மஞ்சள், ஊதா, இளஞ்சிவப்பு, பச்சை நிற வாத்துகள். மொத்தம் நான்கு வாத்துகள். ஒவ்வொரு வாத்திற்கும் இடையே அளந்து வைத்தாற்போல் தாமரை இலைகள். வாத்துகள் நடக்கவும் இல்லை, நீந்தவும் இல்லை. வீட்டு வாசலில் ஈரமான சிமெண்ட் தரையில் தரையோடு தரையாக ஒட்டிக்கிடந்தன. இன்னும் அவற்றுக்கு அலங்காரம் தேவையா என, கலர் பொடி படிந்த கைகளைக் கன்னத்தில் வைத்தாற் போல் கண்கள் அகன்று நின்றிருந்தாள் வேம்பு.

மேற்குப் பக்க வாத்தின் அடிவயிற்றை ஒட்டினாற்போல் ஒரு காரின் சக்கரம் தன் சுழற்சியை நிறுத்தியது. வேம்பு புருவம் குறுக்கினாள்.

ஓட்டுநர் இருக்கையிலிருந்து அன்பு இறங்கினான்.

“என்னக்கா… வேம்பக்கா எப்டி இருக்கிங்க? பயந்துட்டீங்களா?”

“அட, அன்பு! வரேன்னு சொல்லவே இல்ல…” வேம்பின் முகமெல்லாம் வண்ணம்.

“போன் பண்ணி சொல்லக்கூட நேரமில்லக்கா” என்று சொல்லிக்கொண்டே காரின் பின்னிருக்கைக் கதவைத் திறந்தான் அன்பு.

பொழுது இன்னது என சூரியனோ குளிரோ தொட்டுச் சொன்னால்கூட உணர இயலாதவளாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் விஜி.

“விஜிம்மா டேய் எந்திரிடா, வந்துட்டோம். வா வந்து நம்ம வீட்டைப் பாரு” அன்பு விஜியை எழுப்பினான்.

அன்பின் அப்பா கட்டிய வீடு அது. அந்த வீட்டை வேம்புதான் பராமரித்து வருகிறாள். அன்பு வெளிநாடு , மாநகரம் என வாழ்வின் நகர்வாகக் கழித்துக் கொண்டிருந்தான். அவன் பெற்றோருக்குப் பின் அந்தக் கிராமம் அவனுக்குப் பண்டிகை கால நினைவேடு. தலை தீபாவளிக்கு ஊரடைய வந்திருந்தான்.

தூக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள கண்களைக் கசக்கி விழித்தாள் விஜி. பின்னிருக்கை முழுவதையும் அடைத்துக்கொண்டு வசதியாக கால் நீட்டி தூங்கி வந்திருக்கிறாள்.

படுக்கை வாட்டத்திலேயே பார்த்ததில் கால்பக்கமாக நின்றிருந்த வேம்பு தெரிந்தாள். புது இடம், புது ஆள் என சுதாரித்தவளாகப் பட்டென எழுந்தாள் விஜி.

தன் கலைந்த கூந்தலைச் சீர்படுத்தியபோதுதான் முழு விஜியும் தென்பட்டாள். கறுத்த திருவாசிக்குள் வெண்கலத்து அம்மன் வெளிப்பட்டது போல் இருந்தது வேம்பின் பார்வைக்கு.

பெண்ணெனும் ஓர் இனத்தை அப்போதுதான் அறிந்தவளாக நிகழ்நொடி பிரிந்தவளாகத் தொலைந்திருந்தாள் வேம்பு. உண்மையில் அழகி வேம்புதான். வட்ட முகத்தில் கன்னத்து மேடுகள் மினுமினு என மினுக்கும். அவளின் அகலமான கண்கள் முகத்தின் பாதியைப் பிடித்திருக்கும். அந்த ஊரைப் பொறுத்தவரை அழகிப்பட்டம் வேம்பிற்குத்தான்.

