ஆண், பெண், பால்புதுமையினர் யாராயினும் முதலில் ஒருவருடன் பழகும்போது அவர்களிடம் எவ்வளவு பணமிருக்கிறது என்று தெரியாது. ஓரளவு வருமானமுள்ள ஒருவர் பணிவாக உடை அணிந்திருக்கலாம். குறைவான வருமானம் பெறும் ஒருவர் விலையுயர்ந்த ஆடைகள், கைபேசி, கார், வாகனம் போன்றவற்றுக்கும், இதரவற்றுக்கும் செலவிடலாம். இவற்றை வைத்து மதிப்பிட்டுத் தொடங்கும் அபிமானம் காதலோ உறவோ எங்கே சென்று முடியும் என்பதற்குப் புதிய உதாரணங்கள் சொல்லவேண்டியதில்லை.
ஒருவர் மீதான நேசம் என்பது பணத்தையோ அவர்களின் வருமானத்தையோ மையமாகக்கொண்டிருப்பதில்லை. ஆனால், இந்த நிலை அப்படியே நீடிப்பதற்கு உறவிலும் வாழ்விலும் நிகழும் மாற்றங்கள் அனுமதிப்பதில்லை என்பதே உண்மை.
இரு தனிநபர்கள் இணைந்து வாழத் தொடங்கும்போது வாழ்க்கையை மேம்படுத்துவது பற்றிய கனவுகளும் கூடவே ஒட்டிக்கொள்ளும். அந்தக் கனவுகள் எதை ஒட்டியதாகவும் இருக்கலாம். ஒரு புதிய நாட்டுக்குச் சுற்றுலா செல்வதாக இருக்கலாம். புதிதாக இணைந்து ஒரு தொழில் தொடங்குவதாக இருக்கலாம். ஓர் ஊடகம், இணையம், சினிமா, நாடகம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக இருக்கலாம். நல்லதாக வீடு, உயர்படிப்பு, அறச் செயற்பாடுகள் என்று எந்தவகைக் கனவாகவும் இருக்கலாம். இந்தக் கனவுகளில் ஒன்றையோ அனைத்தையுமோ அன்றாட வாழ்வின் போராட்டங்கள் சூரைக்காற்றாக அவ்வப்போது அடித்துக்கொண்டு செல்வதும் நடக்கலாம். உணவு, உடை, உறைவிடம் போன்ற நாளாந்தத் தேவைகளுக்கு மட்டுமே பிரதான கவனத்தைச் செலுத்தி வாழும் துன்பகரமான நிலையில் நீண்ட காலம் வாழ்வைப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டியும் வரலாம்.
இந்தச் சூழ்நிலைகளில்தாம் பணப்பிரச்னைகள் உறவில் பெரும் நாடகத்தன்மையை உருவாக்கும். இதுவே உறவை முறித்துக்கொண்டு வெவ்வேறு திக்குகளில் தெறித்தோடவும் செய்துவிடும்.
திருமணத்திற்கு முன்பு அல்லது இணைந்து வாழ்வதற்கு முன்பாகச் சிலர் தங்கள் இணையர்களிடம் வருமானத்தை ஒருபடி கூட்டி, பொய் சொல்லியிருப்பார்கள். அதிக வருமானம் பெறுவதாகக் காண்பிப்பது ஒருவிதப் பாதுகாப்புணர்வை, கௌரவத்தைக் கூட்டுவதாக அவர்கள் நம்பியதால் அப்படி நிகழ்ந்திருக்கிலாம். ஆனால், நீண்டகால அல்லது நிலையான உறவு என்று வந்துவிட்டபிறகு அந்தப் பொய்யை நியாயப்படுத்துவது கடினமானது. ஒருவரை ஈர்ப்பதற்கான காரணியாக வருமானத் தொகையைப் பயன்படுத்துவது, ஒருவரின் வருமானத்தை மட்டுமே நம்பிக்கையின் மூலதனமாகக் கொண்டு ஓர் உறவை வளர்ப்பது இரண்டுமே மிகவும் மோசடியானது. இந்த மோசடியை இணையர் கண்டுபிடிப்பது உறவில் விரைவில் சாத்தியமாகும். நிறைய பணம் இருப்பதாக அல்லது அதிக வருமானம் பெறுவதாக நம்பச் செய்தால் தன்னை ஈர்த்துவிடலாம் என்று நம்பிய இணையரை வெறுப்பதற்கு வேறு காரணங்களே தேவைப்படாது. இப்படியான சூழலில் அந்த உறவின் நிலை கடலில் உருவான ஒரு சுழி.
