“எல்லாரும் தேர்வ எப்படி எழுதுனீங்க?”
“நல்லா எழுதிருக்கோம் மிஸ். நாளை மறுநாள்ல இருந்து ஒரு மாசம் லீவ்தான மிஸ்?”
“ஆமா. மே மாசம் முழுக்க விடுமுறைதான். ஜூன்லதான் திரும்பவும் பள்ளிக்கூடம் இருக்கும். மே மாதம் சொந்தங்கள், சமூகத்துல இருந்து நிறைய கத்துக்கிட்டு வாங்க. நானும் உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்னு ஆவலோட இருக்கேன்.”
“என்னது நீங்க எங்ககிட்ட இருந்து கத்துக்கறீங்களா? டீச்சர்தான எங்களுக்குக் கத்துத் தருவாங்க! என்ன நீங்க இப்படிச் சொல்றிங்க?” என்றான் சுதாகர்.
“ஆசிரியர் கற்றுக் கொடுப்பவராவும் இருக்கணும், குழந்தைங்ககிட்ட இருந்து கத்துக்கறவங்களாவும் இருக்கணும். அதைத்தான் கல்வியாளர் பாவ்லோ ப்ரைரே என்ன சொல்றார்ன்னா… ஒரு ஆசிரியர் 50 % ஆசிரியராவும் 50% குழந்தையாவும் இருந்து கற்றல் – கற்பித்தல் இரண்டும் செய்பவரா இருக்கணும்னு சொல்றார். அதனாலதான் ஆசிரியப் பணியைக் கற்றல் – கற்பித்தல் பணின்னு சொல்றாங்க.”
“ஓ, ஆசிரியர்னா கத்துக்கவும் செய்யணும், கத்துக் கொடுக்கவும் செய்யணும்னு சொல்றீங்க மிஸ். இதுவும் அழகாத்தான் இருக்கு. இவ்ளோ நாளா டீச்சர்னா சொல்லி மட்டும்தான் தர்றவங்க, நாங்கெல்லாம் கத்துக்க மட்டும் செய்யணும்னு நெனச்சிக்கிட்டு இருக்கோம் மிஸ்” என்றாள் வாணி
“எனக்கொரு டவுட் மிஸ்” என்றான் கார்த்திக்.
“சொல்லுப்பா, என்ன டவுட்?”
“இந்த மே மாச லீவ்ல பல விஷயங்களைக் கத்துக்கச் சொல்லி சொன்னீங்க. அதுல சைக்கிளைப் பொண்ணுங்க கட்டாயம் கத்துக்கணும்ன்னு சொன்னீங்களே, அப்போ ஆண்கள் கத்துக்கறதவிட பொண்ணுங்க கத்துக்கறது அவ்ளோ முக்கியமா? அவங்க மட்டும் ஸ்பெஷலா உங்களுக்கு?” என்று கார்த்திக் நீட்டி முடித்தான்.
“நல்ல கேள்வி கேட்டப்பா கார்த்திக். நம்ம ஊர்ல ஆண்கள், பெண்கள்ல யார் அதிகம் படிச்சிருக்காங்க?”
“எங்க வீட்லகூட அப்பா 5 ஆம் வகுப்பு படிச்சிருக்கார், அம்மா படிக்கல. நீங்க சொல்றத யோசிச்சுப் பார்த்தா படிப்பே நம்ம ஊர்ல கம்மிதான். அதுலயும் பொண்ணுங்க படிப்பு ரொம்ப கம்மி மிஸ்.”
“பொண்ணுங்க ஆண்களைவிட இன்னும் முன்னேற வேண்டிய தேவையிருக்குன்னு நீயே சொல்ற இல்லையாப்பா. அதனாலதான் பொண்ணுங்க கட்டாயம் சைக்கிள் கத்துக்கங்கன்னு நான் சொன்னது சரிதானே?”
“என்னவோ போங்க மிஸ்.”
