வழியெங்கும் கற்கள் சிறியதும், பெரியதுமாகச் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் பிடிமானமின்றி வழுக்கியது. புகை வாசனை ஏதுமின்றி, சுத்தமாக, சில்லென்று நாசியை நிரடியது மலைக் காற்று. மரங்கள் அழுக்குப் படியாத பச்சையில் நின்றிருந்தன. வீசிய காற்றில் அவர்களை வரவேற்கும் முகமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தன.
மதி லாவகமாக மலைப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தாள். பின்னால் நாலைந்து பேர் அங்கங்கே தவ்விக் கொண்டிருந்தார்கள். அவள் ஏறுவதற்கு வாகாக நீல நிற ஜீன்ஸும், வெண்ணிற குர்தாவும் அணிந்து, தலைமுடியை உயர்த்திக் குதிரை வால் போல் முடிந்திருந்தாள். கால்களை ஷூக்கள் கவ்வியிருந்தன. துள்ளி மேலேறினாள். பின்னால் வந்தவர்கள் சற்று மூச்சிரைக்க நடந்தார்கள்.
“என்ன மேடம் சிட்டி பொண்ணு நீங்க… இவ்ளோ ஈஸியா மலையேறுறீங்க..?” தயாளன் கேட்டுக் கொண்டே பக்கத்தில் இருந்த பாறை மீது சாய்ந்தார்.
மதி நின்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். கூட வந்தவர்கள் ஆங்காங்கே இளைப்பாற நின்று விட்டதால் இவளும் நின்றாள். தயாளனுக்குப் பதிலாக ஒரு புன்னகையை மட்டும் தந்தாள். இடுப்பில் கைகளை ஊன்றி நின்று, இழுத்து மூச்சு விட்டு மலைக் காற்றை அனுபவித்தாள். நெஞ்சு முழுக்க காற்றை நிரப்பிக் கொண்டாள். அகமும் குளிர்ந்தது.
மீண்டும் ஏறத் தொடங்கினார்கள். கொஞ்சம் தொலைவில் லேசான சமவெளிப் பகுதியில் ஆங்காங்கே குடிசைகளும் கற்களால் கட்டப்பட்ட குடியிருப்புகளும் தென்படத் தொடங்கின.
ஒரு பெரிய ஆலமரம் தலையை விரித்துப் போட்டு நின்றிருந்தது. அதன் விழுதுகள், சாமியார்களின் சீவாத தலைமுடி திரிந்து சடை விழுந்ததுபோல தொங்கிக் கொண்டிருந்தன. அதில் இரண்டு சிறுவர்கள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள். மதிக்கும் கை பரபரத்தது. இருந்தாலும் தன்னுடன் வந்தவர்களை உத்தேசித்து மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
ஆலமரத்தடியில் இருந்த திண்டில் இரண்டு மூன்று பெரியவர்கள் ஓய்வாக அமர்ந்திருந்தார்கள். ஒருவர் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். இவர்களைக் கேள்விக் குறியாகப் பார்த்தார்கள்.
தயாளன் இரண்டெட்டு முன்னே வந்து, “ஐயா… நாங்க சென்னைல இருந்து வர்றோம். இவங்க லாயர் மதி. இந்த சந்தன மரக் கடத்தல் விசாரணை சம்பந்தமா…” அவர் முடிப்பதற்குள் அவர்கள் வெகுண்டெழுந்தார்கள்.
“இன்னும் எத்தனை பேருய்யா இப்படிக் கெளம்பி வருவீக? புண்ணை ஆற வுடாம குத்திக் குத்திக் கிளறிட்டு…” ஒருவர் சத்தம் போட்டதில் உறங்கிக் கொண்டிருந்தவர் திடுக்கிட்டு எழுந்தார்.
“என்ன வேம்புலி.. யாரு இவுக..?” என்றார் துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே.
“யாருக்குத் தெரியும்..?”
“யாரு என்ன ஏதுன்னு விசாரிக்காம கெடந்து கத்தாதீரும்…” என்றவர் திரும்பி, “யாருங்க நீங்க..? என்ன விஷயமா வந்திருக்கீக..?” என்றார்.
