சில வருடங்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு பெண் அப்போதுதான் ஒரு விபத்தில் கணவரை இழந்திருந்தார். அவர்களுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு சிறு குழந்தைகள். அந்தப் பெண்ணும் சிறு வயதுதான். கணவர் பணிபுரிந்த இடத்தில் இழப்பீட்டு தொகை பெற வேண்டி வந்திருந்தார். நான் மல்லிகைச் சரத்தைக் கொஞ்சம் கிள்ளி அவரிடம் கொடுத்தேன். அவசரமாக மறுத்தார். காரணம் கேட்டதற்கு, “யாராச்சும் ஏதாவது சொல்லுவாங்கக்கா. வேணாம்” என்றார்.
“அப்போ, உனக்குப் பூ வெச்சுக்க விருப்பம் தானே… யாரோ என்னவோ சொல்லிட்டுப் போகட்டும்” என்று சொன்னதற்குப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஆனால், கண்கள் அந்தப் பூச்சரத்திலே தான் இருந்தது. பொட்டும் வைத்துக்கொள்ளவில்லை. நல்லவேளை புடவை வண்ணத்தில் தான் கட்டியிருந்தார்.
அவ்வப்போது போனில் தொடர்புகொண்டு நலம் விசாரிப்பார். அப்படி ஒருமுறை பேசும்போது, “ஏன்மா, நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?” என்றேன். அதிர்ச்சியடைந்தவர், “ரெண்டு குழந்தைகளோட இருக்குற என்னை யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க?” என்றவர்,”அதெல்லாம் வேணாங்க்கா” என்றார் குரல் கம்ம. அதிலிருந்தே இந்தச் சமூகத்தின் மீது அவருக்கிருந்த பயம் தெரிந்தது. அவருக்கு அடிமனதில் மறுமணம் செய்யும் எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால், சமுதாயம் என்ன சொல்லுமோ, உறவினர்கள் என்ன பேசுவார்களோ என்று தேவையற்ற அச்சத்தினால் அவர் இன்றுவரை மறுமணம் செய்துகொள்ளவில்லை.
அவரது வீட்டில் பெற்றோருக்கும் தம்பிக்கும் அவர் சுமையாகத் தோன்ற ஆரம்பித்த பொழுதில் சுதாரித்துக்கொண்டவர், ‘லேப் டெக்னீஷியன்’ படிப்பை முடித்து ஒரு வேலையைத் தேடிக்கொண்டு. அம்மா வீட்டிற்கு அருகிலேயே ஒரு சிறிய வீட்டுக்குத் தன் குழந்தைகளுடன் தனியாகப் போய்விட்டார். இன்று தனது மகளைக் கல்லூரியிலும் மகனைப் பள்ளியிலும் தன் சுயமுயற்சியால் படிக்க வைக்கிறார். அது ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் அந்த வயதுக்கே உரிய மகிழ்ச்சிகளை அவர் இழந்தது வருத்தமாகத் தான் இருக்கிறது.
கணவனை இழந்த பெண் நல்ல ஆடை அணிய, பூ பொட்டு வைத்துக் கொள்ள, சிரித்த முகமாக இருக்கத்தான் இந்தச் சமுதாயத்தில் எத்தனை தடைகள்? கணவன் இல்லையென்றாலே அவள் உணவில்கூட உணர்ச்சிகளைத் தூண்டாத உணவுதான் உண்ண நிர்பந்திக்கப்படுகிறாள். இது எத்தகைய காட்டுமிராண்டித்தனம்?
எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் அந்தப் பெண்மணி நடுத்தர வயதில் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அவர்களுக்குக் கல்லூரி செல்லும் வயதிலும் பள்ளியிறுதி பயிலும் வயதிலும் இரண்டு மகன்கள். நடுத்தர வயதைத் தாண்டியிருந்தவருக்கு அடுத்த மாதமே அவரது தாயார் ஒரு கோயிலில் எளிமையாகத் திருமணம் செய்து வைத்துவிட்டார். சுற்றியிருந்தவர்கள், “பாவம் அவரு, சாப்பாட்டுக்கும் வீட்டைப் பார்த்துக்கறதுக்கும் ஒரு ஆளு வேண்டாமா?” என்றதோடு நிறுத்திக்கொண்டனர்.
