சமீபகாலமாக கதாநாயகிகளை மையப்படுத்திய திரைப்படங்கள் வெளிவருவதைத் திரைதுத்றையின் சிறு மாற்றாகப் பார்க்கலாம். பெண்களை மையப்படுத்திய படங்கள் என்று சொல்வதில் சில இடையூறுகள் இருப்பதையும் தவிர்க்க முடியாது. மாஸ் ஹீரோக்களின் மத்தியில் தங்களை மாஸாக முன்னிருத்துவதின் மூலம் மட்டுமே திரைத்துறையில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்கிற நிர்பந்தத்திற்கும் ஆளாகிறார்கள். சினிமாத்துறையில் சில மாற்றாங்களைப் பார்க்க முடிந்தாலும், ‘பொது புத்தி’யின் சிறு துளியைக்கூட நம்மால் அசைத்துப் பார்க்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் முன்னணி கதாநாயகிகள் நடித்து வெளிவந்த திரைப்படங்களான கனெக்ட், ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி போன்ற திரைப்படங்கள் இந்த வருடம் தியேட்டர்களை நிரப்பி இருந்தன. ஹீரோக்களின் முகத்தை மட்டும் ‘பேனர்’ முழுக்கப் பார்த்துவந்த நமக்கு, ஹீரோயின்கள் நிரம்பி இருந்ததைப் பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதுவே ஒரு மாற்றமாகத்தான் காட்சியளித்தது.
பொதுவாகத் தயாரிப்பாளர் உலகம், ஹீரோயின்களை மையப்படுத்திய கதைகளை நம்புவதில்லை. வசூல் பார்க்க முடியாது என்பது அவர்களது எண்ணம். எனவே கதாநாயகிகளின் கதைத் தேர்வில் வசூலுக்கான இடமும் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. இவற்றையெல்லாம் கடந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும், சமூகத்தின் பிரச்னையைப் பேசும் படங்களைத் தேர்வு செய்வதில் ஹீரோக்களை ஓவர் டேக் செய்துவிடுகின்றனர் ஹீரோயின்கள். அப்படி வெளி,வரும் படங்களை இந்த பொதுச்சமூகம் வரவேற்கிறதா, கொண்டாடுகிறதா ஆதரவளிக்கிறதா என்பதெல்லாம் பதில் சொல்லப்படாத கேள்விகள்தாம்.
குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக இங்கு எவை முன்னிறுத்தப்படுகின்றன? குடும்பங்கள் எத்தகைய படங்களைக் கொண்டாடுகின்றன? உருவத்தை வைத்து ஒரு பெண்ணைக் காதலிப்பது, அதற்குப் பார்த்தவுடன் காதல் என்கிற batch-ஐ குத்தி, அக்காதலைப் புனிதப்படுத்துவது (Gloryfy). பிடிக்காத பெண்ணைத் துரத்தி துரத்தி காதலிப்பது, ‘எங்கள மாதிரி பசங்கள பார்த்தா பிடிக்காது, பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும்’ என்பது போன்ற வசனங்களின் மூலம் ஹீரோக்களின் (stalking) செயலை நியாயப்படுத்துவது.
பணத்தைப் பார்த்து, அழகைப் பார்த்து காதலிக்கக் கூடாது என்று கைதட்டலுக்கு அட்வைஸ் மழையைப் பொழிந்துவிட்டு, அழகா இருக்குற குறிப்பா வெள்ளையா இருக்குற பணக்காரப் பெண்களைக் காதலிப்பதே ஆண்மைக்கான (masculinity) சவாலாகக் காட்டப்படுகிறது. காதலியைக் கொஞ்சம்கூட அறிவே இல்லாத வெகுளியாகக் காட்சிப்படுத்துவது. குடும்பங்களில் ஆண்கள் செய்யும் தவறை மருந்துக்குக்கூட கண்டனம் செய்யாமல், அதைத் தவறு எனச் சுட்டிக்காட்டாமல், “ஒரு குடும்பம் நல்லா இருக்கணும்னா அது பொம்பள கையிலதாம்மா இருக்கு” என்று மொத்த பாரத்தையும் பெண் மேல் சுமத்துவது. பெண்ணைத் தியாகியாகக் காட்டி, குடும்பத்துக்காகவே வாழ்ந்து செத்துபோக வேண்டும் என்கிற கிரிஞ் (cringe) கதைகளை உணர்ச்சிமிகைப்படுத்திக் காட்டுவது. சாதிய ஆதிக்கத்தையும் ஆணாதிக்க விதைகளையெல்லாம் கொஞ்சம்கூடக் கூசாமல் தூவிவிட்டு வளர்க்கப் பார்க்கும் படங்களையெல்லாம், ‘குடும்பங்கள் கொண்டாடும் படங்கள்’ என முன்னிறுத்தும், கொண்டாடும் பொதுச்சமூகத்தின் ‘மனநிலையை’ என்னவென்று குறிப்பிடுவது.
