சிலேட்டில் எழுதிப் பார்த்து, அதை கோவைக்காய் கொண்டு அழித்து மீண்டும் பயன்படுத்திய காலமெல்லாம் 90ஸ் கிட்ஸ் தலைமுறையுடன் முடிந்துவிட்டது. இரண்டாயிரக் குழவிகள் கல்வி கற்பது பெரும்பாலும் ஆன்லைனில்தான். தினமும் பள்ளி சென்றாலும் கூட சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்காமல் யூட்யூபில் பார்த்துத் தெளியப் பழகிவிட்டார்கள். இணைய வசதி இருந்தால் போதும். இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் உள்ளவருக்கும் புதிய விஷயங்களைப் பயில வாய்ப்பு கிடைக்கிறது.

இயற்பியலை எளிமையாக விளக்கி யூட்யூபில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தவர் அலக் பாண்டே. நீட் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் அனைத்து பாடங்களும் இவர் சேனலில் சொல்லித்தரப்பட்டது. கல்லூரிப் படிப்பை முடிக்காத இவர், பிறகு இணை நிறுவனர் ப்ரடீக் மகேஸ்வரியுடன் சேர்ந்து பிஸிக்ஸ் வாலா எனும் பெயரில் செயலி வெளியிட்டு வெற்றிகரமாக செயல்படுகின்றனர். மாணவர்களும் அமோக ஆதரவளிக்கிறார்கள். நீட், ஜேஈஈ, சிஏ உள்ளிட்ட பல போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இந்தச் செயலி உதவுகிறது.

முகப்புத்தக முதலாளி உட்பட பலரின் நிதிப் பங்கீட்டுடன் இயங்கும் பைஜூஸ் நிறுவனம் தொடங்கிய பைஜுஸ் ரவிந்திராந், கணக்குப்பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். பொறியியலாளரான பைஜுஸ், திவ்யா கோகுல்நாத் உடன் இணைந்து ஆன்லைன் ட்யூஷன் செயலியாக இந்நிறுவனத்தை வளர்த்திருக்கிறார்கள். இவர்களைப் போன்ற இன்னும் பலரையும் இணைத்துக் கொண்டு இன்று இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கைப் பயனாளர்களைப் பெற்ற மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறார்கள். அசுர வளர்ச்சி பற்றிய விமர்சனங்களும் உண்டு.

பாடப்புத்தகங்கள், போட்டித்தேர்வுகள் தாண்டியும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. படித்து வேலையில் சேர்ந்த பிறகும் கூட கற்றுக் கொள்வது நின்றுவிடுவதில்லை. கற்றல் நின்று போனால் முன்னேற்றமும் அங்கேயே நின்றுவிடும். அப்படிச் சில கற்றல் செயலிகள் மற்றும் வலைத்தளங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

கான் அகாடமி (https://www.khanacademy.org/) பள்ளிப் பாடங்களை சிறு காணொளிகளில் விளக்கும் வலைத்தளம். செயலியும் இருக்கிறது. ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியாக காணொளிகள் உள்ளன. கலை, அமெரிக்க, உலக வரலாறு, மனிதவளம் உள்ளிட்டவையும் காணொளிப் பாடத்தில் இருக்கின்றன. சில ஆயிரங்கள் கொடுத்தால் உங்கள் ஏழு வயதுக் குழந்தை கணினி கற்றுக்கொண்டு செயலி உருவாக்கி உலகப்புகழ் பெறுவார் என்பது மாதிரியான மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் வெளியாகி பிறகு எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டன. இப்படியான அடிப்படைக் கணினி நிரல், அனிமேஷன் ஆகியவை இந்த வலைத்தளத்திலும் உள்ளது. ஆர்வமுள்ள சிறார்கள் முயன்று பார்க்கலாம். முற்றிலும் கட்டணமின்றி கற்றுக்கொள்ளலாம் என்பது கான் அகாடமியின் சிறப்பு. இலாப நோக்கமற்ற இவ்வமைப்பு தன்னார்வலர்கள், நன்கொடை மூலம் செயல்படுகிறது. மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் உதவும் வகையில் கற்றுக்கொடுக்கும் கருவிகளைக் கொண்டுள்ளது. பெற்றோர்களுக்கான பகுதியும் உண்டு. இது இத்தளத்தை நிறுவியவர்களின் கல்வி பற்றிய புரிதலுக்கும் பொறுப்புணர்வுக்கும் உதாரணம்.

