1942-ம் வருடம் வெளிவந்த தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் மனதிற்கு நெருக்கமான புத்தகமாகவும், மனதிற்கு வலிமை சேர்க்கும் ஒரு புத்தகமாகவும், இந்த புத்தகம் அமைகின்றது.
பத்து அத்தியாயங்கள் மட்டுமே கொண்ட ஒரு புத்தகம், பெண்களின் மொத்த பிரச்னைகளுக்கான விடைகளையும் எப்படி தெளிவாகச் சொல்லமுடியும் என்ற எண்ணத்திற்கு, ‘முடியும்’ என்ற ஒற்றை பதிலாய் இந்த புத்தகம் நின்று பேசுகின்றது. இத்தனை வருடங்களைக் கடந்தும், இன்றும் பேசுபொருளாக ஒரு புத்தகம் இருப்பதே, இந்தப் புத்தகத்தின் முதல் வெற்றி.
இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனியாக எடுத்து, ‘இன்றைய கால சூழலுக்கு ஏற்றது போல் தந்தை பெரியாரின் வரிகளில் உள்ள உண்மைத்தன்மையை உணர்ந்து இந்தச் சமுதாயம் தன்னை மாற்றிக் கொண்டதா?’ என்கிற கேள்வியை நோக்கிய, என் தேடலை இங்கு நான் எழுத விரும்புகிறேன்.
முதல் அத்தியாயம், கற்பு பற்றி தெளிவாகக் கூறுகிறது. கற்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒன்று என்பதை, தந்தை பெரியார் பல விளக்கங்களுடன் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். ‘கல் என்ற சொல்லில் இருந்து வந்தது தான் கற்பு என்றும், அதன் பொருள் சொல் தவறாமை, நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல்’ என்று பல பொருள் கொண்டது என்றும் கூறியுள்ளார்.
மேலும், தந்தை பெரியாரின் கூற்றுப்படி, மகளிர் நிறை என்ற சொல்லில் வரும் ‘நிறை’ என்பது அறிவின்மை, உறுதிப்பாடு, மற்றும் கற்பு என்று பொருள் கொண்டது. அழிவில்லாதது மற்றும் உறுதியுடையது என்றும் பொருள் கொள்ள முடியும். அழிவில்லாதது என்ற வார்த்தைக்கு சுத்தம், கெடாதது, மாசற்றது என்ற பொருளும் ஏற்கத்தக்கது.
கற்பை தந்தை பெரியார் பின்வருமாறு விளக்கியுள்ளார், ‘சுத்தம் என்கின்ற வார்த்தையும், கெடாதது என்கின்ற கருத்தில்தான் ஆங்கிலத்திலும் காணப்படுகிறது. அதாவது (CHASTITY) என்கின்ற ஆங்கில வார்த்தைப்படி வர்ஜினிட்டி (VIRGINITY) என்பதே பொருள் ஆகும். அதை அந்தப் பொருளின்படி பார்த்தால் இது ஆணுக்கென்றோ, பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே‘ என்று கற்பு பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இன்றுவரை, கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என்றும், அதனை காப்பதே பெண்ணின் முதல் கடமை என்றும், அதனைக் காப்பதே குடும்ப கெளரவம் என்றும் இன்றுவரை பார்க்கப்படுகின்றது. இன்றும் ஒழுக்க விதிகளுக்கு பெண்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியுள்ளது, இதில் எந்த மாற்றமும் இல்லை.
அன்று எழுதப்பட்ட இலக்கியங்களையும், இலக்கணங்களையும், புராணக் கதைகளையும் படிக்கும் போது, அவற்றை எழுதும்போதே, பெண் அடிமையையும் சேர்த்தே எழுதிவிட்டனர் என்பது போன்ற எண்ணங்கள் உதிக்கின்றன. இன்றும் எல்லா ஊடகங்களும், கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என்பது போல ஒரு மாயத் திரையை ஏற்படுத்தியுள்ளனர்.

குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், திரைப்படங்களில், சின்னத் திரை தொடர்களில் வரும் வசனங்கள் பெண்களை மேலும், மேலும் இந்த ஒழுக்க நிலை சார்ந்தே பலவீனப்படுத்துகின்றன. நாயகனைப் பழிவாங்க நினைத்தால், நாயகனின் சகோதரியை, மனைவியை வன்கொடுமைகளுக்கு ஆளாக்குவது, பாதிக்கப்பட்ட பெண் தான் மாசுபடுத்தப்பட்டதாக நினைத்து தற்கொலை செய்து கொள்வது, நாயகன் இதனை குடும்ப கெளரவத்துடன் ஒப்பிட்டு வில்லனைப் பழிவாங்குவது, இதுவே நம் ஊடகங்களின் மைய கதைக் கருவாக இருக்கிறது. பல வருடங்களாக இந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை, மாறியது நாயகனும், நாயகியும், வில்லனும் மட்டுமே.
