தோழி ஒருவர் திருமணமாகி நான்கைந்து வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்து அப்போதுதான் கருத்தரித்து இருந்தார். கருவுறுதலுக்கான அறிகுறிகள் தோன்றியவுடன் மெடிக்கல் ஷாப்பில் விற்கும் கிட் வாங்கி சுயபரிசோதனை மூலம் கருவுற்றதை உறுதி செய்துகொண்ட அவர், வீட்டில் மகிழ்வோடு இந்தச் செய்தியைத் தெரிவித்திருக்கிறார். குடும்பத்தினருக்கும் மிகுந்த சந்தோஷம். நீண்ட நாள் கழித்து கரு உருவாகி இருப்பதால் குடும்பமே தாங்கியது. மூன்று நான்கு மாதம் வரை வெளியே சொல்ல வேண்டாம் என முடிவு செய்து, அதை ரகசியம் போலும் காப்பாற்றி வந்தார்கள். திடீரென ஒரு நாள் அந்தப் பெண் வயிற்று வலி தாங்க முடியாமல் அரற்ற, அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது கருக்குழாயில் இருந்து கருப்பைக்குள் வராமல் கருக்குழாயிலேயே தங்கி அவரின் உயிருக்கே எமனாக மாறியது தெரியவந்தது. சிறுநீர் பரிசோதனையில் கருவுற்றது தெரிய வந்தாலும், மகப்பேறு மருத்துவர் ஒருவரைச் சந்தித்து கருவுற்றதை உறுதி செய்துகொள்வதுடன், கருப்பையில் தான் கரு வளர்கிறதா என்பதை உறுதி செய்வதையும் தெரிந்துகொள்வது அவசியம்.


கருப்பையில் கருவின் வளர்ச்சி என்பது அனைத்துப் பெண்களுக்கும் சற்றேறக்குறைய ஒன்று போல இருந்தாலும், அதனால் உடலில் நடக்கும் மாற்றங்களும் ஹார்மோர்ன்கள் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை கருவுற்ற அனைத்துப் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஹார்மோர்ன்கள் சுரப்பு மிக அதிகமாக இருக்கும் அந்தக் காலகட்டத்தில் வாந்தி என்பது கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும், எனக்குத் தண்ணீர் சென்றால்கூட வாந்தி எடுத்து, தொண்டை புண்ணாகி, பசி ஒரு பக்கம், சாப்பிட்டால் எடுக்கும் வாந்தியின் காரணமாக உணவைப் பார்த்தாலே வரும் பயம் என்று தான் ஐந்து மாதங்கள் கழிந்தது. அத்துடன் உமிழ்நீர் சுரந்து தரும் எரிச்சல், சில வகை உணவு பொருட்களின் வாசம் நாசி தொட்டாலே வாந்தி ஆரம்பிக்கும். அதில் எனக்கு வெங்காயமும் பூண்டும் அவ்வளவு ஒவ்வாமையைத் தந்தன. பிரசவம் ஆகி பல நாள் ஆன பின்புகூட வெங்காயத்தையும் பூண்டையும் பீதியுடன்தான் பார்ப்பேன். எனக்காவது பரவாயில்லை ஐந்து மாதங்களுடன் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. வாந்தி முடிவுக்கு வந்து வயிறாற சாப்பிட முடிந்தபோது அடைந்த உற்சாகம் எழுத்தில் வடிக்க முடியாது. ஒரு சில பெண்களுக்குப் பிரசவ அறைக்குச் செல்லும் வரை வாந்தி தொடர்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.