குடும்ப உறவுகளால் குழந்தை பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாவதைப் பேசிய கார்கி போன்ற படங்கள் ஏன் பொதுச்சமூகத்தில் எந்தவொரு விவாதத்தையும் விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஷியாம் சிங்கா ராய் படத்திற்காக சாய்பல்லவியைக் கொண்டாடிய ரசிகர் பட்டாளம் ஏன் கார்கிக்குப் படையெடுக்கவில்லை? தனது அப்பாவோ அண்ணனோ தம்பியோ ரேப்பிஸ்டாக இருந்தால் என்ன செய்வது என்கிற கேள்வி குடும்பங்களை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கியதைப் பொதுச்சமூகத்தால், பாரம்பரியத்தைக் கட்டிகாக்கும் குடும்பங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கார்கி வெளிவந்து இரண்டாவது வாரத்தில் திரையரங்கிற்குச் சென்றிருந்தபோது பெருமளவிலான கூட்டம் அங்கு இல்லை. மூன்றாவது வாரத்தில் படத்தையே தியேட்டரில் காணோம். படம் குறித்த விளம்பரங்களோ ஊடகங்களில் பெருமளவில் இல்லை. ஆனால், அதற்குபின் வந்த ‘தி லெஜண்ட்’ தியேட்டர்களை கபளீகரம் செய்துகொண்டது. ஊடகங்களில் முழுக்க முழுக்க அத்திரைப்படத்தைப் பற்றிய பேச்சுகளே. சமூக வலைத்தளத்தில் மீம்களும் டிரோல்களுமாக வலம்வந்த அத்திரைப்படம், ஏதோவொரு வகையில் பேசு பொருளாக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் வெளியான படங்களின் நிலைமையும் இதேதான். அதற்குப் பிறகு வந்த ‘வாரிசு’, ‘துணிவு’ போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களால் முந்தைய படங்கள் தியேட்டரைக் காலி செய்தன. டிரைவர் ஜமுனா, ராங்கி, செம்பி போன்ற படங்கள் மாஸ் ஹீரோக்களின் படத்தை ஒப்பிடுகையில் நல்ல கதை அம்சத்தைக் கொண்ட படங்களே. இன்னும் பொதுச்சமூகம் ஏன் கதாநாயக பிம்பத்தையே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பெண்ணுக்குப் பிரச்னைனாலும் அங்கு மீட்பராக கதாநாயகனைத்தான் தேடுகிறது. பெண்ணே அவளுக்கான நீதியைக் கேட்கும்போது ஆண் மனம் அதை ஏற்கத் துணிவதில்லை.
‘குடும்ப வன்முறை’ (domestic violence) குறித்து அழுத்தமாக இந்திய சினிமா இப்போதுதான் பேசத் தொடங்கி இருக்கிறது. தெலுங்கில் ‘அம்மு’, மலையாளத்தில் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படங்களைத் தொடர்ந்து ‘ஜெய ஜெய ஜெய ஹே’ போன்ற திரைப்படங்கள் வெளிவந்து பேசுபொருளாகின. ஆனால், மூத்த குடியான தமிழ்ச் சமூகத்தில் அத்தகைய திரைப்படங்களை இன்னும் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கவேண்டி இருக்கிறது. சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படமும் மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டதே.
தினமும் அடித்துத் துன்புறுத்தும் சமூகத்தின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் கணவனின் வண்டவாளத்தை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, அவனது அதிகார மமதையை வெட்டி நறுக்கும் ‘அம்மு’, சதா கை நீட்டிக் கொண்டிருக்கும் கணவனைத் திருப்பி அடித்தும், பொருளாதார ரீதியாகத் தன்னை உயர்த்திக்கொண்டு தொழிலில் போட்டியாளராக வளர்ந்து நிற்கும் ‘ஜெய பாரதி’ கதாபாத்திரமும் ஆண் மேலாதிக்கச் சமூகத்தைக் கொஞ்சம் அதிர்ச்சியடையத்தான் செய்திருக்கிறது. ‘என்னதான் இருந்தாலும் ஒரு ஆம்பளை மேல பொம்பள கை நீட்டலாமா’ எனக் கேட்பவர்களுக்கு ஆம் எனும் பதிலைத் தந்தவுடன் வாயடைத்து நிற்கிறது. கணவனைத் திருத்த முயற்சித்து சேர்ந்து வாழும் வழக்கமான கதையெல்லாம் இப்போது வழக்கொழிய நினைத்தாலும், ‘வாரிசு’ மாதிரியான பெரிய கதாநாயகர்களின் படங்கள் அதை மீட்டுருவாக்கம் செய்கின்றன.
