பிற்போக்குத்தனங்கள், ஆன்ட்டி ஹீரோ அலப்பறைகள், டெம்ப்ளேட்கள், இணையதள அரசியல்கள், செயலிகளின் வியாபார உள்குத்துகள், இலக்கியவாதிகளுடனான மோதல் என்று குடும்ப நாவல் உலகில் உள்ள பிரச்னைகளையும் அதன் காரண காரியங்களையும் இந்தக் கட்டுரை தொடரில் நிறையவே அலசி விட்டோம்.

இந்த அத்தியாயத்தில் முற்றிலுமாகக் குடும்ப நாவல் உலகத்தின் வேறொரு பக்கத்தைக் காட்ட விழைகிறேன். பலரும் பேசாத பார்க்காத பக்கம்!

காதல், குடும்பம், உறவுச் சிக்கல்கள் தாண்டி குடும்ப நாவலாசிரியர்கள் வேறு என்ன புதிதாக எழுதிவிடப் போகிறார்கள் என்பவர்களுக்காக இந்தப் பட்டியல்..

தேன்பலா – என். சீதாலக்ஷ்மி

குழந்தைத் திருமணங்களால் ஏற்படுகிற பாதிப்புகளைப் பற்றிப் பேசிய குடும்ப நாவல். விஜயா, அகிலா என்று பள்ளியில் படிக்கும் இந்தச் சிறுமிகளின் வாழ்வில் கல்யாணம் என்கிற புயல் கரையைக் கடக்கிறது. அதனால் அவர்கள் வாழ்க்கை எப்படித் தலைகீழாகப் புரட்டிப் போடப்படுகிறது.

இருவரில் யார் அதில் தப்பிப் பிழைக்கிறார்கள். மேற்பூச்சுகள் எதுவும் இல்லாமல் குழந்தைத் திருமணங்கள் பெண்களுக்கு ஏற்படுத்துகிற பாதிப்பைத் தன் எழுத்தின் மூலமாக இந்த நாவலின் ஆசிரியர் அழுத்தமாகக் கடத்தி இருக்கிறார்.

மேலும் சீதாலக்ஷ்மியின் நாவல்களில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிற பெண்களை நாயகிகளாக வரித்து எழுதி வருகிறார். இவரின் கதைகளில் காதலும் இருக்கும். அழுத்தமான கருவும் இருக்கும். இதெல்லாம் தாண்டி அந்தந்த ஊர்களின் வட்டார வழக்குகளில் எழுதுவதில் கைதேர்ந்தவர்.  

அதிதி  சம்யுக்தா

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அகதியாக வந்து சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள்தான் இந்தக் கதையின் நாயகி. நாயகனின் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்ட இந்தக் கதை அகதிகளின் அவலநிலையைப் பேசுகிறது.

அடையாளமற்ற அவர்கள் வாழ்க்கையையும் வலியையும் சொல்லும் இந்த நாவலில் சுவாரசியத்திற்காக வேண்டி எங்கேயும் எழுத்தாளர் சமரசம் செய்து கொள்ளவில்லை. தேவை இல்லாத கற்பனைகளையும் உள்புகுத்தி இருக்கவில்லை. அகதிகளின் உண்மை நிலையை எழுதியிருப்பார்.

எழுத்தாளர் சம்யுக்தா தன் கதைகளில் சமூகப் பிரச்னைகளை மட்டும் பேசுவதில்லை. மாறுபட்ட துறைகளைக் கொண்ட நாயகன் நாயகியையும் தன்னுடைய நாவல்களில் அறிமுகம் செய்திருக்கிறார்.

பூக்கள் விற்பனைக்கல்ல – ஹேமா

Version 1.0.0

வாரிசு இல்லை என்கிற வலியை மிகப் பெரிய வியாபாரமாகப் பார்க்கிறது மருத்துவ உலகம். இந்த மொத்தச் சமுதாயத்தையும் மிரட்டிக் கொண்டிருக்கும் மலட்டுத்தன்மை என்கிற பிரச்னையை எல்லாப் பக்கங்களிலும் நுணுக்கமாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல் இது.

