(மனநலம் பற்றிய புதிய தொடர்)

பகுதி- 1

இந்த உலகமே சொற்களால் இயங்குகிறது. சொற்களின் மூலமே அனைத்து வகையான உணர்வுகளின் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன.  சொற்களின் மூலமாக நேசிக்கும் குணத்தை, அன்பை  வெளிப்படுத்த முடிகிறது. சொற்களின் மூலமாக வெறுப்பை உமிழமுடிகிறது. வெறுப்பின் கோர முகத்தைக் காண்பித்து, அருவருக்கத்தக்க வகையில் மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் மிருக குணத்தை உயிர்ப்பிக்க முடிகிறது.

மனிதனுடைய எல்லா மன உணர்வுகளையும் சொற்களே பிரதிபலிக்கின்றன. அன்பு, பாசம், விருப்பம், மகிழ்ச்சி, காதல், ஏக்கம், தயக்கம், அவமானம், கோபம், கருணை, கடமை, ஆக்ரோஷம், வெறுப்பு, குற்றவுணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, நன்றியுணர்ச்சி, வெட்கம், தாய்மைப்பண்பு இத்தனை உணர்வுகளையும் சொற்கள் காட்டுகின்றன. மனித வாழ்க்கையை மகிழ்ச்சியாகவோ, துயரமானதாகவோ  மாற்றும் ஆற்றல் சொற்களுக்கு உண்டு.

மனித குல வரலாற்றில் சொற்கள் வாயிலாக உணர்வுகளைப் பரிமாறுவது முதல் கட்டம். சொற்களின் மூலம் செய்திகளைப் பரிமாறுவது இரண்டாவது கட்டம். பரிமாறப்பட்ட செய்திகள் குறுஞ்செய்திகளாகவும், மிகப்பெருஞ்செய்திகளாகவும் மனிதர்களிடையே கடத்தப்பட்டு வந்தது. குறுஞ்செய்தி ஏதோ ஒரு அதிகாரத்தில் குறளாக இருந்தது. மிகப்பெரிய செய்தி வால்மீகி எழுதிய ராமாயணம் மற்றும் வியாசர் எழுதிய மகாபாரதமாகவும் இருந்தது.

இந்தியாவின் தொன்மை மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பழங்காலத்தில் எழுதப்பட்ட பெருங்காப்பியங்கள் எல்லாமே, குறிப்பாக தமிழில் அகத்தியம், தொல்காப்பியம் இரண்டு நூல்களைத் தவிர மற்ற நூல்கள் எல்லாமே ஏதோ ஒரு செய்தி அல்லது கதையைச் சொல்லும். சங்க இலக்கியங்கள் செய்திகள் நிரம்பியதாகவோ, அந்த செய்திகளுடைய முன், பின் தொடர்ச்சி பெரும்பாலும் ஒரு கதைகளாகவோ அமைந்துள்ளது.

தமிழ்ச் சமூகத்தில் கதை சொல்வது புலவர்களுடைய கடமையாக இருந்துள்ளது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கதையை வாசிப்பதன் மூலமும், படிக்கத் தெரியாதவர்கள் கதையை செவிவழி செய்தியாகவும் கதைகளைக் கொண்டு சென்றுள்ளனர். இப்படி மக்களிடையே காலங்காலமாக சொல்லப்பட்டும், கேட்கப்பட்டும், தமிழ் மனங்களை நிரப்பிக் கொண்டு, காலச்சக்கரத்தை கடந்தும் கதைகள் சுற்றி கொண்டே இருக்கின்றன. இதில் எந்தக் கதையை உங்களிடம் நான் சொல்வது…

உலகிற்குப் பிடித்த கதை சொல்லவா???

பெண்களுக்குப் பிடித்த கதை சொல்லவா???

ஆண்களுக்குப் பிடித்த கதை சொல்லவா???

சிறுவர்/சிறுமியர்களுக்குப் பிடித்த கதை சொல்லவா???

திருநருக்குப் பிடித்த கதை சொல்லவா???

ஆட்சியாளர்களுக்குப் பிடித்த கதை சொல்லவா???

விளையாட்டு வீரர்களுக்குப் பிடித்த கதை சொல்லவா???

விளையாட்டை விமர்சிக்கும் விமர்சகர்களைப் பற்றி கதை சொல்லவா ???

வேடிக்கை பார்த்து வீணாய் போனவர்களின் கதை சொல்லவா???

பேசியே கொல்லும் ஆசிரியர்களின் கதை சொல்லவா???

பேசுவதைக் கேட்கவே கூடாதென இருக்கும் மாணவனின் கதை சொல்லவா???

இளமையில் ஆடிய ஆட்டங்கள் பற்றிய கதை சொல்லவா???

முதுமையில் வருந்தும் தனிமை துயரத்தின் கதை சொல்லவா???

பட்டாம்பூச்சிகளோடு பறந்து கொண்டிருந்த வண்ணக்கனவுகளின் சங்கமத்தை பற்றிய வசீகரக் கதை சொல்லவா???

இப்படி கருத்துகளும், காட்சிகளும் என் முன் நிரம்பி வழிவதால் அனைத்து நிகழ்வுகளையும் கதைகளாக மாற்றிச் சொல்லவா!!!

