நம் பாதைகளையும் பயணங்களையும் எங்கிருந்தோ யாரோ முன்னரே எழுதி வைத்துவிட்டனர் என்று நான் நம்பி இருந்த காலங்கள் உண்டு. பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய பின்னர் பாதைகளையும் பயணங்களையும் செப்பனிட்டு வழிநடத்துவது நாமன்றி வேறு யாருமிலர் என்ற தெளிவான சித்தாந்தத்திற்கு வந்துவிட்டேன். ‘பாதங்கள் உனது பாதைகள் எனது பயணத்தை தள்ளிப் போடாதே’ என்கிற வரிகள் நினைவுகளில் அலைமோதுகின்றன.

உண்மையில் பாதங்களும் பாதைகளும் பயணங்களும் நம்முடையதே. நாம் தேர்ந்தெடுக்கும் பாதைகள் நம் பயணத்தைச் செலுத்த இயலும். இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலர் தேசாந்திரிகளாகவும் சிலர் நாடோடிகளாகவும் சுற்றித் திரிகின்றனர். சிலர் பொருள் ஈட்டவும் வாழ்க்கைக்கான பாடுகளுக்காகவும் பயணிக்கின்றனர். இந்த வாழ்வே ஒரு பயணம். நகர்தலே வாழ்க்கை. பயணங்களின் வழியாக இந்த உலகை மேலும் புரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் இயலும் என்கிறார்கள் பயண வேட்கை உள்ளவர்கள்.

பயணங்களின் வழியாக பலவற்றையும் படைப்புகளில் கொண்டுவந்த மலையாள எழுத்தாளர் பஷீர் ஆண் வேசிகள், விபச்சாரகன் என்னும் வார்த்தைகளைத் தன் நாவலில் பயன்படுத்துகிறார். பெண்களை மட்டுமே அவ்வாறான வார்த்தைகளில் அழைத்து வந்த இச்சமூகத்தில், அவருடைய இவ்வார்த்தைகளுக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும் பாலின பேதம் கடந்து எழுதத் தெரிந்திருந்தது அந்தப் பயணிக்கு.

சின்ன வயதில் நம் ஊரில் ஏதேனும் ஒரு பகுதிக்கோ அல்லது பக்கத்து ஊருக்கோ சென்று வந்த சுற்றுலா இன்னும் நெஞ்சில் பசுமையாகத்தானே இருக்கிறது! இந்த உலகம் பல்வேறு விதமான மனிதர்களால் ஆனது. வெவ்வேறு விதமான உடை, நடை, கலாச்சாரம், பண்பாடு, உணவு பழக்க வழக்கங்கள், மொழி, நம்பிக்கை போன்றவற்றை உள்ளடக்கியது . எல்லாவற்றையும் அறிந்துகொள்ள இயலாவிட்டாலும் பயணிகளால் பல்வேறு விஷயங்களை உள்வாங்கிக்கொள்ளவும் அடிப்படைத் தன்மையிலிருந்து மீளவும் முடிகிறது எனலாம்.

வாழ்வின் கொள்கைகளோடு வாழ்பவர் சிலர். கொள்கைக்காகவே வாழ்பவர் சிலர். அப்படித் தன் கொள்கைகளுக்காகவே வாழ்ந்தவர்களில் ஒருவர்தான் பெரியார் என்று கூறுவார் சுப. வீரபாண்டியன். இப்படித் தன் வாழ்வின் பாதைகளை ஒரு கொள்கையோடு சேர்த்து இணைத்துக் கொண்டு தங்களை மாற்றியமைத்துக்கொள்வது இயல்பான காரியம் அல்ல. மனித மனம் மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. சரியான புரிதலோடு கூடிய ஒரு கொள்கையோடு வாழ்வில் பயணிப்பது மிக சவாலான ஒன்று. வாசிப்பும் பயணங்களும் நம் வாழ்வை வலுப்படுத்தக் கூடியவை.

சென்ற வாரம் கணித மேதை சகுந்தலா தேவி திரைப்படம் பார்த்தேன். நான்கு மாதங்களுக்கு மேல் ஒரு மாநிலத்தில் தங்க மாட்டாராம். மனிதர்களென்ன மரங்களா ஒரே இடத்தில் இருப்பதற்கு

என்ற ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பார் அத்திரைப்படத்தில். ‘மாற்றம் எனது மானுடத் தத்துவம். மாறாதிருக்க நான் மரமா செடியா?’ என்று கூறிய கண்ணதாசனின் வரிகள் மனதை ஆட்கொள்கிறது.