“ஐயா… இவங்க லாயர் மதி. சென்னைல ஒரு அறக்கட்டளை ‘மா ஃபவுண்டேஷன்’ ங்கிற பேர்ல பெண்களுக்காக நடத்திட்டு வராங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இங்க…” அவர் குரல் தயங்கியது. “இங்க… சந்தன மரக் கடத்தல் விசாரணைக்கு போலீஸ் வந்ததைப் பத்தி…” அவர் முடிக்கும் முன் அந்தப் பெரியவர் குறுக்கிட்டார்.
“யெய்யா… சாமீய்… ஏம்யா திரும்பத் திரும்ப அதையே கேக்குறீங்க? எங்களுக்கு, எங்க பொண்டு, புள்ளைங்களுக்குத் தாம்யா அசிங்கம்…” குரல் தழுதழுத்து கண்ணில் வழியத் தொடங்கியது.
மதி சட்டென்று அவர் கையைப் பற்றிக் கொண்டாள்.
“ஐயா… நாங்க உங்களுக்கு நடந்த கொடுமைகளைக் கேட்டு பத்திரிகைல எழுதி பணம் சம்பாதிக்க வரலைங்க. நடந்த சம்பவத்தோட பாதிப்புகளை நிவர்த்தி பண்ண வந்திருக்கோம். நாங்க தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவங்க. எங்க அமைப்புல உங்க பொண்ணுங்களுக்கு முடிஞ்ச கல்வியறிவு, வேலைவாய்ப்புன்னு செஞ்சு தருவோம்…” அவர் மதியின் கையை உதறினார்.
“ஆத்தா… தாயி… உங்க உதவியும் வேணாம். ஒண்ணும் வேணாம். பேசாமப் போயிருங்க. உங்க நகரத்து சாவகாசமே வேணாம்” கையெடுத்துக் கும்பிட்டார். “பட்டதெல்லாம் பத்து சென்மத்துக்குப் போதும்…”
மதி கையைக் கட்டிக் கொண்டு அவரையே பார்த்தாள். அதற்குள் அங்கு கொஞ்சம் பேர் கூடியிருந்தனர். ஆண்களும் சொற்ப குழந்தைகளுமான கூட்டத்தில் பெண்களையே காணோம்.
அதற்குள் பக்கத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் கை சறுக்கி கீழே விழுந்தான். விழுந்த இடத்தில் இருந்த கூரிய கல்லொன்று தோள்பட்டையைக் கிழித்திருந்தது. அவனிடமிருந்து பெருத்த அலறல் கேட்டது.
மதி சட்டென்று அவனைத் தூக்கினாள். தயாளன் ஓடி வந்து முதலுதவிப் பெட்டியை நீட்ட, உள்ளிருந்து மருந்தை எடுத்து புண்ணை சுத்தம் செய்து, களிம்பைத் தடவிக் கட்டுப் போட்டாள்.
கிளம்பலாம் என்று திரும்பியவளை நிறுத்தியது ஒரு பெண்ணின் குரல்.
“நில்லுங்கம்மா…” மதி திரும்பினாள்.
“உங்க கூட நான் கொஞ்சம் பேசணும்…” என்றாள் அந்தப் பெண். கொஞ்சம் ஒல்லியாக, பெரிய பூக்கள் அச்சிட்ட நைட்டி அணிந்திருந்தாள். மேலே ஒரு சாயம் போன சிவப்பு ஈரிழைத் துண்டைப் போர்த்தியிருந்தாள்.
“சொல்லுங்க. என்ன பேசணும்..?” மதி மென்மையாகக் கேட்டாள்.
“அந்த… அந்த… சம்பவத்துக்கு அப்புறம் என் பொண்ணு பிரம்மை பிடிச்சுப் போய்க் கிடக்குதுங்கம்மா. சோறு திங்க மாட்டேங்குது. வெளிலயே வர மாட்டேங்குது. அ…அவங்கப்பாவைப் பாத்தாக் கூட… ந..ந..நடுங்குது…” அந்தப் பெண் துண்டை வாயில் பொத்திக் கொண்டு அழ, சுற்றியிருந்தவர்களும் கண்கள் கசிந்தார்கள்.