இந்த நாவலின் நாயகி ஓர் இனப்பெருக்க உட்சுரப்பியல் நிபுணர் (reproductive endocrinologist). செயற்கைக் கருத்தரிப்புக்கான சிகிச்சைகள் செய்யும் மருத்துவமனையில் பணியில் இருக்கும் நாயகி அங்கே சட்டத்திற்கு எதிராக நடக்கும் கருமுட்டை வியாபாரங்களைத் தன்னுடைய நண்பனுடன் இணைந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுதான் கதை.

இந்த நாவலின் ஆசிரியர் ஹேமா அறிவியல்ரீதியான தகவல்களைச் சேகரித்து எழுதிய அதே நேரம் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளின் மனநிலையையும் இந்த நாவலின் காட்சிகள், வசனங்கள் மூலமாகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

மறப்பேன் என்று நினைத்தாயோ  ஹமீதா

மில்ஸ் அன் பூன் போன்ற புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக ஏற்படுகிற பாதிப்பில் நாயகி தன் வாழ்க்கையில் எடுக்கும் சில முக்கிய முடிவுகள் எப்படி அவளின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது என்பதைக் கதையின் போக்கில் சொல்லியிருப்பார் எழுத்தாளர் ஹமீதா.

‘மஞ்சள் கயிறு மாயம் செய்யும்’ என்று சில குடும்ப நாவல்களில் அர்த்தமற்று வரும் இந்த வரி எதார்த்தத்திற்குக் கொஞ்சமும் பொருந்தாத ஒன்று என்பதை யமுனா என்கிற கதாபாத்திரத்தின் மூலமாக வாசகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டது இந்த நாவல்.

ஆடுகளம் – ரியா மூர்த்தி 

ஸ்டீரியோடிப்பிக்கலை உடைத்து எழுதப்பட்ட மிக மிக விறுவிறுப்பான கதைக்களம். ஒரு வீடியோ கேமினால் ஏற்படுகிற பாதிப்பு. அதனை வடிவமைத்த நிறுவனம் எதிர்கொள்கிற சிக்கல். அதனைக் கையாள்வதற்கு அவர்கள் எடுக்கிற ஆபத்தான முடிவுதான் கதையின் கரு.

ஓர் ஆபத்தான வீடியோ கேமை விளையாடும் பதற்றத்தை, இந்த நாவலின் ஆசிரியர் ரியா மூர்த்தி படிக்கும் வாசகர்களுக்கும் கடத்தி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை.

உயிரில் ஒரு சஞ்சாரம் – நிலா பிரகாஷ்

சமீபமாகப் படித்த அட்வஞ்சர் ஜெனர் இது. தமிழில் அதிகம் வாசிக்கக் கிடைக்காத வகை. மன அமைதியற்று தவிக்கும் நாயகி கதையின் ஆரம்பத்திலேயே ஓர் உலக சுற்றுப் பயணத்திற்குப் புறப்படுகிறாள். அந்தப் பயணத்தின் பெயர்தான் ஆத்மாவைத் தேடும் சாகசப் பயணம் (search of soul adventure journey)

அந்தமான் கடற்கரையில் பரவும் பயோலூமின்னஸ் காரணமாக இரவில் நீலவண்ணமாக ஜொலிக்கும் கடல், சீன மலையின் உச்சிக்கு இரண்டே நிமிடங்களில் அழைத்துச் சென்ற உலகின் மிக வேகமான மின்தூக்கி, செரங்கெட்டி எனப்படும் ஆப்பிரிக்கக் காடு, இஸ்தான்புல்லிலிருந்து அவன் பமுக்களே என்னும் ரோமானியர்கள் வாழ்ந்த சிதிலமடைந்த கட்டிடம் இப்படிக் கதை முழுக்க உலக நாடுகளின் நாம் கேள்விப்படாத ஆச்சரியங்களை வியப்பூட்டும் வகையில் தன் எழுத்தில் வரித்திருக்கிறார் நிலா பிரகாஷ். நிச்சயமாக இது ஒரு புதுமையான வாசிப்பு பயணத்தைக் கொடுக்கவல்லது.