ஒரு புழுகூட நகர்ந்து நகர்ந்து தன் இலக்கை அடைந்து விடுகிறது. நகர்தல்தானே வாழ்க்கை!

நான் அமீரகம் செல்வதற்கு முன்னால் பாகிஸ்தானிகளைப் பற்றி வைத்திருந்த பிம்பம் வேறு. சொல்லப்போனால் அப்பிம்பம் முற்றிலும் தவறானது. என் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பாகிஸ்தானியப் பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பார், அதிலும் அலுவலகம் முன் பகுதியில் நின்றுகொண்டு ரசனையோடு புகைபிடிப்பார். அவரைப் பற்றி தவறான பேச்சுகள் எப்போதும் காதில் அடிபடும். ஒருநாள் அலுவலகம் முடிந்து வாகனத்திற்காகக் காத்துக்கொண்டிருந்த போது நானும் அவர் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தேன். அவர் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. சில ஆண்களும் அதே பகுதியில் நின்றுகொண்டு சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஆண்களைப் பற்றி இதுவரை அலுவலகத்தில் யாரும் பேசியதே இல்லை. நான் அவர் சிகரெட் பிடிப்பதைச் சம உரிமை என்றோ சரி என்றோகூடச் சொல்ல வரவில்லை. ஒரு பெண் என்பதால் மட்டுமே அவர் பேசுபொருளானதைப் பற்றித்தான் சொல்கிறேன். இந்தியா பாகிஸ்தான் என்பது எதிரி நாடுகளைப் போலவே என் மனதில் கட்டமைக்கப்பட்டிருந்தது. பழகியதில் பல பாகிஸ்தானிய நண்பர்கள் எனக்கு சகோதர சகோதரிகளாக மாறினார்கள். யாரும் எதிரிகள் அல்லர்.

காந்தி தன் வாழ்வைச் சமூகத்திற்காகப் புனரமைத்துக்sகொண்டவர். புரட்சிப் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டவர் பகத்சிங். தான் வாழும் சமூகத்தில் பெண்களின் நலன் காக்கவே தன் பாதையை வகுத்துக்கொண்டவர் ஜோதிராவ் புலே. மானுட விடுதலையை நோக்கி நடைபோட்டவர் பெரியார். இப்படித் தன் வாழ்வின் பாதைகளை செம்மையுற கட்டமைத்துக்கொண்டவர்கள் நம் தலைவர்கள். தத்துவவியலாளரான புரூனோவைப் போல அல்லாது, தன் கண்டுபிடிப்புகளை மதம் தடை செய்தபோது, மன்னிப்பு கேட்டார் விஞ்ஞானி கலிலீயோ. சூரிய மண்டலத்தில் சூரியன் நடுவிலிருக்கிறது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள் மதபோதகர்கள். இறைவன் வீற்றிருக்கும் பூமியே நடுவில் அமைந்திருக்கிறது என்றும் வாதாடினார்கள். ‘புதிய விஞ்ஞானமும் வாதங்களும்’ என்கிற அவருடைய புத்தகம் மேலும் பிரச்னைகளை உருவாக்கியது. அவருடைய அறிவியல் கண்டுபிடிப்பு மத போதகர்களால் தடை செய்யப்பட்டது. மதத்திற்கும் மத போதகர்களுக்கும் எதிராகப் பேசினால் புரூனோவைப் போல தன்னையும் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கோரினார் கலிலீயோ. அதனால் மரண தண்டனையிலிருந்து தப்பி வீட்டுச் சிறையில் வாழ்நாள் முழுவதையும் கழித்தார்.

இப்படி அவரவர் பாதைகளை வாழ்வின் அடுத்த கட்டங்களைத் தீர்மானிக்கும் உரிமை பெரும்பாலும் அவரவர்களுக்கே இருக்கிறது.

