ஆண்மைய சினிமாவில் ஒரு மறுதலையாக்க முயற்சி
முழு நிலவு காயும் இரவில் மொட்டை மாடியில் கற்றைக் கூந்தல் காற்றில் அலைய நிற்கும் நாயகி. இந்த வர்ணனையை நான் சொன்னால் காதல் காட்சி போலத் தோன்றலாம். லோகா அத்தியாயம் ஒன்று சந்திரா திரைப்படத்தில் ஒரு நீண்ட சண்டையை முடித்துவிட்டு, ஆசுவாசம் பெறக் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் பெண் சூப்பர் ஹீரோ பற்றிய காட்சி வர்ணனை இது.
இந்திய சினிமாவின் பெரும்பான்மையான திரைப்படங்களை ‘நாயகன்’ என்கிற மந்திரக்கோலே இயக்குகிறது. கதைகளும் கதாபாத்திரங்களும் அந்த ஒற்றை ஆணின் உலகத்தைச் சுற்றியே பின்னப்படுகின்றன. காலம் காலமாக இந்திய சினிமாவின் பெண் கதாபாத்திரங்களுக்கு வரையறுக்கப்பட்ட இலக்கணங்களை உடைத்தெறிந்து வடிவமைக்கப்பட்டுள்ளது சந்திரா கதாபாத்திரம்.
ஆபத்தில் இருக்கும் பெண்ணைக் காப்பாற்ற ஆண் நாயகன்தான் வரவேண்டும் என்பதை மாற்றி, சக பெண்ணைப் பாலியல் சீண்டலிலிருந்து பாதுகாக்க நாயகி களமிறங்கும் காட்சி விசில் மொமெண்ட்.
படத்தின் கதை மும்முனையாகப் பயணிக்கிறது. பெங்களூருவில் நண்பர்களுடன் கேளிக்கை வாழ்க்கை வாழும் சன்னி, உடல் உறுப்புகளுக்காக ஆட்கடத்தல் செய்யும் வில்லன் கும்பல், மற்றும் மர்மமான நடவடிக்கைகளுடன் அயல்நாட்டிலிருந்து வரும் சந்திரா. இந்த மூன்று கோடுகளும் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளியில் வெளிப்படும் அதிரடிகளும் ரகசியங்களும்தான் படத்தின் மையக்கரு.
படம் முழுக்க இறுக்கமான மனநிலையுடன் இருக்கும் சந்திரா, முன்பின் தெரியாத சன்னியை முதன்முறை பார்க்கும்போதே ஒருவித அன்புடன் கண் கொட்டாமல் அவனைப் பார்க்கிறாள். அப்படிப் பார்ப்பதற்கும், கார் விபத்திலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்கும், அவனுடன் இருக்கும்போது இயல்பு தளர்ந்து புன்னகைப்பதற்கும் அவனிடம் ஒரு மென்மையைக் கடைப்பிடிப்பதற்கும் என்ன காரணம்? 1905ல் நடந்த நிகழ்வைக் குறிப்பிட்டு இவையனைத்தையும் தொடர்புபடுத்துவது நல்ல திரைக்கதை உத்தி.
சந்திரா இக்கட்டான சூழலில் இருக்கும்போது, படம் திடீரென்று ஒரு மருத்துவர் நாட்டுப்புறக் கதை சொல்வதாக மாறுகிறது. ஆரம்பத்தில் தொடர்பில்லாததுபோல் தோன்றினாலும், பின்னர் இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையேயான வலுவான இணைப்பு வெளிப்படுவது, சுவாரஸ்யமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கிறது. படத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது.

படத்தில் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. முதல் பாடலில் வரும் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு, அடுக்குமாடிக் கட்டடத்திற்கு அருகில் இருக்கும் மரத்தின் பூ, பால்கனியில் டெலஸ்கோப் மூலம் வேணு விவரிக்கும் சந்திர கிரகண ரத்த நிலா, காலியான குளிர்சாதனப் பெட்டி, கண்ணாடிக் கதவில் ஒட்டப்படும் செய்தித்தாள், நாச்சியப்பன் கதாபாத்திரம் புகை மதுப் பழக்கமில்லாத ஆரோக்கியமானவர் என்கிற வசனம், ரத்தத்தைப் பார்த்து சந்திரா துணுக்குறுவது, சாத்தன் வைத்திருக்கும் சாவிக் கொத்தில் உள்ள பொம்மை உள்பட அனைத்தும் சங்கிலித் தொடர்புடையவை.
