பக்தி என்பது காலந்தோறும் நமது மரபணுக்களில் ஊட்டப்பட்டு வந்த ஒன்று. இந்த உலகம் தோன்றிய ஆதி நாட்களில் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்கள் உண்டாயின. ஆறறிவு படைத்த மனிதர்கள் பிற உயிர்களையும் இந்தப் பூமியையும் கைப்பற்றினார்கள். தங்கள் கண்முன் இருக்கும் மிகப்பெரிய, தங்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலாத பிரம்மாண்டமான சக்திகளை அவர்கள் வணங்கவும், வழிபாடு செய்யவும் தொடங்கினார்கள். அந்த மாபெரும் சக்திகள் ஐம்பூதங்கள் என்று அழைக்கப்பட்டன. காற்று, நீர், நெருப்பு, ஆகாயம், நிலம் மனிதனுக்குக் கட்டுப்படவில்லை.
மனிதர்கள் உயிர் வாழ இவை உதவியதால் தனக்கு ஒரு படி மேலாகக் கொண்டாடத் தொடங்கினர். அவ்வளவுதான் வழிபாடு. அவற்றில் மாற்றங்கள் கொண்டு வந்து தன்னைப் போல உருவம் வடித்து, தன்னால் கட்டுப்படுத்தப்பட்ட பிற உயிர்களை அவற்றுக்கு வாகனமாக்கி வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக பக்தி என்பது மனிதர்களுக்கிடையே பரவலாக்கப்பட்டது. அது காலப்போக்கில் ஓர் இடத்தில் இருந்து இடம் பெயர்ந்தோ, புலம் பெயர்ந்தோ பிற இடங்களுக்குச் செல்லும் போது அங்கே பரப்பப்பட்டது. இதில் கண்மூடித்தனமான நம்பிக்கைகளைச் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்றெல்லாம் இல்லை. காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம் இப்போது கொஞ்சம் அதிகப்படியாகவே பரவிக் கொண்டிருக்கிறது. பழந்தமிழ் மக்கள் இயற்கைப் பேரிடர்களான வெள்ளம், புயல், இடி, மின்னல், மழை, காட்டு விலங்குகளுக்கு உணவாவதில் இருந்து தப்பித்தல் போன்றவற்றுக்காக இயற்கையை வழிபடத் தொடங்கினர். அவர்களுக்கு உளவியல் ரீதியாக ஒரு பற்றுக்கோடு தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் அதிகம் மெனக்கெடாமல் தாங்கள் சார்ந்த நிலப்பகுதியில், தாங்கள் பார்க்கும் விஷயங்களையே கடவுளாகக் கருதி வழிபடத் தொடங்கினர்.
தமிழ் மக்கள் தங்கள் வாழிடங்களை ஐந்து விதமான நிலப்பகுதிகளாகப் பிரித்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் இவற்றில் மலைக்குறிஞ்சியின் கடவுளாகக் காட்டு விலங்குகளிடமிருந்து தங்களைக் காக்கும்படி முருகன் என்றோர் உருவைப் படைத்து அதன் கையில் வேல் என்கிற ஆயுதம் அளித்தனர். காடுகள் அடர்ந்த முல்லை வனப்பகுதியில் காட்டு வளங்களையும்,அங்குள்ள கனிம வளங்களையும் காக்கவும், அங்குள்ள ஆபத்துகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் திருமால் என்கிற உருவை வடித்து, அதன் கையில் சங்கு, சக்கரம் முதலான ஆயுதங்களை அளித்தனர். மருதம் என்னும் வயல்வெளி சார்ந்த நிலப்பகுதியில் விவசாயம் செழித்து வளர மழை தேவை என்பதால் இந்திரன் என்றோர் உருவைப் படைத்து அதன் கையில் இடியை ஆயுதமாக அளித்தனர். நெய்தல் என்னும் கடல் சார்ந்த பகுதிகளில் கடல் வாழ்க்கைக்கு மழையால் பாதிப்பு வராதவண்ணம் அதைக் கட்டுப்படுத்த வருணன் என்ற மழைக்கடவுளை உருவாக்கி வழிபட்டனர். பாலை என்னும் வறண்ட, செழிப்பற்ற நிலப்பரப்புக்குப் பஞ்சத்தைக் குறிக்கும் கொற்றவை என்கிற உருவை வடித்து வணங்கினர். இவை அனைத்துமே அந்தந்த நிலப்பரப்போடு தொடர்புடைய வழிபாடுகள்.