ஒரு நடிகையின் டைரி – கார்த்திகா சக்கரவர்த்தி

இந்த நாவல் ‘க்ரைம் ஸ்பாட்’ என்கிற சீரிஸின் முதல் பகுதி. துப்பறியும் நாவல் வகை. பிரபல நடிகையின் தற்கொலை. அதனை விசாரிக்கும் காவலர். கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கதையின் சஸ்பென்ஸை நம்மால் எங்கேயும் யூகிக்கவே முடியாது.

பரபரப்பான துப்பறியும் களம் என்பதைத் தாண்டி இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களைக் கொண்டு தொடர்ச்சியாக எழுதப்பட்ட நான்கு சீரிஸ்கள். அனைத்துமே இதே போன்ற வேறு வேறு கதைகளைக் கொண்ட துப்பறியும் களங்கள்.

ஆங்கில நாவல்களில் பல தொகுதிகளைக் கொண்ட சீக்குவல்கள் நிறைய உண்டு. ஆனால் தமிழில் இது போன்ற தொடர்கள் குறைவுதான். அந்த வகையில் கார்த்திகாவின் சிறப்பான முயற்சி இது.

சிக்கிச் சிக்கித் தவிக்கிறேன் – வநிஷா 

இந்த நாவல் கத்தி மேல் நடப்பது போன்ற மிகவும் சென்ஸிட்டிவான களம். அதாவது நாயகிக்கு இருக்கும் பெரிய மார்பகங்களும் அதனால் அவள் எதிர்கொள்கிற பிரச்னைகளும்தான் இந்தக் கதையின் கரு. அவளுக்கு ஏற்படுகிற தொடர்ச்சியான மனவழுத்தங்களால் தன்னுடைய மார்பகத்தைக் குறைத்துக் கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் முடிவை எடுக்கிறாள்.

பின் அவள் எப்படி மனம் மாறுகிறாள் என்பதும் அவளுக்கு இருக்கும் பெரிய மார்பகங்கள் குற்றவுணர்வு அடையுமளவுக்கான ஒரு பிரச்னை இல்லை என்பதையும் கதையின் காட்சிகளினூடே தெளிவாகச் சொல்லி இருப்பார்.  

இது ஒரு டெம்ப்ளேட் கதையாக இருந்தாலும் இதில் அவர் சொல்லி இருக்கும் கருத்து மிகவும் ஆழமானது. பெரும்பாலும் பெண்கள் பேசத் தயங்கும் பிரச்னையை எடுத்து அதனைச் சிறப்பாகக் கையாண்டது ஒரு புறமென்றால் மேலும் ஆசிரியர் மலேஷியாவாழ் தமிழர் என்பதால் இந்தக் கதையும் மலேஷியாவில் நடப்பது போலவே எழுதி இருப்பார்.

அங்குள்ள பழக்க வழக்கங்களை எல்லாம் மிக இயல்பாகக் கதையில் கொண்டு வந்திருப்பார். வநிஷாவின் சிறப்பே எத்தகைய சமூகக் கருத்தையும் தன்னுடைய கதைகளில் நகைச்சுவை உணர்வுடன் கலந்து எழுதுவதுதான்.  

