‘இஸ்லாமாபாத்’ ஒப்பந்தம் ரப்பானியின் தொடர்ச்சியை வினோதமான முறையில் அங்கீகரித்தாலும், இது பெஷாவர் ஒப்பந்தத்தைக் காகிதத்தில் மட்டுமல்லாது அதன் ஆத்மாவையும் மீறியது. இந்த ஒப்புதலுடன், ஜனாதிபதி ரப்பானியும் அவரது படைகளும் மிகவும் சக்திவாய்ந்தவையாகி உறுதிபெற்று மேலும் அமைதியை நிலைகுலையச் செய்தன. ஆப்கானிஸ்தானை நிலைநிறுத்துவதற்கும் உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பதற்கும் வெளிநாடுகளின் முயற்சிகளில் நடந்த இந்த வகையான ஒப்பந்தங்கள் ஒருபோதும் வெற்றியளிக்கவில்லை. ஆப்கானிஸ்தானை யார் ஆட்சி செய்வது என்ற சண்டை தொடர்ந்தது. முஜாஹிதீன் குழுக்கள் சோவியத்திற்கு எதிராகப் போராடி ஆட்சிக்கு வந்திருந்தபோதும் ’அவர்கள் நாட்டை நிர்வகிக்கத் தவறிவிட்டனர்’, ’ஒரு மிருகத்தனமான உள்நாட்டு மோதலால் நாடு போரில் வீழ்ந்தது’ போன்ற விமர்சனங்களே எஞ்சின.

ரப்பானி Pic: wikipedia

பெஷாவர் ஒப்பந்தத்தை மீறியவர் அதிகாரத்தைத் தொடர வெளிப்படையாக ஒப்புதல் அளித்ததால் மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தான், யாரின் ஆட்சியை விரும்புகிறது என்பதைக் காண்பிக்கும் ஊழலாகவே இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இருந்தது. பிரச்னைக்குத் தீர்வை வழங்குவதை விடுத்து அவரே ஆட்சியில் தொடர்ந்திருக்கச் செய்த நடைமுறை ரப்பானியின் ஊழலையும் ஒப்பந்தம் பற்றிய சர்ச்சைகளையும் மேலும் அதிகரித்தது.

உள்நாட்டுப் போரின் மாறுதல் பக்கங்கள் தொடர்ந்து புரட்டப்பட்டுவந்ததால் ஒரு நிரந்தரத் தீர்வுக்கான ராஜதந்திர/அரசியல் தேடலும் தொடர்ந்தது. 1994இல், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. லோயா ஜிர்காவை (மாபெரும் சட்டசபை) கூட்ட வேண்டும் என்று ஜனாதிபதி ரப்பானி முன்மொழிந்தார்.

இடைக்கால நாடாளுமன்றத்திலிருந்து தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதும் தேசிய சட்டசபையின் எதிர்காலத் தேர்தல்களுக்கான நடைமுறைகளை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்பதும் அவரது முன்மொழிவுகள். லோயா ஜிர்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரிடம் ஜனாதிபதி பதவியை மாற்றவும் இப்போது அவர் தயாராக இருந்தார். ஆனால், ஹெக்மத்யார் ரப்பானியின் திட்டத்தை ஜீரணிக்கவில்லை. அவர் முதலில் ரப்பானி ராஜினாமா செய்ய வேண்டும், அதன் பிறகு நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்யலாம் என்று வலியுறுத்தினார். காபூலின் கட்டுப்பாட்டை ஓர் இடைக்கால நிர்வாகத்திற்கு மாற்ற வேண்டும். இந்த இடைக்கால நிர்வாகம் தேர்தலை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஹெக்மத்யார் விரும்பினார். ஹெக்மத்யார் மட்டுமல்ல, இன்னும் பலரும் ரப்பானியை ஒரு முறையான ஜனாதிபதியாக அங்கீகரிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவருடைய பதவிக்காலம் ஜூன் 1994இல் முடிவடைந்தது.