சண்டைப் பயிற்சி எடுத்துக் கொண்டு சந்திரா பாத்திரத்தில் எந்த நடிகர் நடித்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருந்திருக்கும். ஆனால் கல்யாணி, அதிகம் பேசாமல் கண்களாலேயே அன்பு, மகிழ்ச்சி, கோபம், சோகம் என எல்லா உணர்வுகளையும் கடத்தி விடுகிறார். எப்போதும் கருப்பு சிவப்பு நிறங்களில் தோன்றும் அவர், ஒரு காட்சியில் மட்டும் வெள்ளை உடுத்தி வந்து அந்தத் தருணத்தில் தன் இயல்பை மாற்றி நடமாடுவதை உணர வைக்கிறார்.
சன்னியாக நஸ்லீன் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பொருந்திப் போகிறார். ஊதாரி நண்பர்களோடு சேர்ந்து அவர் செய்யும் அட்டூழியங்களும் உண்மை தெரிந்தபின் சந்திராவைப் பார்த்து மிரளும்போதும் சாதாரணமாக அவர் பேசும் வசனங்களும் சிரிப்பலையைக் கிளப்புகின்றன. குட்டி நீலியாக நடித்துள்ள துர்கா வினோத், ஆச்சரியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பழங்குடிகளாக வரும் மற்ற நடிகர்களும்கூட கச்சிதமான தேர்வு.
ஆணாதிக்க மனநிலையில் உள்ள நாச்சியப்பன் பாத்திரத்தில் சான்டி மாஸ்டர் சில காட்சிகளில் உக்கிரமாகத் தெரிந்தாலும், சில இடங்களில் அவரது நடிப்பு ஒட்டாமல் இருப்பது ஒரு சிறிய குறை.
பெரும்பாலான சூப்பர் ஹீரோ கதைகளில் சிலந்தி கடித்தோ, விண்கல் மோதியோ, அல்லது தொழில்நுட்பத்தின் துணை கொண்டோ ஒரு அப்பாவி நாயகனுக்கு சக்தி கிடைப்பது போலத்தான் கதைகள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், லோகா அந்த ஸ்டீரியோடைப்பையும் உடைத்து தென்னிந்தியப் பழங்குடி நாட்டார் கதையிலிருந்து ஒரு முடிச்சைப் பிடித்து, ஒரு பெண் சூப்பர் ஹீரோவை திரையில் காட்சிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இது ஒரு சிறப்பான முயற்சி.
அதிலும் அவதாரமாகச் சித்தரிக்காமல் வேர்களோடு தொடர்புப்படுத்திப் புனையப்பட்ட படைப்பு என்பதால் உணர்வுகளோடு உரையாடி மனதிற்கு நெருக்கமாக்கி விடுகிறது. சிலைகளின் தலைகளைக் கொய்யும் சனாதன அரசியல் சித்தார்த்தன் தொடங்கி இன்று வரை தொடர்கிறது.
குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் என்றாலும், படக்குழுவினர் கலை மற்றும் காட்சியமைப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை. பெங்களூருவின் பரபரப்பு, பழங்குடி கிராமத்தின் அமைதி என எந்தப் பின்னணியாக இருந்தாலும் அவை கண்களுக்கு விருந்தளிக்கின்றன. கலை இயக்குநர் ஜிது செபேஸ்டியன் அவர் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்.

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும், ஷமன் சக்கோவின் படத்தொகுப்பும் போட்டிபோட்டுக்கொண்டு காட்சிகளை நேர்த்தியாக்குகின்றன. உப்புத்துகள்கள் நட்சத்திரங்களாகும் வித்தையெல்லாம் இந்த இருவரின் ஒத்திசைவில்லாமல் சாத்தியமேயில்லை.
