“இது எப்படி நடந்துச்சு?” என்று பரபரப்பாகக் கேள்வி கேட்டுக் கொண்டே பெர்மனன்ட் வே இன்ஸ்பெக்டர்  அழகேசன் உள்ளே வரவும்,

அதுவரை கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குப் பதிலளித்து விட்டு ஸ்டேசன் மாஸ்டரும் சிவாவும் அவரை வரவேற்கவும் சரியாக இருந்தது.

சம்பிரதாய வரவேற்புகளுக்கும் மரியாதைகளுக்கும் அவர் தயாராக இல்லை என்பதை அவரிடமிருந்து வந்த அடுத்தடுத்த கேள்விக் கணைகளும் , விஷயம் தெரிந்ததும்  அவர் மகளின் நிச்சயதார்த்தத்தில் இருந்து உடனே கிளம்பி வந்துவிட்டார் என்பதை அவர் கைகளில் பூசப்பட்டிருந்த சந்தனத்திலும் தெரிந்தது.

“யார் முதல்ல பாத்தது? ஹையர் அபிஷியல்சுக்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா? லோக்கல் போலீஸ்க்குச் சொல்லியாச்சா ? அடுத்து என்ன லைன் ஆஃப் ஆக்‌ஷன்? பேசஞ்சர்சுக்கு என்ன சொல்லப் போறீங்க?” என்று அவர் கேட்கவும்  சுகுமாரன் சற்று கலக்கமான மனநிலையுடன் முன்னால் வந்தார், அவர் குடும்பத்தினரைக்  காத்திருப்போர் அறையில் வைத்துவிட்டு வந்திருந்தார். 

ஸ்டேசன் மாஸ்டர் சிவாவை ஒரு பார்வை  பார்த்தார். அதன் அர்த்தம் புரிந்தவன் அழகேசனிடம் லேசாகத் தலையைக் குனிந்து விடைபெற்றுக் கொண்டான்.

சற்றுத் தொலைவில் நின்றவாறு இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டு யோசனையோடு நின்ற கரைவேட்டி மனிதருக்கு வேகமாகப் பதில் சொல்லிவிட்டு, அந்த இடத்தில் இருந்து அவரை அப்புறப்படுத்திவிட்டு, ரயிலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று அவர்கள் முடிவு செய்தவற்றை நடைமுறைப்படுத்த களத்தில் இறங்கினான்.

அது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்றோ எத்தனை நேரத்துக்கு முழு உண்மையையும் பயணிகளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பதோ அவனுக்குத் தெரியாது.

அவனுக்கு மட்டுமல்ல அந்த ஸ்டேசனில் இருக்கும் யாருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. ஆனாலும் தங்களால் ஆனவற்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிக்னல் கிடைக்கும் இடத்தில் மனைவியிடம் எப்படியாவது விஷயத்தை அவள் வருத்தப்படாத விதத்தில் விளக்கிவிட வேண்டும் என்று நினைத்தவாறு அவ்வப்போது கைபேசியை எடுத்துப் பாரத்துக் கொண்டான்.‌

பலரைக் கஷ்டப்படுத்தும் உண்மையைவிட அவர்களுக்கு நிம்மதி தரும் சிறு பொய் மேலானது என்று இஸ்மாயில் சார் சொன்னதை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டான்.

அவர்கள் சொல்லப் போவது முழு பொய்யோ முழு உண்மையோ அல்ல , தேவையான அளவு உண்மை சொல்லப் போகிறார்கள். ஆனால் உதவி வந்து கொண்டிருக்கிறது. எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஓடிக் கொண்டிருந்தான்.

“சார் , இஃப் யூ டோன்ட் மைண்ட் கொஞ்சம் ஆபீஸ்க்குள்ள போய்ப் பேசலாமா?” என்று ஸ்டேசன் மாஸ்டர் இஸ்மாயில் சற்றுத் தணிந்த குரலில் தன் வழக்கமான பணிவுடன் சொல்லவும்தான், தன் சூழலை உணர்ந்தவராகச் சரி என்றவாறு ஆபீஸ் நோக்கி நடந்தார்.