“நீயே காலப்போக்குல புரிஞ்சுக்குவ கார்த்தி”
“ஒரிகாமி, அறிவியல் சோதனைகள், கதை எழுதறதுன்னு பல விஷயங்கள் சொன்னீங்க. ஆனா, சைக்கிள் கத்துக்கணும்னு சொல்லும்போது மட்டும் பெண்களைக் கட்டாயம் கத்துக்கணும்னு சொன்னீங்களே ஏன்?” என்றாள் தனலட்சுமி.
“மனிதர்கள் கண்டுபிடிச்ச கண்டுபிடிப்புகள்லேயே சக்கரம் கண்டுபிடிச்சது மிக முக்கியமான கண்டுபிடிப்பு. அதன் தொடர்ச்சியா நிறைய வேலைகள் சுலபமா செய்யற மாதிரி கண்டுபிடிப்புகள் வந்தது. அதுல மிதிவண்டி மிகமுக்கியமான கண்டுபிடிப்பு. மிதிவண்டி கண்டுபிடிச்சதுக்குப் பிறகு நம்மோட இயக்க வேகம் அதிகமாகி மனிதர்களால் விரைவா பயணிக்க முடிஞ்சது. மிதிவண்டியை அதிகம் பயன்படுத்தும் நாடு சீனாதான். அதற்குப் பிறகுதான் இரு சக்கர வண்டி, மகிழுந்து கண்டுபிடிப்புகள் வந்தது. அப்போல்லாம் பெண்கள் வீட்டைவிட்டு வெளில வரக் கூடாது, படிக்கக் கூடாதுன்னு கடும்கட்டுப்பாடுகள் இருந்ததால ஆண்கள் அளவுக்குப் பெண்கள் படிக்க முடியல. அப்போ பள்ளிக்கூடமும் இப்போ இருக்கற மாதிரி அதிகமா வீட்டுக்குப் பக்கத்துலலாம் இல்ல. வெளிலயே வரக்கூடாத பெண்களுக்குத் தடை இருந்துச்சே எப்படி அவ்ளோ தூரம் போயி படிக்க அனுமதி கிடைச்சிருக்கும்ன்னு யோசிச்சுப் பாருங்க. பெண்கள் ஓரளவு வெளில போயி படிக்கத் தொடங்கிகூட மிதிவண்டி ஓட்ட அனுமதி இல்லாம இருந்துச்சுன்னா பாருங்களேன். ஏன் அப்படி சொன்னேன்னு இப்ப ஓரளவு புரிஞ்சிருக்கும்ன்னு நெனக்கிறேன்!”
“ஆமா மிஸ். ஆண்கள்தான் பெரும்பாலும் இப்பவும் மிதிவண்டி ஓட்டறாங்க. பெண்கள் அரிதாத்தான் ஓட்டறாங்க” என்றான் காந்தி.
“அதெல்லாம் சரிங்க மிஸ். சைக்கிள் ஓட்டறதால நமக்கு என்ன நன்மை வந்துடப் போகுது?” என்றாள் மிருதுளா.
“முன்னவெல்லாம் பள்ளிக்கூடம் குறைவா இருந்ததால படிக்கணும்னா தொலைவா போயி படிக்கறா மாதிரி இருந்துச்சு. இப்ப இருக்க மாதிரி பேருந்து வசதியும் அப்போ அவ்வளவா இல்ல. நடந்தே போயி படிக்கறவங்க படிச்சாங்க. பொண்ணுங்கள தொலைவுக்கு அனுப்ப அனுமதிக்காம படிப்பை நிறுத்திட்டாங்க.”
“மிஸ், நேத்து எங்க அம்மா, அப்பாவும் எப்படி சைக்கிள்ல போயி படிச்சோம்ன்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அதுவும் எங்கம்மா லீவ்ல வேலைக்குப் போயி, காசு சேர்த்தி சைக்கிள் வாங்கி மேல்படிப்பு வரை படிச்சி இப்போ வேலைல இருக்காங்க. எங்கப்பா காலேஜ்க்கு 45 கி.மீ. தினமும் சைக்கிள் ஓட்டிக்கிட்டுப் போயி படிச்சிருக்காரு. அவங்க படிச்சதாலதான் எங்க குடும்பமே இன்னைக்கி முன்னேறியிருக்கோம். ஒரு சைக்கிள் எப்படி முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்குன்னு பாருங்க மிஸ்” என்றாள் வாணி.