“அக்கா, இதான் விஜி. என் வொய்ப்” என அன்பு வேம்பை மீட்டான்.

“வா விஜி” அழைத்தாள் வேம்பு. பதிலுக்கு ஒரு புன்முறுவலுடன் வேம்பைக் கடந்தாள் விஜி.

அன்பின் பெரியப்பா மகள்தான் வேம்பு. திருமணம் வேண்டாம் எனப் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். ஒரே மகள் ஒத்துழைக்காத மனக்குமுறலுடனேயே அவள் தாய் தந்தை அடுத்தடுத்து மறைந்தனர். அன்பு வீட்டிற்குப் பக்கத்து ஓட்டு வீடுதான் வேம்புவுடையது. இப்போது அந்த இரண்டு வீடுகளும் வேம்பிற்கானது. வயல்களைப் பராமரித்துக்கொண்டும் மாடுகளைக் கவனித்துக் கொண்டும் தனிமை தெரியாமல் வாழ்ந்துவருகிறாள் வேம்பு.

“நான் குளிக்கணும்” என்றாள் விஜி.

கிராமத்து வீடானாலும் சகல வசதிகளுடனும் அந்த வீடு நின்றது. மாதம் இருபதாயிரம் ரூபாய் வேம்பிற்கு அனுப்பி வைப்பான் அன்பு. அது போக மராமத்துப் பணிகளுக்குத் தனி தொகை. விளைச்சல், லாபம் என எல்லாம் வேம்பிற்குத்தான். அது பற்றிய சிறு உரையாடலிற்குக்கூட அன்பு முன்னெடுக்க மாட்டான்.

விஜிக்குக் குளியலறையைக் காட்டினாள் வேம்பு. அன்பிற்கு ஒரு முக்கியமான அழைப்பு வந்தது. போனைப் பேசிக்கொண்டே தென்னந்தோப்பிற்குள் மறைந்தான்.

குளித்து முடித்துத் துண்டுடன் வெளியேறிய விஜி, “வேம்பக்கா, என் பேக்லாம் உள்ள வந்துட்டா?” என்று கேட்டாள்.

“அந்த பீரோ ரூம்ல வெச்சிட்டேன்” என்று குரல் மட்டும் கொடுத்தவளாய்ச் சமையல் வேலையில் மூழ்கினாள்.

கூந்தலை உதறிக்கொண்டே வேம்பின் அருகில் வந்து நின்றாள் விஜி.

“என்னக்கா செய்றீங்க? நான் எதாச்சும் செய்றேன். சொல்லுங்க என்ன செய்யணும்?”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் விஜி, முடிஞ்சிருச்சி எல்லாம். நீ போய் டேபிள்ல உட்காரு, சாப்பாடு ரெடி, நான் போய் அன்பைக் கூப்ட்றேன்.”

அன்பும் வந்துவிட்டான். மூவருமாக கிராமத்துக் கதை, பங்காளிகள் பகை எனப் பேசியவாறே ஆளுக்கு ஐந்து இட்லிகளை முடித்தனர்.

நெருக்கமாக இருந்த விஜியின் கண்ணிமைகளைப் பேச்சுக் கொடுத்தவாறே வேம்பு கவனித்துக்கொண்டிருந்தாள். கறுப்பான கொத்துக் கதிர், தூற்றலுக்குக் குனிந்து நிமிர்வது பொன்ற விஜியின் கண்ணசைவுகளால் வேம்பு மனதின் நெல் மணிகள் வெளவெளத்துக் கொட்டின.

மறுநாள், “பக்கத்து டவுனுக்கு ஒரு வேலையா போறேன் நீயும் வரியா விஜி?” என்று கண்ணாடியைப் பார்த்துத் தலைமுடியை ஏற்றிச் சீவிக்கொண்டே கேட்டான் அன்பு.