தளபதி ஹக்கானி Pic: globalnew.com

தளபதி ஹக்கானி சமாதான முன்மொழிவொன்றை முன்வைத்தார். மத அறிஞர்கள், முஜாஹிதீன் தலைவர்கள், பழங்குடித் தலைவர்கள், புத்திஜீவிகள் கொண்ட நாட்டின் நிர்வாக அலகுகள் ஒவ்வொன்றிலிருந்தும் மூன்று பிரதிநிதிகள் அடங்கிய இஸ்லாமிய கவுன்சில் அமைக்க அவர் அழைப்பு விடுத்தார். தங்களுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வுகள் குறித்தும் ஜனாதிபதியையும் பிரதமரையும் முடிவு செய்வது குறித்தும் இந்த கவுன்சில் முடிவு செய்ய வேண்டும் என்று ஹக்கானி விரும்பினார். அனைத்து கம்யூனிஸ்டுகளையும் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றவும் ஹக்கானி அழைப்பு விடுத்தார். ஆனால், இந்த முன்மொழிவை ரப்பானியும் தோஸ்தமும் நிராகரித்தனர்.

அமைதிக்கான மற்றொரு திட்டம் பிர் அகமது கைலானி, நபி முகமதி, முகமது ஆசிப் மொஹ்சேனி தலைமையிலான மூன்று நடுநிலை கட்சிகளாலும்கூட முன்மொழியப்பட்டது. ஒன்பது முஜாஹிதீன் கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட ஒரு சபைக்கு அதிகாரம் மாற்றப்பட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர். பின்னர் இந்த கவுன்சில், லோயா ஜிர்காவைச் சந்திப்பது பற்றி முடிவு செய்ய இருந்தது. இது ஆப்கானிஸ்தானின் எதிர்கால அரசியல் அமைப்பு குறித்து அழைப்பு விடுக்க இருந்தது. ஜனாதிபதி ரப்பானி இந்தத் திட்டத்தையும் நிராகரித்தார்.

Cruel war scenes, digital painting.

மறுபுறம், உள்நாட்டுப் போரின் அமைதிக்கான தீர்வுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஈடுபாடு 1994இல் அதிகரித்தது. துனிசியாவின் பிரதிநிதி மஹ்மூத் மிஸ்திரி தலைமையில் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு சிறப்புப் பணிக்குழுவை ஐநா அனுப்பியது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆப்கானிஸ்தானிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் உண்மை கண்டறியும் சுற்றுப்பயணத்துடன் இந்தச் சிறப்புப்பணி தொடங்கியது. ‘இரு தரப்பினாலும் ஒரு ராணுவ வெற்றிக்குச் சாத்தியமில்லை’ என்று சிறப்புக் குழு முடிவு செய்தது. இரண்டாம் கட்டத்தில், மஹ்மூத் மிஸ்திரி காபூலில் சண்டையிடும் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் தோல்வியுற்றார். மஹ்மூத் மிஸ்திரியின் பேச்சுவார்த்தைகள் தோல்விக்கும் ரப்பானி காரணமாக கூறப்பட்டது. ஐக்கிய நாடுகளின் முயற்சிகள் சாதகமான நிலைகளை எட்டவில்லை ஆதலால், ரப்பானி மீண்டும் சமாதான ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டார்.

அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தபோது, முஜாஹிதீன் பிரிவுகள் மீண்டும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கின. ஆப்கானிஸ்தானில் அமைதி ஒருபோதும் வராது என்கிறளவு உள்நாட்டுப் போரின் தீவிரம் அதிகரித்தது. அனைவரும் ஒரே தேசத்தவர்களாக ஒரே மதத்தைக் கொண்டவர்களாக இருந்தும் துரதிருஷ்டவசமாக ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையுடன் இருந்தனர். ஒவ்வொரு குழுவும் மத்திய அரசாங்கத்தை முழுமையாக அணுகவும் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது. அனைத்து மத விழுமியங்களையும் முடிவுறுத்தி இனப் பகை மீண்டும் மீண்டும் மேலோங்கிய ஆதிக்கம் செலுத்தியது. அதிகாரத்தின் மோகம் அவர்களின் இதயத்தை மற்ற சக குடிமக்கள் மீதான வெறுப்பால் நிரம்பியது. அவர்களுக்கு அதிகாரத்தைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை.