இங்கே ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்றுதான் விதித்திருக்கிறது. வாழ வழியில்லாத அந்தப் பெண் தன் கணவனை இழந்த பின்பு படித்து வேலைக்குச் சென்று குழந்தைகளைக் காப்பாற்றுகிறார். இளம் வயது வேறு. ஆனால், அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்படுகிறது. வயதான ஆண் தனக்கென துணை தேடுவது அனுதாபமாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கண்ணோட்டம் எந்த யுகத்தில் மாறப் போகிறது?
வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழ்வது நல்ல விஷயம்தான். ஆனால், எத்தனை பேருக்கு அது வாய்க்கும்? ஒரு மணம் ஒத்துவராமல் போகும்போது மறுமணம் சாத்தியமென்றால் நிச்சயம் செய்துகொள்ளலாம். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப் பார்ப்பது மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் இங்கே நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களது பொழுது போகாத வெட்டிப் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல் தள்ளத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆண்களுக்கு இங்கே மறுமணம் மிகவும் சுலபம். ‘பெண்டாட்டி செத்தவன் புது மாப்பிள்ளை’ என்ற பழமொழிகூட உண்டு. மனைவியைப் புதைத்த இடத்தில் புல் முளைக்கும் முன்பு மறுமணம் புரிந்தவர்கள் நிறைய உண்டு. பால்ய விவாகத்தில் துணை இழந்தவர்கள், இளம் வயதில் கணவனை இழ்நதவர்கள் என்று பெண்கள்தாம் தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு வாழ வேண்டும். இந்தச் சமுதாயம் அப்படித்தான் அவர்களை அடக்கி வைத்திருக்கிறது. மீறுபவர்கள் மிகச் சிலரே. அவர்களின் மீதும் அவதூறு சொல்ல இந்தச் சமுதாயம் தனது நாவைக் கூர்தீட்டி வைத்திருக்கிறது.
எங்கள் உறவினர் மகன் திருமணமாகி ஒரே மாதத்தில் கணவனை இழந்த ஒரு பெண்ணை மணம்புரிந்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள். இப்போது அவளுக்குக் கல்லூரி செல்லும் வயது. அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு மதிப்பு உண்டாகும். தான் வாழ்க்கை கொடுத்ததாக எப்போதும் அவர் சொன்னதேயில்லை. இத்தகைய பெருந்தன்மையான மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. மறுமணம் தவறில்லை என்பது இப்போதுதான் மெல்லப் பரவத் தொடங்கியிருக்கிறது.
ஆனாலும் மறுமணம் கணவனுக்குச் செய்யும் துரோகம் என்றுதான் இந்த நீலம் பாரித்த சமூகம் பெண்களின் மூளைகளைச் சலவை செய்து வைத்திருக்கிறது. மறுமணம் செய்த பெண்களைக் குறித்து கிசுகிசு பரப்புவது இத்தகைய ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் உழலும் பெண்கள் தாம்.
ஓர் ஆண் தனது மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறான். அல்லது பல பெண்களுடன் தொடர்புகொண்டிருக்கிறான். அதையெல்லாம் கண்டிக்காமல், ‘ஆம்பளைன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வான். என்ன பண்றது?’ என்று சொல்லும் இதே சமுதாயம் தான் துணையில்லாத ஒரு பெண் முறையான மறுமணம் குறித்து யோசித்தால் முந்தி வந்து மூக்கை நுழைத்து தீர்ப்புச் சொல்கிறது.
பெண் மறுமணம் செய்துகொள்ள முடிவு செய்ய எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அது எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மறுமணம் செய்யக் கூடாது என்று எந்த மதமும் சொன்னதில்லை. மதங்களின் பெயரில் அராஜகம் செய்யும் மதகுருக்கள் தான் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள்.