“இல்ல அன்பு நான் வரல, அங்க கூப்டுட்டுப் போயும் எதாச்சும் போன்தான் பேசிட்டு இருப்ப! நான் போர்செட்டுக்குப் போகப் போறேன், வேம்பக்காவோட.”

“சரி,எஞ்சாய் யுவர் டே.”

மாற்றுத்துணி, துண்டு, சோப்பு என போர்செட்டுக்கான ஏற்பாடுகளோடு வேம்பும் விஜியும் வரப்பில் நடக்க ஆரம்பித்தனர். விஜி முன்னே வேம்பு பின்னே.

காதில் போட்டிருந்த அந்த ஒற்றைக்கல் சிறிய தோட்டையும் கழற்றி இருந்தாள் விஜி. அவளின் மாநிற மேனியில் உலோகங்கள் எதுவுமே இடம்பெறவில்லை. அள்ளி முடிந்த கொண்டையினால் பின்னங்கழுத்துத் தடையின்றித் தெரிந்தது. அதற்குக் கீழே கருவம் பிஞ்சை உதிர்த்தாற்போல் பூனை முடிகள் அவள் மேனிக்குள் நுனிபணிந்து கிடந்தன.

விஜியின் பின்னங்கழுத்தை முத்தமிட வேண்டும் போல் இருந்தது வேம்பிற்கு.

தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டாள். விஜியைப் பார்த்த நொடியே தோன்றிய எண்ணம்தான் அது. இந்த முத்தத்தை ஏன் கேட்கிறது மனம்! குழம்பித்தான் இருந்தாள் அவள். அடிவயிற்றில் ஏதோ ஒரு சூடு விஜியைக் கண்ட கணம் முதல் வேம்பைக் கவ்வியிருந்தது.

பல வருடங்களுக்கு முன்னே சுட்ட சூடு அது. அன்று ஊர்த் திருவிழாவில் நாடகம் போட்டிருந்தனர். மதுரை வீரன் நாடகம். ஊரில் எல்லோரும் பாயும் விரிப்புமாக வந்து இடம் பிடித்து வாட்டமாக படுத்துக்கொண்டு நாடகம் பார்த்தனர். தெரு பெண்களோடு வேம்பும் படுத்துக்கொண்டு நாடகம் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு மாட்டுவண்டிக்கு அருகே அவர்களின் கூட்டம் கூடாரம் அமைத்திருந்தது. பனி, சாரல் என்று வேம்புவை மாடு இல்லாத ஒரு மாட்டு வண்டிக்கு அடியில் படுக்க வைத்தனர். அப்போது வேம்பிற்கு எட்டு வயதாக இருக்கலாம். ஆனால், பத்துத் தாண்டவில்லை. நேரம் ஆக ஆக கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாட்டு வண்டிக்கு அடியில் தஞ்சம் சேர்ந்தது. நாடகம் நடந்து கொண்டேதான் இருந்தது. நாடகத்தின் மீது காதல் கொண்டிருப்பவர்களைப் பனியோ மழையோ பாதிப்பதில்லை. ஒரு சிலர் பார்த்துக்கொண்டிருக்க பலரும் தூங்கிவிட்டனர். வேம்பு முதல் காட்சிக்கே தூங்கிவிட்டாள். ஏதோ நாயொன்று அவளின் மூக்கையும் தாடையையும் நக்குவது போல் இருந்தது. தூக்கத்தின் உச்சத்தில் இருந்த வேம்பால் அவ்வளவு வீரியமாக அந்த நாயைத் துரத்த முடியவில்லை. மெல்ல மீண்டுகொண்டிருந்தாள். தன் கைகளை உயர்த்த முயற்சித்தும் அவை இசையவில்லை. அதற்குள் அந்த நாய் அவளின் கழுத்தில் இறங்கி கூர் தேடிக்கொண்டிருந்தது. முழு மூச்சையும் உள்ளிழுத்தவளாகச் சுடு ரத்தத்தை வெளிக்கொட்டுபவளாக வலக்கரம் வளர்த்து நாயை உதறினாள்.