“என்னை நம்புனீங்கன்னா.. உங்க பிரச்னைகளைச் சொல்லுங்க. சும்மா கேட்டுட்டு பேப்பர்ல போட்டு போற ஆளு இல்ல நான். நிஜமாவே உங்களுக்கு உதவி செய்யத்தான் எங்க டீமோட வந்திருக்கேன்..” மதி சொன்னாள்.
***
அது ஒரு மலைக் கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்குச் சரிவில் ஓரத்தில் இருந்தது. ஊர்க்காரர்கள் பொன்னூத்து மலை என்று சொல்லுவார்கள். அங்கு வேங்கை, காயா, குமிழ், மகிழம், கருமருது, தேக்கு, சால், பலா, அத்தி, ருத்ராட்சம், மலை வேம்பு, பூவரசு, வாகை, சந்தனமரம் என்று எக்கச்சக்கமான மரங்களால், வளம் நிறைந்திருந்தது. வனச் சரகர்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் எப்படியாவது மரங்களை வெட்டிக் கடத்தி விடுவார்கள். குறிப்பாக சந்தன மரங்களை.
அப்படி ஒருமுறை சந்தன மரங்கள் நிறைய வெட்டப்படவே வனத்துறை விழித்துக் கொண்டு, காவல்துறையோடு வந்தது.
வழக்கமான எளிய விளிம்பு நிலை மனிதர்களை விசாரிப்பது போல்தான் இந்த விசாரணையும் அமைந்தது. காட்டுக்குள் விசாரணை என்று காவல்துறையும் காட்டுத் தனமாக நடந்து கொண்டது. ஆண்களை அடித்துத் துவைத்தார்கள். பெண்களை அவிழ்த்து வதைத்தார்கள். பூக்கள் மட்டுமல்ல மொட்டுகளும் சிதைந்தன. எப்படியோ விஷயம் வெளியே கசிந்து ஊடகங்கள் ஓடி வர, காடு பற்றிக் கொண்டது.
மாறி மாறிப் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அங்கே முகாமிட்டன. நடந்த விஷயங்களை திரும்பத் திரும்பப் பேசி ஊர் உலகம் எங்கும் பரப்பின. நடந்த அக்கிரமத்திற்கு நீதி வாங்கித் தருவதைவிட, அந்தப் பெண்களுக்கு நடந்த விஷயங்களையே திரும்பத் திரும்பக் கேட்டார்கள். விதவிதமான தலைப்புகளில் கொஞ்சம் புனைவும் சேர்த்து வெளியிட்டு தங்கள் பத்திரிகையின் சர்க்குலேஷனையும், மீடியாக்களின் டிஆர்பி ரேட்டையும் ஏற்றுவதிலேயே அவை முனைப்புடன் இருந்தன. மலைவாழ் மக்கள் ஒருநாள் பொங்கி எழுந்து அனைவரையும் விரட்டி அடித்தார்கள்.
***
மழை வரும் போல இருந்தது. கருமேகங்கள் வானில் திரண்டன. வீசிய காற்றில் நீர்த்துளிகள் கலந்திருந்தன.
மதி அந்தப் பெண்ணின் குடிசைக்குள் போனாள். மற்றவர்கள் வெளியிலேயே நின்றார்கள். சிறிய குடிசை. உள்ளே சுத்தமாக இருந்தது. சமைக்கும் இடம் சிறியதாக இருந்தாலும் பொருட்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குடிசையின் மூலையில் இருளாக இருந்தது. கிழிந்த பாயில் ஒரு சிறுமி பழந்துணியாகச் சுருண்டு கிடந்தாள்.
மதி மெல்ல அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள். மெதுவாக அவளது தோளைத் தொட்டதும் சடாரென்று விழித்துக் கொண்ட சிறுமி மூச்சிரைப்புடன் சுவரோரமாய் ஒண்டினாள். அவளிடமிருந்து கேவல் ஒலி எழுந்தது.
