உடம்பு எப்படி இருக்கு?

உடம்பு எப்படி இருக்கு என எகத்தாளமாய் ஒரு கேள்வி கேட்கப்படுவதுண்டு. ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தனக்குத் தானே அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது.

பெண்களைத் தாக்கும் புற்று நோய், இதய நோய் போன்ற பெரிய வியாதிகளைப் பற்றி இங்கு பேசப்போவதில்லை. அவை குறித்து பெரும்பாலும் எல்லா மருத்துவர்களும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். மிகப்பெரிய பாதிப்பில்லாமல், ஆனால் எப்போதும் உபத்திரவம் கொடுக்கும் உடல் உபாதைகள் பல பெண்களுக்கு உண்டு. சரியாக 20 வயதிலிருந்து 35 வயதிற்குள் நாம் கவனமாக இருந்து கொண்டால் நாற்பது வயதில் வரும் பல பிரச்னைகளைத் தடுக்கலாம். அவை என்னென்ன? பேசுவோம்.

மற்ற மேலை நாடுகளை ஒப்பிடும் பொழுது இந்தியப் பெண்களின் உடல் நலம் சற்று ஆரோக்கிய குறைபாட்டுடன்தான் இருக்கிறது. எங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிக்கும் வயதான பெண்களைப் பார்த்தால் எனக்கு சற்று பொறாமையே வரும். 80 வயதிலும் தனித்து வாழ்கிறார்கள். தீ போல் சுடும் மதிய வெயிலில் வியர்வை ஆறென ஊற்றெடுக்க ஜாகிங் போகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களைப் போல் கூட்டம் கூட்டமாக சாலை, பூங்கா என மதிய நேரங்களிலும் நடை போகிறார்கள். மாலையில் பாடல்களைப் போட்டு உற்சாகமாய் சில சமயம் நடனமாடுகிறார்கள்.

இந்தியாவில் பெண்களுக்கு 40 வயதிலேயே ஒவ்வொரு நோயாய் ஆரம்பித்திருக்கும். இங்கு பெண்களின் உடல் உழைப்பைச் சுரண்டித்தானே குடும்ப அமைப்பு பிழைக்க வேண்டியிருக்கிறது? அதோடு, உடல் நலம் பற்றிய புரிதலும் இந்தியப் பெண்களுக்கு இல்லை. முடியும் வரை ஓயாமல் வேலை செய்வது, முடியாமல் போகும் போதும் புலம்பிக் கொண்டே வேலை செய்வது- அவ்வளவுதான் நமக்குத் தெரிந்திருப்பது.

EdTimes

உடல் நிலை ஒத்துழைக்காத போது வேலைகளைக் குறைத்துச் செய்வதால் எந்த பிரயோசனமுமில்லை. உடல் நலம் நன்றாக இருக்கும் போதே, அளவோடுதான் வேலை செய்யப்பழக வேண்டும். தெம்பு இருக்கிறது என இழுத்துப் போட்டு வேலை செய்வதுதான் பெரிய தவறு. வீட்டில் மற்றவர்களையும் பழக்கப்படுத்தாமல் வைத்திருப்பது இன்னும் பெரிய தவறு.

ஆண்-பெண் சம உரிமையற்று பெண்களை மோசமாக நடத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்களின் சுகாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றில் இந்தியா மிகவும் பின் தங்கியிருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. எங்கு எதைப் பற்றிப் பேசினாலும், இந்த சம நிலையற்றதன்மையும் நம் கூடவே வருகிறது. இதை நம் வீட்டு அடுப்படியில்கூட பார்க்க நேரிடும். எல்லாருக்கும் இடுப்பொடிய சமைக்கும் பெண்கள், வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டது போக மிச்சம் மீதியைத்தான் சாப்பிட முடியும். சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டாலும், அடுத்தவர்களுக்குப் போதுமா என்ற ஐயத்தில் அளவு குறைவாகச் சாப்பிடுகிறார்கள். வீட்டில் விசேஷம் என வைத்தாலும், முதலில் ஆண்களுக்குத்தான் உணவு. இறுதியில் பெண்கள் எல்லாம் சேர்ந்து, இருப்பதைப் பகிர்ந்து சாப்பிடுவது தான் நடக்கும். ஒரு நாள் இரு நாள் என்றால் பரவாயில்லை. வருடக்கணக்கில் இது தொடர்ந்தால் அசிடிட்டி, அல்சர், என நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.

அதிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் பெண்களின் ஆரோக்கியம் மிக மோசமான நிலையில் இருக்கின்றது. நடுத்தர வயதிலேயே மோசமாக நோய்வாய்ப்பட்டுவிடுகின்றனர்.

“உனக்கு என்னைக்குத் தான் உடம்பு நல்லா இருக்கு?” என எந்த வீட்டிலும் கேட்காத குரல் இருக்காது. அதென்ன பெண்களுக்கு மட்டும் நோய் நொடி கூடவே வருகிறது? ஏன் ஆண்களுக்கு இது போல் உபாதைகள் சொல்லிக் கேள்விப்படுவதில்லை, என்றால் இயற்கையாகவே பெண்களின் உடல் மட்டுமல்ல உள்ளுறுப்புகளும் மென்மையானவை. அதனால் ஆண்களை விட பெண்கள் தான் உடல் ஆரோக்கியத்தில் இன்னும் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். பருவம் தப்பி விளைவிக்கும் பயிர்கள் செழிக்குமா? அது போலத்தான் உடலும். கோட்டை விடாமல், அந்தந்த வயதில் உடலை சரியான வழியில் பாதுகாக்க வேண்டும்.

தசை நார் பாதிப்புகள் :

MRI Plus

எலும்புகளை இணைத்து, வெளிப்புற உராய்விலிருந்து எலும்புகளைக் காப்பவைதான் தசை நார்கள்தான் (ligament). முக்கியமாய் மூட்டு இணைப்புகளில் அதன் செயல் முக்கியமாய் இருக்கிறது. பொதுவாக அந்தத் தசை நார்கள் ஆண்களைப் பொல பெண்களுக்கு வலுவாக இருக்காது. சிறு வயதிலோ 30களிலோக்கூட இந்த தசை நார், பிரச்னை ஏற்படுத்தாது. ஆனால் 40 வயதை எட்டிய பெருமளவு பெண்கள் இந்த தசை நார் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இடுப்பெலும்பு, முழங்கை, மணிக்கட்டு, மூட்டு, குதிகால் ஆகிய இடங்களில் மெல்ல மெல்ல சுளுக்கு பிடித்தாற்போல் வலி உண்டாகும். தொடரும் அதிகப்படியான அழுத்தத்தால் அங்கிருக்கும் தசை நார்கள் வலுவிழந்து கிழிந்துவிடும்.

கிழிந்த தசை நார் மீண்டும் சேர்வதற்கு நமது செல்கள் முயற்சி எடுக்கும் (repair mechanism). அப்போது வலி உருவாகும். சிலருக்குக் கிழிந்த இடத்தில் உள்ள எலும்புகளின் மேல் திசுக்கள் உருவாகி எலும்பு போல் உண்டாகி விடும். அதற்கு அறுவை சிகிச்சையும் நடப்பதுண்டு. திடீரென கை , முழங்கால், மூட்டு, இடுப்பு அல்லது குதிகால் வலி தோன்றும். அளவுக்கதிகமாக பாரத்தை கைகளால் தூக்கிப் பழகியவர்களுக்கு, முழங்கைமூட்டு மணிக்கட்டுகளில் இந்த பிரச்சனை ஏற்படும். அதிகப்படியான உடல் எடையால் மூட்டைச் சுற்றிலும் பாதிப்பு ஏற்படும்.

