மாதங்கி சூடான கறுப்புத் தேநீரை அளவாகச் சர்க்கரை சேர்த்து ‘கப்’பில் ஊற்றி எடுத்துக் கொண்டு, பின்வாசலுக்குப் போனாள். சிறியதாக இருந்த இடத்தில் முழுவதும் சிமெண்ட் தரை பாவியிருந்தது. முதன்முதலில் மூன்று மாதங்களுக்கு முன் பரிதியுடன் இந்த வீட்டைப் பார்க்க வந்தவள், செடி வைக்க இடமிருக்கிறதா என்றுதான் முதலில் ஆராய்ந்தாள். இல்லையென்றதும் முகம் சுருங்கி விட்டது. பரிதிக்கு வீடு மிகவும் பிடித்துவிட்டதால், தொட்டியில் செடிகள் வளர்க்கலாம் என்று அவளைச் சமாதானம் செய்திருந்தான். சொன்னது போல அவளுக்குப் பிடித்த செடிகளை வாங்கியும் கொடுத்தான்.

தூதுவளைச் செடி செழித்து வளர்ந்திருந்தது. சிவந்த சின்ன உருண்டைப் பழங்கள் கவர்ந்து இழுத்தன. வெளிறிய ஊதா நிறப் பூக்கள் நடுவில் மஞ்சளாக மலர்ந்து சிரித்தன. செண்பகா அத்தை இதைப் பார்த்தால் போதும்… இலைகளைப் பறித்துக் கழுவி, முள் நீக்கி, லேசான எண்ணெய்யில் வதக்கி, உடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலையையும் வதக்கி, புளி, உப்பு சேர்த்து அம்மியில் வைத்து நீர் தெளித்து, துவையலாக அரைத்து வழித்துக் கிண்ணத்தில் வைத்து விடுவாள். சுடுசோறில் துவையலைப் பிசைந்து, சப்புக் கொட்டிக் கொண்டு மாதங்கி சாப்பிடுவாள். “அத்தை உன் கை ருசி சூப்பர்.” செண்பகா சிரிப்பாள்.

அத்தை பேர் கல்யாணிதான். எப்போதும் செண்பகப் பூக்களைக் கோத்தோ, தொடுத்தோ தலையில் வைத்திருப்பாள். அவள் வீட்டுக் கொல்லையில் மஞ்சள், வெண்ணிறம் என்று இரண்டு நிற செண்பகப்பூ மரங்களை வளர்த்து வந்தாள். சமயங்களில் இரண்டு நிறப் பூக்களையும் மாற்றி மாற்றித் தொடுத்து தலையில் சூடிக் கொள்வாள். வேறு பூக்களை அவள் தலையில் வைத்து மாதங்கி பார்த்ததேயில்லை என்று கல்யாணியை செண்பகா அத்தை என்று கூப்பிடத் தொடங்கினாள். பிடித்த பூவின் பெயராலேயே தான் அழைக்கப்படுவதில் அத்தைக்குக் கொள்ளைப் பெருமை.

செண்பகா மாதங்கிக்கு ஒன்று விட்ட அத்தை. மாதங்கியின் அப்பாவுக்கு சித்தப்பா மகள். ஆனாலும் அவர்கள் வீடு அருகருகே இருந்ததால் ரொம்ப நெருக்கம். அவளின் கைக்கொள்ளாத கூந்தலை வாரம்தோறும் அரப்பு, சீயக்காய் தேய்த்து அலசிக் காயவைத்து, அருகான தலைமுடியை வாரி ஆயிரம்கால் சடை பின்னி விடுவாள் செண்பகா. அங்கங்கே செண்பகப்பூவை குத்தி அலங்கரித்து விடுவாள். மாதங்கி இளம் வயதில்  அத்தையோடே அலைவாள். மேற்காலத் தோட்டத்தில் நல்ல தண்ணீர் பிடிக்க, கிணத்து மேட்டு வீட்டில் மோர் வாங்க, தையல் கடையில் தைத்த பாவாடை வாங்க எல்லாவற்றுக்கும் செண்பகாவுடன் மாதங்கியும் செல்வாள். வழியில் யாராவது இளவட்டங்கள் செண்பகாவை சீண்டுவார்கள். அவள் தலைகுனிந்தெல்லாம் ஓட மாட்டாள். பதிலுக்குப் பதில் வாயாடுவாள். எந்நேரமும் கைகளில் புத்தகம் வைத்திருப்பாள். இன்னார்தான் என்றில்லாமல் சகட்டு மேனிக்கு எல்லாரையும் வாசிப்பாள். தலையை நிமிர்த்தித்தான் நடப்பாள். “எதுக்குடி தலையைக் குனிஞ்சிட்டு வர்ற? நிமுந்து நட.” அதட்டுவாள் மாதங்கியை.

