அனைவருக்கும் வாழ்வு நம்பிக்கையால்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. நாளை கண் விழிப்போம் என்பதே பெரிய நம்பிக்கைதான். என்றாவது சில மனிதர்கள் நமக்கு நம்பிக்கை தந்துவிட்டு, கடந்து போகும் அழகான தருணங்களை நம் வாழ்வில் ஒருமுறையாது அனுபவிக்காமல் இருந்திருக்க மாட்டோம். உணர்ந்திருக்கிறீர்களா?

எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் பலரும் இதைச் சொல்வதுண்டு. “சிக் சிக்குனு நீங்க எல்லாத்தையும் கவனிச்சுட்டு, வேலைக்கும் போயிட்டு, தனியா மேனேஜ் பண்ணிட்டு இருக்கீங்க. என் பொண்ணுகிட்ட உங்களைத்தான் எடுத்துக்காடாகச் சொல்வேன்” என்று ஓர் அம்மா என்னைப் பார்க்கும் போதெல்லாம் சொல்வார். இதைக் கேட்கும் போது ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு எடுத்துக்காட்டாகவோ அல்லது ரோல் மாடலாகவோ என் மனதில் அவ்வப்போது சிலரை வைத்துக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை ஒரு சங்கிலித் தொடர் போன்று ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொடுத்து வாழ்வது முக்கியமல்லவா?

எங்கள் வீதியில் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் சாலையில் ஓர் உறை சாக்கு போட்டு, களிமண் குவித்து, பிள்ளையார் செய்யும் பாட்டி ஒருவர் இருக்கிறார். மற்ற சமயங்களில் எங்கேயும் காணாத அவரை விநாயகர் சதுர்த்திக்குச் சில நாட்கள் முன்தான் பார்க்க முடியும். அவர் யார், எங்கிருக்கிறார் என்றெல்லாம் தெரியாது. ஒருமுறை அவரிடம் விசாரித்த போதுதான் தெரியும், அவருக்குக் கேட்கும் சக்தியும் பேசும் சக்தியும் இல்லை என்று. அதனைப் பொக்கை சிரிப்பில் அத்தனை அழகாக விளக்கினார். வயதை சைகையில் காண்பித்தார். இந்த வயதிலும் அவர் உழைப்பதை நினைத்து மலைத்துப் போனேன். வீட்டில் மகன் கவனித்தாலும் சும்மா இருக்கப் பிடிக்காது என அவ்வப்போது ஏதாவது செய்வதாகச் சொன்னார். மற்ற சமயங்களில் பள்ளிக்கு அருகே கடை போட்டு பண்டங்கள் விற்பதாகச் சொன்னார். எத்தனையோ முறை சோர்ந்து போனபோது அவரை நினைப்பேன். அந்த மாதிரி பாட்டிகளை ஏறக்குறைய எல்லாப் பள்ளிகளின் அருகிலும் பார்த்திருப்போம். வயதான காலத்தில் நம் வீட்டுப் பாட்டிக்கு இணையான பந்தம் அவர்கள் மீது உண்டாகும்.

அது போல் எங்கள் அபார்ட்மென்ட்டில் ஒரு செக்யூரிட்டி குடும்பம் இருந்தது. அந்தப் பெண் மிகச் சிறியதாக இருப்பார். வயதும் இருபதிற்குள்தான் இருக்கும். அவள் நிறைமாத கர்ப்பமாக இருந்தார். முந்தைய இரவில்தான் பேசிக்கோண்டிருந்தோம். அவரை நல்ல மருந்துவமனையில் சேர்த்துப் பிரசவம் பார்க்க வேண்டுமென்று. மறுநாள் காலை ஒன்பது மணிவாக்கில் அந்த செக்யூரிட்டி வீட்டில் இனிப்பு பாக்ஸுடன் வந்தார். அப்போதும் எனக்கு புரியவில்லை. “குழந்தை பிறந்திருக்கிறது” என்றார். ஏன் எங்களை மருத்துவமனைக்கு கூப்பிடவில்லை என்று கேட்டேன்.

“நானே இல்லை மேடம், காலையில் வயிறு வலிக்குதுன்னு சொன்னா. எதிரில் இருக்கும் அவளுடைய தோழியைக் கூப்பிட்டு வர்றதுக்குள்ள குழந்தை பிறந்துடுச்சு. அவளே பிரசவம் பார்த்துகிட்டா” என்றார். அந்தப் பெண் அதற்குப் பிறகும் மருத்துவமனைக்குச் செல்ல மாட்டேனென்று உறுதியாகக் கூறினார். மாலையில் மூன்று மணி வாக்கில் பார்க்கும்போது, குழந்தை பிறந்த எந்த அறிகுறியுமில்லாமல் வெளியில் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்தார். அவராகவே விருப்பப்பட்டு செய்ததாகச் சொன்னார்.