இணையத் தொடர்பு உலகை திறன்பேசித் திரையளவுக்குச் சுருக்கிவிட்டது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயில விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் கற்கும் வாய்ப்பை பல தளங்கள் அளிக்கின்றன. கோர்ஸ்எரா (www.coursera.org), எட்எக்ஸ் (www.edx.org) இரண்டும் பிரபலமான தளங்கள். பெரும்பாலும், குறுகிய காலப் பாடங்களாக வடிவமைக்கப்பட்டவை. காணொளிகளைப் பார்த்து கற்றுக்கொண்டபின் பயிற்சிகளும் வழங்கப்படும். தேர்வும் உண்டு.  அங்கீகரக்கப்பட்ட சான்றிதழும் கிடைக்கிறது. சான்றிதழ் தேவையில்லை என்றால் கட்டணமில்லாமலே கூட கற்றுக்கொள்ளலாம். சான்றிதழ் பெற கட்டணம் அவசியம்.

பலநாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள் இந்த வகுப்புகளை எடுக்கிறார்கள். எழுத்து, நாடகம், வரைதல், உயிரியல், வியாபார மேலாண்மை, ஆடை வடிவமைப்பு, கணினி நிரல் எழுதுதல் என இத்தளங்கள் வழங்கும் பாடங்கள் வரிசைப் பட்டியல் போய்க் கொண்டே இருக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி, அலுவலகத்தில் பணியில் இருப்பவர்களும் தங்கள் திறனை வளர்க்க, புதிதாக அறிமுகமானவற்றை கற்க இத்தளங்கள் உதவுகின்றன. பல ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றுகின்றன உள்ளூர் பல்கலைக் கழகங்கள். நிறுவனங்களோ தினசரி மாறும் தொழில்நுட்ப உலகில் தங்கள் நிறுவனத்தில் உள்ள வேலைக்கு ஏற்ற விஷயங்கள் தெரிந்த பணியாளரைத் தேடுகின்றன. இவை இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியைத்தான் இத்தகைய தளங்கள் குறுகிய கால பாடங்களாக வைத்துள்ளன. அரசு வேலைவாய்ப்பில் இதற்கு மதிப்பில்லை என்றாலும் தனியார் நிறுவனங்கள் அமோக ஆதரவு இருக்கிறது. கூகுள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் இந்த சான்றிதழ்களை அங்கீகரிக்கின்றன.  எனவே வேலை வாய்புக்கும், பணி உயர்வுக்கும் இவை பெருமளவு உதவுகின்றன.

மொழிகளைக் கற்றுக்கொள்ள இருக்கும் செயலிகளில் பிரபலமானது டியுலிங்கோ (duolingo). இந்திய மொழிகளில் ஒன்றான இந்தி உட்பட 40 மொழிகளைக் கற்கலாம். இலக்கு வைத்து படிக்க நினைப்பவர்களுக்கு இந்தச் செயலி மிகப் பொருத்தம். குறிப்பிட்ட காலத்துக்குள் படித்து, சரியாகக் கற்றுக்கொண்டு விடைகளைச் சொன்னால் நம்மை உற்சாகப் படுத்த புள்ளிகள், ரிவார்டுகள் என அள்ளித்தரும் இந்த செயலி. தவறானால் சில இதயப் புள்ளிகளைப் பறிக்கவும் தயங்காது. இப்படி விளையாட்டு போலவே இருப்பதால் கற்றல் ஆர்வம் அதிகமாகிறது.

மெம்ரைஸ் (memrise) செயலியில் சைனீஸ், டட்ச், ப்ரென்ச், ஜப்பனீஸ் போன்ற சில மொழிகளைப் பயில முடியும். அடிப்படை முகமன் கூறும் வார்த்தைகள், பழகுவதற்கான வார்த்தைகள் முதல் ஓரளவு பேசுவது வரை சாத்தியம். இந்த வார்த்தைகளை உள்ளூர்வாசிகள் குரலில், உச்சரிப்பில் கேட்கும் வசதி இருப்பது இதன் சிறப்பு. இதனால் இந்த மொழியைப் பேசுபவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதை வீடியோவில் பார்த்து, கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

வெளி மாநிலத்தில் அல்லது வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் குழந்தைகளுக்காக பல செயலிகள் தமிழ் மொழியைக் கூட இப்படி சொல்லிக் கொடுக்கின்றன. தாய் மொழியைப் படிக்காமலே பள்ளிக் கல்வியை முடிக்கும் விநோதமான சாத்தியமுள்ள நம் ஊரில் உள்ள குழந்தைகள் கூட படிக்கலாம். திரைப்பட பாடலாசிரியர் கார்க்கியின் பயில் வலைத்தளம் பணம் கட்டிப் படிக்கும் வகையிலானது. இலவச செயலிகளும் பிளேஸ்டோரில் நிறைய இருக்கிறது.