தனபால் அண்ணன் அந்த ஊரின் சண்டியர் மாதிரி. எல்லாப் பெண்களையும் வம்பிழுப்பான். சமயங்களில் கையையும். ஒருநாள் தெருவில் வைத்து “செண்பகமே… செண்பகமே…” என்று அவளைப் பார்த்துப் பாடிய தனபாலிடம் சென்று, “எதுக்கு ஜாடை மாடையா பாடுறீங்க? என்னைப் பிடிச்சிருந்தா சாயங்காலம் உங்க வீட்டுல எல்லாரையும் கூட்டிட்டு வந்து சம்பந்தம் பேசுங்களேன். அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அதிர வைத்தாள். அந்த வார்த்தை தந்த தைரியத்தில் மறுநாள் கருக்கலில் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்த செண்பகாவை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த தனபாலின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்திழுத்து, வாளியையும், வாசல் கூட்டும் சீமாரையும் கொண்டு நாலு சாத்து சாத்தி விரட்டிவிட்டாள்.

அதன் பின்னர் இவளை இனியும் வீட்டில் வைத்திருக்க முடியாதென்று பக்கத்து ஊரில் இருந்த சீராளனுக்கு கட்டி வைக்க அன்றே முடிவெடுத்தார் சின்ன தாத்தா. உடனே செயல்படுத்தவும் செய்தார். அடுத்த மாதமே செண்பகாவுக்கும், சீராளனுக்கும் திருமணம் நடந்தது. அத்தை பிறந்த வீட்டைவிட இங்கே அதிக சுதந்திரமாக இருந்தாள். கல்யாண வாழ்க்கை அவளை எந்த விதத்திலும் மாற்றவில்லை.

வாராவாரம் அப்பா வீட்டுக்கு வந்து அப்படியே மாதங்கியையும் பார்த்துச் செல்வாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே. அவள் இப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். அத்தை வாராவாரம் வருவது குறைந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்றாகி, பின் நின்றும் போனது. அவரவர் பாடு அவரவர்க்கு.

ஆறு மாதங்களுக்கு முன்பு மாதங்கியின் திருமணத்திற்கு வந்தவள் தலையில் லேசாக நரை தெரியத் தொடங்கியிருந்தது. மாதங்கி பரவசத்துடன் அத்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அத்தையின் அச்சாக கூடவே அவளது மகள். “கூடவே இரு அத்தை. வேற யாரும் எனக்கு செட்டாகலை. இப்படித்தான் மூணாவது மனுஷி மாதிரி முகூர்த்தத்துக்கு வருவியா?” அவள் முகத்தைத் தூக்கிக் கொண்டாள். “ஆமா… மாமா எங்கே?” பின்னால் எட்டிப் பார்த்தாள்.

“மாமா வரலைடா… உடம்பு சரியில்லை. அதான்…” என்றவள் மாதங்கியின் காதருகே, “மாமா வீட்டில் தனியா இருப்பாரு. நாங்க சாப்டுட்டு கிளம்புறோம்” என்றாள். மாதங்கி தலையாட்டினாள். அத்தை அப்புறம் சிறிது நேரம் கழித்து காணாமல் போய்விட்டாள்.

மாதங்கியின் யோசனையைக் கலைப்பதுபோல் செல்போன்,”பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே… பார்த்ததாரும் இல்லையே…” என்று பாடியது. அம்மாதான். திரையின் பச்சையைத் தடவி விட்டு காதில் வைத்தாள். “சொல்லும்மா… எப்படி இருக்கே? என்ன இந்நேரத்துக்கே போன்?” என்றாள் புன்னகையுடன்.

மறுமுனையில்,” சீராளன் மாமா இன்னிக்கு விடிகாலை மூணு மணிக்கு இறந்துட்டாருடி. நீ உடனே புறப்பட்டு வா. உங்கத்தை இடிஞ்சு போய்க் கெடக்குறா. நீதானே அவளுக்கு நெருங்கின சிநேகம். வா.” என்றாள்.

“என்னாச்சு மாமாக்கு.?” என்றாள் செய்தியை நம்ப முடியாமல்.