“இங்க பாரும்மா. நான் அக்கா வந்துருக்கேன். பயப்படாதடா..” என்றவாறு அவளது முகத்தில் விழுந்த முடிக் கற்றைகளை ஒதுக்கினாள் மதி. வட்டமான முகம். உருண்டைக் கண்கள். அளவான மூக்கு. பொலிவிழந்த முகம். தூசி படிந்த ஓவியமாக இருந்தாள்.
அவளது கையைத் தட்டி விட்டாள் சிறுமி.
மதி சிறு புன்னகையுடன், “உன் பேர் என்னம்மா..?” என்றாள்.
சிறுமி அவளைத் தாண்டிப் பார்வையைப் போட்டு, “யாருட்டயும் பேச மாட்டேன். வெளில போ..” என்றாள்.
மதி அவளிடம் பேச முயன்றபோது, கையில் இருந்த துணியைச் சுருட்டி அவள் முகத்தில் வீசி எறிந்தாள்.
மதி வெளியே வந்து தயாளன் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு மீண்டும் சிறுமியின் அருகில் வந்தாள்.
பையை அவளிடம் நீட்டினாள். “இந்தா… இது உனக்குத் தான். வெச்சுக்கோ…” என்க, சிறுமி பேசாமல் அமர்ந்திருந்தாள். மதி பையை அவள் அருகில் வைத்தாள். இருவரும் சற்று நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.
பத்து நிமிடம் கழிந்தது. அந்தக் குழந்தையின் கை மெல்ல பையை எடுத்தது. உள்ளிருந்து எடுத்த ஆகாய வண்ண கவுனில், இள மஞ்சளும், வெள்ளையுமாய்ப் பூக்களும், பட்டாம்பூச்சிகளும் கண்சிமிட்டின. கண்கள் விரிய, ஆசையாய் பிரித்துப் பார்த்தாள். மதியைப் பார்த்துப் புன்னகைத்தாள். “நீங்க யாரு..?”
“உனக்கு படிக்கணும்னு ஆசை இருக்கா..?”
“ம்… இருக்கு…”
“படிச்சு என்ன ஆகணும்னு நினைக்கிறே..?”
“டீச்சர்…”
“அப்புறம்… இப்படி இருட்டுலயே உட்கார்ந்திருந்தா எப்படி படிப்ப..? எப்படி டீச்சர் ஆவ..?” மதி மெல்லச் சிரித்தாள்.
அந்தக் குழந்தை அவளை நிமிர்ந்து பார்த்தது.
“நீங்க படிக்க சொல்லித் தருவீங்களா..?” உருண்டைக் கண்களில் சிறு வெளிச்சம்.
“நீ என் கூட வர்றியா..? உன்னைப் படிக்க வைக்கிறேன். டீச்சர் ஆக்குறேன்…” மதி சிரித்தாள்.
“அம்மா… அம்மாவும் வரணும்” என்றாள் அவசரமாக.
“சரி…” மதி சொன்னதும் அதன் முகம் மலர்ந்தது.
“வா… வெளியில் போகலாம்…” மதி அவள் கையைப் பிடித்து குடிசைக்கு வெளியே அழைத்து வந்தாள்.
வெளியே நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் அந்தக் குழந்தையின் முகத்தில் பயம் அப்பியது. திரும்பி உள்ளே ஓட எத்தனித்தாள். மதி அவள் கையை இறுக்கமாகப் பிடித்தாள். “நான் இருக்கேன்ல? வா…”
“கொஞ்சம் எல்லாரையும் வர சொல்றீங்களா. உங்க கிட்டப் பேசணும்…” மதி சொன்னதும், சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே கூடி விட்டார்கள்.
மதி ஆலமரத்தின் அடியில் அந்தக் குழந்தையை அருகில் வைத்து அமர்ந்து கொள்ள, எல்லோரும் கீழே அமர்ந்தார்கள்.
வீசிய காற்றில் மழையின் மணம் கலந்து வந்தது.
