“அனைவருக்கும் வணக்கம். மகிழ்ச்சியா இருக்கிங்களா?”

“ஓ, மகிழ்ச்சியா இருக்கோம்” என நிறைய குழந்தைகளின் குரல்கள் உற்சாகமாக ஒலித்தன.

“இன்னைக்குக் கடைசி தேர்வு. இன்னும் ரெண்டு நாள்ல கோடை விடுமுறை தொடங்கப் போகுது. ஒவ்வொருவரும் விடுமுறைல நிறைய திட்டம் வைச்சிருப்பீங்க. நான் சிலதைச் சொல்றேன். மிதிவண்டி ஓட்டக் கத்துக்கோங்க, குறிப்பா பெண்கள் விடுமுறை முடிஞ்சு வர்றதுக்குள்ள மிதிவண்டியைக் கட்டாயம் பழகிருக்கணும். அப்புறம் தாத்தா, பாட்டி ஊருக்குப் போங்க. அவங்கிட்ட சின்ன வயசுல விளையாண்டது, அப்போ எப்படி ஊர், வீடு இருந்துச்சு, என்ன உணவு சாப்டாங்க, உடை என்ன போட்டாங்கன்னு நிறைய கேட்டுட்டு வாங்க. அதெல்லாம் கேட்க நானும் ஆர்வமா இருக்கேன். அறிவியல் சோதனைகள், ஓரிகாமி புத்தகம் வாசிச்சுட்டு எழுதுங்க. பேசி வீடியோவாகூட அனுப்புங்க. இப்படி நிறைய செய்யலாம். உங்களுக்குப் பயணம் போக பிடிக்கும்னா பயணம் போங்க. அதைப் பத்தி பகிருங்க. உங்களுக்குப் பிடிச்ச திறன்களை வளர்க்க நீங்க இந்த விடுமுறையைப் பயன்படுத்திக்கலாம். கூடவே நீச்சல் கத்துக்கோங்க. கட்டாயம் பெரியவங்க உதவியோடதான் கத்துக்கணும். தனியா எந்தக் காரணத்துக்குக்காகவும் போகக் கூடாது. இந்த விடுமுறைல மகிழ்ச்சியா, பாதுகாப்பா இருந்துட்டு வாங்க. அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று கிருத்திகா ஆசிரியர் உரையாற்ற ஒவ்வொரு குழந்தையின் மனமும் தன்னுடைய விடுமுறையை எப்படிக் கழிப்பது எனத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது.

காலைக் கூட்டம் முடிந்து வகுப்புக்குச் சென்றனர்.

*

“அம்மா, நான் என் பிரெண்ட் வீட்டுக்குப் போய்ட்டு வரேன்மா.”

“அசோக், நீ சைக்கிளைக் கத்துக்கிட்டயோ இல்லையோ உன்னைக் கைல பிடிக்க முடில. வீடே தங்கறதில்ல.”

“போம்மா. எவ்ளோ ஜாலி தெரியுமா சைக்கிள் ஓட்டறது”

என்று சொல்லிட்டு, கிளம்பிவிட்டான் அசோக்.

“ப்பா, எவ்ளோ சுலபமா எங்கனாலும் போயிட முடியுது இந்த சைக்கிளைக் கத்துக்கிட்ட பிறகு. இந்தாம்மா, நீ வாங்கிட்டு வரச் சொன்னதை வாங்கிட்டு வந்துருக்கேன்” என்று அம்மாவிடம் பொருள்களைக் கொடுத்தான் அசோக்.

“ஏம்மா வாணி, வீட்லயே இருக்கியே… எங்கயாவது போயி விளையாடக் கூடாதா?”