அதுமட்டுமன்றி போருக்குச் சென்று இறந்த வீரர்களின் நினைவாகவும், ஊர் மக்களை விலங்குகளிடமிருந்து காக்கும் போது இறந்த வீரர்களின் நினைவாகவும் அவர்களைப் புதைத்த இடங்களில் நடுகற்கள் எழுப்பி அவற்றுக்கு நன்னீரால் நீராட்டி, மஞ்சள் பூசி, மயிற்பீலி சூட்டி, மாலை அணிவித்து, கள் வைத்துப் படைத்து, நறுமணத் தூபங்கள் காட்டி, குருதிப் பலி கொடுத்து வணங்கி வந்தனர்.
இத்தகைய முறைகளில் மட்டுமே வழிபட்டு வந்த மக்கள் எப்போதில் இருந்து கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளுக்கு உள்ளானார்கள்?. கிராமப்புறங்களில் எந்தவொரு நிகழ்வும் தெய்வ வழிபாடின்றி நடைபெறாது. ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள் இருக்கும் பகுதியில் ஒரு கல்லுக்கோ அல்லது மரத்துக்கோகூட மஞ்சள் ஆடை கட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு வழிபடத் தொடங்கி விடுவார்கள். இத்தகைய சிறு தெய்வங்கள், குல தெய்வங்கள் போன்றவை பெண்களாகவே இருக்கும். இது ஏனென்று யோசித்து இருக்கிறோமா? அதாவது ஆணின் உடைமையான பெண்ணின் கற்புக்கோ, அல்லது அவர்களது குடும்ப கௌரவத்துக்கோ ஏதேனும் ஊறு நடப்பதாகத் தோன்றினால் அதாவது அவள் வேற்று சாதி ஆணைக் காதலித்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ தயங்காது அந்தப் பெண்ணைப் பலிகொடுத்து அவளைத் தெய்வமாக்கி வணங்கத் தொடங்கி விடுவார்கள். இதன் மூலம் அந்தப் பெண்ணின் இறப்பு குறித்த உண்மைநிலை அப்படியே மூடி மறைக்கப்பட்டு விடும். அவளைத் தெய்வ நிலைக்கு உயர்த்துகிறோம் என்று சொல்லிக் கொண்டே அதலபாதாளத்தில் அமிழ்த்தி விடுவார்கள். மனிதர்கள் புதுப்புது கடவுள்களை அறிமுகப்படுத்திய போது அவற்றை ஆதரித்தவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தக் கடவுளின் மதமாக உருவாக்கினார்கள்.
சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என்று மதங்கள் தோன்றின. கூடவே யார் தெய்வம் உயர்ந்தது என்று சச்சரவுகளும், சண்டைகளும் தோன்றின. எந்த மதமாக இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட நபரை மையமாக வைத்தே அதாவது சம்பந்தப்பட்ட மதம் குறித்த நற்சிந்தனைகள், போதனைகளை யார் மக்கள் மத்தியில் பரப்புரைச் செய்கிறார்களோ அவர்களைக் குருவாகக் கொண்டே தோற்றுவிக்கப்படுகின்றன. இவர்கள் ஏற்கெனவே சொல்லப்பட்ட மதம் சார்ந்த கருத்துகளை மெருகேற்றிய நபர்கள். மதங்கள் எப்போதிருந்து தோன்றின என்று யாரும் அறுதியிட்டுக் கூற இயலாது. ஆனால் இந்து, இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம், ஜைனம் என்று எந்த மதமாக இருந்தாலும் இறைவனை வழிபடும் விரதங்கள், நோன்புகள், வழிபாட்டு முறைகள் எல்லாமே பெண்களின் தலையில்தான் கட்டப்படுகின்றன. தாய்மை என்கிற ஒன்றை மிகவும் புனிதமாக்கி ஆண்கள் மற்றும் குடும்பத்தினர் நலம் விரும்புவது மட்டுமே பெண்களின் மிக முக்கியமான மற்றும் அதி முக்கியமான கடமை என்று கற்பிதம் செய்து விட்டனர். அதிலிருந்து வழுவும் பெண்களைத் தூற்றவும் தயங்கவில்லை. அதுவும் பெண்களை விட்டே வசை பாட வைத்தனர். ஆணாதிக்க சமுதாயத்தின் ஆகப்பெரும் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. பூஜை செய்வித்து கழுத்தறுப்பதே இதன் நோக்கம்.