பாடல்களுக்கான தேவை பெரிதாக இல்லாததால் அதை உணர்ந்து பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய். பொதுவாக திரை நாயகர்களுக்குக் கொடுக்கும் அறிமுக இசைக்கு இணையாக சந்திரா வரும் காட்சிகளுக்கு அவர் இசையமைத்துள்ளார். குறிப்பாக படத்தின் முடிவில் வரும் ஒரு சுவாரசியமான கவுரவத் தோற்றத்திற்கு நகைச்சுவையாக அவர் கொடுத்துள்ள பின்னணி இசை வெகுபொருத்தம். ஒரு கொண்டாட்டக் காட்சியின்போது ஒலிக்கும் பழைய பாடலான ‘கிளியே கிளியே’ சமீப காலத்துக்கு ஏற்ற தேர்வு.
ஹாலிவுட் சண்டைக் காட்சி நிபுணரான யானிக் பென், படத்திற்கான சண்டைக் காட்சிகளை பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார். அவருக்குத் துணையாக ராய்மன்டோ கொய்ரிடோ.
வி எஃப் எக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. ஆனால், மிதமிஞ்சியத் தகவல்களை அடைக்க முயன்றிருப்பது பலவீனமாகத் தெரிகிறது.. வெள்ளி கிரகத்தைக் குறிக்கும் சுமேரியக் கடவுளான இஷ்தார், அனிமேஷன் காட்சிகளில் விண்கலங்கள், போர்க் காட்சிகள் போன்ற குறியீடுகள் தென்னிந்திய நாட்டார் மரபோடு மட்டும் இந்தக் கதை நிற்கப்போவதில்லை என்கிற அனுமானத்தை ஏற்படுத்துகின்றன. இந்தக் குறியீடுகளின் பின்னணி தெரியாமல் படம் பார்ப்பவர்களுக்கு இவை எதுவும் புரியாமல் போக வாய்ப்புள்ளது.
எழுத்தும் இயக்கமும் டோம்னிக் அருண் என்றாலும் திரைக்கதையில் சாந்தி பாலச்சந்திரனின் பங்களிப்பு, சந்திரா பத்திரப்படைப்பின் இயல்பிலும் இறுக்கத்திலும் அந்தப் பாத்திரம் வெளிப்படுத்தும் மெல்லிய உணர்வுகளிலும் பளிச்செனத் தெரிகிறது. மொழிபெயர்ப்புப் படம் என்பதால், வசனங்களில் மெனக்கெடல் குறைவாக இருப்பது தெரிகிறது.
இடைவேளைக்குப் பிறகு நிறைய கதாபாத்திரங்களை நிறுவுவதும் சூப்பர் ஹீரோ டெம்ப்ளேட்டுக்குள் அடைக்க முயற்சிப்பதும் சிறிது தொய்வை ஏற்படுத்துகின்றன. துல்கர், டோவினொ, சன்னி வாய்ன், விஜய் மேனன் ஆகியோர் அத்தியாயம் ஒன்றிலேயே காட்டப்பட்டுவிட்டாலும், அடுத்தடுத்த பாகங்களில் அந்தப் பாத்திரங்களின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் தவிர ஷோபின், பாலு வர்கீஸ், அஹானா கிருஷ்ணன், சாந்தி பாலச்சந்தர் ஆகியோர் சில நொடிகள் காட்டப்பட்டிருப்பது, மூத்தோனாக நடிகர் மம்மூட்டி கை மட்டும் காண்பித்து குரல் கொடுத்திருப்பது, வில்லன்களான இஷ்தார், கஜேந்திரன் ஆகியோர் அடுத்த பாகங்களில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது போன்றவை, சுவாரசியத்தைக் கூட்டினாலும் இயக்குநரின் சுமையையும் கூட்டியிருக்கின்றன.
சமீபமாக யுனிவர்ஸ் என்று கூறி வந்த படங்கள் சில எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாது போனதன் விளைவு லோகா அடுத்த பாகங்கள் மீதும் சிறு அவநம்பிக்கை மேலிடுகிறது.