“நல்லா கேளும்மா. இவங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சைக்கிள்ல சவாரி செய்யறாங்க. இவளுக்குத்தான் சைக்கிளே ஓட்டத் தெரியாதே அதான் வீட்லயே இருக்கா! பயந்தாங்கொள்ளி. இவளோட நாலு வயசு சின்னப் பையன் நானே எவ்ளோ சுலபமா ரெண்டு கைய விட்டுக்கிட்டு ஓட்டுறேன். இவ என்னடான்னா சைக்கிளையே தொடமாட்டிங்கிறா” என்று தன் அக்கா வாணியைக் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

“சைக்கிள நெனச்சாவே எனக்குப் பயமா இருக்கும்மா. இவன் வேற இப்படி என்னைக் கிண்டல் பண்றான். கீழ விழுந்து கை உனக்கு ஒடஞ்சிருந்தா தெரியும். பெருசா பேச வந்துட்டான்.”

“நீ மணல்ல விட்டா கிறுக்கீடும்னு தெரியாம சைக்கிளை விட்டதால விழுந்து கை உடஞ்சிடுச்சு. இப்போதான் சரியாகி பல மாசம் ஆச்சே. எங்க எப்படி ஓட்டணும்னு தெரிஞ்சிக்கிட்டா ஏன் கீழ விழப்போற?”

“நல்லா சொல்லுமா இவளுக்கு. இன்னிக்கி எங்க மிஸ்கூட இந்த லீவுக்குள்ள சைக்கிள் கத்துக்கணும். அதும் பொண்ணுங்க கத்துக்கிட்டுதான் வரணும்னு சொன்னாங்க. அம்மா நீகூடச் சின்ன வயசுல சைக்கிள்லதான பள்ளிக்கூடம் போன… இப்போவே பொண்ணுங்க அதிகம் படிக்கல. ஆனா, நீ அப்பவே படிச்சிருக்க. எப்படிப் போன?“ என அசோக் ஆவலாகக் கேட்டான்.

“அப்ப இருந்த வீடோ கூரை வீடு, வீட்டுப் பக்கத்துல ஒரு சின்ன ஸ்கூல் இருந்துச்சு. அதுல சும்மா விளையாடிக்கிட்டு இருப்பேன். ஒரு நாள் நானும் படிக்கணும்னு அங்க இருந்த வாத்தியார்கிட்ட கேட்டு, பள்ளிக்கூடத்துல சேட்த்துவிட்டாங்க.”

“என்னாது நீயே சேர்ந்துட்டீயா! தாத்தா, பாட்டில்லாம் எங்க போனாங்க அவங்க வந்து சேர்க்கலையா?”

“அவங்க காலைலயே வேலைக்கிப் போய்டுவாங்க. பள்ளிக்கூடம் சேர்ந்து படிக்கறப் பத்தி எல்லாம் அந்தக் காலத்துல பெருசா யாருக்கும் அறிவு கிடையாது. அதனால நானே விருப்பப்பட்டுச் சேர்ந்து படிக்கத் தொடங்கிட்டேனா பாரேன்.”

“செம்ம. என் செல்ல அம்மா படிச்சதாலதான் நாங்க நல்லா இருக்கோம்” என அசோக் அம்மாவைக் கட்டியணைத்து முத்தமிட்டான்.

“அப்புறம் எப்போ சைக்கிள்ல போனமா?”

“நானா சேர்ந்த பள்ளிக்கூடத்துல அஞ்சாவது வரைக்கும்தான் இருந்துச்சு. அது வீட்டுக்கிட்டேயே இருந்ததால சுலபமா அங்க படிச்சிட்டேன். ஆறாவது படிக்கணும்னா 10 கி.மீ. தொலைவுலதான் பள்ளிக்கூடம் இருந்தது. அஞ்சாவது முடிச்சிட்டு ஆறாவது சேர்ந்தேன். நானும் என் தோழியும் பள்ளிக்கூடத்துக்கு நடந்தே போவோம். காலைல எழுந்ததும் ஆயா, தாத்தா காட்டு வேலைக்குப் போய்டுவாங்க. நான் கம்போ சோளத்தையோ உரல்லப் போட்டுக் குத்தணும். குத்தி எடுக்கறதுக்குள்ளயே போதும்போதும்னு ஆயிடும். அப்புறம் சட்டிய விறகடுப்புல வைச்சு சோள சோறோ, கம்பஞ்சோறோ ஆக்கிட்டு, அதக் கொஞ்சம் பித்தளை தூக்குல எடுத்துக்கிட்டுப் போவோம்.”