“உங்க எல்லாருக்கும் இப்போ ஒரு கதை சொல்லப் போறேன். இருளாயி கதை…” மதி சொல்லத் தொடங்கினாள்.
***
அவள் ஒரு வனதேவதை மாதிரி இருந்தாள். நடையில் துள்ளலான உற்சாகம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. தலைமுடி அடர்த்தியாக கறுப்பு அருவிபோல் வழிந்து கொண்டிருந்தது. காட்டில் கிடைத்த பூக்களைத் தொடுத்து அவள் தனக்குத் தானே மாலை போட்டுக் கொண்டிருந்தாள். கையில் இருந்த சுரைக் குடுவையில் மலைத்தேன் நிரம்பியிருந்தது. மடி நிறைய மலை நெல்லிக்காய்களைக் கட்டியிருந்தாள்.
அவளுக்குப் பின்னால் தம்பி வந்து கொண்டிருந்தான். அவனும் தன் பங்குக்கு ஒரு சிறிய பலாவைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தான். வீட்டுக்குப் போய் பலாவைப் பிளந்து, சுளைகளை எடுத்து மலைத் தேனில் ஊறவைத்து இருவரும் சாப்பிடுவதாக ஏற்பாடு.
ஊர் நெருங்க நெருங்க ஆண்களும், பெண்களும் குறுக்கும் நெடுக்குமாக பதட்டமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் என்னவென்றே புரியவில்லை.
போலீஸ் ஜீப் ஒன்றும், இன்னொரு கம்பி போட்ட வெள்ளை நிற போலீஸ் வாகனமும் நின்றிருந்தன. கையில் வைத்திருந்த தடியால் அடித்து, அதில் அகப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள் காவல்துறையினர். அவள் வீட்டை நோக்கி ஓடினாள். அவள் அப்பாவின் மண்டை உடைந்திருந்தது. அம்மாவை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான் ஒருவன்.
“அம்மா… அம்மா… அய்யோ… எங்கம்மாவை விடு,..” கூச்சலுடன் அருகில் ஓடினாள். மலைத் தேனும், நெல்லிக்காய்களும் சிதறின. அவன் திரும்பினான். இவளைப் பார்த்துக் கண்களை விரித்தான்.
“இருளாயி… நிக்காதடீ… ஓடீரு ஓடீரு…” அம்மா வயிற்றை எக்கிக் கொண்டு கத்தினாள்.
“அம்மா… அம்மா…” கத்திக் கொண்டு நின்றவளை அவன் வளைத்துப் பிடித்து வண்டிக்குள் தள்ளினான்.
“போன்னு சொன்னேனேடி… கேட்டியா..?” அம்மா தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
அவள் தம்பி அழுதவாறு ஓடி வந்தான். வண்டியில் ஏற முயன்றவனை ஒரு கனத்த பூட்ஸ் கால், வயிற்றில் எட்டி உதைத்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விழுந்தான்.
இன்னும் நிறையப் பெண்களையும், வயதான ஆண்களையும் ஏற்றிக் கொண்டு வண்டி நகரத் தொடங்கியது. சில ஆண்களும், இளைஞர்களும் மலைமீது ஏறிப் பதுங்கிக் கொண்டார்கள்.
***
அந்த மலை செழித்துக் கிடந்தது. சந்தன மரங்கள் அந்த மலையை விலைமதிப்பற்றதாக்கி இருந்தன. உள்ளூர் அரசியல்வாதிகள் கண்களை அது உறுத்தவே, கொஞ்சம் கொஞ்சமாக சந்தன மரங்கள் இரவோடிரவாக வெட்டப்பட்டு கடத்தப்பட்டன. மான்கள் அரசியல் புள்ளிகளுக்கு விருந்தாக்கப்பட்டன. வனக் காவலர்களுக்கும் பங்கு போனதால், வெளியுலகத்திற்குத் தெரியாமல் இருந்தது.
