‘செயற்கை நுண்ணறிவு’ இன்று அசுரவேகத்தில் வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம். எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், பொதுவெளியில் காணப்படும் பாலின சமத்துவமின்மை இது போன்ற தொழில்நுட்பத்திலும் காணப்படுகின்றது.
2018ம் ஆண்டு முதன் முதலில் உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனம்,வேலைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் பணியை மனித தலையீடு இல்லாமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் நிகழ்த்தியது. அந்த செயலி பெரும்பாலும் பெண்களின் விண்ணப்பங்களை எல்லாம் முதல் கட்டத்திலேயே நிராகரித்தது. அதிக அளவில் ஆண்களின் விண்ணப்பங்களை மட்டுமே தேர்வு செய்தது. இது குறித்துப் புகார்கள் வந்ததால், நிறுவனம் ஆராயத் தொடங்கியது.
பிரச்னைக்கான காரணம், அந்த நிறுவனம் செயலிக்கு கடைசி பத்து வருடங்களின் தரவுகளை உள்ளீடு செய்திருந்தது. அந்தத் தரவுகள் பெரும்பாலும் ஆண்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள். அதனால் அந்த செயலி தானாக பெண் என்ற சொல் இடம் பெறும் விண்ணப்பங்களை எல்லாம் நிராகரித்தது. இதன் பிறகு அந்த செயலி தடை செய்யப்பட்டது.
2019ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ‘ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கடன் அட்டை’ ஒன்றை உருவாக்கியது. இந்தக் கடன் அட்டை, ஆண்களைவிட பெண்களுக்கு மிகவும் குறைந்த அளவிலான கடன் உச்ச வரம்பை நிர்ணயித்தது.
ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் சிறந்த நிதிநிர்வாக வரலாறையும் வருமானம் மற்றும் இதர பிற சொத்துக்களையும் கொண்டிருந்த போதிலும், பெண்களுக்கு குறைவான கடன் வரம்புகளையே அந்த ஏ ஐ, நிர்ணயித்தது.
ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக், “என் மனைவி நல்ல நிதி நிலைமையையும், கடன் மதிப்பெண்ணையும் (கிரெடிட் ஸ்கோர்) பெற்றிருந்த போதும், என்னைவிட அவருக்கு 10 மடங்கு குறைவாக கடன் உச்ச வரம்பு கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து பல்வேறு பெண்களும் இது போன்ற புகார்களை தெரிவித்தனர்.
நியூயார்க் நிதி சேவைத்துறை(NYDFS) இந்த பிரச்னையை விசாரணை செய்தது. கடன் அட்டையை வடிவமைத்த கோல்ட்மேன் சாக்ஸ், ‘கடன் வரம்புகளை நிர்ணயிக்கும் வழிமுறையில் வேண்டுமென்றே எந்த ஒரு பாலின சார்பும் உள்ளீடாக தரப்படவில்லை’ எனக் கூறியது. இருப்பினும் கடந்த காலத் தரவுகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையே இது பிரதிபலிக்கிறது எனக் கூறியது. இந்தக் குறைபாடு இன்றளவும் சரி செய்யப்படவில்லை. மாறாக வங்கிகள் இவற்றை ஆராய்ந்து சரியான கடன் வரம்புகளை நிர்ணயிக்கின்றன.
துருக்கியம், பின்னிஷ் மற்றும் ஹங்கேரியன் போன்ற சில மொழிகளில் ஆண், பெண், திருநர் மூன்று பாலினத்தையும் குறிப்பதற்கு ஒரே நடுநிலை சொற்களைப் பயன்படுத்துகின்றனர். கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் இவற்றை ஆங்கிலத்திற்கோ அல்லது பிற மொழியிலோ மொழிபெயர்க்கும் போது, உயர் பதவிகள், வலிமை, துணிச்சல், பணி போன்ற இடங்களில் மொழிபெயர்க்கும்போது தானாகவே ஆண் எனக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்கிறது. வீட்டு வேலைகள், உணர்வு சார்ந்தவை, மற்றும் கீழ்நிலையில் உள்ள பணி போன்ற இடங்களில் பெண் பாலினமாகக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்கிறது. இது குறித்த புகார்கள் வெளிவந்த பின்னர் சில இடங்களில் இவை சரி செய்யப்பட்டன. ஆனாலும், முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.