ஒரு வாசிப்பாளராக, புத்தக ஆர்வலராக படத்தில் வரும் நாட்டார் கதைப் பாத்திரங்களைத் தேடிப் போனால், வினோத் நாராயணன் எழுதிய ‘கள்ளியன்காட்டு நீலி’, சி. வி. ராமன் பிள்ளை எழுதிய ‘மார்தாண்ட வர்மம்’, வி. கே. என். நாயர் எழுதிய ‘சாத்தன்,’ மலையட்டூர் ராமகிருஷ்ணன் எழுதிய ‘யட்சி’ ஆகிய புத்தகங்கள் கிடைக்கின்றன. நீலி, சாத்தன், கத்தனார், ஒடியன் போன்ற பல பாத்திரங்கள் எழுத்தாளர் கொட்டாரத்தில் சங்குன்னி தொகுத்த கேரள நாட்டார் வழக்காறு கதைகளின் தொகுப்பான ‘ஐத்திக மாலை’ நூலில் விரிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. எட்டுப் பாகங்கள் உள்ள நூல் இது. ‘ஐத்திக மாலை’ புத்தகம் பற்றிய குறிப்பு படத்திலும் வருகிறது. லூயிஸ் ப்ரைக், ஜான் விட்டாகர், சி. ஜே. மோர் பொன்ற எழுத்தாளர்கள் மெசபடோமிய நாகரிகம் பற்றியும், இஷ்தார் கடவுளைப் பற்றியும் புத்தகங்கள் எழுதியுள்ளனர். இஷ்தார் பற்றி வாசிக்க ஆர்வமிருந்தால் இவர்களின் எழுத்துகளை வாசிக்கலாம். மேலே நான் குறிப்பிட்டுள்ள அனைத்து நூல்களும் ஆங்கிலத்தில் கிண்டில் தளத்தில் உள்ளன என்பது கூடுதல் தகவல்.
பொதுவாக திரைப்படங்களில் நாயகர்கள் செய்யும் அத்தனை சாகசங்களையும் ஒரு பெண் செய்வதாகக் காட்டி காட்சிப்படித்துவது பெண்ணியப் படம் என்கிற வரையறைக்குள் வருமா என்பது விவாதத்துக்கு உரியது. படத்தில் சந்திரா தவிர பெயரிடப்பட்ட குறிப்பிடும்படியான பெண் கதாப்பாத்திரங்கள் இல்லை. பெண்களிடையேயான உரையாடல்கள் பெரிதாக இல்லை. அதோடு பெண்களின் அன்றாட வாழ்வு சார்ந்த விஷயங்களை லோகா பேசவும் இல்லை. பெண்ணியக் குறியீடுகள் கொண்டு அளவிட்டால் இந்தத் திரைப்படத்திற்கான பெக்டெல் மதிப்பீடு 0/10. ஆனால் மற்ற அளவீடுகளைக் கருத்தில் கொண்டால், திரைப்படமாக லோகாவிற்கு 8/10 கொடுக்கலாம்.
ஒரு பெண் கதாபாத்திரத்தைப் மையப்படுத்தி சுற்றிலும் மர்மங்கள் பின்னி நாட்டார் வழக்காறோடு இணைத்து திரைக்கதை அமைத்துப் படத்தை இவ்வளவு சிறிய பொருட்செலவில் திரைக்குக் கொண்டுவந்துள்ள படக்குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மொத்தத்தில் லோகா அத்தியாயம் ஒன்று சந்திரா அவசியம் கண்டு களிக்கவேண்டிய படம்.
பி.கு - படத்தில் இரண்டு பின்னூட்டக் காட்சிகள் உள்ளன. அவசரப்பட்டு படம் முடிந்துவிட்டதாகக் கருதிக் கிளம்பிவிடாதீர்கள்.
படைப்பாளர்
பச்சக்கிளி

மென்பொறியாளர், வாசிப்பிலும் எழுத்திலும் தீவிர ஆர்வம் கொண்டவர்.