மனிதன் உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் நில வழியாக நடந்து கொண்டே இருந்தான். அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக உலகம் உருண்டை என்பதை அறிந்து கொண்ட மனிதன் நில வழிப் பயணங்களோடு நீர்வழி, ஆகாய வழிப் பயணங்களையும் திட்டமிட்டுச் செல்லத் தொடங்கினான். இப்படி எல்லா வகை பயணங்களிலும் நிறைகளைப் போல குறைகளும் இருக்கின்றன. குறிப்பாக விபத்துகள் குறித்து நாம் அலச வேண்டியுள்ளது. இந்தியாவில் 2010இல் இருபது சதவீதமாக இருந்த சாலை வழி விபத்துகள் 2020இல் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவரம் திடுக்கிட வைக்கிறது. விபத்தில் பலியான சாமானியர்களுக்கு யார் பதில் சொல்லப்போகிறோம்? அவர்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்? இப்படிப்பட்ட விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முறையற்ற சாலை அமைப்பு, பருவ நிலைகளுக்கு ஏற்பச் சரியாகத் திட்டமிட்டு கட்டப்படாத சாலைகள், முறையான தேர்வு முறையற்ற வாகன உரிமம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளைப் பின்பற்றாமை, மழைக் காலங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரும் கழிவு நீரும். இப்படிச் சாலை விபத்துகளுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தனிமனித கவனக்குறைவு முதல் அரசின் கவனக்குறைவு வரை பல்வேறு காரணங்கள் உள்ளன எனலாம். இவற்றையெல்லாம் எப்படிப் பழுது பார்க்கப் போகிறோம்?

நான் வசிக்கும் கொச்சியில் தனியார் பேருந்துகளும் சில நேரத்தில் அரசுப் பேருந்தும்கூட ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டுதான் வாகனம் ஓட்டுகிறார்கள். பேருந்துக்கு அருகில் வாகனம் ஓட்டுவதற்கு இருசக்கர ஓட்டுநர்களும் இதர ஓட்டுநர்களும் பயந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

விபத்திற்கு உள்ளான ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போன மாதம் மட்டும் கிட்டத்தட்ட 400 வழக்குகள் கேரளாவில் மட்டும் பேருந்து ஓட்டுநர்கள் மீது போடப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்பொழுதும் பேருந்து ஓட்டுநர்கள் போட்டியின் அடிப்படையிலேயே வாகனத்தை ஓட்டுகின்றனர். இப்படி ஒவ்வோர் ஊரிலும் எத்தனையோ விபத்துகள் இன்றும் நடந்துகொண்டே இருக்கின்றன. நம் வேகத்தைச் சாலைகளில் மட்டுமே காண்பிக்கும் சிறிய மனம் கொண்டவர்களாக நாம் மாறிவிட்டோமா?

சென்னையில் வாகனத்தில் செல்லும் போது சிக்னலில் சிவப்பு விளக்கு வந்தவுடன் வண்டியை நிறுத்தினால் பின்னாலிருக்கும் பேருந்து ஓட்டுநர்கள் சாலை விதியைப் பின்பற்றியதற்காக மிக மோசமான வசையை நம் மேல் பொழிவதைப் பலமுறை கண்டிருக்கிறேன். சாலை விதியின் சட்டங்கள் பிற நாடுகளைப் போல நம் நாட்டிலும் கடுமையாக்கப்பட்டால் தவிர, சாலை விபத்துகளைத் தடுப்பது கடினமே. நமக்கும் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக இத்தகைய விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்துகொள்ள முனைவோம்.

நம் பாதைகளை அது சாலை பாதைகளானாலும் வாழ்வுப் பாதைகளானாலும் சீர்படுத்திக்கொள்ள வேண்டியது நம் இன்றியமையாத தேவை. உளவியலாளர் ஜோ டிஸ்பென்ஸா நம் உடலே நம் ஆழ்மனம் போல செயல்படுகிறது என்று குறிப்பிடுகிறார். உடல் எப்படி ஆழ் மனமாகும் என்கிற குழப்பம் எனக்குள்ளும் எழத்தான் செய்தது. மனம் அதிகாலையில் நம்மை எழுப்பும் போது நாம் எழ வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவெடுப்பது அங்கு உடல் தான். ஆக உடலே ஆழ்மனமாகச் செயல்படுகிறது என்கிற வித்தியாசமான உரையை அவர் பேசக் கேட்டேன். அப்படியாயின் நம் மனமே பாதை அமைக்கிறது. உடல் பயணத்திற்குத் தயாராகிறது. கட்டற்று விரிந்திருக்கும் இப்பிரபஞ்சத்தில் கடவுள், சொர்க்கம், நரகம் என்ற பிதற்றல்களை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, நம் பாதையை நாமே தேர்ந்தெடுப்போம். பாதையில் உள்ள பிரச்னைகளைச் சீர் செய்வோம். பயணங்களுக்கு இன்பமாக வழிகோலுவோம். புதியதோர் பயணத்திற்குத் தயாராவோம் கட்டற்ற சுதந்திரத்தோடு.

கதைப்போமா ?

படைப்பாளர்

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.