ஏதோ ஒரு கருமி ஓவியன் ஒரே நீல வண்ணத்தை தன் ஒற்றைத் தூரிகையால் வானமாகவும் கடலாகவும் தீட்டி விட்டு, அதே தூரிகையால்  வெள்ளை நிறத்தை எடுத்து ஒன்றை அலைகளாகவும் மற்றொன்றை மேகமாகவும் சிக்கனமாக தீட்டிய ஓவியமாகவே அந்த முயல் தீவு கடற்கரை அவளுக்குக் காட்சியளித்தது.

கடல் எது வானம் எது என்று பிரித்தறிய முடியாத வகையில் இரண்டும் பின்னிப் பிணைந்து இருந்தன. அவளும் அவனுமாக! அவள் அனுமதித்தால், அவன் ஏற்றுக் கொண்டால்,‌ ஆனால் அதோடு முடிந்துவிடும் காரியமா? காதலுக்கு இரண்டு பேர் போதும், கல்யாணத்துக்கு அப்படி இல்லையே.

வானத்துக்கும் பூமிக்கும் இடையில் உள்ள அனைத்தையும் குறித்து இதுவரை பேசியிருந்தவர்கள், ஒருவருக்கு இன்னொருவர் யார் என்று இதுவரை பேசிக் கொண்டதில்லை .  

ஒருவேளை பேசினால் அடுத்த கட்டம் பற்றிப் பேச வேண்டி வரும். ஒருவேளை அதையும் பேசினால் அது இருவர் வீட்டிலும் நடக்காத காரியம் என்று அவளுக்குத் தெரிந்ததைப் போல் அவனுக்கும் தெரிந்திருக்கலாம்.

அவனுக்கு அவள் மேல் உள்ளது வெறும் இரக்கமாகக் கூட இருக்கலாம் அல்லவா?  ஆனால் ஏதோ ஜென்ம ஜென்மமாக அவனோடு பழகியதாகத் தோன்றும் இந்த உணர்ச்சிக்கு என்ன பெயர் கொடுப்பது ? இரண்டு வருடங்களாகப் பெயரில்லாமலே அழகாகச் சென்ற இந்த உறவைத் திடீரென ஒரு முத்திரை குத்தி எங்கே கொண்டு செல்ல உத்தேசிக்கிறாள் ?

“காணும் பொங்கலுக்கும் அந்தோணியார் கோயில் பண்டிகைக்கும் தான் உள்ள வரைக்கும் பஸ்சு வரும். முனியசாமி கோயில் பண்டிகைக்குக்கூட வல்லத்துலதான் நிறைய பேர் வருவாங்க. மத்தபடி இந்தப் பச்ச கேட்டோட பஸ் திரும்பிரும். நடந்துதான் போகணும் இல்லன்னா வண்டில”

என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே ஹார்பர் ரோடில் இருந்த பச்சை கேட்டை அடைந்தார்கள். அதிலிருந்த செக்யூரிட்டி அவனை அறிந்தவன் என்பதாலே அவர்கள் உள்ளே வர முடிந்தது என்பதில் தெடங்கியது படபடப்பு.

“யாரு சோசப்பு, ஏதோ பிரண்ட கூட்டிட்டு வரேன்னு சொல்லியிருந்த , இது என்ன சாயிபு வீட்டுப் பொண்ணால்ல இருக்கு? லவ்வர்ஸ்லாம் இங்க கூட்டிட்டு வரக் கூடாதுன்னு தெரியும்ல?”

“என்ன தெரியாதாண்ணே உனக்கு? நீயே இப்படிச் சந்தேகமா கேக்கலாமா?”  