செல்வ களஞ்சியமே – நார்மதா

இந்த நாவல் நேத்ரா உதயனின் மகிழுந்து பயணத்தில் கொஞ்சம் அசுவாரசியமாகதான் தொடங்குகிறது. எதற்காக இந்தப் பயணம்? எங்கே செல்கிறார் போன்ற கேள்விகளுடன் நகரும் கதையில் முதல் மூன்று பதிவுகளுக்குப் பின்தான் ஒரு தெளிவு வருகிறது. கொல்லி மலையில் வசிக்கும் பாவை. அந்தச் சிறுமியின் கல்விக்கான கனவும் அதற்கான போராட்டமும்தான் கதையின் நோக்கம். 

சமூகப் பொறுப்புணர்வுடன் இந்தக் கதையைக் கையாண்டிருப்பார் எழுத்தாளர் நர்மதா.

காட்டு மல்லி –  கிருஷ்ணப்ரியா நாராயண்

சினிமாக்கள், நாவல்கள், தொடர்கள் போன்றவை எல்லாம் காதல் என்கிற ஒன்றின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பையும் புனிதப் பிம்பத்தையும் காலம் காலமாகக் கட்டமைத்து வருகின்றன.

யார் பூனைக்கு மணி கட்டுவது என்பது போல இந்தக் காதலின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் புனிதப் பிம்பமெனும் முகத்திரையைக்          கிழித்தது மட்டுமல்லாது பருவ வயது பெண்கள் அறிய வேண்டிய ‘லவ் பாமிங்’ என்கிற முக்கியத் தகவலையும் இந்த நாவலுடன் இணைத்து எழுதி இருக்கிறார் கிருஷ்ணப்ரியா நாராயண்.

பெரும்பாலும் குடும்ப நாவல்களில் சில காட்சிகளுக்காக சினிமா பாடல்களை எடுத்துப் பயன்படுத்திக் கொள்வது உண்டு. ஆனால், கிருஷ்ணப்ரியா இந்த நாவலுக்காக ஒப்பாரிப் பாடல் ஒன்றைத் தானே இயற்றி எழுதியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதின்ம வயதிலிருந்து தொடங்கி எல்லா வயதினரும் படிக்க வேண்டிய நாவல் இது.

நன்விழி – பிரவீணா தங்கராஜ்

ஐந்து அத்தியாயம் கொண்ட குறுநாவல் இது. பத்திலிருந்து இருபது நிமிடங்கள்தான் எடுக்கும் படிப்பதற்கு. கதைக்கரு ஒரு நாசக்காரக் கூட்டம் நந்தவனம் என்கிற குடியிருப்புப் பகுதி மக்களைக் கடத்தி வைத்து மிரட்டுவது. அதாவது ஹைஜேக்கிங் செய்வதுதான் கதையின் கரு. 

இதுவும் குடும்ப நாவல்களில் அரிதாகவே காணப்படுகிற வித்தியாசமான களம். மேலும் ஓர் அழகான ஆண் – பெண் நட்பைக் கதையின் முக்கியப் பாத்திரமாகக் காட்டியிருப்பதும், சமூகம் அவர்கள் உறவை எப்படி மோசமாகச் சித்தரிக்கிறது என்பதையும் மிகவும் எதார்த்தமாக எழுதி இருப்பார்.

கதையின் முடிவில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பதாலேயே நன்விழியின் கழுத்தில் கத்தி வைத்துத் தப்பிக் கொள்ள அந்தக் கூட்டம் முடிவு செய்வார்கள். அந்த முடிவை நன்விழி எப்படி முறியடிக்கிறாள் என்பதன் மூலமாகப் பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை என்கிற கருத்தை இந்தக் கதையின் மூலமாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

கருப்பர் இனம்- நிவேதா ஜெயாநந்தன்

சமூக நீதி பேசும் நாவல். தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த அழகரைப் படிக்க விடாமல் அந்த ஊரின் ஆதிக்கச் சாதிக் கூட்டம் என்ன மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்தி அவன் படிப்பிற்கு இடையூறு விளைவிக்கிறது. அதிலிருந்து அழகர் எப்படி மீண்டு வருகிறான். வெல்கிறான் என்பதுதான் கதை. கிராமத்து வாசம் வீசும் இந்தக் கதையின் வசனங்கள் ஒவ்வொன்றும் சமத்துவத்தை அதிரடியாகவும் அழுத்தமாகவும் பேசுகிறது.

