இந்த வார்த்தைகளை வரவேற்று கடந்து வந்தவர்களாகவே நம்மில் பெரும்பாலானோரும் இருப்போம். வரையறைகளை உடைக்கத் தயங்காத நாம்தான் நம் பிள்ளைகள் ‘பிரேக் த ரூல்ஸ்’ என்று சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்க இயலாதவர்கள். எல்லா வரையறைகளையும் உடைத்துவிட முடியுமா அல்லது உடைக்க வேண்டுமா? உடைக்கப்பட வேண்டிய வரையறைகளுக்கான வரையறைகள் ஏதும் நம்மிடம் இருக்கிறதா? இந்த வரையறைகளைத் தீர்மானிப்பது அல்லது தீர்மானித்தது யார் என்பது போன்ற பல்வேறு கேள்விகள் நீண்டுகொண்டே போகிறது எனக்குள்.
திருடுவது தவறு என்ற வரையறை இருக்கிறதென்றால் அதை நாம் மீறலாமா? மீறினால் தண்டனைக்கு உட்படுவோம் என்று அறியும்போது நாமே அதை மீறத் தயங்குவோம். தண்டனைகளுக்கு உட்படாத வரையறைகள் குறித்தும் நம்மை அடிமைப்படுத்தும் அவசியமற்ற வரையறைகளும் குறித்தும்தான் இந்த கட்டுரை பேசவிருக்கிறது.
அடிப்படையில் இந்தச் சமூகம் தொடர்ந்து சில கட்டமைப்புகளை உருவாக்கி, அதில் பெரும்பாலும் பெண்களையே பகடைக்காயாக்கிக் கொண்டிருக்கிறது. ஆண்களே அதுவரை மருத்துவம் படித்துக் கொண்டிருக்க, முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி எழுதப்படாத விதியை மாற்றியதுபோல, நம்மிடையே இருக்கும் மூடக்கட்டுகளை உடைப்பதற்கு நம்மை ஆக்கமான செயல்களை நோக்கி நகர்த்திக்கொள்வதற்கு இந்த வாசகத்தைப் பயன்படுத்தலாம். அண்ணல் அம்பேத்கரின் அடங்கமறு, அத்துமீறு என்னும் எழுச்சிமிக்க வார்த்தைகளின் சமூக வடிவம் தான் இந்த ’பிரேக் த ரூல்ஸ்’ என்றே பார்க்கிறேன்.
வட இந்தியாவில் ஒரு கல்லூரியில் மாமிச உணவு உண்டதற்காகக் கல்லூரி மாணவியை மிக மோசமான முறையில் தாக்கியிருக்கிறார்கள். பாசிசம் தன் உணவை மட்டுமே சிறந்தது, தன் உடையும் அதன் வண்ணமும் மட்டுமே சிறந்தது என்று தொடர்ந்து எளிய மக்களின் ஜனநாயகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் நம் அடிப்படை உரிமைகள் கேள்விக்குள்ளாகிறதோ அங்கெல்லாம் நாம் அடங்க மறுப்போம். கண்ணுக்குத் தெரியாத பாசிசத்தின் அதிகாரச் சட்டங்களை உடைப்போம்.
நான் வசிக்கும் கொச்சியில் நிறைய கால்பந்து மைதானங்கள் இருக்கின்றன. எல்லா மைதானங்களிலும் மாலை நேரத்தில் ஆண்களும் சிறுவர்களும் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். ஏன் பெண் குழந்தைகள் அந்த மைதானங்களில் கால்பந்து விளையாடுவதில்லை. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெருநகரங்களில் பெண்கள் மைதானங்களில் விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். இங்கு சில பள்ளிகளில்கூடப் பெண் குழந்தைகளுக்கு விளையாட்டுக்கான முக்கியத்துவம் மிகக் குறைவாகக் கொடுக்கப்படுகிறது. விளையாட்டில் பாலினப் பாகுபாடு தேவையற்றது. அவசியமற்ற கட்டுகளை உடைத்து, பெண் குழந்தைகள் எல்லா விளையாட்டுகளிலும் முன்னேற வேண்டும். பல்லாங்குழியும் பாண்டியுமே பெண்களுக்கானது என்பதே பிற்போக்குத்தனம்தானே.