இந்த உலகில் எல்லாமே சாத்தியம்தான். நாம்தான் சில விஷயங்களிலிருந்து வெளிவர யோசிக்கிறோம், தயங்குகிறோம், வசதியாக ஒரு பாதுகாப்பு வளையத்தில் இருக்க நினைக்கிறோம். இவையெல்லாவற்றையும் தவிடுபொடியாக்குபவர்கள் எளிய மனிதர்களே.

நம்மிடம் அவ நம்பிக்கையைப் புகுத்திக்கொண்டே இருப்பவர்களைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் தள்ளி வைத்துவிட வேண்டும். இரு வருடங்கள் முன்பு என் பிள்ளைகள் இருவருக்குமே அம்மை தொற்றியது. இதைக் கேள்விப்பட்ட உறவினர்கள் இருவர் உடனடியாக எனக்கு அலைபேசியில் அழைத்துப் பேசினார்கள்.

’இதைச் செய், அதைச் செய், கடவுளுக்கு இப்படி வேண்டிக்கொள், தினமும் மஞ்சள் தண்ணி அம்மனுக்கு ஊத்திட்டு வா, டாக்டர் கிட்ட எதுக்கு போன?, அவனுக்கு பாரசிடமால் எதுக்குக் கொடுத்த?, அம்மன் உக்கிரமாகி உடம்பையே ரணகளமாக்கிடும், க்ரீம் எல்லாம் போடவே கூடாது, டாக்டருக்கு என்ன தெரியும் அம்மையைப் பற்றி?’ என்று நாள் முழுக்க என்னை வேலை செய்ய விடாமல் தொடர்ந்து அறிவுரைகள்.

A young kid with chicken pox illustration

இரவில் தூங்கப் போகும் நேரம் மீண்டும் அதே இரு உறவினர்கள் கான்ஃபரன்ஸ் அழைப்பில் வந்தார்கள். “இப்பதான் என் அண்ணி சொன்னாங்க. இது கொஞ்சம் சீரியஸான விஷயம்தானாம். அவங்க சொந்தக்காரங்க ஒரு பொண்ணுக்கு மூஞ்சியே அம்மையால மாறிடுச்சாம்” என்றார். உடனே இன்னொருவர், “அவன் அழுதாலும் அவன் பக்கத்துல நீ படுத்துக்காத. தனியா படுத்துக்கோ, இப்படித்தான் என் மச்சினர் பொண்ணுக்கு வந்துச்சு. அவளைக் கவனிச்சுகிட்டதால அவளோட அம்மாவுக்கு வந்து, டிரெஸ் கூடப் போட முடியாமல் படாதபாடு பட்டுட்டா.” இப்படி மாறி மாறி அறிவுரை என்ற பெயரில் சின்னம்மையைத் திகில் சினிமா போல் இருவரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் போனை வைத்ததும் எனக்குத் தூக்கமே தொலைந்துவிட்டது. என் அம்மா மறுநாள் வருவதால் எப்படியும் 7 நாட்கள் சமாளித்து விடலாம் என்று தைரியமாக இருந்த நிலையில் இவர்களின் பேச்சு என்னைப் பலவீனப்படுத்தியது. ஏதேதோ தேவையில்லாத எண்ணங்கள் தோன்றின. விடியும் வரை முழித்திருந்தேன்.

காலையில் ஒரு குறுஞ்செய்தியை அவர்களுக்கு அனுப்பினேன். ’உங்கள் அக்கறை புரிகிறது. ஆனால், உங்கள் அக்கறை என்னைப் பலவீனப்படுத்துகிறது. தனியாக இருக்கும் நான் என் பிள்ளைகளைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால் எனக்கு இப்போதைக்குத் தேவை தைரியம்தான். என்னைப் பலவீனப்படுத்துவது அல்ல. உங்கள் அன்பிற்கு நன்றி’ என்று அனுப்பினேன். அன்று நான் வெளியில் சென்றபோது எங்கள் அபார்ட்மென்ட் செக்யூரிட்டி நேபாளி பெண் தன் பையனின் அம்மைக்கு களிம்பை இட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் யார் இதைக் கொடுத்தார்கள் என்று கேட்டேன். “மருத்துவரிடம் சென்றேன். அவர்தான் கொடுத்தார்” என்றார். அந்தப் பெண் படிப்பு வாசனைகூட அறியாதவர். ஆனாலும் எத்தனை எளிமையாகக் கையாளுகிறார்! நாம் ஏன் தேவையில்லாததைக் கேட்டு மனதைக் குழப்பிக்கொள்கிறோம் என்று தலையில் அடித்துக்கொண்டேன்.