உலகளவிலேயே குதிகால் வலியால் பெருமளவு பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக 40 வயது கடந்த பெண்கள், காலையில் எழுந்தவுடன் தரையில் கால் பதிக்கமுடியாமல் குதிகால் வலியால் அவதிப்படுவார்கள். இந்தப் பிரச்னை வந்துவிட்டால், எளிதில் குணமாகாது. வாழ்நாள் முழுக்க இந்த வலியுடன் போராட வேண்டியதாக இருக்கும். குதிகால் வலிக்கு அறுவை சிகிச்சை இருந்தாலும், பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. இதற்கு ஒரே தீர்வாக மருத்துவர்கள் சொல்வது ஓய்வு தான். நாம் எவ்வளவு ஓய்வு நம் கால்களுக்குத் தருகிறோமோ, அவ்வளவு நன்மை உண்டாகும். இந்த குதிகால் வலிக்கென ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளே சென்னையில் இருக்கிறது. எத்தனை பேர் இந்த பிரச்னையால் அவதிப்படுகிறார்கள் என்று அந்த மருத்துவமனைகளுக்கு வந்துபோகும் பெண்களைப் பார்த்தாலே தெரியும்.

வயதும் பலமும் இருக்கிறதென தொடர்ந்து அங்கே இங்கேயென நடந்து சென்று கொண்டேயிருப்பது, மாங்கு மாங்கென வீட்டு வேலைகளை ஓயாமல் செய்வது, பளு தூக்குவது, அலுவலக வேலை, வீட்டு வேலை என கை, கால்களுக்கு ஓயாமல் வேலை தருவது எனக் கடிகார முள் போல் ஓடிக் கொண்டிருக்கும் பெண்கள்தான் இந்த தசை நார் பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமனும் இதற்கு முக்கிய காரணம் .

அதனால் பெண்களே, வயதும், பலமும் இருந்தாலும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக வேலைகளைச் செய்து கொள்ளப் பழகுங்கள். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் செய்ய வேண்டுமே, அதைச் செய்ய வேண்டுமே என யோசிக்காமல், ஓய்வெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.. தசைநார்களைப் பலப்படுத்தும் புரதம் மற்றும் நார்ச்சத்து உணவுகளும் அதிகம் எடுத்துக் கொள்வது முக்கியம்.

ரத்த அழுத்தம் :

Newsecuritybeat

பெண்களுக்கு பொதுவாகவே ரத்த அழுத்தம் ஆண்களை விடக் குறைவாகவே இருக்கும். அது வழக்கம்தான். ஆனால் 90/60 க்கும் குறைவாகப் போனால் கவனிக்க வேண்டும். ஏனென்றால் குறைந்த ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தத்தை விட ஆபத்தானது. மிகச் சிறிய வயதிலேயே கூட இது பெண்களுக்கு ஏற்படுகிறது. நான் கல்லூரியில் வகுப்பு எடுக்கும்போது, ஒரு பெண் பொத் பொத்தென அடிக்கடி விழுந்து கொண்டேயிருப்பாள். உடனே உப்பை நீரில் கரைத்து அவள் நாக்கில் வைப்பது வாடிக்கையாக இருந்தது.

என் தோழி ஒருத்தி இதன் காரணமாகக் கோமா வரை சென்று, ஆபத்தான நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டாள். ஆகவே குறைவான ரத்த அழுத்தம் ஒன்றும் செய்யாது என அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். ஆபத்தான நிலைவரை கொண்டு சென்றுவிடும். சரியாகச் சாப்பிடாமல், போதிய நீர் குடிக்காமல் இருக்கும் பெண்கள் பலருக்கும் இந்த பாதிப்பு இருக்கும். அதற்கான தீர்வை எடுப்பது முக்கியம். முக்கியமாய் மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும்.