ஆரோகணம் – உஷாந்தி

மலையேறும் அனுபவத்தைப் பதிவு செய்கிறது உஷாந்தியின் இந்த நாவல். சுதந்திரமாக வாழ விரும்பும் நாயகி தாய்லாந்திற்குத் தனியாகப் பயணிக்கிறாள். அவள் அங்குள்ள டோய் சியாங் டாவோ என்ற மலைத்தொடரில் ஏறுகிறாள்.

நாயகன் நாயகியுடன் சேர்த்துப் படிக்கும் வாசகர்களையும் அந்த மலைத் தொடரில் ஏற வைக்கிறது  உஷாந்தியின் எழுத்தும் அவரது காட்சியமைப்பு விவரிப்புகளும்.

இது போன்றே பெரும்பாலான வரத்து நாவல்களில் இயற்கைக் காட்சிகளும் காதல் காட்சிகளும் ஒன்றோடு இன்னொன்று பிணைந்து ரசிக்கக் கூடியதாக அமைந்திருக்கும்.  

குன்றென நிமிர்ந்து நில் – வித்யா  குருராஜன்

இதுவும்  குறுநாவல்தான். வித்யா குருராஜன் எழுதிய இந்த நாவல் விவகாரத்து என்பதின் மீது காலம் காலமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் அபத்தங்களைக் கேள்விக்குட்படுத்துகிறது.

ஒரு பெண் விவாகரத்து என்கிற முடிவை எடுப்பதைக் குற்றமாகப் பாவிக்கும் இந்தச் சமுதாயத்தின் எண்ணத்தை உடைத்து, அதில் உள்ள உண்மைகளை உரக்கச் சொல்கிறார் ஆசிரியர். மேலும் விவாகரத்து சார்ந்த சட்ட நுணுக்கங்களையும் இந்த நாவலில் எழுதியுள்ளார்.

லவ்லி லவி – அகிலா கண்ணன் 

இந்தக் கதையின் கருவை நான் விளக்குவதற்குப் பதிலாக அதிலுள்ள ஒரு சிறு வசனத்தைப் பகிர விரும்புகிறேன். அதுவே உங்களுக்கு அகிலாவின் நாயகிகளை அறிமுகம் செய்துவிடும்.

‘ஹரி சுவரோரமாக நின்று லவியை வழிமறிக்க, அதை எதிர்பார்த்தவள் போல், அவள் கையிலிருந்த கோட்டை, அவன் கழுத்தில் சுற்றினாள் லவி. எதிர்பாராத தாக்குதலில், ஹரி மூச்சுத் திணற, அவன் கன்னத்தில் தாறுமாறாக அறைந்தாள்.

லவியின் தோழிகள் அதை அவர்கள் அலைப்பேசியில் படம்பிடிக்க, “நீ வச்சிருக்கிறது மார்பிங் வீடியோஸ்… இப்ப நான் பண்ணுவேன் லைவ் டெலிகாஸ்ட். ஏன் மார்ப் பண்ண அப்படின்னு கேட்டுக் கேட்டு… அது மட்டுமில்லை… இன்னும் மார்ப் பண்ணுவேன், காலேஜில் இருக்கிற ஒவ்வொரு பொண்ணும் உன்னைச் செருப்பால அடிக்கிற மாதிரி…

நீ என்னைப் பற்றிப் போடுற வீடியோக்கு வியூஸ் கம்மி ஆகி, நான் உன்னைப் பற்றி போடுற வீடியோக்கு வியூஸ் அதிகமாகும். பொண்ணுங்க, வீடியோவைதான் உங்களை மாதிரி பசங்க நிறைய வச்சிருக்காங்களே… நான் சொல்ற வீடியோதான் டிரண்டில் இல்லை… நாம உருவாக்குவோம்” என்கிற லவி புருவம் உயர்த்திக் கேட்க ஹரி லவியை மூச்சுத் திணறலோடும், சற்றுப் பயத்தோடும்  பார்த்தான்.