கொஞ்ச நாள் கழித்து பொதுநல வழக்காக ஒருவர் அளித்த புகாரின் பேரில் கண்துடைப்புக்காக சோதனை என்ற பெயரில் காவல் துறை வந்தது. ஒரு வயலுக்கருகில் சில சந்தனக் கட்டைகளையும், மான் தோலையும் கைப்பற்றியதாகச் சொல்லி அங்கிருந்த ஒருவரை விசாரித்து அடித்தது. உடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஒன்றுகூடி அந்தக் காவலரை அடித்து விரட்டினர். இதனால் கோபம் கொண்ட காவல்துறை தனது வெறியாட்டத்தை அரங்கேற்றத் தொடங்கியது.
***
இருளாயி நைந்த துணியாய்க் கிழிந்து கிடந்தாள். உடம்பெல்லாம் வலித்தது. இடுப்பை அசைக்க முடியவில்லை. அம்மா எங்கே என்று கையை நீட்டித் துழாவினாள்.
“முழிச்சிட்டா போல…” ஒரு கனத்த ஆண்குரல் கேட்டது.
“நீ வெளியே போய் நில்லு. நான் போறேன்…” விகாரமாக இளித்தது இன்னொரு ஆண் குரல். “நான் முடிச்சதுக்கப்புறம் நீ போ…”
அவளால் அசையக்கூட முடியவில்லை. யாரோ வந்து பாவாடையை மேலே உயர்த்துவது தெரிந்தது. போராடவும் இயலவில்லை. வலுவற்ற கைகளால் தடுக்க முனைந்தாள்.
“விட்ருங்க… வலிக்குது… எரியுது…” கத்தினாள்.
அவன் வெறித்தனமாக இயங்கத் தொடங்கினான். இருளாயி வலி தாங்காமல் கத்தி மயக்கத்துக்குப் போனாள்.
மீண்டும் விழித்த போது அம்மா மடியில் கிடந்தாள். பாவாடையில் இடுப்புக்குக் கீழே இரத்தக் கறை படிந்து பிசுபிசுத்தது. அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள். “ம்மா… வலிக்குதும்மா… தாங்க முடியலைம்மா. வா நாம போயிறலாம்…” அம்மா பதில் சொல்லவில்லை.
லேசான வெளிச்சத்தில் இன்னும் இரண்டொரு பெண்கள் அங்கே கிடந்தது தெரிந்தது. அவர்களின் சேலைகள் உருவப்பட்டிருந்தன. நிர்வாணமாக்கப்பட்டிருந்தார்கள். அம்மாவும் அப்படித்தான் இருந்தாள். எல்லோரும் சத்தமின்றி வாயைப் பொத்தி கொண்டு அழுதார்கள்.
நினைத்த நேரத்தில் காவலர்கள் அவர்களை வேட்டையாடி ஊன் தின்று வெறியைத் தணித்துக் கொண்டார்கள். அந்தப் பெண்களால் நகரக் கூட முடியவில்லை.
ஆண்களின் நிலையும் மோசம். அவர்களையும் ஆடை உருவி அடித்துத் துவைத்து பிழிந்து போட்டிருந்தார்கள்.
அந்த ஊருக்கு விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்ய வந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், ஊருக்குள் ஆளரவமின்றி இருப்பதையும் பொருள்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டு விசாரிக்கத் தொடங்கியது. மலையின் உச்சியில் பதுங்கியிருந்தவர்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களைச் சொல்லிக் கதறினார்கள்.
தமிழ்நாடே பற்றிக் கொண்டது. ஊடகங்களும், அரசியல்வாதிகளும், சமூக சேவகர்களும் அங்கு படையெடுத்தனர். காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள், விடுவிக்கப்பட்டார்கள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் வாயிலாக நடந்த கொடுமைகள் நாடறிய முரசறையப்பட்டன.
இருளாயியால் அந்தச் சம்பவத்தில் இருந்து வெளிவரவே முடியவில்லை. கடும் மன உளைச்சலுக்கு உள்ளானாள். யாரையும் பார்க்கும் துணிவின்றி குடிசையின் இருளுக்குள்ளேயே கிடந்தாள். அப்போதுதான் ‘இதம் அறக்கட்டளை’ சார்பில் ஒரு குழு அங்கு வந்தது. இருளாயியின் தந்தை அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் உதைத்ததில் அவள் தம்பியும் இறந்து போனான். பாலியல் வல்லுறவால் அவள் அம்மா மனநிலை பாதிக்கப்பட்டார்.