இணையர்கள் தங்களுக்குள் எந்தக் காரணம் கொண்டும் தங்கள் வருமானத்தைக் கூட்டியோ குறைத்தோ சொல்லக் கூடாது. உறவின் நம்பகத்தன்மையை அடித்துச் சிதைக்கும் காரணிகளில் இதுபோன்ற பொய்கள் ஆணிவேராக இருக்கும் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருப்பது நல்லது. பொய் கட்டுடையும்போது இணையர்களுக்கிடையே பெரும் பிளவு ஏற்படுவது தவிர்க்க முடியாது.
ஒவ்வோர் இணையரினதும் நிதி இலக்குகளும் பார்வையும் நிச்சயமாக மாறுபடும். இருப்பினும், இணையர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதற்குக் கடமைப்பட்டவர்கள். நிதி நிலைமை அல்லது கடன் குவிப்பு என்று சங்கடமாக இருந்தாலும், துணையுடன் நேர்மையாக இருப்பது நிச்சயமாகச் சிறந்த கொள்கை என்பதில் சந்தேகமில்லை.
இணையருடன் நிதி பற்றிப் பேசுவதற்குப் பதட்டம்கொள்வதற்குச் சில காரணங்களே இருக்க முடியும். கடன், செலவு அல்லது வருமான அளவுகளில் உள்ள வேறுபாடுகள் ‘அறையில் யானை’ வடிவில் இருக்கலாம். உறவுக்குப் பணம் பற்றிய பேச்சுகள் தடையில்லை என்று எண்ணிக்கொண்டாலும்கூட, பணத்தைப் பற்றி இணையருடன் பேசுவதைக் கடினமாகவும் சங்கடமாகவுமே இணையர்கள் எதிர்கொள்கின்றனர் என்றும் இதன் காரணமாக நிதி வெளிப்படைத்தன்மையில் தோல்வியடைந்ததை 45% பேர் ஒத்துக்கொண்டிருப்பதை Qualtrics கணக்கெடுப்பு உறுதிசெய்கிறது. 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்றில் பங்கேற்பாளர்களில் 40% பேர் விவாகரத்துக்கான காரணமாகப் பண வெளிப்படைத்தன்மை குறைவைக் கூறியுள்ளனர். இந்தக் கணக்கெடுப்பு பல நாடுகளைச் சேர்ந்தவர்களிடையே நடத்தப்பட்டது. நம் நாடுகளில் இதுபோன்ற கணக்கெடுப்புகளை நடத்தினால் வெளிப்படைத்தன்மை இல்லாமை காரணமாகப் பிரிந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். முக்கியமாக சமகாலத்தில். இப்போதெல்லாம் பெரும்பாலான இணையர்கள் இருவரும் தொழில் பார்க்கிறவர்களாகவே உள்ளனர். ஒரு பெண் படித்தால் இப்படித்தான், பெண் உழைத்தால் இப்படித்தான் என்று குடும்பத்தில் உண்டாகும் பிளவுகளுக்கு அவள் படிப்பையும் உழைக்கின்றவள் என்பதையுமே குற்றமாகச் சொல்வதற்குப் பழக்கப்பட்ட சமூகம் நமது! ஒரு பெண் துணிந்து கேள்வி கேட்டால்கூட, இதற்குத்தான் பொம்பிளைப் பிள்ளைகளைப் படிக்கவிடக் கூடாது என்று சொல்கின்ற குரல்கள் ஓயாத காலத்தில்தான் இன்னமும் இருக்கிறோம். நவீன காலச் சிக்கல்கள் பலவற்றில் உழைக்கும் இணையர்களின் நிதி நிர்வாகம் ஒரு பிரச்சினை என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே இந்த ‘நேர்பட பேசு’வின் ஆழம் புரியும்.