“போட்டுப் பாரு என் வீடியோவை” என்று லவி ஹரியை மிரட்டுகிறாள். நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவல் அகிலாவின் மிகச் சிறந்த படைப்பில் ஒன்று எனலாம்.

ஓவியமோ அற்புதமோ – ராஜலக்ஷ்மி நாராயணசுவாமி

இந்த நாவலின் நாயகி புகழ்பெற்ற ஓவியர். அவளுக்குக் கல் தூரிகை ஒன்று கிடைக்கிறது. அம்மாயத்தூரிகை அக்காரிகையைக் காலம் கடந்து எங்கே கூட்டிச் செல்கிறது. அவள் மீண்டும் பத்திரமாக நிகழ்காலத்திற்குத் திரும்பினாளா? இறந்த காலத்தில் அவளுக்கு நடந்த விபரீதங்கள் என்ன? கிடைத்த அனுபவங்கள் என்ன?

இது போன்ற கேள்விகளுடன் சஸ்பென்ஸ் திரில்லர் + பேன்டஸி ஜனராக விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் ஒரு வித்தியாசமான நாவலைப் படைத்திருக்கிறார்  ராஜலக்ஷ்மி நாராயணசுவாமி.

அறுவடை நாள் – தமிழ் மதுரா

நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் எஸ்ஐ எப்படி இருப்பார்? அவர் பணியின் சிரமங்கள் எவ்விதமாக இருக்கும்? இடமாற்றம் வரும் சமயங்களில் குடும்பங்களைப் பிரிந்து செல்கிற வலி எத்தகையதாக இருக்கும்?

மேலும் காவலர் வேலைகளில் இருக்கும் சிரமங்கள், பெண்களின் வாழ்க்கை நிலைகள் தடவியல் மூலமாகத் துப்புத்துலக்கும் முறைகள் இவை அனைத்தையும் வசனங்களின் மூலமாகப் போகிற போக்கில் சொல்லிவிட்டுக் கடக்கிறது இந்தக் கதை.

அதிலும் பெண் காவலர் எனும்போது குடும்பத்தையும் வேலையையும் சமன் செய்வதோடு அவர் விசாரிக்கும் வழக்குகளிலும் புத்திசாலித்தனமாகப் புதிர்களை விடுவிக்கும் விதமும் நம்மைக் கதையுடன் ஒன்றிப் போக வைக்கிறது. ஆர்ப்பாட்டமே இல்லாத ஒரு துப்பறியும் நாவல் இது.

வெண்மதியோன் தண்மதி அவள் நித்யா மாரியப்பன்

அஸ்மிதா, இஷானி இரண்டு நாயகிகள். அவற்றில் ஒருவர் Intersex குழந்தையாகப் பிறந்தவர். அதாவது உருவத்தோற்றத்தில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்து அதற்கு எதிரான பாலினச் சுரப்புகள் மற்றும் உறுப்புகளைக் கொண்டவர்கள் `இன்டர் செக்ஸ்’ (Intersex) என்று அறியப்படுகிறார்கள்.  

பிறந்தவுடனேயே பால் தேர்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இக்கதையின் நாயகியை அவள் தந்தை ஏற்க மறுப்பதும் அவள் பிறப்பினைச் சுட்டிக்காட்டி அவளை அடித்துத் துன்புறுத்துவதும் அதனால் அவள் மனரீதியாகப் பாதிக்கப்படுவது போன்றவை இக்கதையின் ஒரு கருவாகவும், மேலும் ரசாயனத் தொழிற்சாலைகளால் ஏற்படுகிற பாதிப்புகளையும் மற்றொரு கருவாகவும் இணைத்து இரண்டு பாகக் கதையாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் நித்யா மாரியப்பன். மேலும் ஒவ்வோர் அத்தியாயத்தின் தொடக்கப் பத்திகளிலும் நாம் அறியாத தகவல்களை இணைத்திருக்கிறார் என்பது இக்கதையின் மிகவும் சிறப்புக்குரிய விஷயம்.  

