- ஒரு முத்தம் நிகழ்ந்தது
அந்தி வெயில்
கொஞ்சம் குளிர் உன்
குரலின் அணைப்பில்
வானத்திலேறிய அது
நிலா ஆனது
ஃ
2.
மலர்தலின் ரகசியம்
மலர்ந்தேதான் கிடக்கிறது
ஒரு நினைவின் வரி
என்னை எழுதிச் செல்ல
வல்லூறுகளின் வலிவு உண்டாவென
வண்ணத்துப் பூச்சி இறக்கைகளைச் சோதிக்கிறீர்கள்
என்வரையில் –
இரண்டும் பறப்பன
வல்லூறின் கனவில்
வண்ணத்துப் பூச்சி யாவதே
எளிய விருப்பம்
ஃ
3.
♥
வெளிச்சத்திற்கு நிழல் போல
இருளுக்குள் ஒளி
- மூடிய இமைகள் விழி திறக்க –
♥
நான் அங்கு இல்லை
நான் அங்கு வேண்டும்
உனதறையின் பூ ஜாடியாக
♥
கடலில் கிடைத்த வலம்புரிச் சங்கு
அறிந்த உன்னுடலாக
உடலை அறிவது
மனதை அடைவதாக
(நினைத்துக் கொள்கிறேன்)
-மனத்தினளவு
உடலின் கடல்-
♥
முடிவின்மையின் முடிவைக் கேட்டால்
முத்தம் என்கிறாய்♥
ஃ
4.
நீ –
பறப்பதை விடுதலை என்கிறாய்
அமர ஒரு இடமில்லாமல்
பறந்து பறந்து பறந்து…..
ஃ
படைப்பு:
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.