பலபேர் வாயிலிருந்து புறப்பட்ட சொல்லம்புகள் கவிதாவைப் பதம் பார்த்திருந்ததால், அன்றெல்லாம் சிந்தனையிலே மூழ்கிப் போனாள். ஒவ்வொருவர் சொன்ன சொல்லும் விடுத்த அம்பாகத் திரும்பத் திரும்ப வந்து துளைத்ததைக் கவிதாவால் அன்று மறக்கவே முடியவில்லை.

“ அவ பெரிய வாயாடி, அவளையெல்லாம் சின்னதுலயே அடக்கி ஒடுக்கி வளர்க்கணும். சும்மாவா சொன்னாங்க பெரியவங்க முருங்கையை ஒடிச்சி வளர்க்கணும்ன்னு ?”, என்று பக்கத்து வீட்டு பூர்ணா கவிதாவின் துடுக்குத்தனத்தைப் பார்த்து சொன்னதும், ‘ முருங்கையோடு தன்னை ஒப்பிட்டு ஒரு அற்பப்பழமொழி வேற சொல்றாங்களே’ன்னு கவிதாவுக்குத் தோன்றியது.

“ இதா பாரு சும்மா லொட லொடன்னு பேசக்கூடாது, பொண்ணா அடக்கமா இருக்கணும்”, என்றாள் அத்தை. உடனிருந்த மாமா முருகன் வேறு, “ இத பாரும்மா…பொண்ணு எல்லா இடத்துலயும் போயி இப்படி பேசிக்கிட்டே இருந்தா, சமூகம் உன்னைத்தான் தப்பா பேசும். எங்க என்ன பேசணுமோ, அங்க அதைப் பேசணும். பேசக்கூடாதுன்னா பேசாம இருக்கணும். பொண்ணுனா அமைதியா இருந்தாத்தான் அழகே” என்று பேசினார். கூடவே, இப்படி நயமாய் சொன்னாத்தான் கேட்பாங்க என்று பெருமை வேறு பட்டுக்கொண்டார். இதெல்லாம் வார்த்தை பிசிறாமல் வந்து வந்து போனது கவிதாவின் சிந்தனையில். . .

“ பெண்கள்ன்னா வாயாடிகளாம்! புறம் பேசுவாங்களாம்! மனதில் எதும் வைத்துக்கொள்ளத் தெரியாதவங்க அப்படினு பெண்களுக்கான குணமாய் பொதுமைப்படுத்தறாங்க. இதெல்லாம் ஆண்களுக்கு இல்லவே இல்லையா?”, என பல கேள்விகளில் மூழ்கியேப் போனாள் கவிதா.

indiatimes.com

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அறிவியல் மனப்பான்மையோடு ஆராய்ந்து பதில் கொடுப்பவள் அக்கா பிரீத்தி தான் என்று சட்டென்று கவிதா மனதில் உதிக்க, பிரீத்தி வந்தவுடன் கேட்டுவிடுவதென மனதில் கேள்விப்பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருக்கும்போதே, அக்கா பிரீத்தி அலுவல் பணி முடிந்து வீடு திரும்பும் சத்தம் கேட்டது. கவிதா மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. உண்ண தீனி எதுவும் வாங்கிட்டு வந்திருக்கிறாரோ என்று கண் ஒருபுறம் தேடியது.

அன்று அவர் அலுவலக நண்பர் தஞ்சாவூரில் இருந்து தம்ரூட் என்ற அந்த ஊர் சிறப்பு இனிப்பை வாங்கி வந்து கொடுத்ததை வீட்டிற்குக் கொண்டு வந்திருந்தாள் பிரீத்தி. கவிதாவிற்கு மிகவும் பிடித்த இனிப்பு என்பதால், வீட்டிற்கு வந்தததும் கடைக்குட்டி கவிதாவிடம் தம்ரூட்டைத் தந்து, வீட்டில் அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்து அவளையும் சாப்பிடச் சொன்னார். கவிதாவும் சரியென்று கூறி தம்ரூட்டை வாங்கும்போதே, ” உங்களிடம் சில கேள்விகள் இருக்கு உரையாடணும் “, என்ற கவிதாவின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு, இனிப்பைப் பங்கிடப்போனார் கவிதா.

” பிரீத்தி கொஞ்சம் சோம்பலா இருக்கு. கொஞ்சம் புத்துணர்ச்சி ஆயிட்டு வரேன். தம்ரூட்டைச் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”, எனக் கூறியதும் கவிதா ஏகமனதோடு சரியென்று அக்காவின் நிலையைப் புரிந்துகொண்டு சொன்னாள். சிறிது நேரம் கழித்து அக்கா புத்துணர்வாகி வந்ததும், தம்ரூட்டுடன் உரையாடல் தொடங்கியது.