யாவும் யாவுமே நீயானாய் – ரேவதி அசோக்

இதுவும் Intersex பற்றிய கதைதான். ஆனால் இந்தக் கதையில் பெண்மையின் உறுப்பைக் கொண்ட ஆண்தான் நாயகன். இது போன்ற உடலமைப்பைக் கொண்ட ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் மேலை நாடுகளில் இது பரவலாக நடந்து வருவதையும் கதையில் குறிப்பிட்டிருக்கும் ரேவதி அசோக், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்திகளில் ஆச்சரியத்துடன் கடக்கும் ஒரு சம்பவத்தை முழுக் கதை அனுபவமாக வாசகர்களுக்குத் தந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுவும் ஆறடிக்கும் அரையடிகூடக் குறையாத அதிரடியான ஆண்மகனைப் படைக்கும் குடும்ப நாவல் உலகத்தில் ஒரு கருப்பையுடன் கூடிய நாயகனைப் படைத்திருப்பதும் அவன் குழந்தை பெற்றதைப் போல எழுதி இருப்பதும் மிகவும் துணிச்சலான முயற்சி.  

பெண்கள் எழுதும் களங்கள் எல்லாம் பெரும்பாலும் சீரியல் டைப் டெம்ப்ளேட் டைப் என்று கிண்டலடிக்கும் ஆண் எழுத்தாளர்களுக்கும் கூட இப்படியொரு கதைக்களத்தைத் தொடும் மனத் தைரியம் வருமா என்று எனக்குத் தெரியவில்லை.

அமரா – மோனிஷா

இறுதியாக என்னுடைய ஓர் அறிவியல் புனைவையும் இந்தப் பட்டியலில் இணைக்க விரும்புகிறேன். ஆனால் என்னுடைய கதையை நானே விவரிப்பதற்குப் பதிலாக மரபணு பொறியியல் மற்றும் கணக்கீட்டு உயிரியியல் பட்டம் பெற்ற வெண்பா விமர்சனத்தின் சில வரிகளை இணைப்பது சரியாக இருக்கும்.

‘திருப்பங்கள் நிறைந்த அமிர்தா, அமரா இருவரின் தொடக்கத்திற்கும் முடிவிற்கும் இடையில்தான் கதை பயணிக்கிறது. மரபணு பற்றிய தகவல்களும், செண்டிலின் தீவு மக்களின் வாழ்க்கை முறையும் வியக்கத்தக்கதாகவே இருந்தன. மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும் யுத்தத்தில் எப்போதும் இயற்கைதான் வாகை சூடி தன் சமநிலையைக் குலையால் காத்துக் கொள்கிறது. அமராவைக் கொஞ்சம் புரட்டுங்கள். மனித இனத்திற்கு அவள் ஏதோ ஒன்றைச் சொல்ல விழைகிறாள்.’

நான் இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்ட அனைத்துமே குடும்ப நாவல்கள்தாம். ஆனால் குடும்ப நாவலின் இந்த முகம் பலரும் அறியாதது.

இதிலுள்ள பெரும்பான்மையான நாவல்கள் நான்கைந்து வருடங்களுக்கு முன்பாகவே புத்தகமாக வெளிவந்தவை. பலரும் அறியாத, அறியப்படாத தகவல்களைத் தங்கள் கதையினூடே இணைத்து சுவாரசியமான நாவல்களாகப் புனையப்பட்டவை.