பண்டிகைகள், நோன்புகள், திருநாள், பெருநாள், திருவிழாக்கள் என்று எதுவாக இருந்தாலும் அவை அன்றைய காலகட்டத்தில் எல்லா நேரமும் உழைத்துக் களைத்த மனிதர்கள் கொஞ்ச நேரமேனும் ஓய்வாக இருக்கவும், உறவினர்கள், நண்பர்களோடு மகிழவும், கொண்டாட்டங்களில் ஈடுபடவும் ஏற்படுத்திக் கொண்ட ஒரு விஷயம். அப்படித் திருவிழாக்கள் வந்தாலும் பெண்களுக்கு அதிகமான வேலைப்பளு ஏற்படுகிறது. மடியாகச் சமைப்பதில் ஆரம்பித்து பச்சைத் தண்ணீர்கூட அருந்தாமல் சாமி கும்பிடுவது, விருந்தினரை உபசரிப்பது என்று சுழன்று ஓய்ந்து போய் விடுகிறார்கள். இவற்றைச் செய்யாமல் இருக்கும் பெண்களின் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியையும் இவர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஏற்படுத்துகிறார்கள். இதேபோல் பெண்களுக்காக ஆண்கள் ஏதும் தனிப்பட்ட முறையில் விரதம், வழிபாடு என்று இருக்கிறார்களா என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண் தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று ஒவ்வொரு வெள்ளியும் விரதம் இருந்து, மாலையில் விளக்கேற்றி வழிபட்டாள். ஆனால் திருமணம் முடிந்த பின் அவளுக்கு அமைந்தவனோ அவள் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இருந்ததோடு அவளைக் கொடுமைப்படுத்துபவனாகவும் அமைந்து விட்டான். அவள் என்னிடம், “நான் என்னக்கா பாவம் பண்ணேன்.. பெரியவங்க சொன்னபடி பூஜை, விரதம், கோயில், குளம்னு தானே இருந்தேன்?..என் வாழ்க்கை ஏன் இப்படி ஆகணும்?” என்று வருத்தப்பட்டாள். “பெரியவங்க சொன்னாங்கன்னு ஒரு விஷயத்தை நீ கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டியதில்லை.. அவன் உனக்கு ஏற்றவனான்னு நீ யோசிச்சுப் பார்த்திருக்கணும். பகுத்தறிவைக் கொஞ்சமாவது உபயோகித்திருந்தால் இந்த நிலைமையைத் தவிர்த்திருக்கலாம். இதை முதலில் புரிஞ்சிக்கோ” என்றேன்.
