‘மனிதன் உலகின் ஆகப் பெரிய சல்லிப் பயல்’ என்கிற புதிய சொலவடை உண்டு. பல சமயங்களிலும் அது உண்மைதானோ என்று தோன்றுவதுண்டு. ஒருவர் மேல் உண்டாகும் அன்போ, பாசமோ அதீதமாகும்பொழுது, அதன் வெளிப்பாடு தொடுதலாகத்தான் இருக்கிறது. அதை வெறும் காமத்துடன் சுருக்கிப் பார்க்கப் பழகிக்கொண்ட மனிதன், உலகின் ஆகப் பெரும் சல்லிப் பயல்தான்.
விஜய் டிவி ஜூனியர் சூப்பர் சிங்கர் பார்க்கும்பொழுது அம்மா சொன்னது, ‘அந்தக் குழந்தையைப் பார்க்கும்பொழுதெல்லாம், அதன் கன்னத்தில் முத்தமிட வேண்டும்போல இருக்கிறது.’ எனக்கும் அதுபோல பல சமயங்களில் தோன்றியிருக்கிறது.
ஏதோ ஒரு குழந்தையைப் பார்த்து அப்படி ஏன் தோன்ற வேண்டும்? அதன் கொழுகொழு கன்னங்களாக இருக்கலாம்; அல்லது துறுதுறு நடவடிக்கை; அல்லது சூது அறியாத பால் முகம்… ஏதோ ஒரு காரணம். ‘முத்தம் கொடுத்துட்டே இருக்காதடி, நோய்த்தொற்று ஆகி விடப்போகிறது’ என்று குழந்தையாக இருந்த அத்தை மகளைக் கொஞ்சும்போதெல்லாம் அத்தை கூறுவார். அதனாலேயே எனக்குக் குழந்தைகள் பிறந்தபொழுது, ‘இவன் என்னவன். எவ்வளவு வேண்டுமானாலும் கொஞ்சலாம். யாருமே தடுக்க முடியாது’ என்று தோன்றியது. எத்தனை லட்சம் முத்தங்கள் கொடுத்திருப்பேன் என்று தெரியாது.
காதல் அரும்பும் தொடக்கத்தில் தொடுதல் என்று இல்லை, காதலன்/காதலியின் மூச்சுக் காற்று மேலே பட்டாலே, மனது படபடக்கும். காலப்போக்கில், அந்தத் தொடுதலால் மனதில் ஏற்படும் பட்டாம்பூச்சி வேண்டுமானால் காணாமல் போகலாம்; ஆனால் ஒரு நீண்ட நெடிய நாளைக் கடந்த பிறகு, துணைவரின் தோள் சாய்வதோ மாடி சாய்வதோ என்றுமே அலுப்பதில்லை. அதீத சந்தோஷமோ துக்கமோ, துணைவரின் அரவணைப்பு இல்லாமல் எப்படி அதைக் கடப்பது! ‘இவன் என்னவன்’, ‘இவள் என்னவள்’ என்பதை தாலியோ, மோதிரமோவா உலகிற்கு உணர்த்துகிறது? இணையரின் தோளில் போடும் கையோ, கையுடன் கைகோத்துக் கொள்வதோதானே நான் இவனுக்கானவன் என்பதைப் பறைசாற்றுகிறது. காதலின் பிரிவுகூட கடைசி தொடுதலுடன்தானே நிறைவடைகிறது?
‘தொட்டு’ வழிபட முடியாத கோவிலில் இருக்கும் சாமியைவிட, தான் குளிப்பாட்டி, உடை உடுத்தி, படையல் போடுவதை ஏற்று கொள்ளும் சாமிகள்தானே மக்களிடம் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தானே நம்மை தொட்டு அரவணைக்கும் அனைத்து நெருங்கிய சொந்தங்களின் புகைப்படங்கள் பூஜை அறையில் சாமிகளுடன் சேர்த்து வணங்கப்படுகின்றன?
கடவுள் நம்பிக்கை இருந்த காலத்தில், எட்ட நின்று வழிபட்ட, மிகவும் பிடித்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சாமியைவிட, என்னை கருவறைக்குள் அனுமதித்து, தன் மேல் பாலை ஊற்றவும் அனுமதித்த உஜ்ஜைனி காளீஸ்வரர், மொழி புரியாவிட்டாலும், மிக நெருங்கி வந்தது அந்த ஒரு தொடுதலில்தானே!