Online music

ஃபோட்டோமேத் (photomath) செயலி கணக்குகளை புகைப்படமாக எடுத்தால் அதற்கான தீர்வுகளைச் சொல்ல உதவும். கணிதச் சமன்பாடுகளை கூகுளில் தட்டச்சு செய்வது சிரமம். புகைப்படமாக எடுக்கும் போது சமன்பாடுகளை கணினியே புரிந்து கொள்கிறது. கூகுள் லென்ஸ் மூலமும் இதே மாதிரி கணிதப் புதிர்களுக்கு விடை காணலாம். கணிதம் என்பதே யோசித்து மாணவரின் புரிதலுக்கு ஏற்ப விடை காண்பதுதான். ஒரே மாதிரி இல்லாமல் பல வித தீர்வுகள் கணிதத்தில் சாத்தியம். இப்படி ஒரு செயலி இருப்பதால் மாணவர்கள் அதிகம் யோசிக்காமல் செயலியை உபயோகித்து விடையைத் தெரிந்து கொண்டு சிந்தனையை வளர்க்காமல் போகும் அபாயம் உள்ளது.

மனித மூளை அபார ஆற்றல் உடையது. மூளையின் பத்து சதவீதத்தைதான் நாம் பயன்படுத்துகிறோம் என்றொரு கருத்தும் உண்டு. நினைவுத்திறன், கணிதம், மொழி என தினமும் கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் இன்னும் கூர்மையாக வேலை செய்யும் என்கிறார்கள் சிலர். உடற்பயிற்சி போல மூளைக்கும் பயிற்சி கொடுக்கலாம். செய்தித்தாள்களில் இருக்கும் சுடோகு, குறுக்கெழுத்துப் புதிர்கள் போல. லுமோஸிடி (Lumosity) எனும் செயலி கணிதம், மொழி, குறைந்த நேர நினைவுத் திறன் மேம்பாடு, விரைந்து முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட பல மூளைச் செயல்பாடுகளுக்கு பயிற்சி கொடுக்கிறது.

பிரில்லியன்ட் (brilliant) எனும் செயலி ஸ்டெம் STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய நான்கு துறைகளில் மூளைச் செயல்பாட்டை சிறப்பாக்கும் வகையில் வடிவமைக்கபட்டது. இன்னும் பல மூளைப் பயிற்சி செயலிகளும் இணையத்தில் உள்ளன. இந்தச் செயலிகள் சொன்னால் அப்படியே நம்பிவிடுவீர்களா? உங்கள் மூளையை உபயோகித்து சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா? அப்படியெல்லாம் மூளைக்கு பயிற்சி கொடுக்க முடியாது. மூளை ஏற்கனவே நூறு சதவீத பயன்பாட்டில்தான் இருக்கிறது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நாங்கள் மூளையை வளர்க்கிறோம் எனச் சொல்லவில்லையே, அறிவுத்திறன் செயல்பாட்டை(cognitive performance) வளர்க்கிறோம் என்றுதானே சொல்கிறோம் என்கின்றன இந்தச் செயலிகள். சிந்தித்தல், விரைவாக முடிவெடுத்தல், நினைவில் வைத்தல் ஆகியவை அறிவுத்திறன் செயல்பாட்டில் அடங்கும். நீங்க நம்பலனாலும் அதான் நிஜம் என்று ஒப்புக்கொண்டு ஜோஹாே போன்ற சில நிறுவனங்கள் தங்கள் நேர்காணலில் இத்தகைய செயலிப் பயன்பாடுகளைக் கூட கணக்கில் கொள்கின்றன. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி விளையாடி நிறைய படிநிலைகளைத் தாண்டி இருந்தால் லெவலுக்கு ஏற்ப நேர்காணலில் சிறப்புப் புள்ளிகள் கொடுக்கின்றன இந்நிறுவனங்கள். வெறுமனே திறன்பேசித் திரையைத் தேய்த்து வெட்டியாக எதையோ விளையாடுவதற்கு பதில் இதில் விளையாடினால் நேர்முகத்தேர்வில் மதிப்பென்றால் இதன் உண்மைத் தன்மை பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டாம் என்பதே பலரின் எண்ணம்.

வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில் கல்வி ஆலோசகர் என ஒருவர் இருப்பார். மாணவர் மதிப்பெண் மற்றும் திறன்களை ஆராய்ந்து அவர் மேற்படிப்பாக என்ன படிக்கலாம் என பரிந்துரைப்பார். நம் நாட்டில் இந்த முடிவை பெரும்பாலும் பெற்றோரே எடுக்கின்றனர். இதை ஆன்லைன் சோதனைகள் மூலமும் முடிவு செய்யலாம். பைலட் ஆகும் கனவுடைய ஒருவர் அடிப்படையாக கணிதமும் இயற்பியலும் தெரிந்தவராக இருக்க வேண்டும். இந்தச் சோதனையில் அவரின் கணிதத்திறன் குறைவு என வந்தால் அவர் தன் திறனுக்கேற்ற வேறு கனவை யோசிக்கலாம். அல்லது தன் கனவுக்குத் தேவையான திறனை வளர்த்துக் கொள்ளலாம். இவை ஓரளவுக்கு நம் திறனைப் புரிந்து கொள்ளத்தான். நம் குடும்ப சூழ்நிலை, எதிர்காலத் திட்டம், கையிலிருக்கும் பணம், படிக்க ஆகும் காலம் அனைத்தையும் பொருத்து முடிவுகளை நாம்தான் எடுக்க வேண்டும். முடிவெடுக்கத் தேவையான காரணிகள் பட்டியலில் இந்த தளங்களின் பரிந்துரையும் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம்.

என்ன வேலை நமக்கு உகந்ததாக இருக்கும்? நம் எண்ணங்கள் நம்மை எந்த மாதிரி நபராக உருவாக்குகிறது? நம்முடைய ஐக்யூ லெவல் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடுபவர்கள் இம்மாதிரித் தளங்களை நாடலாம்.  நம்மை நாமே புரிந்து கொள்ள உதவும் இவை. https://www.123test.com/ https://www.16personalities.com/ போன்ற பல தளங்கள் உள்ளன. மேற்படிப்பு, வேலை, உறவுகள் என நம் தேவையைப் பொருத்து இந்தச் சோதனைகளை தேர்ந்தெடுக்கலாம். அடிப்படை நிலைகள் மட்டுமே இலவசம். மேலதிகத் தகவல்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.

பெரும்பாலான அறிவுசார் செயலிகளையும் வலைத்தளங்களையும் போல கடந்தகாலத்தை விளக்குவதோடு அல்லாமல் எதிர்கால யோசனைகளைக்கும் இடம் கொடுப்பது டெட் டாக்ஸ் (TED Talks) செயலி. தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வடிவமைப்பு ஆகிய சொற்களின் ஆங்கில வார்த்தைச் சுருக்கம்தான் டெட். புதிய யோசனைகளைப் பற்றி சர்வதேச வல்லுநர்கள் பேசும் டெட் மாநாடு உலகப்புகழ் பெற்றது. இவர்களின் செயலியிலும் வலைத்தளத்திலும் இப்படிப் புதுப்புது யோசனைகளைப் பற்றிய பேச்சுக் காணொளிகள் மூலம் பலவற்றைத் தெரிந்துகொள்ளலாம். கடந்தகால வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, உலகளாவிய பிரச்சனைகள், சுயமுன்னேற்றம் என பல தலைப்புகளில் காணொளிகள் இருக்கின்றன. தமிழ் உட்பட பல மொழிகளில் சப்டைடில் இருக்கிறது.

வானியலில் ஆர்வம் இருப்பவர்கள் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமாக நாசா செயலியை உபயோகித்துப் பார்க்கலாம். காணாெளிகள், புகைப்படங்கள், கட்டுரைகள் என பல வடிவங்களில் வானியல் பற்றிய செய்திகள் கொட்டிக்கிடக்கிறது. விண்வெளி பின்புலத்தில் செல்ஃபி எடுப்பது மாதிரி வேடிக்கைச் செயல்பாடுகளும் உண்டு. விண்வெளியைப் பற்றி அதை ஆராய்பவர்களே விவரிப்பதைத் தெரிந்து கொள்வது முற்றிலும் சிறந்த அனுபவமாக இருக்கும்.

பெர்ஃபெக்ட் இயர் (perfect ear) செயலி இசை ஆர்வம் உள்ளவர்களுக்கானது. காதுகளை சரியான ரிதத்துக்கு பழக்கப்படுத்த இச்செயலி உதவுகிறது. அடிப்படை நிலைகள் அனைத்தும் இலவசம். இசை பற்றிய பாடங்களும், இசைக்குறிப்பு வாசிப்பது பற்றியும் கூட அறிந்துகொள்ளலாம். சிறு சிறு பயிற்சிகள் மூலம் இசை அறிவை வளர்க்க முடியும். ஆர்வமிருந்தால் மற்ற பயனர்கள் உடன் போட்டியிடலாம்.

இங்கு குறிப்பிட்டுள்ளவை மிகச் சில மட்டுமே. எல்லாத் துறைகளிலும் பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் தளங்களும் செயலிகளும் இணையம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அள்ளிக்கொள்ள கற்றல் ஆர்வம் இருந்தால் போதும்.

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.