“தெரியாம என்னடா. ஆனா பயலுவ சோடியா வந்து இல்லாத அழிச்சாட்டியம் பண்ணிப் புட்டானுவ. அதான் பழைய லைட்ஹவுச பூட்டியே போட்டுருக்கு. எதுக்கும் நேரமாவே திரும்பிருடா. ரோந்து போலீஸ் யாரும் வந்தா தேவையில்லாத பிரச்னை. அதுக்குதான் சொன்னேன். “

அதுவரை ரோட்டோரம் இருந்த உப்பளங்களில் குவிந்து கிடந்த வெள்ளை மலைக் குன்றுகளாகத் தோன்றிய உப்புக் குவியல்களையும், ஆங்காங்கே இருந்த புகை வந்து கொண்டிருந்த தொழிற்சாலைகளையும் , ஹார்பர் ரோட்டையும் அவன் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வர வர ஆவலாகக் கேட்டுக் கொண்டே வந்தவளுக்குத் திடீரென்று எல்லாம் கசந்தது.

“உங்க காயல்பட்டினம் கடற்கரை மாதிரி இங்க சாப்பிட பண்டம், நிறைய கடைலாம் கிடையாது. ஒரு புழங்காத பழைய லைட் ஹவுஸும், இடிஞ்ச ஒரு கட்டிடமும்  உள்ள போவ அனுமதி இல்லாத புது லைட் ஹவுசும் தான் இருக்கும். “

அவன் வார்த்தைகளோ, அதுவரை அவனுடன் திருநெல்வேலியிலிருந்து தனியாகத் தூத்துக்குடி வரை பைக்கில் வந்திருக்கிறோம் என்கிற நினைப்பும்

தந்த பரவசமும் அப்போது சுத்தமாக வடிந்திருந்தது. அந்த ரம்மியமான பின்மதிய வேளையோ இதமான கடற்கரை காற்றோ கூட அவளுக்கு மகிழ்ச்சி தரவில்லை.

மாறாக அவர்களைக் காதலர்கள் என்று அவனுக்குத் தெரிந்தவன் நினைத்துக் கொண்டான் என்பதற்காக வருந்தினாளா, இல்லை அவள் அவனுக்கு வெறும் தோழி என்று அவன் சொல்லியதால் வருந்தினாளா என்று அவளுக்குப் புரியவில்லை என்கிற அவள் எண்ணத்தைக் கலைத்தான்.

“நீ தண்ணிக்குள்ள எறங்கலையா? கடற்கரையில கால நனச்சிக்கிட்டு நிக்குறது புடிக்கும்னு சொல்லிருக்கியே?”

அவள் மனம் சுனாமி வந்த கடலாகக் கொந்தளித்துக் கொண்டிருந்ததை அவள் விழிகளில் தெரிந்த சிறிய மாறுதலில் கண்டு கொண்டவன் முகம் ஒரு நொடியில் மாறியது.

” உனக்குப் பிடிக்கலன்னா கிளம்பலாம்.”

அவன் வருத்தத்தைப் போக்கும் விதமாக அவள் இதழ்களில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது. அவன் சற்று ஆசுவாசமடைந்தான்.

கடல் அரிப்பைத் தடுக்க போட்டிருந்த கற்பாறை மேல் அமர்ந்தாள். அருகிலிருந்த பாறை மேல் அவனும் அமர்ந்தான்.  

கடல் அவனைப் போல் ஓய்வின்றி பேசியது, எதையும் பேசாமல் அதை அமைதியாகக்  கேட்டு கொண்டு இருக்கும் கரையாக அவள்.

“அதுதான் தூத்துக்குடி ஹார்பர். இது செயற்கையா உருவாக்கப்பட்டதுதான். சுனாமியோட அதோட ஆழம் தானாவே கொஞ்சம் ஜாஸ்தி ஆச்சாமா.”

சிறுவயதில் வெரிசெல்லா நோயினால்  பாதிக்கப்பட்ட பின், அரிதாக லட்சத்தில் ஒரு குழந்தைக்கு  மட்டும் ஏற்படும் குரல் இழப்பு அவளுக்கு ஏற்பட்டது. ஏற்கெனவே அதிகம் பேசாத குழந்தை ஆதலால் அவள் குரல் பறிபோனதை அறிந்து கொண்டு சிகிச்சை அளிக்க மருத்துவர்களை அணுகிய போது அதற்கான காலம் கடந்து விட்டிருந்தது .