“ என்னவோ கேள்விகள் கேட்கணும்ன்னு சொன்னியே என் வாயாடி செல்லத் தங்கச்சி”, என பிரீத்தியும் வாயாடி எனச் சொல்ல, “ போக்கா. . . நீயும் என்னை வாயாடின்னு சொல்ற”, என்று சிணுங்கினாள் கவிதா.

“ சரி செல்லம்…உன் கேள்விகளைக் கேளு”, என்றார் பிரீத்தி.

” அதாவதுக்கா. . .என்னை வாயாடி, வாயாடின்னு எங்கப் போனாலும் சொல்றாங்க. பொண்ணுனா வாயாடாம, அடக்கமா இருக்கணும்னு நிறைய பேர் சொல்றாங்க”, என்று யார் யார் என்னென்ன சொன்னார்களோ, அதையெல்லாம் அச்சுப்பிசகாமல் அக்காவிடம் கொட்டித்தீர்த்தாள் கவிதா.
“ பெண்கள் எல்லோரும் இப்படித்தான் வாயாடியா, புறம் பேசுவாங்கன்னு சொல்றாங்களே. அது உண்மையா? சொல்லேன் அக்கா”, என அதீத தேடலும் வருத்தத்துடனும் கேட்டாள். கவிதாவின் காதுகள் பிரீத்தியின் பதிலை எதிர்நோக்கியிருந்தன. பல புத்தகங்கள் வாசிப்பவள், ஊடகத்தில் பணிபுரிபவள், எதையும் ஆழ்ந்து ஆராய்ந்து அனுபவத்தோடு பேசுபவள், தன்னைவிட பலபேருடன் பழகிய அனுபவம் அதிகமாகத் தன் அக்காவிற்கு இருப்பதால் தன் ஐயத்தைத் தீர்ப்பார் என பெருநம்பிக்கை தன் அக்காவின் மேல் கவிதாவுக்கு இருந்தது.

Mother Tongue painting, FLC Group

” நம் முன்னோர்கள் வேட்டை சமூகமாக இருந்த போது ஆண், பெண் இருவரும் வேட்டைக்குப் போனாங்கன்னு படிச்சிருப்ப. பொதுவாகவே குழந்தை வளர்ப்புல பெண் இயல்பா அதிகமான பங்கெடுக்க வேண்டியதா இருந்தது. குழந்தைக்குப் பேச பெரும்பாலும் தாய்தான் சொல்லிக் குடுத்தா. ஆரம்ப காலகட்டத்திலிருந்து இன்று வரை அம்மா தான் சொல்லிக் குடுக்கறாங்க. மொழியைக்கூட நம்ம தாய்மொழின்னு சொல்றோம்”, என்று பிரீத்தி சொல்லிக்கொண்டு வர, கவிதாவின் மனதில் வேட்டை ஆதி சமூகத்தை ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிரீத்தியின் கருத்துக்கு மாற்று கருத்து இல்லை என்று எண்ணியபடியே, “ அப்புறம் சொல்லுக்கா” என்றாள் கவிதா.

” மொழியைக் கையாளும் வாய்ப்பு பெண்களுக்கு அதிகம் கிடைச்சுச்சு. இதுல இன்னொண்ணையும் சேர்த்து யோசிக்கணும்., அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கைல பூமியில் வாழும் உயிரினங்கள் எந்த உறுப்பை அதிகம் பயன்படுத்துதோ அது காலப்போக்கில் வலுவானதா மாறும். பயன்படுத்தாம விடறது அப்படியே பரிணாம வளர்ச்சி படிநிலைல உதிர்ந்திடும்; இல்ல செயல்படாம தொக்கி நிற்கும்ன்னு சொல்லி பல சான்றுகளை நம்மிடம் வைக்கிறார்”, என்று பிரீத்தி சொன்னவுடன், கவிதாவிற்கு வகுப்பில் படித்த டார்வின் கொள்கைகள் நினைவுக்கு வந்தன.

ஆமாம் என்பதுபோல் அக்கா பிரீத்தி சொல்வதையெல்லாம் மனதில் கோக்க முயற்சித்து, ” பெண்கள் மொழிவளத்தைப் பயன்படுத்தறதால, மொழியைக் கையாளுதல் அவுங்களுக்கு வலுவாகி சுலபமாயிடுச்சுன்னு சொல்ற?”, என்று புரிந்துகொள்ள முயன்றாள் கவிதா.