பாலியல் பலாத்காரச் செய்திகள் இல்லாமல் ஒருநாளும் நாளிதழைப் படித்துவிட இயலாது என்ற சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம். இன்னும் பெண்களின் குறைவான உடை ஆண்களின் வக்கிரத்தைத் தூண்டுவதாக இருக்கிறது என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். ஐந்து, ஆறு வயது பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். முழுமையான உடல் வளர்ச்சிகூடப் பெறாத அந்தக் குழந்தைகளின் சிறிய உடைதான் ஆண்களின் வக்கிரத்திற்குக் காரணம் என்று சொல்கிறதா இந்தச் சமூகம்?
சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் தன்னைத் தவறாகப் படம்பிடித்து விட்டார்கள். இனி எப்படி நான் வெளியில் செல்வேன் என்று கேட்டு அழும் நாயகியிடம் நாயகன் சூர்யா கூறுவதாக ஒரு வசனம் வரும். பெண்களைத் தவறாகப் படம்பிடித்த அயோக்கியர்கள் வெளியில் சகஜமாக நடமாடுவார்கள். அவர்களைப் பெற்றவர்கள் இயல்பாக நடமாடுவார்கள். எந்தக் குற்றமும் செய்யாத ஒரு பெண் நடமாடக் கூடாதா? நீ தைரியமாக இருந்து ஒரு சிறந்த முன்னுதாரணமாக மாற வேண்டும் என்று கூறுவார். பெண்ணின் உடலை அவளுக்குத் தெரிந்தோ தெரியாமலோ மோசமான முறையில் படம் எடுத்துவிட்டால் இனி அவள் வாழ்வதற்குத் தகுதியானவள் இல்லை என்கிற தவறான பிம்பத்தை இனியாவது நாம் உடைக்க வேண்டாமா?
முழு உடை அணிந்த பெண்களையும் சிறுபான்மையினர் என்று சொல்லி இதே சமூகம்தான் துரத்துகிறது. பெண்களின் ஆபாச உடையால்தான் அவர்களுக்குப் பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றன என்று பொய் பிம்பத்தையும் இதே சமூகம்தான் அளிக்கிறது. இந்த முரண்களை அடித்து உடைக்கப் போவது எப்போது?
தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் பெண்களின் ஒவ்வொரு பாகமும் வருணிக்கப்படுகிறது. பெண்ணின் கண், மூக்கு, உதடு என்று ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என்று சினிமா பாடல்கள் இருக்கின்றன. பெண்ணின் கூந்தலில் வாசனை உள்ளதா, இல்லையா என்பது குறித்துப் பேசுகிறது திருவிளையாடல் புராணம். பெண்களின் நிறம் குறித்த கட்டுகளும் திரைப்படங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்கும் பொதுமக்கள் வாயிலாகத் திரைப்படங்களிலும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது.
எழுபதுகளில் கறுப்பான ஆண்களை நாயகர்களாக ஏற்றுக்கொண்ட நம் சமூகம் இப்போதும் வெள்ளை நாயகிகளுக்குக் கறுப்பு வண்ணம் பூசியே நடிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழன்னையைக் கறுப்பாக, தலைவிரி கோலமாகக் காட்டியதில் பலருக்கும் எரிச்சல் வருகிறது. பெண்களின் கண், மூக்கு, உதடு எப்படி இருக்க வேண்டும் என்ற ஆண் சமூகத்தின் பிம்பத்தைச் சுக்குநூறாக உடைப்போம். ரகுமான் திரைப்படங்களிலிருந்து இம்மாற்றத்தைத் தொடங்கலாம் என்று கூறியதுபோல எழுத்தாளர்கள் அவர்கள் நாவல், சிறுகதை, கவிதைகளின் வழி இம்மாற்றங்களை முனைப்போடு தொடங்கலாம்.
தோழர் ஒருவர் முகநூல் பக்கத்தில் ஷவுட் (கத்து அல்லது உரக்கப் பேசு) என்ற வாசகத்தோடு டீசர்ட் அணிந்திருந்தார். இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் பெண் மென்மையானவள், அமைதியானவள், உடல் வலிமையில் ஆணைவிடத் தாழ்ந்தவள் என்ற மூட நம்பிக்கைகளுடன் நடமாடிக்கொண்டிருக்கப் போகிறோம்? பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் வலிமை கொண்டவளால் ஆண்களையும் இவ்வுலகையும் எதிர்கொள்ள இயலும்.