“ஏதோ ரத்தப் புற்றுநோயாம்டி. செண்பகா நம்ம கிட்ட கூட  சொல்லவேயில்ல பாரு. யாருக்கும் தெரியாம மறைச்சு ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு வந்திருக்காங்க.  திடீர்னு அவர் இறந்ததை எங்களால ஜீரணிச்சுக்கவே முடியலை” அம்மா போனை வைத்தார்.

பரிதியை எழுப்பி விஷயத்தை சொல்லவே, அவன் மாதங்கியை முதலில் ஊருக்குப் போகச் சொன்னான். “உடனே லீவ் கிடைக்காது மாது. கொஞ்சம் அவசர வேலை இருக்கு. நான் ஆஃபீஸ் போய்ட்டு நாலு நாள் லீவ் சொல்லிட்டு நாளைக்கு மதியம் புறப்பட்டு ஊருக்கு வந்துர்றேன். கிளம்பு… உன்னை பஸ் ஏத்தி விட்டுட்டு நானும் அப்படியே ஆஃபீஸ் போயிர்றேன்” பரபரப்பாக புறப்படத் தொடங்கினார்கள். 

ஜன்னலோரம் சாய்ந்து அமர்ந்து கொண்டாள் மாதங்கி. தண்ணீர் பாட்டிலை அவளிடம் தந்துவிட்டு விடைபெற்றான் பரிதி. ஒன்றரை மணி நேரப் பயண தூரம். பேருந்து முன்னோக்கி நகர, நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

சீராளன் எப்போது ஊருக்கு வந்தாலும் கடலை மிட்டாயுடன் தான் வருவார். மாதங்கியின் கைநிறைய மிட்டாய்கள். அவர் எப்போதும் கையில் புத்தகத்துடன்தான் இருப்பார். அதில் அம்பேத்கர், பெரியார் என்று என்னென்னவோ பெயர்கள் போட்டிருக்கும். அத்தையை நன்றாகத்தான் வைத்திருந்தார். கல்யாணப் பேச்சு எழுந்த அன்றே அத்தைக்குப் பிடிக்கும் என்று மஞ்சள், வெள்ளை செண்பக மரக்கன்றுகளை வாங்கி வாசலில் நட்டார். இருவரும் எங்கே போனாலும் ஒன்றாகவே போவார்கள். மாமா புத்தகக் கடை வைத்திருந்தார். அத்தை பெரும்பாலும் அங்கேயே இருப்பாள். இருவரும் எப்போதும் புத்தகம் படித்த வண்ணமே இருப்பார்கள். ஆரம்ப காலத்தில் மாதங்கிக்கு முழுப் பரீட்சை விடுமுறையில் படிக்க நிறைய சிறுவர் இலக்கியம் தருவார். அத்தை ஊருக்கு வருவதைத் தவிர்த்த பிறகு மாமாவும் வருவதில்லை. ஆனாலும் மாதங்கிக்கு வாசிக்கும் பழக்கம் அவர்களிடமிருந்து ஒட்டிக் கொண்டது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இவளது அம்மாவழி சித்தியின் கணவர் இறந்தபோது மாதங்கியும் சென்றிருந்தாள். கீழே படுத்து அழுது அரற்றிக் கொண்டிருந்த சித்தியை இழுத்து அமர வைத்த அவளது பெரிய நாத்தனார் செண்டாக மல்லிகைப்பூவை சித்தியின் கூந்தலில் செருகினாள். இரண்டு மூன்று தங்கச் சங்கிலிகளையும், ஒரு ஆரத்தையும் அணிவித்தாள். சிறிய நாத்தனார் சித்தியின் இரண்டு கைகளிலும் பச்சையும், சிவப்புமான கண்ணாடி வளையல்களை போட்டுவிட்டாள். முகத்தில் மஞ்சளைத் தடவி நெற்றியில் பெரிய பைசா அகலக் குங்குமத்தை அடர்த்தியாக இட்டனர். சுமங்கலிப் பெண்களை வெளியே அனுப்பி விட்டு ஐந்து அமங்கலிப் பெண்கள் மட்டும் அருகில் இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து சித்தியின் அண்ணன் பிறந்த வீட்டு கோடித் துணி என்று ஒரு வெள்ளைத் துணியை எடுத்து வந்து அவள் மீது போர்த்தியபோது சித்தி பெருங்குரலில் வீறிட்டு அழுதாள். பின்னர் பங்காளிகள் வரிசையாக வந்து வெள்ளைச் சேலை தந்தனர். சித்தியை அமர வைத்து அவளது நகைகளையும், தாலி, மெட்டி எல்லாவற்றையும் கழற்றி பால் கிண்ணத்தில் போட்டனர். கைகளை ஒன்றுடன் ஒன்று மோதி வளையல்களை உடைத்தனர். நெற்றிக் குங்குமத்தை அழித்து முகத்தில் இருந்த மஞ்சளையும் துடைத்தனர். சித்தி அரைமயக்க நிலையில் கிடந்த காட்சி மாதங்கியின் மனதில் வந்து வந்து போனது. 