“நிச்சயமா மிதிவண்டி கத்துக்கறது நம்மில் பெரிய தன்னம்பிக்கையை விதைக்குது. நிறைய பேர் மிதிவண்டில போயித்தான் தன்னோட படிப்பையே அந்தக் காலத்துல முடிச்சாங்க. அதனாலதான் இப்போ மேல்நிலை வகுப்புக்குச் செல்லும்போது அந்தக் குழந்தைகளுக்கு விலையில்லா மிதிவண்டியை அரசாங்கமே வழங்குது. அப்பவாவது விளிம்புநிலைக் குழந்தைகள் பேருந்து வசதியில்லாத பகுதியிலிருந்து வந்தாலும் கல்வியைப் பாதில விடாம முடிக்கணும்ன்னு அரசாங்கம் ஏற்பாடு பண்ணிருக்கு. அதிலும் குறிப்பா வீட்லயே முடக்கப்பட்டு இருக்கிற பெண்கள் மிதிவண்டி கத்துக்கும்போது சிறகு முளைச்ச உணர்வே வந்துடும்னா பாருங்க. என்ன குட்டிகளா அப்படித்தான?”
“மிஸ் சைக்கிள எடுத்தோம்ன்னா சர்ன்னு சிட்டாப் பறந்துடுவோம் நிமிசத்துல. எங்க போகணுமோ அங்க சீக்கிரமா போக முடியுது, மனசுல ஒரு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் நம்மை அறியாம வந்துடுது மிஸ்” என்றார் சாதனா.
“பெண்கள் மிதிவண்டி கத்துக்க நிறைய தடை இருந்தது. இப்போகூட நம்ம வீட்டுப் பெண்கள் அதிகம் ஓட்றாங்களான்னு பாரேன். மிதிவண்டி ஓட்டறதால எவ்ளோ நன்மைகள் இருக்கு தெரியுமா?”
“உடலும் மனமும் உறுதியாகும், எடை சமநிலைல இருக்கும், எளிதா கற்றுக்கொள்ளும் திறன் வளரும், மனநலன் சீரா இருக்கும். மன அழுத்தம், பதட்டம் போன்ற சிக்கல்கள் இல்லாமல் இருத்தல், ஒருங்கமைவு, சமன்நிலை கொண்டு வருதல், இதயத்துடிப்பு சீராதல், முதுகெலும்பு உறுதிபடுதல், சுற்றுச்சூழலுக்கு இதனால எந்த மாசும் இல்ல. இப்படி பல நன்மைகளைச் சொல்லிக்கிட்டே போகலாம்.”
“இப்ப ஓரளவு மிதிவண்டி ஓட்றாங்க. இந்த இடத்துக்கு வர்றதுக்கு எத்தனையோ பேர் தன் உழைப்பைக் கொடுத்திருக்காங்கன்னா பாரேன். அதனாலதான் இப்பவாவது குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி மாற்றம் வந்திருக்கு. சமூகத்துல யோசிக்கறவங்க பெண்கள் மிதிவண்டி ஏறத் தடை இருந்த காலத்துலயே கல்லூரிகளில் மிதிவண்டி சொல்லிக்குடுத்து பெண்கள் மிதிவண்டி கற்றலை முன்னெடுத்துருக்காங்க. மற்ற இருசக்கர வாகனங்கள் ஓட்ட மிதிவண்டியைக் கத்துக்கறது அடிப்படை. ஏன்னா இதுல பேலன்ஸ் கிடைக்குது. அது மற்ற இருசக்கர வாகனங்களுக்குப் பயன்படுது.”
“அது என்னவோ உண்மைதான் மிஸ். எங்க அண்ணன் சைக்கிள் ஓட்டத் தெரியாததால டிவிஎஸ் ஓட்டக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான்” என்றான் பகலவன்.