“அப்போல்லாம் டிபன் பாக்ஸ் கிடையாதாமா? அரிசி சோறெல்லாம் செய்ய மாட்டீங்களா?”

அப்போது அப்பா சற்குணம் வந்தார்.

“என்ன அம்மாவோட புராணம் ஓடுது… என்ன விஷயம்? அப்போ எங்க டிபன் பாக்ஸெல்லாம்? பித்தளை தூக்குலதான் சோறு கொண்டுபோவோம் நாங்க.”

“பாட்டியால காலைல நெல்லுச்சோறு ஆக்கிக் கொடுக்க முடியாது. ஏன்னா அப்போல்லாம் நெல்லைக் குத்திதான் ஆக்கணும். அதனால பாட்டி என்ன பண்ணும்னா நைட் ஆக்குன சோத்தை காலைல வடைச்சட்டில போட்டு வறுத்துக் குடுக்கும். அதை எடுத்துக்கிட்டு 20 கி.மீ. இருக்கும் இங்கருந்து எங்க காலேஜுக்கு சைக்கிள்லயே போய்ட்டு வருவேன்.”

“20 கி.மீ.? என்னப்பா சொல்ற நாக்கு தள்ளிடுமே சைக்கிள் ஓட்டி. அவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சிருக்கீங்க. சைக்கிள் எவ்ளோ உதவி பண்ணிருக்கல்ல.”

“நான் படிச்ச காலேஜ் ராசிபுரத்துல இருந்துச்சு. அவ்ளோ தூரம் சைக்கிள் ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்தாலும் உடனே சோறு போடமாட்டாங்க. வீட்டு வேலைல்லாம் செஞ்சிட்டுதான் சாப்பிடணும்னு தாத்தா கண்டிப்பா சொல்லிடுவாரு. நானும் அதெல்லாம் செஞ்சிட்டுதான் சாப்பிடுவேன். அவ்ளோ வறுமை வீட்ல.”

“எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சிருக்கீங்க” என்றாள் வாணி.

“நானும் என் பிரெண்டும் மொதல்ல நடந்தே போனோம் ஸ்கூலுக்கு. அப்புறம் லீவ்ல வேலைக்குப் போயி கூலியெல்லாம் சேர்த்து வைச்சு ராமசாமி தாத்தாகிட்ட கொடுத்து சைக்கிள் வாங்கித் தரச் சொன்னேன். அவரும் வாங்கிக் கொடுத்தாரு. அதுக்கப்புறம் என் பிரெண்டும் நானும் ஒரே சைக்கிள்ல பள்ளிக்கூடம் போயி படிச்சோம்னா பாரேன்! சைக்கிள் இருந்ததால இந்த நிலைக்கு உயர்ந்தோம்.”

“அப்பா, இதெல்லாம் இவ்ளோ நாள் தெரியாம போச்சே! அம்மா, நீயே சைக்கிள்ல அவ்ளோ தூரம் போயிருக்க. நாளைக்கே சைக்கிள் கத்துக்கப் போறேன். அப்புறம் எப்படிப் பறக்கறேன் பாருடா அசோக்” என்று சவால் விட்டாள் வாணி தம்பியிடம்.

“பார்ப்போம்… பார்ப்போம்…”

“ரொம்ப சந்தோஷம் செல்லம். சைக்கிள் கத்துக்கறதுங்கிறது ரொம்ப முக்கியமானது விஷயம்” என்றார் அப்பா.

(தொடரும்)

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார். ஹெர் ஸ்டோரீஸில் இவர் எழுதிய குழந்தைகள் பற்றிய தொடர், ‘நாங்கள் வாயாடிகள்’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.