பேருந்து அவளை ஊருக்குள் உதிர்த்து விட்டுப் புறப்பட்டது. மாதங்கி வீட்டுக்கு போய் பெட்டிகளை வைத்துவிட்டு, அத்தை வீட்டுக்குப் போனாள். கண்ணாடிப் பெட்டியில் மாமாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அத்தை கண்ணாடிப் பெட்டியருகே அமர்ந்திருந்தாள். அவளது மகள் யார் மடியிலோ சுருண்டு படுத்திருந்தாள்.

பெட்டியின் மீது மாலைகள் போடப்பட்டிருந்தன. சுற்றிலும் பூக்கள் சிதறிக் கிடந்தன. மாமாவின் தலைமாட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மட்டி ஊதுபத்தி புகைந்து சாவு வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தது. மாலையிலுள்ள பூக்களின் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அவை மாமாவின் மீது அமர்ந்து விடுமோ என்று அஞ்சியவாறு அத்தை சேலை முந்தானையால் வீசி வீசி விரட்டினாள். உறவுகள் கண்ணீரோடு கதையளந்து கொண்டிருந்தார்கள்.

மாதங்கி அவளருகில் போய் அமர்ந்து, “அத்தை…” என்று அழுதவாறே கைகளைப் பற்றிக் கொண்டாள். செண்பகா அவளை அணைத்துக் கொண்டாள். என்ன பேசுவது, எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மாதங்கி.

அவர்களுக்குப் பின்னால் இருந்த வெள்ளைச் சேலை கட்டிய வயதான உறவுப் பெண் ஒருவர் சாடை காட்ட, ஒரு பெண் கையில் மல்லிகைச் சரத்தை எடுத்து வந்து செண்பகாவின் கூந்தலில் வைக்கப் போனாள். பட்டென்று தட்டி விட்டு எழுந்தாள் செண்பகா.

“இப்ப எனக்கு எதுக்கு பூ வைக்கிறீங்க?” என்றாள் கோபமாக.

“இதெல்லாம் சாங்கியம்டி. பண்ணோனும்” அந்தப் பாட்டி அதட்டியது.

பால் கிண்ணத்தை எடுத்து வந்த இன்னொரு உறவு, “நம்ம சாஸ்திரம், சம்பிரதாயம் இதெல்லாத்தையும் ஒழுங்கா கடைபிடிக்கணும். இல்லேன்னா போற வழிக்கு புண்ணியம் கிடைக்காது. இப்பப் பாரு கொள்ளி வைக்கக் கூட ஒரு ஆம்பளை வாரிசு இல்லை” நொடித்தது.

“இனிமே நீ நல்ல துணிமணி கட்ட முடியுமா? பூ பொட்டுன்னு இருக்க முடியுமா? அதான் இப்ப கடைசியா போட்டுக்க சொல்றது” அந்தப் பாட்டி மீண்டும் பேசியது.

அத்தை எழுந்து முந்தானையை உதறிச் செருகிக் கொண்டாள். தலையை அவிழ்த்து கூந்தலை உதறி முடிந்து கொண்டாள். 

“இங்க பாருங்க… உங்க சம்பிரதாயம் எல்லாம் எனக்குத் தேவையில்லை. அவருக்கு நோய் வரணும்னு விதி. அதான் போய்ட்டாரு. புள்ளைதான் கொள்ளி வைக்கணுமா? நானும், என் பொண்ணும் வைக்கிறோம்” என்றதும் கூட்டம் மிரண்டது.

“என்ன கல்யாணி ஓவராப் போற. ஒழுங்கா சடங்குகளைப் பண்ண விடு.” அத்தையின் அண்ணன் கோபமானார். “அப்புறம் நம்ம பழக்கவழக்கம்லாம் என்ன ஆகுறது? நாலு பேர் நம்மளை மதிக்க வேணாம்?” 