பெண்கள் அதிகளவில் சாமியார் மடங்களிலும், கோயில்களிலும் குவியக் காரணம் என்னவென்றால் மூச்சுமுட்ட வைக்கும் வீட்டுச் சிறையில் இருந்து கொஞ்ச நேரமேனும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான். சக பெண்களைப் பார்க்கவும், கொஞ்சம் வெளிக் காற்றைச் சுவாசிக்கவும், சிறிது நேரமேனும் தனிமையில் இருக்கவுமே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். அது புரியாமல் இந்தச் சாமி சமாச்சாரங்களை எல்லாம் பெண்களின் தலையில் ஆண்கள் கட்டக் காரணம் என்னவென்றால் பெண்கள்தாம் எந்த ஒரு விஷயத்தையும் அடுத்த தலைமுறைக்கு எளிதில் கடத்துகிறார்கள் என்பதால் தான். ஏனெனில் இத்தகைய விஷயங்களைப் பெண்கள் அடுத்த பெண்களுக்கு வலுக்கட்டாயமாகவேனும் சொல்லித் தருவார்கள். ஆணாதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்ள ஆண்கள் எடுத்த ஆயுதமே இந்தப் பக்தி சமாச்சாரம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் பெண்கள் சாமி கும்பிடவில்லையானால் அந்த இடத்தில் ஆண்களுக்கும் வேலையில்லை. விளக்கேற்றுவது, பூஜைப் பொருட்களைச் சுத்தம் செய்வது முதலான ஆன்மீக வேலைகளை எப்போதாவது ஒரு நாளைக்குச் செய்யும் ஆண்களுக்கு, பெண்களைப் போல நித்தமும் செய்ய வணங்காது. மட்டுமின்றி இத்தனை வேலைகளையும் செய்யும் பெண்களை மாதவிடாயைக் காரணம் காட்டி கோயிலுக்கு வெளியில்தானே நிறுத்துகிறார்கள்?. அப்புறம் என்ன பெண்களை நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம் என்று புளுகுவது?.
கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை அதாவது கி.பி. 600 முதல் 900 வரையிலான பல்லவர் ஆட்சிக் காலத்தில் இந்த இயக்கம் செழிப்புற்று வளர்ந்தது. பக்தி இயக்கங்கள், பக்தி இலக்கியம் எல்லாம் வேகத்தோடு செயல்பட்ட காலகட்டம். சைவம், வைணவம் ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும், அப்போது இருந்த சமண, பௌத்த மதங்களுக்கு எதிராகவும் இந்தப் பக்தி இயக்கம் செயல்பட்டது. அதுவரைக்கும் இயற்கையை, வீரத்தை, காதலைப் பாடிக் கொண்டிருந்த புலவர்கள் கடவுள்களையும், அவர்கள் பெருமைகளையும், வழிபாட்டு முறைகளையும் பாடத் தொடங்கினார்கள். சைவ, வைணவம் சார்ந்த தமிழ் இலக்கியங்கள் தோன்றின. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பிள்ளைத்தமிழ், உலா, கம்ப ராமாயணம், மகாபாரதம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,
கிறிஸ்தவ இலக்கியங்கள், இஸ்லாமிய இலக்கியங்கள், பௌத்த இலக்கியங்கள், சமண இலக்கியங்கள் எனப் பக்தி இலக்கியம் வளர்ச்சி பெற்றது. இதன் மூலம் கடவுள் என்கிற ஒன்று வலுக்கட்டாயமாக மக்கள் மனதிலும், சிந்தனையிலும் புகுத்தப்பட்டது. மக்களின் மனதில் கடவுள் குறித்தான அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயங்களையும், அதிகாரங்களையும் கைப்பற்றியது ஒரு கும்பல். பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையில் இல்லாத புதுப் பழக்க வழக்கங்கள் வலியப் புகுத்தப்பட்டன. வர்க்க பேதங்கள் அதிகரிக்கத் தொடங்கின. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் அந்த வீட்டினர் எல்லா விரதங்களையும் சாஸ்திர, சம்பிரதாயங்களோடு கடைபிடிப்பார்கள். எல்லாப் பண்டிகை நாட்களையும் ஒன்று விடாமல் கொண்டாடுவார்கள். அதுவும் அந்தப் பண்டிகைக்கு என்ன பலகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தப் பட்சணம் கட்டாயம் இடம் பெறும். விழுந்து விழுந்து சாமி கும்பிடுவார்கள். ஆனால் அதைத் தாண்டி யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். மிகவும் சுயநலமாக நடந்து கொள்வார்கள். அதிகமாகத் தற்பெருமை அடித்துக் கொள்வார்கள். தாம் சார்ந்த மதத்துக்கும், சாதிக்கும் முட்டுக் கொடுப்பார்கள். இவர்கள் வணங்கும் சாமி இத்தகைய செயல்களைச் செய்யத்தான் கற்றுக் கொடுத்ததா என்பதுதான் கேள்வி.