“சாரி சார், உங்க ஃபேமிலி பங்ஷன நீங்க மிஸ் பண்ணுற மாதிரி ஆயிடுச்சு” என்று மன்னிப்பு கேட்டவாறே  அதுவரை நடந்ததையும், அதற்கு மேல் உத்தேசித்து இருக்கும் நடவடிக்கைகளையும் பொறுமையாக விளக்கினார். அதை அமைதியாகக் கேட்டவர் சற்று வருத்தம் தொனித்த குரலில்,

“நான்தான்  முதல்ல சாரி சொல்லணும். ஃபங்ஷன் மும்முரத்துல கால கவனிக்காம விட்டுட்டேன். ஏதோ புண்ணியத்துக்குச்  சுகுமார் ஒரு ரவுண்டு போனதால எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடக்காம தடுத்துட்டோம். இல்லன்னா என்ன ஆயிருக்கும்னு என்னால நினச்சி பாக்கவே முடியல” என்றபோது அவரையும் மீறிக் கொண்டு அவர் உடம்பு சிலிர்த்து நடுங்கியது. அவர் மகள் நிச்சயத்தை விட்டுவிட்டு அவசரமாக கிளம்பி வர  வேண்டியதாகிவிட்டதே

என்று நினைத்துக் கொண்டே வந்தவருக்கு , இங்கு வந்தபின் நிலவரம் தெரிந்து பேராபத்து தடுக்கப்பட்டது அளப்பறிய நிம்மதியைத் தந்தது.

“பேசஞ்சர்ஸ்லாம் என்ன நடக்குதுன்னு தெரியாம ஏற்கெனவே கொஞ்சம் குழப்பத்தில் இருக்காங்க.

அப்பப்ப வந்து வண்டிய எப்ப எடுக்கப் போறீங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க. மேல இருந்து இன்னும் தெளிவா எந்த ஆர்டரும் வரல. அதான்” என்று அவர் இழுக்கவும். தன் தலையீடு இல்லாமல் விஷயங்களை எடுத்துச் செல்ல முடியாது என்பதை உணர்ந்தார்.

தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். பின் தொலைபேசி அழைப்புகளும் கட்டளைகளும் முன்னும் பின்னும் பறந்தன.

வண்டியில் பயணித்த தன் நண்பன் உதவியோடு  அவர்கள் திட்டமிட்டபடி தகவல் பரிமாற்றம் செய்து விட்டதாகவும் உணவு பிரச்சனையை ஓரளவுக்கு இளைஞர்களின் முன்னெடுப்போடு சமாளித்துவிட்டதாகவும் ஒரு மணிநேரம் கழித்து திரும்பி வந்த சிவா கூறிய போது நன்றாகக் களைத்து மழையில் தொப்பலாக  நனைந்திருந்தான்.

சற்று நேரம் நிலைமை கட்டுக்குள் இருந்ததாகத் தோன்றியது. அன்று அந்த நடுநிசியின்  நிசப்தம் ஆசுவாசம் அளிக்கவில்லை.

மாறாக எப்போது வேண்டுமானாலும் அது கலையலாம் என்கிற பயம் எல்லார் மனதிலும் இருட்டில் விரியும் நிழல்களாகக் கிளை விரித்திருந்தது.

சற்று நேரத்தில் ‘பாம்பு பாம்பு’ என்று கூச்சலும் குழப்பமும் மீண்டும் தலைதூக்கியது.

”எப்ப சார் வண்டி எடுப்பீங்க? பூச்சி பொட்டு நடமாடுற இடத்துல சின்ன பசங்களையும் வயசானவங்களையும் வச்சிட்டு எப்படி சார் சமாளிக்கிறத?” என்று கேட்டவாறு  கோபமாக வந்த மக்கள் கூட்டத்தைக் கஷ்டப்பட்டு ஏதேதோ சொல்லி மீண்டும் ஒருமுறை சமாளித்து அனுப்பி வைத்தார்கள்.

அவர்களுக்குச் சொல்ல தங்களிடம் இன்னும் எந்த விடையும் இல்லை என்கிற உண்மையை மறைக்க அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் சென்றபின், “வண்டிய பேசாம ரீவர்ஸ் பண்ணி நாசரேத்லயாவது அப்பவே நிறுத்தியிருக்கலாமே. அது ஸ்ரீவைகுண்டத்த விட கொஞ்சம் பெரிய ஊரு தானே? சாப்பிடவாவது ஏதாவது அரேஞ்ச் பண்ணியிருக்கலாம்” என்ற அழகேசனின் கேள்வியை இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தங்களுக்குள் கேட்டுக் கொண்டவர்கள்.

விடை கிடைக்க வழி செய்யத்தான் அவரைக் கையோடு அழைத்து வந்ததாக அவர்கள் பூடகமாகக் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து அவர் யோசனையில் ஆழ்ந்தார்.

