நானாக நான் – 6

வெளியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கேரளாவில் வசிப்பதால் தொடர்மழை தினசரி காட்சியாகிவிட்டது. மழை பிடிக்குமேயென்றாலும் இப்போது ரசிக்கும் மனநிலையில் இல்லை. நமக்கு பிடிப்பதும் பிடிக்காததும் நம் மனநிலையைப் பொறுத்து மாறுபடுகிறது இல்லையா. மெத்தப் பிடித்தவர் பிடிக்காமல் போவதும், பிடிக்காதவர் திடீரென்று பிடிப்பதும் எவ்வளவு சர்ச்சையான மனமாற்றங்கள். 

என் கல்லூரிக் காலம் வரை நான் ரஜினிகாந்த் அவர்களின் மாபெரும் ரசிகை. ஆனால் அவரது அரசியல் பிரவேசம் அல்லது நிலைப்பாடு என்னை அவரிடமிருந்து முற்றிலுமாக விலக்கிவிட்டது. ஒரு மனிதரை நமக்கு பிடிப்பதற்கு காரணம் அவர் உருவமாகவோ திறமையாகவோ பெரும்பாலும் இருப்பதில்லை. நாம் மனிதர்களின் சுபாவத்தை நேசிக்கிறோம். அவர்களின் கருத்துக்களை, சித்தாந்தத்தை, நிலைப்பாட்டை, பேச்சை, எண்ணத்தை நேசிக்கிறோம். 

நான் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த காலம். ஆறாம் வகுப்பில் ஹரி என்றொரு மாணவன். வகுப்பில் யாரைக் கேள்வி கேட்டாலும் அவன் முதலில் எழுந்து பதில் சொல்வான். அவனைக் குறிப்பிட்டு கேள்வி கேட்டால் பதில் சொல்லவே மாட்டான். எல்லா குழந்தைகளிடமிருந்தும் சற்று வேறுபட்டிருப்பான். பாடம் எடுக்கும் போது திடீரென்று எதையாவது பேச ஆரம்பித்து விடுவான். ‘அவன் அப்படித்தான் மேடம் நீங்கள் வகுப்பை தொடருங்கள்’, என்று மற்ற மாணவர்கள் சொல்வார்கள். மொத்த பள்ளியில் ஆறேழு குழந்தைகள் இப்படி மாறுபட்ட மனோபாவத்தில் இருந்தார்கள். 

கற்பித்தல் என்பது கற்றலன்றி வேறேது. தினமும் ஏதேனும் ஒன்றை கற்க ஆரம்பித்தேன் அந்த குழந்தைகளிடமிருந்து. 

ஹரி போன்ற பிள்ளைகளின் மனோபாவத்தை மற்ற பிள்ளைகளும், ஆசிரியர்களும் எப்படி பார்க்கிறார்கள் என்பது எவ்வளவு வினோதமானது. ஹரியால் சின்ன தோல்விகளைக் கூட தாங்கிக்கொள்ள முடியாது. 

காந்தியடிகளின் சத்திய சோதனையிலிருந்து ஒரு கதையைச் சொல்லி முடித்தவுடன், எல்லோருக்கும் கதை புரிந்ததா என்று நான்கேட்க, புரிந்தது என்று வேகமாய் தலையையாட்டி, ‘அந்த கதையை நான் திரும்பி சொல்லட்டுமா’ என்று எழுந்து நின்றான் ஹரி. ‘சரி சொல்லு’ என்று சொன்னவுடன் அவன் ஒரு ஆட்டுக்குட்டிக் கதையை சொன்னான். நான் காந்தியடிகளின் கதையை சொல்லச் சொன்னால் ஆட்டுக்குட்டியின் கதையை சொல்கிறாயே என்றால், ‘எனக்கு தெரிந்ததைத்தானே நான் சொல்ல முடியும். எனக்கு ஆட்டுக்குட்டி கதைதான் தெரியும் என்றான் பெருமையாக. 

காந்தியடிகள் அப்பழுக்கற்றவரா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஹரியின் ஆட்டுக்குட்டி அப்பழுக்கில்லாமல் என்னுடன் ஒட்டிக் கொண்டது. அந்த வகுப்பில் ஹரிக்காக மட்டும் நான் தனியாக பத்து நிமிடம் செலவு செய்வேன். பாடத்தில் நடுவில் அவன் பேச ஆரம்பித்தால் பாடத்தை நிறுத்திவிட்டு அவன் பேச்சை கேட்டு விட்டு மீண்டும் பாடத்தை தொடர்வேன். 

அன்றும் அப்படிப் பாடத்தின் நடுவில் ஏதோ பேச ஆரம்பித்தான். கேட்கும் மனநிலையில் நானில்லை. ‘ஹரி வகுப்பு முடியும் போது நான் உன்னிடம் பேசுகிறேன்’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் தொடர்ந்தேன். மூன்று நான்கு முறை மீண்டும் மீண்டும் எழுந்து பேச ஆரம்பித்தான். என்னால் வகுப்பைத் தொடர முடியவில்லை. ‘எடா, எந்தடா பிரஷ்னம்’ என்று  கேட்டுவிட்டேன் கோபமாக. உடனே அமைதியாக உட்கார்ந்துகொண்டான். 