பெண்கள் அதிகளவில் சாமியார்களைத் தேடிப் போய் ஏமாறுவதற்கு உளவியல் காரணிகள் உண்டு. குடிப்பழக்கம் உள்ள கணவன், பொறுப்பற்ற குழந்தைகள், வறுமை நிலை போன்ற சூழ்நிலைகளில், ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலையில் நம்பிக்கையற்றுப் போன நேரத்தில், கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையூட்டும் வாசகங்களை யார் சொன்னாலும் சிக்கெனப் பிடித்துக் கொள்வது மனித இயல்பு. அதனால் தேன் தடவிய வார்த்தைகளைத் தூண்டிலாக்கி பெண்களை எளிதில் ஏமாற்றி விடுகிறார்கள் சாமியார்கள். இதில் பெண்களை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை. இது போல்தான் மக்களின் இயலாமையைப் பயன்படுத்தி பிற மதங்கள் உள்ளே நுழைகின்றன. இதையும் மறுப்பதற்கில்லை. உணர்வுபூர்வமாகவும் இந்தப் பெண்கள் ஆன்மீகத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள். தங்கள் பிரசனைகள் தீர வழிகளைத் தேடாமல் வானிலிருந்து வரும் தேவதூதன் தனது பிரச்னைகளைத் தீர்த்து விடுவான் என்று நம்புகின்றனர்.
வெற்றுப் பிரார்த்தனைகளும், பூஜைகளும் எப்போதும் தீர்வாகாது. ஆன்மீகத்தைவிட அடிப்படையான மனித அறமும், எதையும் பகுத்து அறியும் அறிவியல் அறிவுமே இன்றைக்கு அவசியமான தேவைகள். சமூகத்தின் கண்ணோட்டமும், மதங்களின் கண்ணோட்டமும் பெண்ணை இரண்டாம் பாலினமாகவே மதிக்கக் கற்றுத் தந்தன. ஆதாமின் விலா எலும்பில் இருந்து அவனுக்குப் பணிவிடை செய்யவே ஏவாள் உருவாக்கப்பட்டாள் என்கிற கூற்று இதற்கு ஒரு சோற்றுப் பதம். இன்னும் இந்த நிலை மாறவேயில்லை. மதம் என்கிற ஒன்று உருவான போதே பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. கிறிஸ்தவ தனிநபர் சட்டங்கள்கூட பெண்ணை இரண்டாம்பட்சமாகவே பார்க்கிறது. இஸ்லாமிய தனிநபர் சட்டங்களும், திருமணம், சொத்துரிமை, ஜீவனாம்சம், விவாகரத்து போன்ற விஷயங்களில் பெண்ணை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்கள் எல்லா மதத்திலும் இருக்கின்றனர். மதம் என்கிற ஒன்று ஆணாதிக்கத்தை ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. எந்த மதத்தினராயினும் இந்தப் பிரபஞ்சத்தை அண்டத்தைப் படைத்தது அந்த மதத்தில் உள்ள ஆண் கடவுள்கள்தான் என்று கூறுகின்றனர். இதிலிருந்து அவர்களின் ஆணாதிக்க மனப்பான்மை நமக்குத் தெளிவாகப் புலப்படுகிறது. எல்லா மதங்களும் பெண்ணை மட்டுமே இழிவுபடுத்துகின்றன. பெண்ணுக்கு மட்டுமே ஒழுக்கத்தைப் போதிக்கின்றன. பெண்ணைத்தான் அடிமையாக்குகின்றன. பெண் ஆணின் சொத்தாகத்தான் கருதப்படுகிறாள். மசூதிகளுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படாத நிலையில்தான் இன்றும் இஸ்லாமிய சமூகப் பெண்கள் வாழ்கிறார்கள். இந்து