மேலைத்தேய நாடுகளில் திருமணத்தை வெளிப்படைத்தன்மையுடன் தொடங்குவதற்கு இதுபோன்ற அனுபவங்கள் காரணமாக இருக்கின்றன. பண வெளிப்படைத்தன்மை என்பது, வெறுமனே பணம் பற்றியதில்லை. முன்னைய கட்டுரையிலும் குறிப்பிட்டதுபோல இணையர்களை அக்கறையுடனும் புரிந்துணர்வுடனும் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் ஒரு விடயம்.
சமீபத்தில் அமெரிக்க நண்பர் குடும்பத்தில் நடந்த திருமணத்தில் இளம் தம்பதியினர் ப்ரீனப் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதைப் பற்றி அறிந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில், ப்ரீனப் பற்றிப் பலரைப் போலவே, நான் தவறான எண்ணங்களால் வழிநடத்தப்பட்டிருந்தேன். ஊடகங்களில் படித்த அல்லது பார்த்தவற்றின் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம். விவாகரத்துக்குப் பிறகு ‘பணக்கார’ வாழ்க்கைத் துணை பணத்தையும் சொத்துகளையும் இழப்பதிலிருந்து பாதுகாப்பதற்காக ப்ரீனப்கள் இருப்பதாகவே நான் நம்பியிருந்தேன். ஆனால், கண்ணெதிரிலேயே ‘பணக்காரர்’ அல்லாத நடுத்தரவர்க்க, கற்ற முற்போக்கு சமூகத்தவர்கள் ப்ரீனப் உடன்படிக்கையுடன் திருமண உறவில் இணைந்ததை அறிந்தபிறகு தெளிவான தேடல் அவசியம் என்பதைப் புரிந்துகொண்டேன்.
முன்கூட்டிய ஒப்பந்தம், பொதுவாக ப்ரீனப் எனக் குறிப்பிடப்படுகிறது. ப்ரீனப் உடன்படிக்கை என்பது, திருமணத்தின் தொடக்கத்திலிருந்தே இணையர்களிடையே நம்பிக்கையான திறந்த உறவை உருவாக்குகிறது. இருவரும் சமமாகச் சக்திவாய்ந்தவர்கள் என்ற நெருக்கமான தோற்றத்தை அது உருவாக்குகிறது. இந்த உடன்படிக்கை இணையர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே எல்லாவற்றையும் மேசையில் வைத்துவிடக் கோருகிறது. இது சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்கு இணையர்கள் செய்துகொள்ளும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம். திருமணத்தின் போதும் விவாகரத்து ஏற்பட்டாலும் நிதி, சொத்துகளுக்கு என்ன நடக்கும் என்பதை இந்த எழுத்துபூர்வ ஒப்பந்தம் விவரிக்கிறது.
திருமணமான பிறகு இணையர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுகிறார்கள், விட்டுத்தருகிறார்கள் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள இது வாய்ப்பளிக்கிறது. திருமணத்தைக் கட்டுப்படுத்தும் இதுபோன்ற சட்டங்கள் அமெரிக்காவின் சில மாநிலங்களில் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. விவாகரத்து ஏற்பட்டால், இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் சொத்துகள், கடன்களின் பிரிவை நிர்வகிக்கவும், மனைவிக்கு இழப்பீட்டுத் தொகையை அளிக்கவும் சட்டரீதியாக முடியும்.
திருமணத்திற்கு முன்பே பண விடயங்களை, துணையுடன் உரையாடுவது அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், இது மிகவும் முக்கியமானது என்று தாங்கள் நம்புவதாகவும் திருமணத்திற்கு முன்பே இந்தத் தெளிவு ஏற்பட்டுவிட்டதால் மடியில் கனம் குறைந்துவிட்டது, இனி வழியில் பயமில்லை என்று கூறியபடி புதுமணத் தம்பதியர் இருவரும் வாய்விட்டுச் சிரித்ததைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
இன்னும் பேசுவோம்…
படைப்பாளர்:
ஸர்மிளா ஸெய்யித்
விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். தற்சமயம், அமெரிக்கப் பல்கலைக்கழகம் University of Nebraska Omaha வில் மனித உரிமைகளுக்கான ஆராய்ச்சி அறிஞராகப் பணிபுரிகிறார்.