சில மாதங்களுக்கு முன் வெளியான நீயா நானா நிகழ்ச்சியில், பெண் குழந்தைகள், தந்தைகள் பங்கு பெற்ற நிகழ்ச்சியில், அதிக பெண்கள், ‘அப்பா என்னைத் தொடுவதை குறைத்துக் கொண்டார்’ என்று கூறினார்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அப்பாக்கள் தங்கள் பெண் குழந்தைகளைத் தொடுவதைக் குறைத்துக் கொள்வது யாரும் சொல்லிச் செய்வதில்லை. வயதிற்கு வந்த பெண்ணை அவசியம் இல்லாமல் தொடக்கூடாது என்று நினைக்கும் அப்பாக்கள்தான் தங்கள் மகளுக்கு ஒரு பிரச்னை என்றால் முன் நிற்பார்கள். எப்போதும் தொடும் உரிமை இருக்கும் அம்மாகூட அதற்கடுத்துதான்.
அப்பா இறந்த சமயத்தில் பல விதங்களிலும் ஆறுதல்கள் வந்து கொண்டிருந்தன. நிறைய நிறைய வார்த்தைகள். ஒன்றுகூட நினைவில் இல்லை. ஆனால் ஒன்றுமே பேசாமல், முகம் முழுக்க சோகத்திலும், லேசான கலங்கிய கண்ணீரிலும், அதுவரை என்னைத் தொட்டிராத ஒரு அண்ணன், என் கைகளைப் பிடித்தபடி என்னை பார்த்தது மட்டும் அப்படியே பதிந்துவிட்டது. அந்தத் தொடுதல் ஆறுதலைக் கொடுத்ததா என்று தெரியவில்லை. ஆனால், ‘உன் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்’ என்பதை அதைவிட சிறப்பாக எப்படி கடத்திவிட முடியும்?
கடைசியாக அப்பாவின் கைகளில் வைத்து எடுக்கப்பட்ட சில சில்லறைக் காசுகளை, தங்கத்தைவிட விலைமதிபாக்கியது அந்த கடைசித் தொடுதல் அல்லாமல் வேறு என்ன? மின்தகனம் செய்யும் கடைசி நிமிடத்திற்கு முன் அப்பாவை ஒருமுறை தொட்டுப் பார்க்கவேண்டும் என்று ஏன் தோன்ற வேண்டும்? வார்த்தைகள் கைகூடாத நேரத்தில், தொடுதல்தானே அனைத்தும்!

சமீப காலங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் (safe touch, unsafe touch) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் முக்கியமானது.
பள்ளிக் காலங்களில் பிடித்த ஆசிரியரைத் தொடுவதெல்லாம் சாத்தியமற்றது. அப்படி ஒரு பழக்கமே கிடையாது. ஆசிரியர் அடிக்க மட்டுமே கைகள் மேலே படும். வகுப்பு நடைபெறும் சமயம், பள்ளி மர இருக்கைகளுக்கு நடுவே நடந்து செல்லும்போது அவர் சேலை நுனியைத் தொடுவதே பேரின்பம் கொடுக்கும். கன்னம் வலிக்கும் அளவிற்கு கிள்ளி முத்தம் கொடுக்கும்பொழுது அந்த வலியை தாண்டி அதில் இருக்கும் அன்பை மட்டுமே உணர்த்திய தொடுதல் அது.
மருத்துவ காரணங்களுக்காகத் தொடும்பொழுது அதில் எந்த வித உணர்ச்சியுமே கடத்தப்பட்டதில்லை. அவர்களுக்கு அது வெறும் உடல்தான். எதை சோதிக்க மேலே கை வைக்கிறார்களோ, அதில் மட்டுமே அவர்களின் கவனம் இருப்பதால், சில இடங்களில் தொடும்பொழுது கொஞ்சம் அசௌகரியம் ஏற்படுகிறதே தவிர, அதைத் தாண்டிய ஒரு உணர்ச்சி இருந்ததில்லை. அது எதிர் பாலினமாக இருக்கும் பொழுதிலும். சம்பந்தப்பட்ட நபர் ஒரு பயிற்சி பெற்ற நிபுணர், அவர் பணியை அவர் செய்கிறார் என்கிற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருக்கும்.
தொடுதல்கள் ஒன்றும் வார்த்தைகளைப் போல அவ்வளவு குழப்பமானவையில்லை. தொடுதல்களுக்கு மொழிகள் தேவையில்லை. தொடுதல்களுக்குப் பொய் பேசத் தெரிவதில்லை. தொடுதகள் கொடுக்கும் ஆறுதல்களை வார்த்தைகள் கொடுப்பதில்லை. தொடுதல்கள் கொடுக்கும் எச்சரிக்கைகளை வேறு எந்த அறிவுரைகளும் கொடுப்பதில்லை. தொடுதல்கள் கொடுக்கும் காதலை வேறு எந்த பரிசுப் பொருள்களும் கொடுப்பதில்லை.
தொடரும்…
படைப்பாளர்

சுமதி விஜயகுமார்
பொதுச் செயலாளர், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா




