பெண்ணியக் கவிதைகள்
துப்பட்டா இலவசம்
உனக்கு என் அலமாரியில் என்ன வேலை?
ஏன் எப்போதும் அதையே எட்டிப் பார்க்கிறாய்?
உன் பொறாமை எனக்குப் புரிகிறது.
பாவம் உனக்கும் ஆசை இருக்கும்தானே
எவ்வளவு முறைதான் நீயும்
வெறும் சட்டையினை மட்டும் அணிவாய்
உனக்கு வேண்டுமென்றால் கூச்சப்படாமல் என்னிடம் கேள்
நானே சென்று வடிவான துப்பட்டாவை வாங்கி
உனக்கு இலவசமாகத் தருகிறேன்
அதன் பிறகாவது உன் கண்களை
என் உடையின் மீது திருப்பாமல் இரு.
உனக்கு என் அலமாரி என்றால்,
அவனுக்கு என் தட்டை எட்டிப் பார்ப்பதே வேலை,
வேண்டுமென்றால் அவனுக்கும்
நல்ல இறைச்சியை வாங்கி
இலவசமாகத் தருகிறேன்
அதன் பிறகாவது அவன் கண்கள்
என் உணவின் மீது திரும்பாமல் இருக்கட்டும்.
படைப்பு
சப்திகா

சட்டக்கல்லூரி மாணவர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். எழுதுவதிலும் வாசிப்பிலும் ஆர்வம் கொண்டவர்.

வேறு வழி உண்டா?
எனது அழுக்குகளை எல்லாம்
சலவை செய்கிறாள்
அழுக்கென்று சொல்லவே மாட்டேன் என்கிறாள்
அன்பள்ளி திணித்து விடுகிறாள்
அவளின் நியாமற்ற
அடாவடி அன்பின்முன்
ஒருமுறையேனும் வென்றிடத் துடிக்கிறேன்
அவளோ வெற்றியின் செங்கோலால்
பல் குத்திக் கொண்டிருக்கிறாள்
தாத்தாவிடம் கிடைக்காத அரவணைப்பையும்
அப்பாவிடம் கிடைக்கப் பெறாத காதலையும்
ஒருங்கே பிசைந்து கவளமாக்கி
எறும்பெனக்கு ஊட்டுகிறாள்
உண்ட மயக்கத்தில்
உலகமே பிடிக்காமல் போகிறது
சில சமயங்களில் அவளையும்…
அவளுக்கு என்னதான் வேண்டுமாம்?
எப்பொழுதுதான் ஓய்வெடுப்பாளாம்?
சிரித்து சிரித்து ஏமாற்றுவதில்
முனைவர் பட்டமே வாங்கியிருப்பாள்போல?
இப்போதெல்லாம்
அவள் சீக்கிரம் செத்துவிட வேண்டும் என்று
ஆசையாய் இருக்கிறது…
படைப்பு
சௌமியாஸ்ரீ

கல்லூரி மாணவர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். எழுதுவதிலும் வாசிப்பிலும் ஆர்வம் கொண்டவர்.