“ ஆண், பெண் இருவருக்கும் மூளையின் இடது பகுதி மொழியை கையாள்வதை நிர்வகிக்குது. பெண் மொழியை அதிகமாகக் கையாளும் வாய்ப்பு பெற்றதால, மொழிவளம் பகுதி மூளையில் ஆணைவிட பெண்ணுக்கு வலுவா இருக்குதுன்னு அறிவியல் சொல்லுது. ஆண் வேட்டைக்குப் போகும்போது சும்மா பேசிக்கிட்டிருந்தா, வேட்டை விலங்கு கிடைக்குமா? இதையும் இணைச்சுப் பார்க்கணும். இப்போதைய மனிதர்கள் ஆணோ, பெண்ணோ மொழியை அதிகம் பயன்படுத்தினா மூளையின் மொழிப்பகுதி வலுவானதா அமையும். இப்படியெல்லாம் அறிவியல் சொன்னாலும், ஆண் பொதுவாக அதிகம் பேசும்போது அப்படி சமூகம் சொல்றதில்லை.”

Nidur.info

” காலம்காலமா பெண்ணைப் பல வழிகளில் சமூகம் ஒடுக்குது. அதுல இப்படி பெண்ணுக்கான குணங்களைப் பொதுமைப்படுத்தறதையும் சொல்லலாம். அதனால பெண்களாகிய நம்மகிட்ட மொழிவளம் அதிகமா இருக்கும்போது, நம் இன்ப, துன்பங்களை பேசித்தான் வெளிப்படுத்துவோம். கத்துக்கறதும் மொழிவழியாத்தான் கத்துக்குறோம். மொழியைக் கையாளும் அறிவு நமக்கு அதிகமா இருக்கும். யார் மொழியை அதிகம் கையாள்றாங்களோ, அவங்களுடைய மூளையின் மொழிப்பகுதி வலுவாகுது. இதுல ஆண்,பெண் வேறுபாடு பார்க்கத் தேவையில்லை”, என நீண்ட விளக்கம் கொடுத்துவிட்டுத் தொடந்தார் பிரீத்தி.

” உன்னை மற்றவங்க வாயாடின்னு சொன்னா உனக்கு மொழிவளம் அதிகமா இருக்குதுன்னு அர்த்தம். மொழி சார்ந்த திறமைகளை வளர்த்துக்கோ.”

” மொழி சார்ந்த, மொழியைக் கையாள்ற ஊடகவியல், மொழியியல், அரசியல், மக்கள் தொடர்பு, போன்ற எண்ணற்ற துறைகள்ல வாய்ப்புகள் இருக்கு. விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து நீ உன்னுடைய பங்களிப்பைச் செலுத்தலாம்”, என்று கவிதாவின் கேள்விகளுக்குப் பகுத்து ஆராய்ந்து பதிலளித்தாள் பிரீத்தி. வாயாடிதான் மொழிவளம் மிக்கவள் என்று கவிதாவுக்குப் புரிந்ததது. அக்கம்பக்கத்தினர் வார்த்தைகளையெல்லாம் சுக்கு நூறாய் உடைத்து, ” ஆம். நான் வாயாடிதான் “ என்று அந்த உடைந்த சில்லுகள் மேல் கம்பீரமாய் நாற்காலி போட்டு அமர்வது போலக் கற்பனை செய்து பார்த்தாள்.

புறம்பேசுவது, புலம்புவது எல்லாம் பெண்கள் தான் என்று சொல்றாங்களே, என்று தன் ஏனைய கேள்விகளையும் கேட்டார் கவிதா. ” பெண் இயல்பாய் பேசும் இடம் சமூகத்தில் மறுக்கப்படுது. நேருக்கு நேராய்ப் பேசும் இடமும் அவளுக்கு இல்லை. அந்த இடங்களில் இது கட்டாயம் நடக்கும். புலம்புவதுகூட பெண்ணின் இன்ப, துன்பங்களுக்கு மதிப்பளித்துப் பார்க்கும் சமூகம் வாய்க்கப்பெறும்போதும்; பெண்ணை இயல்பாக வாழ வாய்ப்பளித்து சுரண்டப்படாத சமூகம் அமையும்போதும் மாறும்.”

” இவை ஒடுக்கப்படும் இடத்தில் உள்ள பெண், ஆண், ஏனைய பால்புதுமையினர் என அனைவரிடத்திலும் பெரும்பாலும் காணப்படும். பெண் இயல்பாய் வாழும் சமூகம் வேண்டுவோம் என் வாயாடி தங்கச்சி”, என தங்கையை அணைத்து முத்தம் கொடுத்தார் பிரீத்தி. ”இது போன்று சமூகம் பொதுமைப்படுத்தும் விடயங்களை நாம் பகுத்துப் பார்த்து நம்மை வலிமைப்படுத்திக் கொள்வோம்”, என்றார். பெரும் மனநிறைவுடன் இரவு உணவருந்தச் சென்றனர் இருவரும். . .

தொடரும்..

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.