மதத்தில் பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டாலும், கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்து மதத்தில் பெண்களால் குருக்களாக முடிவதில்லை. கிறிஸ்தவ மதத்தில் பெண்கள் மதபோதகராக முடிவதில்லை. இஸ்லாமிய மதத்திலும் அப்படித்தான். இப்படி இருக்கும்போது இத்தகைய மதங்களுக்கு பெண்கள் ஏன் அடிபணிந்து நடக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பௌத்த மதமும் கூடப் பெண்ணை இழிவுபடுத்துவதில் விதிவிலக்கல்ல. தனியாக ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் பேசக் கூடாது. கூட ஒருவரை வைத்துக்கொண்டுதான் பேச வேண்டும் என்று புத்த மதம் வலியுறுத்துகிறது. ஏனென்றால் தனிமையில் இருக்கும் பெண் அந்த ஆணைப் பாலியல் ரீதியாகக் கவர்ந்து விடுவாள் என்று புத்தமதம் கூறுகிறது. இது பெண்களைப் பற்றிய புத்த மதத்தின் கேவலமான ஓர் எண்ணத்துக்குச் சிறு சான்றாகும். அவ்வளவு ஏன்? புத்தரின் உறவு நிலை கூட பெண் விருப்பினால் எழுந்தது தானே?
ஆளவும் பொருளாதார ரீதியாக மற்றவர் மீது அதிகாரம் செலுத்தவும் ஆணுக்கு அங்கீகாரம் தரும் புத்தர், பெண் பாலியல் ரீதியாகப் பயன்படும் ஒரு பாலியல் பொருள் என்கிறார். இது போன்ற வாதத்தை எவ்வாறு பெண்கள் ஏற்றுக் கொள்வது என்று சொல்லுங்கள். மதங்கள் பெண்களுக்கு இறைவன் மீதான பயத்தைப் போதிப்பதோடு, அவர்களது சுயத்தையும் மறையச் செய்கிறது என்பதுதான் உண்மை. மனிதர்கள் கட்டற்றுத் திரிந்த காலகட்டத்தில் அவர்களை ஒரு நேர்ப்படுத்தி, ஒழுங்காக்கி, சீரிய ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்திற்காகவே மதங்கள் ஏற்படுத்தப்பட்டன என்று நான் கருதுகிறேன். நல்ல சிந்தனைகள், செயல்பாடுகள், வாழ்வை நேர்த்தியாகக் கொண்டு செல்லும் வழிமுறைகள், மனம் சிதறாது கவனத்தை ஒருமுகமாகக் குவிய வைத்தல் போன்றவற்றை மதம் போதிக்கிறது. ஆறு ஒழுங்காகச் செல்ல இரு புறமும் அமைந்திருக்கும் அழகிய கரைகளாக மதங்கள் இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் எழவில்லை.
என் மதம் பெரிதா, உன் மதம் பெரிதா என்கிற வாக்குவாதங்கள் தொடங்கும் போதுதான் மதங்கள் கரையை மீறிய காட்டாறுகளாகின்றன. ஆனால் நாம் இன்று மதங்கள் போதித்தபடிதான் அன்பு நெறியில், அறநெறியில்தான் நடக்கிறோமா என்று யோசித்துப் பார்த்தால் இல்லை என்கிற பதில்தான் தோன்றுகிறது. மதங்கள் ஏற்பட்டதற்கான தாத்பரியங்கள் மறைந்து விட்டன. மதத்தில் அரசியல் நுழைந்து வெகுகாலமாகி விட்டது. யானைக்கு மதம் பிடிக்கலாம். மனிதனுக்கு மதம் பிடிக்கலாமா? கொஞ்சம் யோசிப்போம்.
படைப்பாளர்:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற நூல்களாக வெளிவந்திருக்கிறது