‘சரியான திமிர் புடிச்சவ’, ‘ஏதாவது அட்ஜெஸ்ட் பண்ணிப் போயிருப்பாங்க’ மிக மிக இயல்பாகப் பெண்கள்மீது வீசப்படுகிற சொற்கள் இவை. பொதுவெளிக்கு வருகிற பெண்கள் எல்லாரும் ஏதோ ஒரு சூழலில் இச்சொற்களைக் கடக்காமல் வந்துவிட முடிவதில்லை.
அடர்நிற உதட்டுச்சாயம், ஸ்லீவ் இல்லாத சட்டை, நகப்பூச்சு, கலகல பேச்சு எனப் பெண்கள் சார்ந்த எல்லாவற்றிலும் இவர்களுக்குச் சொல்ல கருத்து ஒன்று இருக்கிறது. ஒருவித எதிர்ப்பு மனநிலை இருக்கிறது. ஆனால் அந்த அறிவுரையும் எதிர்ப்பு மனநிலையும் ஒருபோதும் அரைட்ரவுசர் ஆண்களை நோக்கி நீள்வதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? சட்டை அணியாமல் வீட்டில் இருக்கிற ஆண்களை இயல்பாகப் பார்க்கிற பார்வையை வீட்டுக்கு வந்த புது மருமகள்தான் பழகிக்கொள்ள வேண்டும். ‘அவர் அப்படித்தாம்மா’ எனக் குடும்பமே அதற்கு நம்மைப் பழக்கும்.
இதுஒருபுறமிருக்க, இஸ்ரோவே சென்றாலும் இன்னும் ஸ்லீவ் இல்லாத சட்டைக்கும் துப்பட்டா இல்லாத சுடிதாருக்குமே பெண்கள் போராடவேண்டி உள்ளது. வியர்வையும் கசகசப்பும் பெண்களுக்கு வராதா? மாதவிடாய் நாள்களிலும் மெனோபாஸ் நாள்களிலும் ஏற்படுகிற எரிச்சலும் கசகசப்பும் வியர்வையும் சொற்களுக்குள் அடக்க முடியாதவை. இதுகுறித்த மென்மையான சில உரையாடல்களை வீட்டில் தொடங்கிப் பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்திராத பதில்களையும் வலிகளின் வெளிப்பாட்டையும் அம்மாவிடமிருந்தும் மனைவியிடமிருந்தும் பெறக்கூடும். கேட்பதற்குக் காதுகள் வேண்டும்; அவ்வளவுதான்.
ஒருவாறு போராடி பிடித்த உடையை அணிந்துகொண்டோம். சரி. அந்த உடைமாற்றத்தோடு பொதுவாழ்வில் சற்றே பெண்கள் செயல்படவும் தொடங்கிவிட்டால், அவ்வளவுதான். அவளது நடத்தையே விமர்சனத்துக்கு உள்ளாகும். குடும்ப வாழ்க்கையே பேசுபொருளாக மாறும்.
அவளது உழைப்புக்குக் கிடைக்கிற வாய்ப்பும் திறமைக்குக் கிடைக்கிற மதிப்பும் சிபாரிசுகளால் நிகழ்ந்தவை என்றே காலங்காலமாகச் சொல்லப்படுகிறது. வெறும் சிபாரிசுகளால் ஒருவர் நிலைபெற முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தாலுமே ‘இவர் அவருக்குத் தெரிந்தவர்’, ‘அவர் சொல்லி நடந்திருக்கும்’ எனப் பெண்களது உழைப்பு மட்டும் திட்டமிட்டே மதிப்பிழப்பு செய்யப்படுகிறது.
எண்ணிப் பாருங்களேன். ஒரு வெற்றிக்கும் பாராட்டுக்கும் ஆண் தனது உழைப்பையும் நேரத்தையும் மட்டும் தந்தால்போதும். ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. அவள் தம் வாழ்வின் மீதான கடும்விமர்சனங்களையும் சுடுசொற்களையும் கடந்தால்தான் அந்த வாய்ப்பே வசப்படும். கிடைத்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்த வீட்டுவேலைகளை முதலில் முடிக்க வேண்டும். அதன்பின் தம் உணவு உறக்கம் தொலைத்து, இருமடங்கு உழைத்து வெற்றிக்கனியைச் சுவைக்கத் தயாராகும்போது, மிக இயல்பாக வந்துவிழும் அவதூறு, ‘சிபாரிசு’.
தொடக்கத்தில் அழுகையும் ஆற்றாமையும் மேலிட்டு புழுபோல சுருங்கச் செய்யும். நாளடைவில் பழகிப் பழகி இதழோரப் புன்னகையோடு இதனைக் கடந்துபோகப் பழகிவிடுகிறோம்.
ஒரே ஒரு கேள்விதான் நெடுநாள்களாக மனத்தில் இருக்கிறது. ஆண்கள் துறுதுறுவெனப் பணி செய்யும்போது அப்பணி எல்லாராலும் பாராட்டப்படுகிறது. அதே பெண்களின் துறுதுறுப்பு மட்டும் ஏன் கேள்விக்கு உள்ளாகிறது? பெண்களுக்கு அறிவில்லை எனவும் அவள் போதாமை நிறைந்தவள் எனவும் நாம் நம்பவைக்கப்பட்டு இருக்கிறோம். அது இல்லை எனப் பெண்கள் தம் அறிவினால் வெல்லும்போது, அவளது உடையும் நடையும் புன்னகையும் அறிவும் ஆற்றலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. அந்த அறிவின் செருக்கை எப்படியாவது உடைக்கவேண்டும்; கண்ணீர் வர வைக்கவேண்டும். அவ்வளவுதான் விமர்சிப்பவர்களின் நோக்கம்.