‘அலெக்ஸா மற்றும் சிரி(Alexa & Siri)’ இவை இரண்டும் மெய்நிகர் உதவி தொழில்நுட்பங்கள் ஆகும். இவை பல துறைகள் சார்ந்த நம் கேள்விகளுக்கு குரல் மூலம் பதில் தரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இவற்றில் குரல் தேர்வுகள் பாலினம் சார்ந்து இயங்குகிறது. பெண் குரல்கள் உதவியாளர்கள், அடிபணிதல் தொடர்பான பாத்திரங்கள் மற்றும் செயலகப் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் ஆண் குரல் கொடுக்கும் AIகள் அதிகாரப்பூர்வ அல்லது தொழில்நுட்பப் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது போல உணர்ச்சிகரமான கேள்விகளுக்கும் பெண் குரல்களே தேர்வு செய்யப்படுகிறது.
பல குரல் தேர்வுகள் கொண்டு வரப்பட்ட பிறகும் பொதுவாக அவை பாலின பேதத்தோடு தான் இயங்குகின்றன. முழுவதுமாக இது சரி செய்யப்படவில்லை. இதுமட்டுமல்லாமல் பயனாளரின் தனிப்பட்ட உரையாடலைப் பதிவு செய்து அவற்றை முறை இல்லாமல் பயன்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன.
‘லென்சா‘ என்ற செயலி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனாளரின் டிஜிட்டல் அவதார்களை உருவாக்கித் தருகிறது. இந்த செயலி நேர்த்தியான வெளியீட்டிற்காக பயனாளரின் முகவடிவியல் தரவுகளை பெற்றுக் கொண்டு, ஆனால் பயனாளரின் அனுமதி இன்றி அந்த தகவல்களை சேமித்துக் கொண்டது. இ’ந்த பயோமெட்ரிக் தரவுகளை பிற்காலங்களில் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தக்கூடும்’ என்ற குற்றச்சாட்டு இதன் மேல் வைக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல், இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை மட்டும் சம்பந்தமில்லாமலும், சற்று ஆபாசமாகவும் இது சித்தரித்தது. மேலும் மேற்கத்திய அழகு என்ற வரையரையில் எல்லா பயனாளர் அவதார்களிலும் மேற்கத்திய மக்களைப் போன்ற முக அமைப்பு, தோல் நிறத்தை வெண்மையாக்குதல் என ஒருதலைப் பட்சமாக இந்த செயலி செயல்பட்டது.
இதற்கு உள்ளீடாக தரப்பட்டவை எல்லாம் இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள்தான். தற்போது வரை இந்த செயலி சில கட்டுப்பாடுகளுடன் பயன்பாட்டில் உள்ளது. அமெரிக்காவின் சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறை, குற்றவாளிகளை கண்டறியும் பணியில் ஒரு பகுதியாக இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர். அதில் அந்த செயலி தவறுதலாக ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவரை குற்றவாளியாக அடையாளம் கண்டது. ஆனால் விசாரிக்கும்போது, அவர் எந்தவொரு தவறும் செய்யாதவர் எனத் தெரிய வந்தது. ஆராய்ந்து பார்த்ததில், அந்த செயலி வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களின் முகங்களை எளிதில் அடையாளம் காண்கிறது. கருப்பினத்தைச் சேர்ந்தவர்களின் முகங்களை அடையாளம் காண முடியாததால் இது போன்ற பிரச்னைகள் எழுந்தன. இந்த செயலிக்குத் தரப்பட்ட தரவுகள் பெரும்பாலும் வெள்ளை இனத்தவர்களின் தரவுகள்தான். விதைத்ததை தானே அறுவடைச் செய்ய முடியும்?
இதைக் கண்டறிந்த உடன் அமெரிக்க அரசு இந்த தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் பொறியாளர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பல ஒழுங்கு முறைகளையும் விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என சட்டம் இயற்றியது.
மேற்கூறிய செயலிகளில் உள்ள சில தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளன. சில தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் முழுவதுமாக பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை.
சமூகத்தில் பொதுவெளியில் காணப்படும் பாலின சமத்துவமின்மை, இது போன்ற புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்திலும் தொடர்வது முறையாகாது.
எந்தவொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பும், பெண்களின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையே இவை எடுத்துக் காட்டுகின்றன. அவ்வாறு இல்லாதபோது, கண்டுபிடிப்புகளின் முடிவுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
எந்த ஒரு கண்டுபிடிப்பும் ஒரு நாட்டையோ அல்லது நாட்டு மக்களையோ தவறாக வழிநடத்துவதற்கும் சித்தரிப்பதற்கும் உருவாக்கப்பட்டது அல்ல. சுருக்கமாக சொல்லப்போனால், ‘சிட்டி ரோபோவை’ போலத்தான் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். தொழில்நுட்பத்தால் எந்தவொரு பிரச்னையும் இல்லை. இதற்குத் தரப்படும் தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் பொறுத்தே இதன் பயன்பாடும் விளைவுகளும் இருக்கும். சரியான தரவுகளோடு இதனை வடிவமைக்கும் போது, இதனால் ஏற்படும் நன்மைகளும் பயன்களும் ஏராளம். அதில் சந்தேகமே இல்லை.