இந்த எழுத்தாளர்கள் அனைவரும் இணையத்தில்தான் தங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினார்கள். கள ஆய்வுகள் செய்து எழுதப்படும் அபுனைவுகள் அல்லது இலக்கியத்தரமான நாவல்களுடன் குடும்ப நாவல்களால் போட்டி போட முடியாது. போட்டி போடவும் தேவையில்லை. வெகுஜன வாசிப்பு என்பது இதுதான். இதில் எதார்த்தம் குறைவாகவும் கற்பனை கூடுதலாகவே இருக்கும்.

ஆனால் இங்கேயும் எல்லா மாதிரியான கருத்துகளைக் கொண்ட நாவல்களும் உண்டு. ஊர் ஊராகப் பயணித்து ஆய்வு செய்து தகவல்களைச் சேகரிக்காவிட்டாலும் ஒரு வெகுஜன வாசிப்பிற்குத் தேவையான அளவிற்குத் தகவல்களை இந்த எழுத்தாளர்கள் சேகரித்து எழுதி இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் குடும்ப நாவல் உலகத்தில் தங்களுக்கு என்று தனி அங்கீகாரத்தைப் பெற்றவர்களாக இருந்த போதும் எழுத்துலகம் இவர்களை எல்லாம் பத்தோடு பதினொன்றாகக்கூட மதிப்பதில்லை.

சீரியல்களும் சினிமாக்களும் பேசும் பிற்போக்குத்தனங்கள் போலித்தனங்களை விடவா குடும்ப நாவல்கள் பேசுகிறது. அப்படி இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்தச் சிறிய பட்டியல். எனக்குத் தெரிந்த வரையில் நான் இந்தப் பட்டியலை உருவாக்கினேன்.

முந்தைய அத்தியாயங்களில் சொன்னது போலக் குடும்ப நாவல்களில் குற்றங்குறைகள் இருக்கிறதுதான். அவற்றை எல்லாம் களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமே ஒழியக் குடும்ப நாவல்களே குற்றம் என்று சாடுவது அல்ல.

குடும்ப அமைப்பிற்குள் அடைபட்டு நான்கு சுவர்களைத் தாண்டி வெளிவராத பெண்கள் இன்னும் இங்கே நிறையப் பேர் இருக்கிறார்கள். அந்தச் சுவர்களைத் தாண்டி அப்பெண்களைச் சுலபமாகச் சென்றடையக் கூடியது குடும்ப நாவல்கள் மட்டும்தான்.

அப்படிப்பட்ட பெண்களைத் தோழமையுடன் அணைத்துக் கொள்ளும் இத்தகைய நாவல்கள் அவர்களுக்குச் சரியான வழிகாட்டியாக இருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர்களை அந்தச் சுவர்களுக்குள்ளேயே பூட்டி வைக்கும் மாய உலகத்தைப் படைக்கக் கூடாது. அந்தப் பொறுப்புணர்வை இங்குள்ள குடும்ப நாவல் எழுத்தாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரையின் நோக்கமும் அத்தகைய கருத்தை வலியுறுத்துவதுதான். இங்குள்ள குடும்ப நாவல் எழுத்தாளர்களை இந்தக் கருத்து சென்றடைவதன் மூலமாக ஒரு சிறியளவிலான மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தால் அது நிச்சயம் மிகப் பெரிய மாற்றத்தைப் பெண்களின் வாசிப்புலகத்தில் ஏற்படுத்த கூடும் என்கிற நம்பிக்கையுடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து வாசித்து, தங்கள் ஆதரவையும் கருத்தையும் பகிர்ந்த வாசகத் தோழமைகளுக்கும், இந்தக் கட்டுரையைத் தங்கள் தளத்தில் எழுத வாய்ப்பு தந்த ஹெர் ஸ்டோரீஸுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

(நிறைவுற்றது)

படைப்பாளர்: 

மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.  இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.   

பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.