அரசியலிலும் பொதுவாழ்விலும் இயங்குகிற ஆண்கள் மிடுக்கு கலந்த கனிவுடன் வலம்வருகிறார்கள். ஆனால் அதே துறைகளில் இயங்குகிற பெண்கள் சற்றே கடுகடு முகத்துடன் அளவான பேச்சுடனும் இருக்கவேண்டி உள்ளது. கனிந்த சொல்லும் தெளிந்த முகமும் அவளது இயல்பாகவே இருப்பினும், அதனை அவள் அளவாகவே வெளிப்படுத்தமுடியும். பொதுவாழ்வில் இருக்கிற ஆண்கள் கச்சிதமாக உடையணியலாம். பெண்கள் சற்றே தளர்வாடைகள் அணிய வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அப்போதுதான் அது மிடுக்கு என நம்பவைக்கப்பட்டு இருக்கிறது.
பெண்கள் சமூகவலைத்தளங்களில் அரசியல் கருத்துகளை அறிவுப்பூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் முன்வைக்கின்றனர். பதிலாகக் கிடைக்கிற பின்னூட்டங்கள் தரமற்றதாகவும் நடத்தைசார்ந்த சொல்லாடல்களைக் கொண்டவையாகவுமே உள்ளன.
அவதூறுகளைவிடவும் ஒருவரை மிக விரைவாக முடக்கக்கூடியவை நடத்தைசார்ந்த விமர்சனங்கள். ‘இதைச் சொன்னால் இவள் முடங்குவாள்’ எனத் தெரிந்தே எய்யப்படுகிற விஷ அம்புகள் எய்தவரின் அறியாமை அல்லது ஆற்றாமையின் வெளிப்பாடாகவே கொள்ளப்படுகிறது.
முன்பெல்லாம் ‘போகட்டும்’ எனக் கடந்துபோகத் தொடங்கி, இப்போது சைபர் க்ரைம் புகார்கள் கொடுத்து அவற்றை எதிர்கொள்ளும் அளவுக்குக் குடும்பங்கள் வளர்ந்துள்ளன.
சமூக வளைத்தளங்களின் வீரியம் தெரியாமல் ‘யார் பார்க்கப் போகிறார்கள்’ என இழிச்சொற்கள் பேசுவது பேராபத்து. கடந்து மூன்று ஆண்டுகளில் பெண்கள் சார்ந்த இணையவழிக் குற்றங்கள் பதிவு செய்யப்படுவதன் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. குற்றத்தின் வீரியம் தெரியாமல், போகிற போக்கில் சில இழிச்சொற்களைப் பதிவிடுவது பெரும் பிரச்னைகளுக்கும் குற்ற வழக்குகளுக்கும் இட்டுச் செல்லும் என்பதைப் புரிந்து செயல்படுவோம்.
நீங்கள் எதிர்கொள்கிற மிடுக்கான, கலகலப்பான, வெற்றியடைந்த ஒரு பெண்ணைப் பார்க்கும்போது நீங்கள் அவள் நடத்தையை மனத்துக்குள் விமர்சிக்கிறீர்களா அல்லது சந்தேகிக்கிறீர்களா? ஆம் எனில், நமக்குப் போதாமை மிகுந்துவிட்டதெனப் பொருள். நம்மால் வெற்றிபெற முடியாத சூழலில் பிறர் அடைந்த வெற்றியின் பெருமிதத்தை நம்மால் முடிந்த அளவு தரம்குறைக்கப் பார்ப்பதன் வெளிப்பாடுதான் மேற்சொன்ன விமர்சனம்.
முடிந்த அளவு நம்மை உயர்த்த முயற்சிப்போம். புதியனவற்றைக் கற்போம். ஒருவரது வெற்றியை மனதாரப் பாராட்டுவோம். அழுக்கும் வெறுப்பும் மனத்துக்குள் சேரச் சேர நம் முகமும் சொல்லும் கடுமையானதாகிறது. நம்மீது நமக்கு இருக்கிற நம்பிக்கையை மேம்படுத்த நல்ல சொற்களைப் பேசுவோம். நாம் மாறினால் ஒவ்வொன்றாக மாறி காலப்போக்கில் எல்லாம் மாறும். பேசுவோம்.
(தொடரும்)
படைப்பாளர்
பா. ப்ரீத்தி
தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
ஆண்மைய சினிமாவில் ஒரு மறுதலையாக்க முயற்சி முழு நிலவு காயும் இரவில் மொட்டை மாடியில் கற்றைக் கூந்தல் காற்றில் அலைய நிற்கும் நாயகி. இந்த வர்ணனையை நான் சொன்னால் காதல் காட்சி போலத் தோன்றலாம்….
சூரியனின் ஒளியைப் பெற்று நிலவின் ஒளியாகப் பிரதிபலிக்கிறது. பூமி, சூரியன், நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, நிலா பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது, பூமியை நோக்கியுள்ள பகுதியில் வெளிச்சம் இருக்காது. அதன்…