வகுப்பு முடியும் தருணத்தில் ஆசிரியர் மாணவனை மரியாதை குறைவாக ‘டா’ போட்டு பேசுவது தவறு என்றான். மற்ற மாணவர்கள் அவனை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றப் பிள்ளைகளுக்கு ஆசிரியரிடம் இப்படி பேசப் பெரும்பாலும் தைரியம் வருவதில்லை. 

ஹரியின் வார்த்தை உண்மையானது. ‘ஆமாம் ஹரி நான் அப்படி சொல்லிருக்கக் கூடாது, நீயும் வகுப்பை தொந்தரவு செய்யக் கூடாதல்லவா’ என்றேன். ஆமாமென்று அமைதியாக ஆமோதித்துவிட்டு  உட்கார்ந்துகொண்டான். அடுத்த நாளிலிருந்தும் ஹரி இடையிடையே பேசிக் கொண்டேதான் இருந்தான். நம் இயல்புகள் அவனுக்கு இயல்பற்றவகைகளாகவும், நம் வினோதங்கள் அவனுக்கு இயல்பானதாகவும் இயல்பாகவே வாய்த்திருந்தது. 

மலையாளத்தில் எனக்கு வசைகள் அதிகமாகத் தெரியாது. என் ஏழாம் வகுப்பு மாணவர்களின் சண்டைகளை தீர்க்கும் பொருட்டு அவர்களுடன் பேசியதில் பல்வேறு கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன். ஒரு மாணவன் மற்றொரு மாணவனின் மண்டையை உடைத்திருந்தான். ‘என்ன பிரச்சனை’ என்று கேட்டதற்கு, ‘ என் அம்மாவை கெட்ட வார்த்தைகளில் வசைபாடினான்’ என்றான். 

பொதுவாக கல்லூரிகளில் காணும் பல்வேறு காட்சிகளை, அதிகப்படியான வார்த்தைகளை, சண்டைகளை, மாணவர்களின்  இடைநீக்கத்தை (சஸ்பென்ஷன்) என்று பலவற்றையும் பள்ளியிலேயே காண நேர்ந்தது. இந்த சமூகம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பது ஒரு புறமென்றால், இளைய மனங்களில் வீழ்ச்சிப் பாதையில் முக்கிய பங்காற்றுகிறது என்பது மறுபுறம். சுற்றி நடக்கும் வன்முறைகள், இயலாமைகள், கவனிப்பின்மை, அதிகாரம் என எல்லாமும் இளம் பிள்ளைகளின் எதிர் சிந்தனையாக மாறிவிடுகிறது. நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே திரும்பப் பெறுகிறோம்.

ஏழாம் வகுப்பில் இன்னொரு மாணவன். தன் தந்தை ஆறு மாத காலமாக தன்னிடம் பேசுவதில்லை. மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்றான். ‘ என் அப்பா எப்போதும் அம்மாவிடம் சண்டை போடுவார். அன்று ஒரு நாள் அறையில் தனியாக அவர் ஒரு தவறான சினிமாவைப் பார்த்துக் கொண்டிருந்ததை நான் தற்செயலாக கவனித்து விட்டேன். அதை நான் வெளியே சொல்லி விடுவேனோ என்று என்னை தினமும் அடிக்கிறார். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் அப்பா, இது சத்தியம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்து விட்டேன். அவருக்கு நம்பிக்கை வரவில்லை. இப்போது இது நடந்து கொஞ்ச மாதங்கள் ஆகி விட்டதால் தினமும் அடிப்பதில்லை. எப்போதாவதுதான்.’ 

இதுதான் அந்த மாணவன் என்னிடம் கொடுத்த வாக்குமூலம். ‘தவறுதலாக அந்த அறையில் நுழைந்து அவர் கைப்பேசியைப் பார்த்ததைத் தவிர வேறு ஒரு தவறையும் செய்யவில்லை மேடம்’ என்று கூறிய அந்த பிஞ்சு உள்ளத்திடம் என்ன ஆறுதல் நான் சொல்வதற்கு.

அடக்கி வைத்திருக்கும் அத்தனை வன்மங்களையும் காண்பிக்க சில ஆண்களுக்கு பெண்களும், சில பெற்றோர்களுக்கு பிள்ளைகளும், சில பிள்ளைகளுக்கு உடன் பயிலும் பிள்ளைகளும் என்று யாராவது சிக்கித்தான் விடுகிறார்கள். மறக்கடிக்கப்பட்ட அன்பாய், இளவயதில் இளநெஞ்சங்களில் ஊற்றப்பட்ட நஞ்சாய் எத்தனை எத்தனை வடுக்கள். 

‘திருமணமே போலியான ஏற்பாடுதானே’ என்று ஜே ஜே சில குறிப்புகளில் சுந்தர ராமசாமி எழுதியிருப்பது உண்மைதானோ என்று தோன்றுகிறது. உடைத்துப் போட்ட சிலையின் எஞ்சிய மண் துகள்களைப் போன்று நொறுங்கிக் கிடக்கும் பிள்ளைகளைக் காணும்போது கையறுநிலையில் பிள்ளைகளை தவறாக வழிநடத்தும் ஒவ்வொருவரும் குற்றவாளிகளே. 