ஏஐ தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகளை களைவதற்காக அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஜப்பான், கனடா, ஐரோப்பிய நாடுகள், இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் திட்டங்களுக்கென தனி கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டு வந்துள்ளன.
மென்பொருள் மற்றும் செயலிகள் மட்டுமல்லாது இன்று பலரும் பரவலாக பயன்படுத்தி வரும் சேட் ஜிபிடி, மெட்டா செயலி போன்ற உரையாடல்கள் மூலம் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் தரக்கூடிய சேட் பாட்களுக்கு பல ஒழுங்கு முறைகளும் நன்னெறிகளும் கற்பிக்கப்படுகின்றன.
*வெறுப்புப் பேச்சுகளை எதிர்கொள்ளும் முறை.
*பாலியல் தொடர்பான கேள்விகளை கையாளும் விதம்.
*பயனாளரின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களுக்கு உதவுவது.
*அரசியல்,மதம் சார்ந்த பதில்களை கூறும் போது ஒரு தலை பட்சமாக இல்லாமல் பொதுவாக பதிலளித்தல்.
*பதில் கூற இயலாத சில உணர்ச்சிகரமான கேள்விகளுக்கு நேரடியான பதிலை தவிர்த்தல்.
*கேள்வியை சார்ந்த சில தகவல்களையோ அல்லது எச்சரிக்கையையோ தருதல்.

‘மொத்தத்தில் பயனாளரை அனாவசிய கேள்வி கேட்டு விடக்கூடாது. அதே சமயத்தில் அவர்களின் கேள்விக்கு அதிகமாக பதில் கூறி செயற்கையாகவும் இருந்துவிடக் கூடாது’ என்பது போன்ற பல ஒழுங்கு முறைகள் அதற்கு கற்பிக்கப்படுகின்றன.
இதுபோன்ற நெறிமுறைகளை புகுத்தி, சரியான தரவுகளை தருவது இந்த பிரச்னைக்கு தற்காலிக தீர்வு தானே? உண்மையில் பாலின சமத்துவம் பற்றிய மனித சிந்தனையில் தானே மாற்றம் தேவை?
இன்று கல்லூரிகளில் அரசு உத்தரவின்படி மாணவர்களிடம் உள்ள சில சிக்கலான பிரச்சினைகளை சரிசெய்ய பல்வேறு அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த அமைப்புகளின் மூலம் போதை பொருள்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு, இணைய வழி மிரட்டல் இவற்றைக் கண்டறிந்து, அதிலிருந்து தற்காத்துக் கொள்ள வழிகாட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் இளைய தலைமுறையை நல்வழிப்படுத்த இதோடு நின்று விடாமல், இந்த பிரச்னைகள் ஆரம்ப காலத்திலேயே தடுக்கப்பட வேண்டும். இளைய சமூகத்திற்கு சரியானது, தவறானவற்றைப் பகுத்தறிய கற்றுத்தர வேண்டும்,வழிகாட்ட வேண்டும்.
ஆரம்பம் முதலே குழந்தைகளுக்கும்,இளைய தலைமுறைக்கும் நல்லொழுக்கம் மற்றும் நல்ல சிந்தனைகளை கொண்டு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், பாலின சமத்துவம் பற்றியும் இல்லங்களில் இருந்தே கற்பிக்க வேண்டும்.வேர்களை பலப்படுத்துவதுதான் மிக முக்கியமான ஒன்று.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இக்காலத்தில் இன்றியமையாத ஒன்றாகும். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதேசமயம் சமூகத்தின் முன்னேற்றம் என்பது நல்ல சிந்தனைகளால்தான் ஏற்படும். அப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளையும் நெறிகளையும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
படைப்பாளர்கள்

ஏ. மாலதி
கோவை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) யில் , இணை பேராசிரியராகப் பணி புரிபவர். அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள பதின் பருவ மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு , மென் திறன் மேம்பாடு, கல்வியின் முக்கியத்துவம், சைபர் கிரைம் மற்றும் வாழ்க்கை திறன் மேம்பாடு உள்ளிட்ட பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்தி வருகிறார். சமூக செயற்பாட்டாளர், பெண்ணிய சிந்தனையாளர். சீர்திருத்தச் சிந்தனைகள் கொண்டவர்.

பி. பாலதிவ்யா
பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கணினி அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழிக்கான Chat bot பயிற்சியாளராக உள்ளார். வாசிப்பதில் தீவிர ஆர்வம் உடையவர்.