அவள் விழியசைவைப் புரிந்து கொண்டு அவள் குடும்பத்தினரும் , உயிர் தோழி அஃபிரினும்  தவிர யாரும் அவளை என்றும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தவளுக்கு, எதிர்பாராத விதமாக அவள் கல்லூரியிலிருந்து சேவியர் கல்லூரியில் நடந்த இன்டர் காலேஜ் ஃபெஸ்டிவலுக்குச் சென்ற போது சந்தித்த ஜோசப் அவளின் பேசாத வார்த்தைகளைப் புரிந்து கொண்டு உதவியது முதல் அதிசயமாகவே இருந்தான்.

அன்று மாலை அங்கிருந்தே வீட்டுக்குப் போக ரயில் நிலையம் செல்லப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவளை, அருகில் நின்று மேலும் கீழுமாக ஒரு மாதிரியாகப் பார்வையிட்டவனிடமிருந்து தப்பிக்க வழியறியாது நின்றவளுக்கு மழைக்காக ஒதுங்கியவன் அங்கு வந்தது அல்லாஹ்வின் கருணையாகவே தோன்றியது. தன் வீட்டில் தோன்றும் ஒருவித பாதுகாப்பு உணர்வை அவனிடம் உணர்ந்தாள்.

மழை விட்டபின்,அவன் அவளை அழைத்துச் செல்லவா என்று கேட்ட போது யாரும் தெரியாத ஊரில் யார் தன்னைக் கேட்கப் போகிறார்கள் என்கிற தைரியம் எங்கிருந்தோ வந்தது. அன்று முதல் இன்று வரை அவள் மனம் அவனுடன்தான் பயணிக்கிறது.

சில முறை அவன் ஊரான திருச்செந்தூர் அருகிலிருந்த அமலிநகருக்குச் செல்லும் போது அவளுக்காகவென்றே ரயிலில் பயணிப்பான். ஆனால் முன்பின் தெரியாதவர்கள் போல பயணிப்பார்கள். அவர்கள் விழிகள் பேசும் ஓசை யாருக்கும் கேட்காதல்லவா?

இப்படியாக இரண்டு வருடங்கள் கடந்த பின் முதல் முறையாக வரவழைத்துக் கொண்ட தைரியத்தில் அவனிடம் அவள் கல்லூரித் தோழிகள் பேசிக் கொள்வதில் கேள்விப்பட்ட முயல் தீவைக் காண விரும்பியதைச் சொன்னாள்.

அவனும் அவள் ஆசைப்பட்ட படியே அவன் ஸ்பிலென்டரிலே அழைத்து வந்துவிட்டான். வழக்கமாக அவள் விழிகளைப் பார்த்து அவள் எண்ணங்களை உணர்ந்து கொள்பவனுக்கு அவளின் பாராமுகம் ஏதேதோ எடக்கு மடக்காக யோசிக்க வைத்தது.

ஒருவேளை தான் ஏதேனும் தவறான எண்ணத்தோடு அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அவளை அழைத்து வந்திருக்கிறோம் என்று அவள் யோசிக்கிறாளோ என்ற எண்ணம் அவன் இதயத்தை நொறுக்கியது.

“ஆயிஷா, நீ என்ன எப்பவும் நம்பலாம் . தப்பான எண்ணத்தோட என் நகம்கூட உம் மேல என்னைக்கும் படாது.”

“நா உன்ன அப்படி நினைப்பேன்னு உன்னால எப்படி நினைக்க முடிஞ்சுது?” என்று சாடையில் கேட்டாள்.