இவற்றிலிருந்து சற்று விலகி இருக்கிறது தமிழ்ப் படமான கட்டா குஸ்தி. ‘மத்த நாட்டுலலாம் எதிராளிகிட்ட சண்ட போட்டா போதும், ஆனா நம்ம நாட்டுல முதல்ல குடும்பத்துல இருக்குறவங்ககிட்ட சண்ட போட வேண்டி இருக்கு’ என்கிற உண்மையைப் பேசிருந்தாலும். குழந்தையைப் பெற்றுவிட்டு நீ விளையாடப் போ, ‘மேரிகோம்லாம் மூணு குழந்தையைப் பெத்துட்டு விளையாடலையா’ போன்ற வசனங்கள் மீண்டும் பெண்கள் எந்தத் துறையில சாதித்தாலும் குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவளது தலையாய கடமை என வலியுறுத்த முயல்கிறது. ‘வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் பண்றது ஆம்பளையா எனக்கு அவமானம்’ போன்ற முற்போக்கு வசனங்கள் பேசினாலும் திருமணம் நடந்த முதல் நாளே உடலுறவுக்கு அவசரப்படுத்தும் கணவனை எந்த இடத்திலும் தவறாகக் காட்சிப்படுத்தாமல் அதை இயல்பான ஒன்றாகவே கடந்திருக்கிறார் இயக்குநர். ‘ஆம்பளை’யை வேறு எங்கே நிரூபிக்கிறது? ஆண்களைத் திருப்திப்படுத்தும் வசனங்களை ஆங்காங்கே தூவிவிட்டு, ஆண் பெண் ‘சமத்துவம்’ பேசும் படம் எனும் பெயரை வாங்க முயற்சித்தது கட்டா குஸ்தி.
எனவே மற்ற படங்களைக் காட்டிலும் கட்டா குஸ்தி மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் திரையுலகம் குடும்பத்தில் ஆண், பெண் சமத்துவத்தை தற்போதே நாசுக்காகப் பேச ஆரம்பித்திருக்கிறது. முழுமையாகப் பேச வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்பதையும், அதைக் குடும்பங்கள் கொண்டாடும் மன நிலையை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியது அதே திரைத்துறையின் கடமை என்பதையும் வலியுறுத்த வேண்டிருக்கிறது.
இதை இத்தாலிய மார்க்ஸிய அறிஞரான கிராம்ஷியின் கருத்தியல்கள் வழி நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆதிகாரவர்க்கங்கள் குடிமை சமூகத்தில் தனது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள ஆதிக்க சமூக்தத்திற்கு ஆதரவான கருத்தியல்களை உருவாக்கி, அதைப் பொதுச் சமூகத்தின் மனநிலையாக மாற்ற நினைக்கிறது என்பதையும், ஆளும்வர்க்க கருத்துகள் அடித்தட்டு வர்க்கங்களால் ஏற்கப்படுவது ‘பொதுபுத்தி’ என்கிறார் கிராம்ஷி.
அரசியல் சீர்திருத்தத்தைக் காட்டிலும் சமூக சீர்த்திருத்தம் முன்னரே நிகழ்த்தப்பட வேண்டும் என்றும், அரசியல் சீர்த்திருத்தத்தைக் காட்டிலும் சமூக சீர்திருத்தம் கடினமான விஷயம் என அம்பேதகர் கூறுவதை கிராம்ஷியின் கருத்தியலோடு நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பண்பாட்டுத்தளத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களே மக்களின் பொதுபுத்தியை மாற்றவல்லது. அப்படியாக குடிமைச் சமூகத்தில் கல்வி நிலையம், 24மணிநேரக் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என அனைத்து நிறுவனங்களும் இதற்கு இடையறாது இயங்கி வருகின்றன. எனவே குடிமைச் சமூக கட்டுமானங்களான சமயம், குடும்பம், கல்வி நிறுவனங்கள் இதர நிர்வாகப் பிரிவுகள் அனைத்தும் நேரடி வன்முறை இல்லாமல் மறைமுகமாக ஒடுக்கும் நிறுவனங்களாகச் செயல்படுகின்றன என்பதை கிராம்ஷி விளக்குகிறார்.
தொழில்நுட்பங்கள் அபரிமிதமாக வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் மக்கள் மனங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை மக்களின் உணர்வு நிலையோடு நேரிடையாகத் தொடர்பு கொண்டுள்ளன. சினிமா, சின்னத்திரை நாடகங்கள் மூலம் முதலாளித்துவ வர்க்கம் தங்களுக்குச் சாதகமான மனநிலையை மக்களிடத்தில் உருவாக்கி, தங்களுக்கு எதிரான கருத்துகளோ கலகங்களோ உருவாகாமல் பார்த்துக்கொள்கின்றன. இதைக் கட்டுடைக்க இடதுசாரிய, திராவிட அமைப்புகள் பண்பாட்டுத் தளத்தைக் கையகப்படுத்துதல் மூலமே சமூக சீர்த்திருத்தம் சாத்தியமாகும். மக்களின் மனங்களில் மாற்றத்தை விதைக்க முடியும்.
படைப்பாளர்:
மை. மாபூபீ, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.