என் தங்கைக்குப் பிரசவம் வரை வாந்தியோ ஒவ்வாமையோ எதுவும் இல்லாமல் எல்லாம் சாப்பிட்டு, அனைத்து வேலைகளையும் செய்து நார்மலாக வளைய வந்தாள். ஆக ஒரு சிலருக்கு ட்ரிப்ஸ் போடும் அளவு வாந்தி எடுக்கலாம், தலைசுற்றல் என்று சுருண்டு கிடக்கலாம், மற்றொரு பெண் பாட்டு கேட்டு கொண்டு உற்சாகமாக வளைய வரலாம். அதனால் பிற பெண்களுடன் ஒப்பீடு செய்து, நம் வீட்டுப் பெண்களிடம் முகத்தைக் காட்டாமல், ஹார்மோன்களின் கலகம் என்பதை உணர தலைப்பட்டாலே போதும். அத்துடன் தொடர் மருத்துவ பரிசோதனைகளும் மருத்துவ ஆலோசனையும் இந்தக் காலகட்டத்தைக் கடக்க பெண்களுக்கு வெகுவாக உதவும்.


சில பெண்களுக்குத் திட்டமிடப்படாத கர்ப்பம், கருச்சிதைவு போன்ற முந்தைய எதிர்மறை அனுபவங்களுக்குப் பிறகு கர்ப்பமாக இருக்கும்போது மன அழுத்தம் (Stress During Pregnancy) உண்டாகலாம். அதேபோல கர்ப்பத்தின் உடல் மாற்றங்கள், பிரசவ பயம், வீட்டிலுள்ள நிலைமை, குடும்பப் பொருளாதாரம் போன்றவையும் மன அழுத்தத்தை உண்டாக்கலாம்.
கர்ப்பகாலத்தில் குடும்பத்தில் எதிர்பாராமல் உண்டாகும் மரணம், கடந்தகால பிரச்னை, கர்ப்பகாலத்தில் அதிக மன அழுத்தத்தை உண்டு பண்ணக் கூடும்.


சிலருக்குக் குழந்தையையும் தாயையும் பாதிக்கும் மோசமான மன அழுத்தங்களும் உண்டு. எனவே கர்ப்பகாலத்தில் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தயக்கமில்லாமல் மருத்துவரிடம் உடல் நலம் குறித்து ஆலோசிக்கும்போது மன அழுத்தம் குறித்தும் ஆலோசிக்க வேண்டும். உடல் நலம் குறித்து அக்கறை காட்டும் பலரும்கூட மனநலம் குறித்து அக்கறை காட்டுவதில்லை என்பதுடன், தங்களின் மன அழுத்தங்களைப் பகிர்ந்தால், நம்மைத் தவறாக நினைத்து விடுவார்களோ என்று வெளியே கூறவே தயங்குகின்றனர்.


கர்ப்பமடைந்த பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்கும், இதெல்லாம் நல்லது என்ற பெயரில் குடும்பமும் சமூகமும் செய்யும் சில கொடுமைகள் இன்றளவும் தொடருகின்றன. கர்பமான பெண்கள் புளிப்பாக குறிப்பாக மாங்காய், ஊறுகாய், சாம்பல் சாப்பிடுவார்கள் என்று ஒரு கற்பிதம் வைத்துக்கொண்டு, வீட்டுக்கு வருவோர் போவோர் எல்லாம் டஜன் கணக்கில் மாங்காயும் ஊறுகாயும் கொண்டு வந்து கொடுத்து செல்வார்கள். அதேபோல எங்கள் ஊர் பக்கம் கர்பிணி பெண்களைப் பார்க்க உறவினர்கள் இனிப்புடன் வருவார்கள், அதைச் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்தல்களும் வேறு இருக்கும்.


