொல்லப்பட்டுவிட்டது.

குடும்பமே என்னைக் கொண்டாடியது.

பெற்றோர்களுக்குப் பேரப் பிள்ளையைக் காணப் போகும் மகிழ்ச்சி.

குழந்தையைப் பெற்று எடுத்தால் போதும், இவர்களே பார்த்துக் கொள்வார்கள் என நம்பினேன். அப்புறம் என்ன வேலைகளைப் பகிர்ந்து செய்து குழந்தையை எளிதாக வளர்த்து விடலாம் என உறுதிகொண்டேன்.

தாய்மை

வாழ்கென தூய

செந்தமிழ் பாடல்

பாட மாட்டாயோ

திருநாள் இந்த

ஒரு நாள் இதில் பல

நாள் கண்ட சுகமே

தினமும் ஒரு கனமும்

இதை மறவா எந்தன்

மனமே

தாய்மையைப் போற்றும் திரையிசை பாடல்களையெல்லாம் கேட்கும்போது பூரித்துப் போனேன்.

’பசங்க இரண்டு’ திரைப்படத்தில் அமலாபால் கர்ப்பமாக இருக்கும்போது தன் குழந்தையிடம் பேசி மகிழ்வது போல நானும் என் கணவரும் குழந்தையை அன்போடு கருவில் இருந்தே வளர்த்தோம்.

வாந்தி, மயக்கம், உடல் வலி போன்ற உபாதைகள் இருந்தாலும் மனம் சோர்வடையவில்லை. உள்ளுக்குள் விந்தைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த குழந்தையை எண்ணி எண்ணி வியந்தேன்.

என்னைக் காலால் உதைத்து, தலையால் முட்டி, விரல்களால் வருடி என்னுள் வளர்ந்து கொண்டிருக்கும் எங்கள் குழந்தையை எப்பொழுது கையில் தொட்டு வாங்கப் போகிறோம் என ஏங்கினேன்.

முகம் என்னைப் போல் இருக்குமா, இல்லை அவரைப் போலா? எங்கள் சாடையில் இந்தப் பூமிக்கு இன்னோர் உயிர் வரப்போகிறதா… அதைச் சீக்கிரம் காணத் துடித்தேன்.

இன்னும் எட்டு மாதங்கள்… ஏழு மாதங்கள்… ஆறு… ஐந்து… இரண்டு… இதோ பிரசவ தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இப்பவே நல்லா தூங்கிக்கோ, சாப்பிட்டுக்கோ என்றார்கள். என் குழந்தையைக் கையில் வாங்கப் போகிறேன் சாப்பாடு முக்கியமாம், தூக்கம் முக்கியமாம். யாருக்கு வேண்டும் அதெல்லாம். நாள் முழுவதும்கூடத் தூக்கிக் கையிலேயே வைத்திருப்பேன் என்று சிலாகித்துக் கொண்டேன்.

நான் கனவில் கண்ட நாளும் வந்தது. எங்கள் சொர்க்கம் எங்கள் கைக்குக் கிட்டியது.

மயக்க நிலையில் இருந்த என்னிடம் குழந்தையின் முகத்தை முதன்முதலில் காட்டும் போது மெய் சிலிர்த்துப் போனேன். முன்பு அப்படியோர் ஆனந்ததத்தை நான் அடைந்ததே இல்லை. காற்றில் மிதப்பது போல் உணர்ந்தேன்.

‘என்னில் இருந்து வந்தவளா நீ! நாங்கள்தான் உனக்கு உயிரும் உடலும் கொடுத்தோமா! எங்களைப் பிரதிபலிக்க வந்த எங்கள் காதலின் அடையாளமா நீ!’ என்று அவளை எண்ணி இன்புற்றேன்.

மயக்க நிலையில் உறங்கிப் போனேன். மீண்டும் கண் விழித்துப் பார்க்கும்போது என் குழந்தையின் அழுகை சத்தம் வீர்வீர் என்று என் காதுகளில் ஒலித்தது. என்னால் அதைக் கேட்கவே முடியவில்லை. உடல் நடுங்கிற்று. மனம் பதற்றம் அடைந்தது. என்ன செய்வதெனப் பயந்தேன்.

என் மனதில் இருந்த மகிழ்ச்சியின் நிலை கொஞ்சம் கீழிறங்கியது. கர்ப்பமாக இருக்கும்போது என்னுள் ஒட்டியிருந்த பரவசம் காணாமல் போயிருந்தது.

ஏதோ ஒரு மாற்றம் எனக்குள் நிகழ்ந்திருப்பதை என்னால் கண்கூடாக உணரமுடிந்தது. அந்த மாற்றம் எனக்கு மன அழுத்தத்தைத் தந்தது. இன்னொரு புறம் உடல் வலி என்னை வாட்டியது.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்றால் சரியாகிவிடும் என நம்பினேன். ஆனால் அடுத்தடுத்து வந்த நாட்கள் என்னை மிகவும் அச்சுறுத்தின.

நான் ஆசைப்பட்டது என் கையில் கிடைத்திருக்கிறது. அப்புறம் ஏன் இத்தனை கவலை, இத்தனை கோபம், இத்தனை அழுகை. எதுவும் புரியவில்லை.

போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன் என்பது உண்மைதானா? மகப்பேற்று இறுக்கம் எனச் சொல்லப்படும் பிரசவத்திற்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தத்தால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேனா!

என்ன குறை எனக்கு மன அழுத்தம் வரும் அளவிற்கு என்று தோன்றினாலும் இன்னொரு புறம் பல எண்ணங்கள் என்னை அழுத்திக் கொண்டுதான் இருந்தன.

பசித்தவுடன் உண்ண முடியவில்லை. தூக்கம் வரும்போது தூங்க முடியவில்லை. நிதானமாக குளிக்க முடியவில்லை. கழிவறையில் சிறிது நேரம் இருக்க முடியவில்லை. 

குழந்தைக்காகத்தான் எல்லாம் என்றாலும் இதற்கு முன் இருந்த வாழ்க்கை முறை மொத்தமும் மாறிவிட்டது போல் இருந்தது. இதை எப்படி எதிர்கொள்வதென்று குழம்பினேன்.

எல்லாம் சில நாட்களுக்குத்தான். சீக்கிரமே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். யாவும் நன்மைக்கே என்றார்கள். ஆனால் அதற்குள் புதிய தாய்மார்கள் சந்திக்கும் சவால்கள் எத்தனை எத்தனை. அதைப் பற்றி அவ்வப்போது சிலர் பேசினாலும் இந்த மன அழுத்தம் பெரிதாகக் குறைந்தபாடில்லை. சந்திக்கும் சவால்கள் ஒன்றல்ல… இரண்டல்ல…

புதிய தாயின் சவால்களை அவ்வளவு எளிதாகப் புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கடினமான பாதையைப் பற்றிப் பேச வேண்டியது அவசியமென எண்ணுகிறேன். ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தட்டிக் கொடுக்கும் நல் விதமாக. எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதோ?

நான் ஒரு புதிய தாயாக அனுபவித்து உணர்ந்ததை நேர்மறையாக பகிரவிருக்கிறேன். சவால்களைச் சந்திப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.