ஆனால் உண்மையறிந்த பின் மக்களும் ஊடகமும்  நாளை கேள்வி கேட்கும் போது என்ன சொல்லப் போகிறார்கள் என்று புரியாமல் விழித்தார்கள்.

பின், நாளை வருவதை நாளை பார்த்துக் கொள்ளலாம் இப்போது இன்று ஒருநாள் இரவைக் கழிப்போம் என்று நினைத்துக் கொண்டார்கள்.

இப்போது  உத்தரவு வந்தால்கூட ஓரளவுக்கு மக்களின் கொந்தளிப்பைச் சமாளிக்க முடியும். பின்னால் செல்வதற்கு அவர்களுக்குக்  காரணம் சொல்வது கடினம்தான்.

ஆனால் குறைந்தபட்சம் வண்டி ஏதோ ஒரு திசையில் நகர்ந்தால் போதும் என்கிற பயணிகளின் மனநிலைதான் அனைவரிடமும்.

அதற்கு அனுமதி கிடைக்கும்  முன் மீண்டும் ஒருமுறை தண்டவாளத்தைப் பார்வையிட இரண்டு பேரை அனுப்பி வைத்திருந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் அவசியமானதாகவே தோன்றியது.

சாட்டிலைட் போன் ஒலித்தது. அதை எடுத்துப் பேசிய அழகேசன் முகத்தில் தெரிந்த மாற்றங்கள் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது.

இந்த இக்கட்டிலிருந்து மீள ஏதோ ஒரு வழி பிறக்காதா என்று பயணிகளைவிட அதிக கவலை ரயில் நிலைய ஊழியர்களிடம் இருந்தது.

“பக்கத்துல உள்ள ஸ்கூல்ல பேசஞ்சர்ஸ ஷிப்ட் பண்ண எல்லா அரேஞ்சுமெண்ட்ஸும் பண்ணிட்டதா இன்ஸ்பெக்டர் ரவி கூப்பிட்டு சொன்னாரு.  சாப்பாடு கூட எல்லாருக்கும் தயார் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். நாலஞ்சு வண்டி வந்துகிட்டிருக்காம்.”

“நைட்டு அங்க ஸ்டே பண்ண வச்சிட்டா எப்படியும் சமாளிச்சிக்கலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல வண்டிய ரிவர்ஸ் பண்ண பெரிமிஷனும் வந்துரும்.

காலைல எல்லாரையும் திருச்செந்தூர்ல டிராப் பண்ணி சென்னைக்குப் போற பஸ்ல அனுப்ப நம்மளே ஏற்பாடு பண்ணிறலாம்” என்று எளிதாகச் சொல்லிவிட்ட அழகேசனின் வார்த்தைகளில் தெரிந்த உற்சாகம் ரயில்வே ஊழியர்கள் ஒருவர் முகத்திலும் இல்லை. ‌

பல மணி நேரங்களாகப் பயணிகளை நேரடியாகச் சமாளித்த அவர்களுக்கு இது எத்தனை பெரிய சவால் என்பது தெரியும்! இருந்தாலும் வேறு வழியின்றி ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும் என்று அடுத்து என்ன செய்வது என்று ஸ்டேசன் மாஸ்டர் தலைமையில் திட்டமிடத் தொடங்கினார்கள்.

அந்த நேரம் உள்ளே வந்த லோக்கோ பைலட் போட்டு உடைத்த உண்மையைக் கேட்டு ஒரு நொடியில் எல்லாரும் ஊமையாகிப் போனார்கள்.

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்கிற பழமொழி உண்மைதான் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் தங்கள் ஆலோசனையைத் தொடர்ந்தார்கள்.

அவர்கள் ஒருவாறாகப் பேசி ஒரு முடிவுக்கு வந்த சமயம் தண்டவாள மேற்பார்வைக்குச் சென்று வந்த இரண்டு டிராலிமேன்களின் பதற்றமான தோற்றமும் அவர்கள் கொண்டு வந்த செய்தியும் தேள் கொட்டியதைப் போலிருந்தது.

சரி, முதலில் பயணிகளை வெளியேற்றிவிட்டு அடுத்த பிரச்னையைப் பார்ப்போம் ‌என்கிற தங்களுக்குள் பேசிக் கொண்டு சாப்பிடாமல் கொள்ளாமல் சோர்ந்திருந்த போதும் ஒரு வழி பிறந்த உற்சாகத்தில் கலைந்து சென்றார்கள்.

ஆனால் அவர்கள் யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் திட்டத்தில் மண்ணை….

இல்லை

இல்லை

தண்ணீரை வாரிப் போட்டுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது விதி.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.