உண்மையில் அனைவரும் மாங்காயையும் ஊறுகாயையும் விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். எனக்குத் தெரிந்த நிறைய பேர் மாங்காய், ஊறுகாய் பிடிக்காதவர்கள், அதனை தவிர்த்தும் இருக்கிறார்கள். இன்னொன்று இப்போதைய காலகட்டத்தில் வாழ்வியல் மாற்றம் காரணமாகப் பலருக்குக் கர்ப்பகால நீரிழிவும் ரத்த அழுத்தமும் இருப்பதால் இனிப்போ ஊறுகாயோ சாப்பிட முடியாத கையறு நிலைதான். இனிப்பும் மாங்காயும் சுமந்து வந்து கொடுத்துவிட்டு இலவசமாக நல்லது சொல்கிறேன் என இப்படிப் படுக்காதே, அப்படி உட்காராதே என ஏகப்பட்ட அறிவுரைகளை வாரிவழங்கி ஒரு குழப்பு குழப்பிவிடுவதுடன் பயத்தையும் விதைத்துச் செல்வார்கள்.


முன்பு அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும்தாம் தங்களின் பேறுகால அனுபவத்தைக் கூறி குழப்பி அடித்து, பீதியை உருவாக்கினார்கள் என்றால், இன்று அதனை இணையம் எடுத்துக் கொண்டுள்ளது. தேவை இல்லாததை கூகுள் செய்து கண்டதையும் கற்பனை செய்துகொண்டு, சின்ன விஷயங்களுக்குப் பூதாகரமாக பயந்து, மன நலம் தொலைத்து, யூ டியூபில் அரைகுறை வைத்தியர்கள் கூறும் ஆலோசனைகளை, டிப்ஸ்களைப் பின்பற்றுகிறேன் என உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு நான் கூற வருவது ஒன்றே தான், உங்கள் உடல்நிலை குறித்து கூகுளிலில் விடை தேட முயற்சிக்காதீர்கள். நல்ல கைனாகாலஜிஸ்டிடம் சரணடைந்து விடுங்கள். அவர்கள் சொல்வதை முழுமையாகப் பின்பற்றுங்கள்.


இதில் நமது மக்களில் சிலருக்குத் திடீரென இயற்கை வழியில் சுகப்பிரசவம், பாராம்பரிய உணவு, மாற்று மருத்துவம் ஆகியவற்றில் மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆர்வம் என்றால்கூட பரவாயில்லை, அதைத் தாண்டி அலோபதி மருத்துவம் என்னவோ மக்களை கொலை செய்வதற்காகவே செயல்படுவது போன்ற தோற்ற மயக்கமும் இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி காசு பார்க்க நினைக்கும் போலி மருத்துவர்களும் ஹீலர்களும் பலரின் உயிரைப் பலி வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். நான் மாற்று மருத்துவத்திற்கு எதிரானவள் இல்லை. ஆனால், நான் வளர்ந்த காலகட்டத்திலேயே பிரசவ வலியோடு நான்கு நாட்களுக்கு மேல் போராடிய பெண்கள், பனிக்குடம் உடைந்தும் நார்மல் டெலிவரிக்கு நீண்ட காலம் காத்து இருந்ததால் பிறந்த குழந்தைக்கு இதய பாதிப்பு, பேறு கால உயிரிழப்பு, அதீத ரத்தப்போக்கால் உயிரிழப்பு, ஆயுதம் போட்டு குழந்தை எடுத்தது எனப் பல கொடூர அனுபவங்களையும், பிரசவத்திற்குப் பிறகும் பெண்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த நிலையில் நவீன மருத்துவம்தான் அதனை பெருமளவு குறைத்துள்ளது.


மாறிவிட்ட வாழ்க்கை முறை, உணவு பழக்கம், உடற்பயிற்சி, போன்ற எத்தனையோ காரணிகள் நார்மல் டெலிவரி ஆகாமல், சிசேரியனுக்கு வழிவகுக்க, அவை எதையும் ஆராயாமல் காசுக்காக சிசேரியன் செய்கிறார்கள், (இப்போது எல்லாம் இயற்கை மருத்துவம், மாற்று மருத்துவம்தான் அலோபதியைவிட காஸ்ட்லி) நான் இயற்கை முறையில் பிரசவம் பார்க்க போகிறேன் என எங்கெங்கோ சென்று நம் உயிரைப் பணயம் வைக்க வேண்டுமா?


(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.