நான் படித்த ஒரு நாவலில் நாயகன் நாயகியின் கன்னித்தன்மையைச் சந்தேகப்படுவான். தன்னுடன் இருக்கும் போதே தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைப்பான். அவனுக்கு நிரூபிக்க முயன்று அவள் தோற்றுப் போவாள். இருந்தாலும் நாயகியைத் திருமணம் செய்து முதலிரவில் அவளுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்ட பிறகு,அவளை ’ஒழுக்கமானவள்’ என்று உணர்ந்து, தன் செயலை நினைத்து வருந்துவான்.

முதல்முறை உடலுறவுகொள்ளும் போது பெண்களுக்கு ரத்தக்கசிவு ஏற்படுவது, அவள் கன்னித்தன்மையை அன்றுதான் இழக்கிறாள் என்பதற்கு அடையாளம் என்ற மிகப்பெரிய ’மூடநம்பிக்கை’ ஒன்று நிலவிவருகிறது.

எதனால் ரத்தக்கசிவு ஏற்படுகிறது?

பெண் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு பகுதியான வைஜைனா எனப்படும் யோனியின் வெளிப்புறத்தில் உள்ள சவ்வுதான் ஹைமன். இந்த ஹைமன் ஆணும் பெண்ணும் முதல்முறை உறவுகொள்ளும் போது கிழிந்து ரத்தக்கசிவு ஏற்படும். இதற்கு ஆங்கிலத்தில் ’பாப்பிங்க் தி செர்ரி’ என்று சொல்வார்கள்.

இதன் மூலம் பெண்ணின் கன்னித்தன்மை உறுதி செய்யப்படுகிறது என்ற அற்புதமான இந்தக் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசைக்கூடப் பரிந்துரைக்கலாம்!

இந்த ஹைமன் மாதவிடாய் வெளியே வரவும், யோனியிலிருந்து மற்ற திரவங்கள் வெளியேறவும் ஒரு பாதித் திறப்பு போலிருக்கும் பகுதி. இது கண்களுக்குத் தெரியாது. இது இருந்தாலும் இல்லை என்றாலும் ஒரு பிரச்னையும் இல்லை.

விளையாடும்போது, சைக்கிள் ஓட்டும்போது, கடினமான வேலைகளைச் செய்யும்போது ஹைமன் நெகிழ்ந்துவிடும். இப்படிப்பட்ட பெண்கள் முதல்முறை உறவுகொள்ளும் போது ரத்தக்கசிவு ஏற்படாது. இதை வைத்து ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைச் சந்தேகப்பட முடியாது.

இதெல்லாம் இருக்கட்டும், இந்த ஹைமனே இல்லாமல் பிறக்கும் பெண்களும் உண்டு. இவர்கள் எப்படிக் கன்னித்தன்மையை நிரூபணம் செய்ய முடியும்?

ஹைமன் ஒரு எலாஸ்டிக் ரப்பர் போன்றது. உடலில் ஏதாவது ஒரு சவ்வு இப்படி நெகிழ்ந்தால் ரத்தக்கசிவு ஏற்படுவது இயல்புதான். ஹைமன் நெகிழ்ந்தாலும் பழைய நிலையை மறுபடியும் அடைந்துவிடும். அது கிழியாது.

டெட் டாக்ஸில் ஹைமன் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசியிருந்தார்கள். அதில் ஒரு பாலியல் தொழிலாளிக்கு ஹைமன் எந்தவிதச் சேதமும் இல்லாமல் கன்னிப் பெண்ணைப் போல் இருந்தது.

ஹைமன் பற்றிய அடிப்படை மூடநம்பிக்கைகள் எல்லாம் அடிபட்டுப் போகின்றன. இந்த உண்மை மருத்துவ உலகிற்கு 1900இல் தெரியவந்தது.

’கன்னி’த்தன்மை , கற்பு’ போன்ற கருத்துகள் எல்லாம் பெண்களைக் கட்டுப்படுத்த ஆண்களால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்களில் ஒன்று. பெண்களை உடைமைகளாக்கப் பயன்படுத்தப்பட்டவை. கன்னித்தன்மை’ உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் நம்பப்பட்டுவருகிறது.

இதைக் காரணமாகக் காட்டி ஆணவக் கொலைகள் உட்பட பல்வேறு கொடுமைகளைப் பெண்கள் மீது செலுத்தி வருகிறது ஆண்கள் சமூகம்.

மெல்லிய கண்ணுக்குப் புலப்படாத ஒரு சவ்வை வைத்து, பெண்ணின் ஒழுக்கத்தை மொத்தமாக எடைபோட முடிகிறது. கன்னியா இல்லையா என்பதை எல்லாம் சோதித்து அறிந்துகொள்ள முடியாது. பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் போலியான ஹைமனை உருவாக்க முடியும்.

கன்னித்தன்மை என்ற மூடநம்பிக்கையால் பெண்கள் இன்றும்கூட அவதிப்பட்டு வருகின்றனர். ஆண்களுக்கு எப்படி அவர்கள் கன்னித்தன்மையை உறுதி செய்ய முடியாதோ அதேபோல் தான் பெண்களுக்கும்.