இன்றுவரை வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வதாக மட்டுமே திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்றது. வன்கொடுமைகளுக்கு பிறகு, எப்படி தனக்கான நீதியை பெற வேண்டும், தன் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற பெண்களுக்கு வழிகாட்டும் திரைப்படங்கள் மிகவும் அரிதாகவே எடுக்கப்படுகின்றன.
இயல், இசை, நாடகம் என்று எந்தத் துறையாக இருந்தாலும் ஆண்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இன்றும் இருப்பதால், இன்றும் கற்பின் நிலைப்பாடு மாறவில்லை. மக்களிடம் நேரடியாக எளிதில் சென்று சேரும் ஊடகங்கள் கற்பு பெண்களுக்கு மட்டுமே என்ற தவறான புரிதலைத்தான் மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கின்றனர்.
இந்தச் சமூகத்தில் கற்பு என்ற வார்த்தை ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒரு நீதியாக இருந்தால், கற்பு என்ற சொல் பெண்களை மட்டும் பெரிதும் பாதித்து இருக்காது. அன்றும், இன்றும் சமுதாயத்தின் ஒழுக்க விதிகளில் எந்த மாற்றமும் இல்லை.
இலக்கியங்களில் காதல், அன்பை வெளிப்படுத்தும் இடங்களில் தலைவனுக்கும், தலைவிக்கும் சரிசமானமான ‘நாயகன்-நாயகி, தலைவன்-தலைவி’ என்ற சொற்களைப் பயன்படுத்தும் போது, கற்பு என்பது ஏன் பெண்களுக்கு மட்டுமே உரியது என்று மாறவேண்டும். இந்தக் கேள்வியை தந்தை பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பி இருந்தாலும், இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் பெண்கள் ஒழுக்க விதிகளைச் சுமந்தே வாழ்கின்றனர்.
மேலும் எந்தப் பெண் தன் கணவரை கடவுளாக நினைத்து, அவனுக்கு பணிவிடைகள் செய்து, அவனை அல்லாமல் வேறு ஒருவனை சிந்தையினாலும் நினைக்காமல் வாழ்கிறாளோ அவளே கற்புடையவள் என்ற கருத்தாக்கம், இங்கு பெண்களின் மேல் திணிக்கப்பட்டுள்ளதால், இன்று பெண்கள் படித்து, நல்ல வேலையில் இருந்தாலும், குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் பெண்கள் மட்டுமே சுமக்கும் அவல நிலை இன்றும் தொடர்கின்றது.
‘பதி’ என்ற வார்த்தைக்கு அதிகாரி, எஜமான், தலைவன் என்கிற ஆளுமை சார்ந்த பொருளும், தலைவி, நாயகி என்ற வார்த்தைக்கு மனைவி என்ற பொருளும் வரும்போது, இங்கே பெண் என்பவள் கணவர்களுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும் என்பதையே இந்தச் சமூகம் எதிர்பார்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது. இன்றும் இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
இன்றுவரை பெண்களின் மீது திணிக்கப்படும் அனைத்து மதம் சார்ந்த பண்டிகைகளும், விரதங்களும் கணவரின் நீண்ட ஆயுள் வேண்டியே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியா முழுவதிலும், அதிலும் வட மாநிலங்களில் இன்றும் தண்ணீர்கூட அருந்தாமல், பல மணி நேரம் பெண்கள் விரதங்களைப் பின்பற்றி வருவதைப் பார்க்கும்போது, இன்றும் பெண்கள் பதிவிரத பூஜைகளை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. கணவருக்கான விரதங்களை மூடநம்பிக்கைகளை இன்றும் பெண்கள்தான் தங்கள் தலையான கடமையாக நினைத்து, கட்டிக் காத்து வருகின்றனர்.
ஆனால் ஆண்கள், மனைவிக்காக எந்த விரதமும், எந்த பூஜையும் செய்வது இல்லை. பெண்கள் விரத நாட்களில்கூட, ஆண்கள் உண்ட பிறகே பெண் உண்ண வேண்டும் என்ற சட்டங்கள் இன்றும் மாறவில்லை.
‘பெண்களைப்பற்றிய தர்மசாஸ்திரங்கள் என்பதும், பெண்களைப்பற்றிய நூல்கள் என்பதும் பெண்களால் எழுதப்பட்டிருக்குமானாலும் அல்லது கற்பு என்கின்ற வார்த்தைக்குப் பெண்களால் வியாக்கியானம் எழுத ஏற்பட்டிருந்தாலும் கற்பு என்பதற்கு, ‘பதிவிரதம்’ என்கின்ற கருத்தை எழுதியிருப்பார்களா?’ என்கிற தந்தை பெரியாரின் கேள்விகளுக்கு இன்றும் பதில் இல்லை.