அம்மைக்கு நண்பனே உடல் சூடுதான். படுத்துக்கொண்டே இருந்தால் உடல் வெப்பம் இன்னும் அதிகமாகும் . அதனால் தேவைப்பட்டால் மட்டும் படுத்துக்கொள்ளுங்கள் என்று என் பிள்ளைகளிடம் சொல்லிவிட்டேன். இருவருமே காற்றோட்டமாக இருந்தார்கள். திரவ ஆகாரங்களும் குளிர்ச்சியான பழச்சாறுகளும் மட்டும் கொடுத்துவந்தேன். ஆச்சரியப்படும்படி நான்கு நாட்களிலிருந்து குறையத் தொடங்கியது. அப்போதுதான் நாம் செய்தது தவறில்லை என்று தோன்றியது. மருத்துவர் தந்த களிம்பைத் தடவியதால் கொப்புளங்கள் பெரிதாகவில்லை. தழும்புகளும் இல்லை. அந்த நேபாளிப் பெண் போல் எந்த அறிவுரையும் சொல்லாமல் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உபதேசித்திருப்பதைவிட பெரிய நம்பிக்கை எனக்கு வேறெதுவுமில்லை.

Old farmer man holding wooden crate of carrots isolated illustration

கொரோனா வைரஸ் உண்டான சமயத்தில் ஊரே பீதியில் அமைதியாக வீட்டிற்குள் சாத்தி இருக்க, வீட்டருகே வயதான தாத்தா ஒருவர் காலையில் பால் விற்கவும் மதியம் காய்கறி விற்கவும் வெயிலிலும் குளிரும் வந்து நின்றுகொண்டிருப்பார். அவரிடம் எல்லோரும் வந்து வாங்க வேண்டிய நிலைமையிலும் போதிய பாதுகாப்புடன் அவர் வந்து நின்று விற்றுக்கொண்டிருப்பார். ’எல்லோரும் பயத்தில் வெளில வரவே யோசிக்கறோம். நீங்க இந்தச் சமயத்துல இவ்ளோ தைரியமா வர்றீங்களே தாத்தா?’ என்று கேட்டபோது, “என்ன பண்றதுங்க… எனக்கு இது மட்டுந்தான் சோறு போடுது. இதுவும் இல்லைனா நான் என்ன பண்றது?” என்று சிரித்தபடியே கேட்டார். கொரோனா முதல் அலை அமெரிக்காவிலும் டெல்லியிலும் உச்சத்தில் இருக்கும்போது, நான் அமெரிக்காவிற்குக் குழந்தைகளுடன் கிளம்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். கொரோனாவைப் பற்றிச் சரியாகத் தெரியாத நிலையில் பெரிய அச்சத்துடன் எதிர்கொள்ள வேண்டிய தருணம். அந்தச் சமயத்தில் இவரைத்தான் நினைத்துக்கொண்டேன். நம்பிக்கையும் உற்சாகமும் தருவதற்குச் சமூகத்தில் அந்தஸ்து, பிரபலம், வெற்றி பெற்ற மனிதர்களாக இருக்க வேண்டுமென அவசியமில்லை. யாரென்றே தெரியாத, ஆயிரம் ஆயிரம் மனதிர்கள் நம் கண் முன்னே கடந்து போகிறார்கள். அவர்களை உற்றுக் கவனித்தாலே போதும். நம் மனதில் ஆயிரமாயிரம் நம்பிக்கை விதைகளை விதைப்பார்கள்.

படைப்பாளர்:

ஹேமி க்ருஷ்
''நாம் மாறாமல் இங்கு எதுவும்  நம்மைச் சுற்றி மாறாது என்பதுதான்  நான் கற்றுக் கொண்ட முதல் பாடம். கல்லூரி காலம் வரை  எதுவுமே தெரியாது என்பது பெருமையில்லை என என்னுடைய பல  அனுபவங்களில் தெரிந்து கொண்டேன். 
இங்கு  சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கே ஒரு பெண் போராட வேண்டியிருக்கிறது. இதையும் தாண்டி என்னவெல்லாம் செய்ய முடியும் என நம்மைச் சுற்றி ஒவ்வொரு பெண்ணும் நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறாள்.  வலிகளை மறைத்து, சிரித்தபடி  முழம் அளந்து பூவை விற்கும்  பூக்கார பெண்மணி முதல்,  செவ்வாய் கிரகத்தில்  விண்கலம் இறக்கிய ஸ்வாதி மோகன் வரை ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் எல்லாவிதமான தடைகளையும் வென்று சாதிப்பவர்கள்தாம்.  
இப்படி நான் கண்டுணர்ந்தவற்றை  உங்களுக்கும் தெரியப்படுத்த விருப்பப்படுகிறேன். ஏனெனில், சுயபரிசோதனை மட்டுமே நம்மை எந்த இடத்தில் எதுவாக நிற்கிறோம் எனத் தெரியப்படுத்தும்'' என்று சொல்கிறார் எழுத்தாளர் ஹேமி கிருஷ். 
பெருந்துறையை சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய 'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார். மேலும் நான்கு ஆண்டுகள்  டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.