அத்தை எப்போதுமே அதிகம் பேச மாட்டாள். சொல்ல வந்ததை பட்டென சொல்லுவாள். 

“இங்க உங்க சடங்கு எதுவும் நடக்கக் கூடாது. எம் புருஷனுக்கு நாங்க தான் கொள்ளி வைப்போம். இஷ்டம்னா இருங்க. இல்லாதவங்க கெளம்புங்க” செண்பகா திடமாகப் பேசினாள்.

கொஞ்சம் பேர் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டு புறப்பட்டனர். “இது ஆவறதில்லை. இதெல்லாம் குடும்பப் பொண்ணா?” 

அந்தப் பாட்டி வெடுக்கென்று நொடித்துக் கொண்டு கிளம்பியது. “எனக்கென்ன… திமிர் நாயம் பேசித்தான் இப்பிடி இருக்க. போடி போ.”

மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருந்தனர். அதிலும் பேர்பாதி வேடிக்கை பார்க்கும் ஆவலுடன்.

கண்ணாடிப் பெட்டியில் இருந்து எடுத்த மாமாவின் உடல் மீது நீரூற்றி வேறு உடை மாற்றினார்கள். உடல் பாடையில் வைக்கப்பட்டது. அத்தை மாமாவின் அருகில் வந்து அவரது முகத்தை உற்றுப் பார்த்தாள். கண்கள் முழுவதும் அவரை நிரப்பி அப்படியே தனக்குள் உள்வாங்கிக் கொண்டாள். அவள் கண்களில் நிறைவாழ்வு வாழ்ந்த பூரணத்துவம் மின்னியது. ஆண்கள் நான்கு பேர் உடலைச் சுமக்க, மகளின் கையைப் பிடித்துக் கொண்டு சுடுகாட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அம்மா தடுத்தும் கேளாமல் மாதங்கி பின் தொடர்ந்தாள். அவள் மனதில் அத்தை பிரம்மாண்டமாக வளர்ந்தாள்.

விறகு அடுக்கி தயாராக இருந்த சிதையில் சீராளனின் உடல் வைக்கப்பட்டது. முகம் மூடப்படுவதற்கு முன்பு ஒருமுறை நெற்றியைத் தடவி விட்டாள். மகளிடம் கணவன் முகத்தைக் காட்டினாள்.

மெல்ல தீப்பந்தத்தை எடுத்து மகளையும் ஒரு கை பிடிக்கச் சொல்லி சிதைக்கு தீ மூட்டினாள்.நெருப்பு சடசடத்து எரியத் தொடங்கியது. மூடிய அவளது கண்களில் இருந்து பெருகிய நீர் சிதையில் தெறித்து ஆவியானது.

வீடு திரும்பினார்கள். மாதங்கி அங்கேயே அத்தையுடன் தங்கிவிட்டாள். குழந்தையை தூங்க வைத்துவிட்டு மாதங்கியின் அருகில் அமர்ந்தாள் அத்தை.

“அத்தை.. ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி. எப்பிடி எல்லாரையும் எதிர்த்துப் பேசின? எல்லாரும் கோவிச்சிட்டு போயிருந்தா?” மாதங்கி பாயில் படுத்து கொண்டாள்.

“போகட்டும்டி. அதுக்காக தேவையில்லாத சடங்குகளைப் பண்ண முடியுமா.?” அத்தை மௌனமானாள்.

ஏதேதோ யோசனைகளுடன் மாதங்கி வெகுநேரம் விழித்துக் கொண்டிருந்து விட்டு அசதியில் தூங்கிப் போனாள். செண்பகா அத்தை சுவரில் சாய்ந்தவாறே உட்கார்ந்திருந்தாள். காலையில் சூரிய வெளிச்சம் வந்து கண்களை அசைத்ததில் மாதங்கி கண் விழித்தாள். அத்தை தலைக்குக் குளித்து விட்டு நீர் வடியும் கூந்தலில் நுனி முடிச்சிட்டு இருந்தாள். வழிந்த நீர் அவளது முதுகுப் புறத்தை ஈரமாக்கி இருந்தது. வாசலில் இருந்த மரத்தில் சல்லக்கொக்கி போட்டுப் பறித்த செண்பக மலர்கள் வெள்ளையும், மஞ்சளுமாக கலந்து தொடுத்த நீளமான பூச்சரத்தை தலையில் சூடிக் கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தாள் செண்பகா அத்தை.

***

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.