தமிழ் ஓவியா ஐஏஎஸ்

கரிக்காரன்புதூர். பழனியிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சிறிய கிராமம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், கொல்கத்தாவின் துணை ஆட்சியராகப் பதவி ஏற்க இருக்கிறார்! அவர் ’தமிழ் ஓவியா’. 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய ஆட்சிப்பணிக்கான பட்டியலில் 345வது இடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

“தாராபுரத்திலிருந்து பேருந்தில் பழநிக்கு வந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் தேர்வு முடிவு வெளிவந்தது. என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனே அப்பாவை அழைத்து நான் வெற்றி பெற்ற விஷயத்தைச் சொன்னேன். ஒரு வாரம் வரை அப்பாவின் ஆச்சரியம் குறையவேயில்லை. அம்மாவும் ஊர்க்காரர்களும் என்னைக் கொண்டாடித்தீர்த்துவிட்டார்கள்!” என்று அந்த நாளை நினைவுகூர்கிறார் ஓவியா.

விவசாயக் குடும்பம். அப்பா செளந்தரபாண்டியன் முற்போக்குச் சிந்தனை கொண்டவர். அம்மா முருகேஸ்வரிக்குக் குழந்தைகளின் கல்வி மீது அதீத ஆர்வம். அண்ணன் தமிழ் வசந்தன் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர். தங்கை தமிழ் இலக்கியா. இந்தக் கிராமத்துக்குப் பேருந்து வசதிகூட அடிக்கடி கிடையாது. அருகிலுள்ள நெய்க்காரப்பட்டியில் அரசு உதவிபெறும் ரேணுகாதேவி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தார் ஓவியா. பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

”பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கியதற்காகத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கையால் லேப்டாப் பரிசு பெற்றேன். ஒரு டாக்டராக வேண்டும் என்பதே என் ஆசையாக அப்போது இருந்தது. ஒரு டிகிரி முடித்துவிட்டு, யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி ஆகலாமே என்றார் என் ஆசிரியர். அட, இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று தோன்றியது. உடனே களத்தில் இறங்கினேன். கடினமாக உழைத்தேன். மனம் தளறாமல் தொடர்ந்து முயற்சி செய்தேன். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என் கனவு, லட்சியம் நிறைவேறியது. இரண்டு ஆண்டுகள் கொல்கத்தாவில் பயிற்சி பெற்று வந்தேன். ஜூலை முதல் வாரத்திலில் சார் ஆட்சியராகப் பணியில் சேரப் போகிறேன்” என்று ஓவியா சொல்லும்போது மிகவும் பிரமிப்பாக இருந்தது.

சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த ஓவியாவை ஐஏஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவர் பெற்றோருக்கு இல்லை. நன்கு படித்த குடும்பங்களில் இருப்பவர்களால்தான் ஐஏஎஸ் ஆக முடியும் என்ற திடமான நம்பிக்கை அவர்களுக்கு. தன்னுடைய கடின உழைப்பால் அந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்கியிருப்பதோடு, கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறார் ஓவியா.

ஐஏஎஸ் படிப்புக்காகப் பெரிதாக செலவு செய்யவில்லை. கட்டணம் இல்லா பயிற்சி மையத்தில்தான் படித்தார். நான்காவது முறை வெற்றியை ருசித்துவிட்டார்.

கல்லூரிப் படிப்புக்குப் பின், கனரா வங்கியின் விவசாயத்துறை விரிவாக்க அதிகாரியாகப் பணிபுரிந்தார் ஓவியா. நல்ல சம்பளம். ஆனால், வங்கியில் பணிபுரிந்துகொண்டே ஐஏஎஸ்க்குப் படிப்பது சிரமமாக இருந்தது. எனவே வங்கி வேலையை விட்டுவிட்டு, தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் உதவியாளராகப் பணியாற்றினார். இதில் அவர் அம்மாவுக்கு வருத்தம். ஆனால், அப்பா ஓவியாவின் விருப்பத்தில் தலையிடவில்லை.

வெள்ளிக் கிழமை மாலை கோவை செல்வார். இரு நாட்கள் தங்கிப் படித்துவிட்டு, ஞாயிற்றுக் கிழமை இரவு வீடு திரும்புவார். ஓய்வில்லாத காலக்கட்டம். சென்னையில் அரசு நடத்தும் அண்ணா சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்திலும் கட்டணம் இன்றிப் படித்தார். தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவின் தெற்கு மண்டலமான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் பணி கிடைக்கவில்லை. கிழக்கு மண்டலமான மேற்கு வங்கத்தில்தான் பணி கிடைத்தது. பயிற்சியின்போது உத்தரகான்ட், அந்தமான், டார்ஜிலிங் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்றுவந்த அனுபவம் நிறைவாக இருந்ததாகச் சொல்கிறார்.

”சின்ன வயசிலிருந்தே படிப்பதில் ஆர்வம் அதிகம். எங்கள் ஊரில் சிறிய நூலகம் இருந்தது. மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே, பள்ளிக்கூடம் விட்டதும் அந்த நூலகத்துக்குப் போய்விடுவேன். செய்தித்தாள், கதைத் புத்தகங்கள் படிப்பேன். என் குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான நேரத்தை நூலகத்தில்தான் கழித்திருக்கிறேன். பெண் குழந்தைகள் மேல் பெற்றோருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். படிக்கும்போதும் பயிற்சியின்போதும் தனியாகவே எங்கும் செல்வேன். எங்கள் வீட்டில் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாது. எங்கே போகிறாய், எப்பொழுது வருவாய் என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். ஐஏஎஸ் ஆவதற்குப் பணம் தேவையில்லை, மனம் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் ஐஏஎஸ் ஆகலாம். இந்த வெற்றியைத் தனிப்பட்ட என்னுடைய வெற்றியாக நான் நினைக்கவில்லை. என் கிராமமே என் வெற்றியில் மகிழ்ந்து, பாராட்டு விழா எல்லாம் நடத்தியது. அதனால் வசதி, வாய்ப்புகள் கிடைக்காத கிராம மக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்வேன்” என்கிறார் தமிழ் ஓவியா.

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.