இதம் அறக்கட்டளையைச் சேர்ந்த கல்பனா என்பவர் இருளாயியையும், அவள் தாயையும் பராமரிக்கும் பொறுப்பைத் தானாகவே மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.
***
மழை பெய்து முடித்து, சிறு தூறலாக மாறியிருந்தது. மதி சொல்லி முடித்தாள். சுற்றி இருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள், நனைந்து கூட உறைக்காமல் வாயடைத்து அமர்ந்திருந்தார்கள்.
“அப்புறம் என்ன தாயி ஆச்சு..?” வேம்புலி மெல்லக் கேட்டார்.
“இருளாயியோட அம்மாவை மனநல மருத்துவமனையில் சேர்த்து, தொடர் சிகிச்சைகளால் ஒரு வருஷத்துல மெல்ல மெல்லக் குணமாகி மீண்டாங்க. அந்தக் கல்பனாம்மா வீட்டுலயே வேலை பார்த்தாங்க. மூணு வருஷம் முன்னால தான் இறந்து போனாங்க…” மதி மெல்லிய குரலில் சொன்னாள்.
“அந்தப் புள்ள இருளாயி..?” ஒரு பெண்மணி கேட்டார்.
“இருளாயி படிக்கணும்னு ஆசைப்பட்டா. அதனால் அந்தக் கல்பனாம்மா படிக்க வெச்சாங்க. ஒரு லாயரா ஆக்கினாங்க. இருட்டுல கெடந்தது போதும்னு அவங்க தான் மதிவதனின்னு அவ பேரை வெளிச்சமா மாத்தி வெச்சாங்க…” மதி கம்பீரமாகச் சொன்னாள்.
கூட்டம் ஆச்சரியமாகக் குரல் எழுப்பியது.
“வக்கீலம்மா… அது.. அது.. நீங்களா..?” பெரியவர் கண்கள் கலங்கினார்.
“ஆமாங்கய்யா. நான் தான் அந்த இருளாயி. என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்களை நொந்து போகாம… வாழ்க்கை மேல நம்பிக்கை இழக்காம பார்த்துக்கறதுதான் என் வேலை. எனக்கொரு கல்பனாம்மா கிடைச்ச மாதிரி, மத்தவங்களுக்கு இந்த மதி…” என்றவள் பக்கத்தில் இருந்த அந்தச் சிறுமியிடம் கேட்டாள்.
“இப்போ சொல்லு… உன் பேரு என்ன..?”
“மாசிலா…” உருண்டைக் கண்களில் பளபளப்புத் தெரிந்தது.
“என் கூட வர்றியா..? படிக்க வைக்கிறேன். படிச்சு டீச்சர் ஆகலாம்.”
“வர்றேன்க்கா…” உற்சாகத்துடன் சொன்னாள்.
“உங்க எல்லாருக்கும் படிப்பு, வேலை, விவசாய உதவி, கைத்தொழில், பொருளாதார மேம்பாட்டுக்கு உதவின்னு நாங்க வழி காட்டுறோம். உங்க வாழ்க்கையை நீங்க வாழலாம்…” என்றதும் எல்லோரும் ஆரவாரமிட்டார்கள்.
“அதுக்கான ஏற்பாடுகளோட இரண்டு நாள் கழிச்சு மறுபடியும் வர்றோம். மாசிலா… அப்போ என் கூட வர்றியா..?” அந்தச் சிறுமி அம்மாவைப் பார்த்தாள். அம்மா சிரித்தபடி தலையசைக்க, மதியின் விரல் பற்றி முத்தமிட்டாள்.
கீழே இறங்கத் தொடங்கியவர்களை ஒருவர் கேட்டார்.
“வக்கீலம்மா… நீங்க எந்தூருங்க..?”
“வாச்சாத்தி…” மதி நடக்க ஆரம்பித்தாள்.
***
படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.