சுரப்பி (ஹார்மோன்) மாற்றங்கள் :

Gyanvigyan

இன்று இளம் மற்றும் சிறுவயதுப் பெண்களுக்கே ஹார்மோன் சமநிலையற்று காணப்படுவது கொஞ்சம் கவலையாக இருக்கிறது. உளவியலாகப் பல பிரச்னைகள் இந்தக்காலப் பெண்களுக்கு உண்டாகிறது. தேவையற்ற குழப்பங்கள், கவலைகள் நமது ஸ்ட்ரெஸ் காரணமாக ஹார்மோன் சுரப்பதில் மாற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவினால் ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜெஸ்டிரான் ஹார்மோன் சுரப்பதிலும் மாற்றங்கள் உண்டாகின்றன. இவையே கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்னைகளுக்குக் காரணமாகின்றன.

உடல் உழைப்பு போதிய அளவு இல்லாமல் இருந்தாலோ, மன அழுத்தத்தால் சீரான வாழ்க்கைமுறையைக் கடைபிடிக்காமல் இருப்பதாலோ, அதன் பாதிப்பு உங்கள் கர்ப்பப்பையில் எதிரொலிக்கும். கருப்பைக் கட்டி, நீர்க்கட்டி ஆகியவை இன்று பலரிடம் காணப்படுகின்றன. இந்த காலத்தில் கட்டி கட்டியாய் மாதவிடாய் போக்கு இருப்பதும், அடிவயிற்று வலியும் அதன் அறிகுறிகளாக இருந்தாலும், அறிகுறிகள் இல்லாமலும் இந்த சிக்கல்கள் வருமென மருத்துவத்துறை சொல்கிறது. கண்டுகொள்ளாமல் விடுவதால்தான் பிற்காலத்தில் கர்ப்பப் பையை அகற்றும் நிலை உருவாகிவிடுகிறது.

கர்ப்பப்பை, திசுக்கள் அதிகம் இருக்கும் பகுதி. அதனால் அங்கு அடிக்கடி சிறு சிறு ரத்தக்கட்டிகள் உருவாக ஏதுவாக உள்ளது. இந்த ஃபைப்ராய்டு பற்றி மருத்துவரிடம் கேட்டால் ” முதல்ல மகிழ்ச்சியா இருங்க. எல்லா கவலைகளையும் மண்டைல ஏத்திக்காதீங்க”, என்றுதான் எடுத்தவுடன் சொல்கிறார்கள்.

ஆமாம்; மன அழுத்தம்தான் பெண்களின் எல்லா உடல் பிரச்னைகளுக்கும் காரணம். மகிழ்ச்சியாக இருங்கள் என்று எளிதில் சொல்லிவிட்டாலும், அவரவர் சிரமம் அவரவருக்கு எனத் தோன்றும். ஆனால் அந்த கவலைகளால் நம் உடல் பாதிக்கப்படும் என்று தெரிந்தால், அதையேன் நாம் தூக்கிச் சுமக்க வேண்டும்? உங்கள் மனமகிழ்ச்சிக்குச் சிறு காரணம் இருந்தாலும், அதைத் தேடிப்பிடியுங்கள்.

எலும்பு பிரச்சனைகள்:

everydaymedical

வயது ஆக ஆக எலும்புத் தொடர்பான நோய்கள் பெரும்பாலான பெண்களுக்குப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதிலும் வாய்வுத் தொல்லை இருப்பவர்களுக்கு வாதப்பிரச்னையும் சேர்ந்து உபத்திரவம் தரும். எலும்பு தேய்மானம், வாதம், மூட்டு அழற்சி (oasteoarthritis) எனக் கிணறு வெட்ட பூதமாய் எலும்பு நோய்கள் கிளம்புகின்றன. முக்கியமாய் மூட்டு அழற்சி என சொல்லப்படும் நோயில், மூட்டுகளில் வீக்கம் கண்டு காலை எழுந்தவுடன் விரல்கள் எல்லாம் விரைத்து மடக்க முடியாதபடி வலி உண்டாகும். உணவுகளையும் பார்த்துப் பார்த்து சாப்பிட வேண்டும். உடல் எடை சடாரென குறைபவர்களுக்கும் இந்த சிக்கல் உண்டாகிறது.