கடைசியாக….

எனக்கு மட்டும் பிடித்த ரகசிய கதைகளை சொல்லவா???

அல்லது

உங்களுக்கு மட்டும் பிடித்த உண்மைக் கதைகளைச் சொல்லவா ????

உணர்வுகளும், உணர்ச்சிகளும்

எல்லா கதைகளும் உணர்ச்சி மிகுந்ததாகவும், உணர்வுப் பிடியில் சிக்கிக் கொள்வதாகவும் தான் இருக்கிறது. 6 வகையான எமோஷன்ஸ் தானே இருக்கிறது. அதைக் கையாள முடியாதா??? ஏன் இத்தனை உளவியல் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள்.

உண்மையில் உணர்வுகளை நாம் பிறக்கும் போதே இருந்தே அனுபவித்து வருகிறோம். எந்த இடத்தில், என்ன மாதிரி நிகழ வேண்டும் என்பது ஒரு தன்னிச்சையான நிகழ்வாக நம் உடலில் ஒரு எதிர்வினை இருக்கும். ஆனால் வளர வளர, நம் அங்கீகாரம், நம் தன்மானம், நம் இடம் எனச்சொல்லி நமக்கான உணர்வுகளை, உணர்ச்சியாக மாற்றி விடும் நிலைக்கு தான் நாம் தள்ளப்படுகிறோம்.

அந்த நேரங்களில் உணர்வுகள் என்ன சொன்னாலும், அதைக் கேட்காமல் உணர்ச்சி மிகுந்த நிலையில் தான் நாம் இருப்போம். உண்மையில் இந்த இடத்தில் தான் நம்மை மீட்டெடுக்க நம்மால் முடியாது. அதை எல்லாம் வார்த்தைகளில் அத்தனை இயல்பாகச் சொல்ல முடியாது. அத்தனை போராட்டம் மனதுக்குள் நடக்கும். உச்சக்கட்ட போர் தொடர்ந்து கொண்டே இருக்கும். தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்விக்கு பதில் இல்லாமல், கைவிடப்பட்ட நிலையில் தான் தனக்குள் மனிதன் இருப்பான்.

நம்மை நமக்குள் இருந்து மீட்டெடுக்க குறைந்தது ஐந்திலிருந்து பத்து நபர்கள் வரை தேவைப்படுகின்றனர்! பெற்றோர், குடும்ப உறவுகள், நண்பர்கள், உளவியல் நிபுணர்கள் சொல்லி, பலரும் கூட்டாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே தேவைப்படும் என்பது போல, ஒரு மனிதனை மீட்டெடுக்க ஒரு குழுவே தேவைப்படும்.

உண்மையில் உணர்வுகள் மிக மென்மையானவை. ஆனால் உணர்ச்சிகள் நம்மை சிறைக்குள் தள்ளும் ஆயுதங்கள். பார்த்த உடனே இவன்/இவள் இப்படித்தான் என்று சொல்வது எல்லாம் சாதாரணம். அதனால் இவனை/இவளை என் கட்டுக்குள் வைக்க முடியும் என்று  எல்லாம் நம்மால் சொல்ல முடியாது. மனிதன் அத்தனை எளிதானவன் கிடையாது.

Background photo created by jcomp – www.freepik.com

தன்னை தனக்குள் இருந்து மீட்டெடுக்க முடியாமல் துன்பப்படும் ஒரு உயிர். மனிதன் என்பவன் ஒரு கண்ணுக்குள் இருந்து மறு கண்ணுக்குள் மறையும் சகலகலா வல்லவன். இது தெரிந்தவர்கள் எந்த ஒரு மனிதனையும் எளிதாக எடை போட மாட்டார்கள். யாரைப் பற்றி கேட்டாலும் தன் பார்வை மட்டும் சொல்வார்கள். சக மனிதனைப் பற்றி வேறு எதுவும் சொல்லமாட்டார்கள்.

அதனால் தான் சொல்கிறேன்… மனிதன் எப்போது உணர்விலிருந்து உணர்ச்சி மிகுந்த நிலைக்கு தள்ளப்படுவான் என்பதை அத்தனை எளிதாக யாராலும் கணிக்க முடியாது. அப்படிப்பட்ட மனிதகளின் உணர்வுகள் சார்ந்த, உணர்ச்சி கொந்தளிப்பபுள்ள கதைகளை நான் எழுதப்போகிறேன்.

கதைகள் வரும்…

படைப்பு:

காயத்ரி மஹதி

காயத்ரி மஹதி மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர். தனிப்பட்ட முறையில் கவுன்ஸலிங் செய்து வருகிறார். உளவியல் ரீதியாக குடி நோயாளிகள் மற்றும் குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2016ம் ஆண்டு ஈஸ்டர்ன் பூமிகா நிறுவனம் இவருக்கு “சிறந்த பெண்மணி” விருது வழங்கி கவுரவித்தது. உளவியல் ரீதியாக பள்ளிகளில விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2019ம் ஆண்டு நந்தவனம் நிறுவனம் “சிறந்த பெண்மணி” விருது அளித்தது. நாளிதழ்கள், செய்தித் தாள்களில் மனநலம் சார்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.