“எங்க வீட்ல சைக்கிள் வாங்க வசதி இல்ல மிஸ். ஸ்கூல்லயே சைக்கிள் சொல்லிக்குடுத்தா எங்கள மாதிரி இருக்கவங்களுக்குப் பயனுள்ளதா இருக்கும்ல்ல” என்றாள் சந்தியா.
“அற்புதமா சொன்ன சந்தியா. மிதிவண்டி வாங்க முடியாத நிலைமை இருக்கக் குடும்பங்களும் நம் சமூகத்துல இன்னும் இருக்கத்தான் செய்யுது. பள்ளிக்கூட கலைத்திட்டத்துலயே மிதிவண்டி கற்றல் இணைச்சிருந்தா வாய்ப்பில்லாத குழந்தைகளும் இங்கயே கத்துக்குவாங்க.”
“பள்ளிக்கூடத்துல படிக்கச் சொல்லித் தருவாங்களா இல்ல சைக்கிள்ல்லாம் சொல்லித்தருவாங்களா?” என்றான் காந்தி.
“படிக்கறது, எழுதறது மட்டும் கல்வி இல்லப்பா. மிதிவண்டி, நீச்சல், போன்ற அடிப்படை வாழ்வியல் திறன்களையெல்லாம் கத்துக்கறதும் கல்விதாம்பா காந்தி. எனக்குத் தெரிஞ்சு ஆஸ்திரேலியாவுல மிதிவண்டி கத்துக்கறது பள்ளிக்கூடப் பாடத்திட்டத்துலயே இணைச்சி பள்ளிலயே கத்துத்தர்றாங்க. பெல்ஜியத்துலகூட தொடக்கக்கல்விலயே குழந்தைகளைப் பொதுவெளிக்குக் கூட்டிட்டு போயி கத்துத்தர்றாங்க. பொதுவாவே நிறைய நாடுகள்ல மிதிவண்டி கத்துக்கறது வாழ்வியலின் ஒரு பகுதியாவே இருக்கு. இங்கயும் பள்ளிக்கூடத்துலயே கத்துக் கொடுத்தா அனைவரையும் சென்று சேரும். மாற்றம் வரும் நம் கல்வி முறைலயும் நம்பிக்கையோட இருப்போம். மேல்நிலைக் கல்வி படிக்கற குழந்தைகளுக்கு அரசாங்கம் மிதிவண்டி கொடுக்கறது எவ்ளோ தேவை.”
“அப்படில்லாம் மாற்றம் வந்துடுமா மிஸ்? வந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.”
“சைக்கிள் எல்லோரும் ஓட்டும்போது பார்க்க ஆசையா இருக்கு மிஸ். ஆனா, எனக்கு ஓட்டத் தெரியாது. ஒரு முறை ஓட்ட முயற்சி செஞ்சா கீழ விழுந்து கைல எலும்பு முறிஞ்சு போச்சு. அதுல இருந்து சைக்கிளையே தொடறதில்ல. கத்துக்கவே பயமா இருக்கு. ஆனா எங்க அப்பா, அம்மா சைக்கிள் கத்துக்கறது ரொம்ப முக்கியம்ன்னு சொல்றாங்க. ஆனா, எனக்கு சைக்கிள் எடுக்கவே பயமா இருக்கு. எப்படிக் கத்துக்குவேன்னே தெரியல” என்றாள் வாணி.
“வீட்ல இருக்க பெரியவங்க உதவியோட மிதிவண்டியை இன்னைக்கே எடுத்து ஓட்ற. கத்துக்கிட்டு வந்து எல்லார்கிட்டயும் சொல்றே” என்றூ ஆசிரியர் சொன்னதும் வானத்தில் கயிறுகட்டி சைக்கிளில் போனது போல் இருந்தது வாணிக்கு.
(தொடரும்)
படைப்பாளர்:
சாந்த சீலா
சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார். ஹெர் ஸ்டோரீஸில் இவர் எழுதிய குழந்தைகள் பற்றிய தொடர், ‘நாங்கள் வாயாடிகள்’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.