இந்த பாதிப்புகளைத் தடுக்க இளம் வயதில் கால்சியம் நிறைந்த உணவுகள் பெண்பிள்ளைகளுக்கு மிக மிக அவசியம். ஆனால் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பதிலேயே குறியாய் இருப்பதால், பெண்கள் தங்களுக்கு அல்லது வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு வேண்டிய சரியான விகிதத்தில் உணவு தர மறந்து போய்விடுகிறோம். 40க்கு பின் வரும் எலும்பு பாதிப்புகள் அதன் விளைவே! 30 வயதிற்குப் பின் தொடர்ந்து வரும் கால் குடைச்சலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கால்சியம் அளவை சரி பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

மனவியாதி!

இவை எல்லாவற்றையும் விட பெரிய வியாதி என்னவென்றால், மன வியாதிதான். ஊரில் எவருக்கு நோய் என்றாலும் நமக்கும் இருக்குமோ என்ற பயம் வந்து உடனே மருத்துவரையும் போய்ப்பார்த்து, அவரையும் பீதியடைய வைத்துவிடுவோம். ” ஊர் உலகில் இருக்கும் எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு. டாக்டரும் ஒண்ணுமில்லைனு தான் சொல்றாங்க. ஆனாலும் எனக்கு இது அதுவோ”, என்று புலம்பும் பெண்கள் என் பட்டியலில் ஏகப்பட்ட பேர் உண்டு.

நானுமே பத்துவருடங்கள் முன்பு அப்படித்தானிருந்தேன். சின்னதாக ஒரு வலி வந்தாலும் மனம் ஆயிரத்தெட்டு யோசித்து உடனே மருத்துவரைப் பார்க்கச் செல்வேன்; என்னமோ தேர்வு முடிவு போல் பயந்து கொண்டிருப்பேன். அந்தப் பெண் மருத்துவரும் சிரித்தபடியே, ” உனக்கு ஒண்ணுமில்லைமா”, என ஒவ்வொருமுறையும் சொல்வார். பின்னர்தான் நம் உடலில் என்ன அலாரம் அடிக்கிறதோ, அதைப்பற்றிக் கவலைப்பட்டால் போதும் எனத் தெளிவானேன். எல்லாவற்றிற்கும் பயந்து கொண்டிருந்தால் எப்படிப் பிழைப்பது? அதே சமயம் நம் உடலில் என்ன மாற்றம் வருகிறது என்று கவனிப்பதும் முக்கியம்.

சீரான ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், நம்முடைய உடல் தண்டவாளத்தில் செல்லும் ரயில் போல் அமைதியாகப் போகும். ஒரு நாள் நன்றாகச் சாப்பிடுவது, அடுத்த நாள் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, ஒரு நாள் ஞானம் வந்து உடற்பயிற்சி செய்வது, பிறகு விட்டுவிடுவது, இரவெல்லாம் முழித்துவிட்டு பகலில் தூங்குவது, என உடலின் முறைமையையும் மனம் போன போக்கில் மாற்றினால், உடலும் எங்கு எப்படி வினையாற்றுவது எனக் குழப்பத்திலேயே எல்லாவற்றையும் விளைவிக்கும். அதன் விளைவுகள்தான் நமக்கு வரும் உபாதைகள். வேலையாகட்டும், மனமாகட்டும், நமது வாழ்க்கை முறையாகட்டும், எல்லாவற்றையும் சீராக வைக்க முயல்வோம்.

தொடரும்…

தொடரின் முந்தைய கட்டுரை:

படைப்பு:

ஹேமி கிருஷ்

பெருந்துறையைச் சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய  'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில், இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவரவிருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்; நான்கு ஆண்டுகள்  டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.