மருத்துவ சிகிச்சை முடிந்தது என்றே நினைத்தேன். அது முடியவில்லை என்பது பின்னரே தெரியவந்தது. புற்றுநோயில் சிகிச்சை முடிந்த பின்னரும்கூடத் தொடர் சிகிச்சை உண்டு. வேதி சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை முடிந்த பின்னர், புற்றுநோய் குணமாகிவிட்டது என்றுதான் எல்லாரும் எண்ணுகிறோம். புற்றுநோய்க்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்குச் சென்று, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தவறவே கூடாது.

பழநியைச் சேர்ந்த ஒரு பெண், தனது மகன் திருமணம் எல்லாம் முடித்துவிட்டு ஓர் ஆண்டு கழித்து மருத்துவமனைக்குச் சென்றார். அவருக்குப் புற்றுநோய் செல்கள் உடலின் பல இடங்களில் பரவி, இறுதியில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. டாக்டர் கூறியது போல 3 மாதங்களுக்கு ஒருமுறை வந்து பார்த்திருந்தால், நன்றாக வாழ்ந்திருக்கலாம். எப்பொழுதும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது ஒரு தொடர் போராட்டமே.

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு தினமும் 20 – 30 நிமிடங்கள் வெயிலில் (காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை உள்ள வெயில்தான், சாதா இளங்காலை வெயில் அல்ல.) நடக்க வேண்டும். அதில்தான் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. இந்த வைட்டமின் டி குறைவும்கூடப் புற்றுநோய் வருவதற்கான முக்கியக் காரணி. இதுதான் நமக்குத் தற்காப்பு சக்தியை உற்பத்தி செய்து தருகிறது. பணம் கொடுக்காமல், மருந்தாக, உணவாக இல்லாமல் நேரடியாக உடல் எடுத்துக்கொள்ளும் வைட்டமின். இந்த வைட்டமின்தான் உடலில் கால்சியம் செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

வேதி சிகிச்சை முடிந்த பின்னர் மிகவும் மெலிந்து, மிக மிக சோர்வாகவே இருந்தேன். சாப்பிட்ட, தூங்கிய நேரம் போக, மீதி நேரம் முழுவதும் எங்கள் வீட்டு வாசலில் உள்ள ஊஞ்சலில்தான் நான் அடைக்கலமானேன்.

ஃபேஸ்புக் பார்ப்பது மூலமாகவும் நண்பர்களிடம் உரையாடுவது மூலமாகவும் என் வேதனைகளை மறக்கக் கற்றுக்கொண்டேன். சமையல் கலையின் நுணுக்கங்களை குறிப்புகளாக எழுதத் தொடங்கினேன். சுமார் 200 சமையல் குறிப்புகள் எழுதி இருக்கிறேன்.

என் இடது கை இனி 40% மட்டுமே இயங்கும், ஏனெனில் அதற்கான தசையை அறுவை சிகிச்சை நிபுணர் வெட்டி எடுத்திருக்கிறார். ஆனால், நான் தொடர்ந்து இடது கைக்காகப் பயிற்சி எடுத்துக்கொண்டால், இயங்க வைக்க முடியும் என்றார். தொடர்ந்து எடுத்த உடற்பயிற்சியால், என்னால் இடது கையைச் சாதாரணமாக இயக்க முடிந்தது. பொதுவாக மார்பகப் புற்று நோயாளிகளுக்கு வரும் பிரச்னை என்னவென்றால், அவர்கள் எந்தப் பக்கம் மார்பகத்தை எடுக்கிறார்களோ, அந்த பக்கத்தின் கையில் வீக்கம் வர ஆரம்பித்து கொஞ்சம் சிக்கல் வரும். அது நிணநீர் நாளத்தை வெட்டி எடுத்ததால், அதில் சுரக்கும் நீரால்தான். 6வது கீமோதெரபி முடியும்போதே இடது கையின் இயக்கம் சரியாகிவிட்டது.

1990களில் இருந்து இரு சக்கர வாகனம் பயன்படுத்துகிறேன். அதில்தான் கல்லூரிக்குப் போவேன். இருசக்கர வாகனத்தை எடுத்து சுமார் 35 கி.மீ. வேகத்தில் ஓட்டிப் பார்த்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்தபோது என்னால் ஒரு பேனாவைக்கூடப் பிடிக்க முடியவில்லை. இப்போது வாகனத்தையே ஓட்ட முடிந்தது.

நான் விலங்கியல் பேராசிரியர் என்றாலும் எனக்கு வானவியல் மீது ஆர்வம் அதிகம். விண்கற்கள் பொழிவு வந்தது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வந்தன. இதனால் என் கவனம் வானவியலில் நிலைகொண்டிருந்தது. என் வாழ்க்கையில் வசந்தம் வீச ஆரம்பித்தது.

புற்றுநோய் காலம் என்பது என்னை இன்னும் இன்னும் வலிமை உள்ள பெண்மணியாக, எதனையும் தாங்கும் துணிவுள்ளவளாக மாற்றியிருக்கிறது. மனதை வைரம்போல உறுதி உடையதாக மாற்றி இருக்கிறது. தனியாகப் பயணிக்கும் தைரியம் வந்தவுடன் புற்றுநோய் விழிப்புணர்வு கொடுப்பதற்காக ஈரோடு, கரூர் கல்லூரிகளுக்குச் சென்றேன்.

கீமோதெரபி காலகட்டத்தில் வலியும் விரும்பியதைச் சாப்பிட இயலாத நிலையும் சேர்ந்து கடுங்கோபத்தை உண்டு பண்ணும். வீட்டில் இருப்பவர்கள் அப்படிக் கோபப்படும்போது, அதைப் புரிந்து அவர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ள வேண்டியது முக்கியம். நானும் வேதனை தாங்காமல், சாப்பிடப் பிடிக்காமல் தட்டைத் தூக்கி வீசி இருக்கிறேன். எனக்கு உதவி செய்த தம்பி மகளைக் கொஞ்சம் மனத்தால் காயப்படுத்தி இருக்கிறேன்.

கீமோதெரபி முடிந்து மொட்டை போட்டபின் முடி வேகமாக வளர ஆரம்பித்தது.

(இன்னும் பகிர்வேன்)

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.