கேரளப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன்.  மழை காலமானதால் யோகா வகுப்பறை மூடப்பட்டிருந்தது. ஒழுகும் வகுப்பில் பாடம் எடுக்க முடியாததால் அவரவர் வகுப்பிலேயே பாடம் எடுக்க வேண்டும். 

தன் காலை இழந்த பின்பும் இமய மலையின் சிகரத்தில் ஏறிய அரூணிமா சின்ஹா பட்ட பாடுகளை பற்றிய கதைகளை அந்த பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல. மனம், அதன் படிநிலைகள், உற்சாகமிழக்கும் தருணங்களில் நம் மனதை வளப்படுத்தும் வழிதானே. கதையைப் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொண்டிருந்த போது திடீரென்று அந்த வகுப்பாசிரியர் குட்டியேச்சன் உள் நுழைந்தார். உள்ளே ஒரு ஆசிரியை இருக்கிறாரே, உள்ளே வரலாமா என்ற எந்த கேள்வியும் இல்லாமல் உள் நுழைந்தார். தற்காலிக ஆசிரியர் என்பதாலோ அல்லது யோகா ஆசிரியை தானே என்பதாலோ இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். அவரைக் கண்டவுடன் நான் பேசுவதை நிறுத்தினேன். 

மாணவ மாணவிகளை பார்த்து ஒரு குறிப்பிட்ட தாழ்ந்த சாதியாகக் கருதப்படும் ஒரு சாதியின் வகுப்பைச் சொல்லி அவர்களை எழுந்து நிற்கச் சொன்னார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. பிள்ளைகளுக்கு பழகியிருக்கும் என்று தோன்றியது. சில மாணவ மாணவிகள் எழுந்து நின்றார்கள். அதில் ஒரு மாணவியைப் பார்த்து ‘நீயும் இந்த ஜாதியா? என்று முகத்தை சுளித்துக் கொண்டு கேட்டார். அந்தப் பெண் ஒரு மாதிரி குழைந்து, தயங்கி ஆமாம்… என்றாள். சரி சரி இந்த மாணவர்கள் எல்லாம் உணவு இடைவேளையின் போது என்னை வந்து பாருங்கள் என்று கூறினார். இப்போதுதான் அவர் கண்ணுக்கு நான் தெரிந்து விட்ட மாதிரி என்னைப் பார்த்து புன்னகைத்து, தலையசைத்து விடை பெற முற்பட்டார். நானும் தலையசைத்தேன். 

Concept vector created by freepik – www.freepik.com

என்னால் வகுப்பைத் தொடர முடியவில்லை. அந்த ஆசிரியரின் மீது கோபம் மட்டுமல்ல, வன்மமுமாய் இருந்தது. அன்று மாலை ஆசிரியர்களுக்கான கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. யோகாவிற்கும் கூட்டத்திற்கும் சம்பந்தமேயில்லையென்றாலும் கலந்து கொண்டே ஆகவேண்டும் என்பதால் கலந்து கொண்டேன். பல்வேறு விஷயங்களைப் பற்றி பல்வேறு ஆசிரியர்கள் பேசினார்கள். எந்த உணர்வுமில்லாமல் அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆசிரியர் குட்டியேச்சன் மேடையில் பேசினார். திடீரென்று என் மனம் விழித்துக் கொண்டது. என்ன பேசுகிறார் என்பதை கவனமாக கேட்க ஆரம்பித்தேன். மலையாள வாசனையோடு நிரம்பிய ஆங்கிலத்தில் பேசினார். பேச்சினூடே ‘நாம் நம் பள்ளி குழந்தைகளிடம் சாதி, மதம் போன்ற ஏற்றத்தாழ்வு பார்த்து விடக்கூடாது. என் முப்பது வருட பள்ளி வாழ்க்கையில்…’ என்று ஆரம்பித்து தன் சுய புராணத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.

கூட்டம் முடிவுற்றது. ஒவ்வொருவராக வெளியேறிக்கொண்டிருந்தார்கள். நான் வெளியேரும்போது மீண்டும் என்னை பார்த்து புன்முறுவலித்தார். என்னால் சிரிக்க முடியவில்லை, சகிக்கவும்கூட. என் கண்களில் கோபம் கொப்பளிக்க நான் அவரைக் கடந்தேன். வாய்ச்சொல்லில் வீரரான குட்டியேச்சனின் முகம், பரியேறும் பெருமாளில் வரும் தாத்தாவை ஏனோ நினைவூட்டியது. 

சமநிலையையும் சமத்துவத்தையும் போதிக்க வேண்டிய சில ஆசிரியர்களே இவ்வாறு இருப்பது கொடுமையின் உச்சம். கல்வி என்பது வெறும் படிப்பல்ல.  அது இவ்வுலகை, வாழ்வை புரிந்து கொள்வது. தொடர்ந்து கற்போம். தொடர்ந்து பேசுவோம். 

கதைப்போமா?

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.