திணிக்கப்படும் எல்லாமுமே அதிகாரத்தின் உச்சம்தான். அது காதலோ காமமோ மொழியோ எதுவாக இருந்தாலும் அது திணிக்கப்படும்போது அதிகாரத்தின் சாட்சியாகவே இருக்கிறது.
இந்தி திணிப்பு அதுவும் ஆங்கிலத்திற்கு மாற்றாக என்னும் சர்வாதிகாரத்தின் குரலுக்கான எதிர்க்குரல் ஜனநாயகத்தின் குரலாக இருக்கட்டும். திருமணம் முடிந்த பெண்களைக் கணவனே ஆனாலும் மனைவியின் விருப்பமின்றி தொட்டால் அது பலாத்காரமே. அதற்குச் சட்டப்படி தண்டனை இருக்கிறது என்பதே நம் பெண்களில் எத்தனை பேருக்குத் தெரியும் ?
நாம் வணங்கும் எல்லாக் கடவுளர்களுக்கும் தாம் என்ன மதம் என்று தெரியுமா என்ற கேள்வி எனக்குள் முன்பெல்லாம் வரும். மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதானே எல்லா மதங்களும். மதங்கள்தாம் மனிதர்களுக்கான மூடநம்பிக்கைகளின் கூடாரம். அக்கூடாரத்தைச் சிதைப்பதன் மூலம் சமூகத்திற்குப் புதிய வெளிச்சத்தைக் கொண்டுவரலாம்.
பெண்களின் அந்தரங்க உறுப்பு ஆபாசம் என்று எண்ணும் எண்ணம்தான் பெரும்பாலான கெட்ட வார்த்தைகளும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளைக் கொண்டே பேசப்படுகின்றன.
பல திரைப்படங்களிலும் ஆண்கள் சிறுநீர் கழிப்பதைத் தொடர்ந்து காண்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். அது ஓர் இயற்கை உபாதைதான். பெண்கள் சிறுநீர் கழிப்பதைக் காண்பிப்பது அசிங்கம் என்று நினைக்கும் சமூகத்தில் ஆண்கள் சிறுநீர் கழிப்பதை எப்படிச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது? அதனால் தான் ஆண்கள் சாலை ஓரங்களில் சிறுநீர் கழிப்பதையும் சாதாரணமாகக் கடந்து போய் விடுகிறோமா?
இரண்டாம் திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு வரும் ஆண் தன் இரண்டாம் மனைவியிடம் முதல் மனைவியின் படத்தைக் காட்டி, ‘கும்பிட்டுக்கோமா’ என்று சொல்லும் எத்தனை காட்சிகளை நாம் திரைப்படங்களிலும் நிஜ வாழ்விலும் பார்த்திருக்கிறோம். இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண் எப்போதாவது தன் இரண்டாம் கணவனிடம் முதல் கணவனின் படத்தைக் காட்டி வழிபடு என்று சொல்லிவிட இயலுமா என்ற கேள்வியைத் தோழர் முத்துகிருஷ்ணன் ஒரு பேட்டியில் வலுவாகக் கூறினார் என்பதை நினைவுகூர்கிறேன்.
இதெல்லாம் சட்டமியற்றி திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் இல்லை. சமூகத்தால் சக மனிதர்களால் மாற்றப்பட வேண்டிய விஷயங்கள். கல்வியால், பொது அறிவால், பகுத்தறிவால் சிந்தித்து மாற்றப்பட வேண்டிய விஷயங்கள். திரைப்படங்களால், திரைப்பாடல்களால், கலைநிகழ்ச்சிகளால், நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றால், தொலைக்காட்சி விவாதங்களால் தொடர்ந்து பேசி, சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது நம் ஒவ்வொருவரின் கடமை.
உஸ்மானுக்கு ஒரு நீதியும் ரவிக்கு ஒரு நீதியும் வழங்கும் சமூகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதுபோன்ற எழுதப்படாத சமூக விதிகள் சாமானிய மக்களுக்கு, பெண்களுக்கு எதிராக இருப்பின் உரக்கக் கூறுவோம் ’பிரேக் த ரூல்ஸ்’ என்று.
கதைப்போமா?
படைப்பாளர்:
ஹேமலதா
சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.