முதல் முதலாக அவளைக் கண்டது முதல் அவன் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் அவள் பெயரை உச்சரித்துக் கொண்டிருப்பதை. நட்பு என்கிற போர்வையில் தன் காதலை அவன் மறைத்து வைத்திருக்கும் கள்ளத்தனத்தைக் கண்டு கொண்டாளா? களவாடிச் சென்ற ரயில் பயணத்து சிறு பார்வைகளில், வாழ்க்கை முழுதும் அவளுடன் பயணிக்கும் அவன் ஆசையை ஒருவேளை முன்னரே அவள் அறிந்து விட்டாளா?

அவள் பார்வையின் தீர்க்கம் அவன் ஆணிவேரை அசைத்தது. அவள் பார்க்கட்டும் என்று அவன் மனதைத் திறந்து காட்டினான். அவளுக்கு அது புரிந்தது. ஆனால் அதை அவள் வார்த்தைகளால் கேட்க விரும்பினாள். இதயம் உருகித் துடித்தது.

“நான் உனக்கு யார்?” என்று கேட்டாள்.

அதை அவன் ஆயிரம் கவிதைகளாக எழுதிக் கொடுக்க முடியும். இரண்டு வருடங்களாக அவன் பேனாவும் டைரியும் அறிந்த ரகசியத்தை அதற்குச் சொந்தக்காரியிடம் சொல்ல அவனுக்கு என்ன தயக்கம்? இந்த முயல் தீவே அதிர்ந்து போகுமளவுக்குக் கத்தி சொல்ல முடியும். குறைந்தபட்சம் அவள் கைகளை அவன் கைகளில் கோர்த்து, “காலம் பூராவும் விடாமல் பிடித்துக் கொள்வேன்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் கிசுகிசுப்பாகச் சொல்ல முடியும். ஆனால் அவன் உலகுக்குச் சொல்லத் தேவையில்லை. அவனுக்குத் தெரிந்த மொழியில் சொன்னாலும் அது சரியானதாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.

அவளுக்குச் சொல்ல வேண்டும். அவளுக்கு மட்டும் புரியும் விதத்தில் ! அவன் கண்கள் அதுவரை கஷ்டப்பட்டு மறைத்த காதல் அப்போது அப்பட்டமாகத் தெரிந்தது, அது அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது .

” நீ எனக்கு எல்லாம்!”

அதை உணர்ந்தவள் விழிகள் மகிழ்ச்சியில் நிறைந்தன. அவள் கைகள் தன்னிச்சையாக அவன் கைகள் இருந்த இடத்தை வருடியது. அவனின் இதயத் துடிப்பை அவள் விரல்கள் உணர்ந்தன.

அவன் விழிகளும் அவள் மகிழ்ச்சியைப் பிரதிபலித்தன.

இந்தப் பயணம் எளிதாக இருக்கப் போவதில்லை. அதற்காக அவன் போராடத் தயாராக இருந்தான். அவளுக்காக அவன் எதையும் செய்வான். அதை அவளும் அறிவாள். நொடிகளா யுகங்களா என்று சொல்ல முடியாத வண்ணம் நீண்ட சில நிமிடங்களுக்குப் பின் ஒரு குறும்புப் புன்னகையுடன்,

“முயல் தீவுன்னு சொன்னாங்க. முயலையும் காணும் ! தீவையும் காணும்!” என்று அவள் கேட்கவும். அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“வர வழில கேஸ் குடோன்கிட்ட நிறைய மயில் கிராஸ் பண்ணி போச்சில்ல அது மாதிரி முன்னாடி இங்க நிறைய முயல் நடமாடும். சின்ன வயசுல நானே பாத்துருக்கேன்.”

அப்போது ஒரு பேருந்து வந்து நின்றது.  தன் முகத்தை  முக்காடைக் கொண்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே, அந்த வண்டியிலிருந்து  தன் குடும்பத்துடன் இறங்கிய அவள் வயதொத்த முக்காடிட்ட பெண்ணின் விழிகள் அவள் விழிகளைச் சந்தித்தன.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.