சோவியத் திரும்பப் பெறுதல் நிகழ்ந்தபோது சமாதானத்திற்கான நம்பிக்கையை உருவாகியது. ஆனால், துரதிருஷ்டவசமாக அதிக அவநம்பிக்கை கொண்ட அனைத்துப் போராளிக் குழுக்களும் மற்ற குழுக்களைக் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லத் தொடங்கின. சோவியத் ஆக்கிரமிப்பின் போது அனைத்து முஜாஹிதீன் பிரிவுகளும் அமெரிக்காவினதும் பாகிஸ்தானினதும் அதிகாரிகளால் துணையில் முழுமையாக ஆயுதம் ஏந்தியிருந்தன. சோவியத்துகளைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இப்போது ஆப்கானிஸ்தானின் சக குடிமக்களைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டன. அழிவு, குழப்பம் மீண்டும் குழப்பம் இப்படியாக ஆப்கான் மக்களின் மணி ஒலித்தது. இப்போது, உள்நாட்டுப் போர் அதன் உச்சத்தில் நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு சக குடிமகனின் தொண்டையிலும் மற்றொருவரின் விரல்கள் குத்திக்கொண்டிருந்தன. 1992-1994 வரை உள்நாட்டுப் போரின்போது 45,000 ஆப்கானிஸ்தானியர்கள் இறந்தனர். புர்ஹானுதீன் ரப்பானியும் ஹெக்மத்யரும் இப்போது அதிகாரத்திற்காகக் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர்.

அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற சர்வதேச நாடுகளின் உதவிகள் ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களுக்கு சோவியத் ரத்தக்களரிக்கு உதவின. சோவியத் படைகள் திரும்பப் பெறப்பட்டபோது ஒரு மாபெரும் சக்தியின் வெற்றிடம் உருவாகியது. அதிகாரத்தின் மீதான இந்த மோதலும் அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாடுமே ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரைத் தூண்டிய முதல் முக்கிய காரணம்.

ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரில் உள்நாட்டு அரசியல் காரணிகளும் முக்கியப் பங்கு வகித்தன. இதில் முக்கியமானவர்கள் போர்வீரர்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் துருப்புகளைத் திரும்பப் பெற்ற பிறகு போர்வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. சில இனத் தலைவர்கள் போர்வீரர்களாக மாறினர். அவர்கள் போட்டிக் குழுக்களின் நிலங்களையும், வர்த்தகத்தையும் கட்டுப்படுத்த முயன்றனர். கூட்டணிகளும் எதிரிக் கூட்டணிகளும் வழக்கமாகின. ஒவ்வொருவருக்கும் அவர்களின் சொந்த பழங்குடியினரின் நல்வாழ்வு மட்டும் முன்னுரிமையாக மாறியது. இது போட்டியை அதிகரித்து பல்வேறு போர்வீரர்களிடையே கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது.

ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரின் இரண்டாவது மிக முக்கியமான காரணம் இனம். முன்பு குறிப்பிட்டபடி, சோவியத் வெளியேறியவுடன் வெவ்வேறு முஜாஹிதீன் குழுக்களுக்கிடையேயான ஒற்றுமைக்கான காரணம் இனி இல்லையென்றாகிப் போனது. பழைய இன விரோதம் ஆப்கானிய அரசியலுக்குத் திரும்பியதுடன் முன்னைய விரோதங்களைத் தீர்த்துக்கொள்ள கொடுக்கப்பட்ட விலை தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது. அனைத்து இனக்குழுக்களும் தங்கள் சொந்த ஆயுதப் படைகளுடன் சோவியத் வெற்றிடத்தைப் பிடிப்பதற்காக காபூலை நோக்கி நகரத் தொடங்கின. முன்னர் குறிப்பிட்ட சர்வதேச காரணி உள்நாட்டுப் போரின் இனக் காரணத்துடன் நன்கு தொடர்புடையது. ஏனெனில் வெளிப்புற சக்திகள் சில குறிப்பிட்ட இனக் குழுக்களுக்கு உதவத் தொடங்கின. பாகிஸ்தான் பஷ்டூன் இனக்குழுக்களை ஆதரிக்கத் தொடங்கியது. ஈரானும் இந்தியாவும் ஹசாரா இனக்குழுக்களையும் வடக்கு கூட்டணியையும் ஆயுதமாக்கத் தொடங்கியது.

ஆப்கான் உள்நாட்டுப் போரில் பொருளாதார காரணி வரையறுக்கப்படாதது. ஆப்கானிஸ்தானில் போரே ’பெரிய முதலாளி’ ஆனது. ஏனெனில் அதிகரித்த வேலையின்மை இளைஞர்களை ஆயுதக் குழுக்களை நோக்கித் தள்ளுகிறது. வறுமையையும் பட்டினியையும் போர்வீரராக இருந்தால் மட்டுமே தவிர்க்க முடியும். பரவலான வறுமை, அழிவு, மில்லியன் கணக்கான இடம்பெயர்ந்த அகதிகள், சிதைந்த உள்கட்டமைப்பு போன்றவை ஆப்கானிய உள்நாட்டுப் போரின் சில விளைவுகள்.

(தொடரும்)

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.