கணவன் இறந்துவிட்டால் பெண்கள் மறுமணம் புரியலாம் என்று இந்துச் சட்டம் பரிந்துரை செய்த போதும், மறுமணம் செய்தால் அந்தப் பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டதோடு, குழந்தைகள் பிறந்தால் அவர்களைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பெறப்பட்ட குழந்தைகள் என்று அவதூறு பேசும் நிலை அப்படியே இருந்தது. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெரு முயற்சியால் இந்து திருமணச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டு, பெண்ணுக்குச் சொத்துரிமையும், மறுமணத்தில் பிறந்த குழந்தைகள் சட்டப்பூர்வமான குழந்தைகளே என்ற சட்ட அங்கீகாரமும் 1956-ம் ஆண்டு முதல் கிடைத்தன. இந்து விதவை மறுமணச் சட்டம் அவசியமற்றதாகி, காலாவதியான சட்டம் என்பதால் 1983-ம் ஆண்டு சட்டப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டது. இதற்காகக் குரல் கொடுத்த பெரியோர்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தற்போது நாளிதழில் மணமகன் வேண்டும் என்ற பகுதியில் ஐம்பது, ஐம்பத்தைந்து மற்றும் அறுபது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தகுந்த துணை தேவை என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். இது கேலியாகப் பார்க்கவும் கிண்டலாக விமர்சிக்கவும் படுகிறது. “இத்தனை வயதுக்குப் பின்னால் கல்யாணம் பண்ணி இதுங்க என்ன பண்ணப் போகுதுங்க?” என்பதே அந்தக் கிண்டலின் பிரதானம். திருமணமோ மறுமணமோ எதுவாக இருந்தாலும் வெறும் உடல் தேவைக்கு மட்டும் செய்துகொள்வதில் உடன்பாடு இல்லை. தனிமையை அதிகம் உணரும் பருவம் முதுமைப் பருவம். தன்னிடம் இரண்டு வார்த்தைகள் உரையாடவும் மனதில் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளவும் தான் துணை தேடும். இருக்கின்ற சிறிய காலத்தை யாருமின்றித் தனக்குள் புழுங்கிக் கழிப்பதைவிட, பகிர்ந்துகொள்ளத்தான் துணை தேடும். அதைப் புரிந்துகொண்டு கேலி செய்யாமல் இருப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் நல்ல விஷயம்.
ஆணோ அல்லது பெண்ணோ மறுமணம் செய்துகொள்ள முடிவுசெய்துவிட்டால் முதலில் தங்களுக்குள்ளேயே அலசிப் பார்த்துக்கொள்ள வேண்டும். முந்தைய திருமண பந்தத்திலிருந்து முழுமையாக விடுபட முடியுமா என்று யோசித்துக்கொள்ள வேண்டும். தங்கள் மீதான தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும்.
முதல் திருமணம் தோல்வியடைந்ததற்கான காரணங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டு அடுத்த திருமண பந்தத்தில் இணைவது இருவருக்கும் நலம் பயக்கும். சில விஷயங்களை விட்டுக்கொடுத்துப் போவது நல்லது என்று உணர்தல் வேண்டும். முதல் திருமணத்தில் குழந்தைகள் இருந்தால் மறுமணம் புரிபவருடன் அவர்களைக் குறித்துத் தெளிவுபடுத்திக்கொள்வது பின்னாளில் வரும் பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே இருந்தால் நமக்கான சந்தர்ப்பங்கள் நம்மிடமிருந்து நழுவிவிடும். அடுத்தவர்கள் விருப்பத்திற்குச் செவி சாய்ப்பதை விடுத்து நமக்கான சரியான தேர்வு என்ன என்று தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.
விவாகரத்தோ அல்லது மறுமணமோ அது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது. தனிப்பட்ட இதுபோன்ற விவகாரங்களில் பொதுவாக அடுத்தவர்கள் தலையீடு செய்யாமல் இருப்பதே சிறப்பு. ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதை விடுத்து அடுத்தவரை எட்டிப் பார்ப்பது பெரும்பாலும் உடல் நலத்துக்கும், மனநலத்துக்கும் தீங்காகவே போய் முடியும்.
படைப்பாளர்:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.