‘புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை’ என்ற பெரியாரின் கருத்தை முதலில் பெண்கள் உணர்ந்தால் மட்டுமே, அடுத்த நூற்றாண்டு தொடங்கும் முன்பு, ஆணாதிக்கக் கொள்கைகளை உடைக்க முயற்சியாவது செய்யமுடியும்.
‘கற்புக்காக பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும்’ என்று பல வருடங்களுக்கு முன்பே தந்தை பெரியார் பெண்களுக்காகக் குரல் எழுப்பி இருந்தாலும் இன்றும் பெண்கள் பிடிக்காத வாழ்க்கையை கட்டி அழுது கொண்டுதான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
ஒழுக்க விதிகளைச் சுமந்து வாழ்ந்துவரும் பெண்களால், ஒரு பொழுதும் தனக்கு பிடிக்காத, தன்னால் சகித்துக் கொள்ள முடியாத திருமண வாழ்க்கையில் இருந்து வெளி வர முடிவதே இல்லை. ஒழுக்கம் என்ற வார்த்தைக்காக, குடும்ப கெளரவத்திற்காக, காதலே இல்லாத கணவராக இருந்தாலும், உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்தினாலும், இல்லை வேறு ஒரு பெண்னை தன் கணவர் மணந்துகொண்டாலும், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் பிடிக்காத வாழ்வில் இருந்து விடுபட முடியாமல், தற்கொலை முடிவுகளை நோக்கியும் தள்ளப்படுகின்றனர்.
குடும்ப வன்முறை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதற்கு இந்த ஒழுக்க விதியும் ஒரு முக்கிய காரணம். இதில் படித்த, பொருளாதார சுதந்திரம் உடைய பெண்களும் இங்கு விதி விலக்கு இல்லை என்பதே உண்மை. குடும்ப வன்முறை காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த சில படித்த பெண்களின் தற்கொலைகளே இதற்கு சான்று.
இன்று ஒவ்வாத திருமண பந்தத்தில் இருந்து ஒரு பெண் சட்டப்படி விலக நினைத்து, நீதித் துறையை அனுகினாலும், அத்தனை எளிதில் அவர்களுக்கு நீதி கிடைப்பது இல்லை. சட்டப்படி விவாகரத்து பெற்றாலும், அதில் எத்தனை பெண்கள் மீண்டும் மறுமணம் செய்து கொள்கின்றனர்? இங்கும் ஒழுக்க விதிகளே முன் நிற்கின்றன. அதிலும் குழந்தைகள் இருந்தால் அதனை வளர்க்கும் முழு பொறுப்பும் பெண்களுக்கே, இதில் மறுமணம் என்ற வார்த்தைகளுக்கே இடம் இல்லை.
‘கற்புக்காக மனத்துள் தோன்றும் உன்மை அன்பை, காதலை மறைத்துக்கொண்டு, காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்கவேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழியவேண்டும்’ என்கிற பெரியாரின் வார்த்தைகள் என்று சமூகத்தால் ஏற்று கொள்ளப்படுகிறதோ, அன்று தான் உண்மையில் பெண்கள் இன்புற்று வாழ முடியும்.
ஒழுக்கம், பதிவிரதம் என்ற பெயரால் பெண்கள் தங்களை வருத்தி, பூஜைகள், விரதங்கள் என்று தங்கள் உடல் நலம் இழந்து, குடும்பப் பணியே தலையான கடமை என்று வீட்டிலே முடங்கி, பொருளாதார சுதந்திரமும் இழந்து, பொருளாதார சுதந்திரம் இருந்தாலும், தன்னிச்சையாக செயல்படாமல், தந்தை, கணவர், மகன் என்று இன்றும் ஒரு ஆண்மகனை சார்ந்தே வாழ்ந்து வரும் நிலையை பார்க்கும்போது, பெண் ஏன் அடிமையானாள் என்ற கேள்விக்கு பதில் இந்த சமூகம் மட்டும் இல்லை, இன்றும் ஒழுக்க விதிகளையும் பதிவிரதத்தையும் தூக்கி பிடித்து நிற்கும் பெண்களும் தான் காரணம் என்பது தெளிவாக விளங்குகின்றது.
பெண்கள் சுயகெளரவம், சுயமரியாதை, சுயஅன்பு என்று எதுவும் இல்லாமல் இன்றும் வாழும் நிலையைப் பார்க்கும்போது, இந்தச் சமுதாயத்தில், அன்றும் இன்றும் தந்தை பெரியாரின் பெண்ணியம் பேசப்பட வேண்டிய ஒன்றாகத்தான் இருக்கிறது.
படைப்பாளர்

எம்.கே. வனிதா
உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார். ஹெர் ஸ்டோரிஸ் எழுத்தாளர்.