“அக்கா இந்த போர்செட்டைச் சுத்தியிருக்குற எல்லா வயலும் நம்மளுதுதான?” விஜி கேட்டாள்.

“ஆமா விஜி, சினிமாவுல சொல்லுவாங்களே கண்ணுக்கு எட்டுன வரைக்கும் நம்மளுதுதான்னு, அப்டியே நமக்குப் பொருந்தும்” வேம்பு சிரித்தாள்.

“ஆனாலும் அக்கா உங்களைப் பாராட்டியே ஆகணும். இவ்ளோ பெரிய மேனேஜ்மெண்ட்டை எவ்ளோ நேர்த்தியா செய்றீங்க! அன்பெல்லாம் தலையைப் பிச்சுக்குவான். இந்த வயக்காடெல்லாம் பார்த்துக்குற பொறுமை அன்புக்குக் கெடையாது.”

“அது உண்மைதான் விஜி. அவனுக்கு அது செட் ஆகாது, வயக்காட்டோட ஒட்டவே மாட்டான். ஆனா, அவன் என் முடிவுல தலையிடவும் மாட்டான்” எனத் தம்பியை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் வேம்பு.

“அன்பு அடிக்கடி சொல்வான், வேம்பக்கா இருக்குறதால கிராமத்துப் பத்தியோ சொத்து பத்தியோ கவலையே இல்லன்னு.”

இந்தப் பேச்சுகளூடே இருவரும் போர்செட் தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி இருந்தனர். ஆறு அங்குல வாயின் வழியே பம்புசெட் நிலத்தடி நீரை கக்கிக்கொண்டிருந்தது. நைட்டியுடன் அதன்முன் நெஞ்சை நிமிர்த்தி முன்னேறிய விஜி பின் ஏதோ நினைத்தவளாகத் திரும்பிக்கொண்டாள். முதுகில் பெரிய கதையால் யாரோ அடிப்பது போல் இருந்தது அந்தக் கனத்த ஜில் நீர்.

“ஐயோ… சூப்பரா இருக்கு! தண்ணி ஜில்லுன்னு இருக்குக்கா, எனக்கு இதான் மொதோ தடவ. இந்த மாதிரி வயக்காட்டுக்கு நடுவுல போர்செட்ல குளிக்கணும்னு குஷ்பு பாட்டு பார்த்ததுலேருந்து ஆசை” என விஜி இயற்கையோடு இளகி இருந்தாள்.

தொட்டியின் முடுக்கில் அமைதியாக விஜி சொல்வதற்கெல்லாம் பதிலோ வினாவோ விடுக்காமல் தொட்டி நீரை சலம்பிக்கொண்டிருந்தாள் வேம்பு.

“அக்கா, நீங்க வாழ்க்கையை உங்களுக்குப் புடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு இருக்கீங்க, எனக்கெல்லாம் இன்னும் அஞ்சு வருசம் கழிச்சிதான் கல்யாணம் பண்ணிக்கிற ப்ளான், எங்கப்பா ஒத்துக்கல, அன்பும் ஒத்துக்கல.”

“அன்பும் நீயும் லவ் மேரேஜா?”

“இல்லக்கா, லவ்லாம் இல்ல. அப்பாவும் அன்போட பாசும் பார்ட்னர்ஸ். அப்பாவுக்கு அன்பைவிட மனசில்ல. அதான் என் தலைல கட்டிட்டாரு” என்று சிரித்தாள்.

“நேரமாச்சு விஜி, வா போகலாம். சமையல் ரெடியாகிருக்கும் போன உடனே சாப்ட்றலாம்” என்று விஜியைக் கிளப்பினாள் வேம்பு.

“எப்டிக்கா? நாமதான் இங்க இருக்கோமே!

சாப்பாடு எப்படி ரெடியா இருக்கும்?”

“காவேரி சமைச்சிருப்பா. அவளைச் சமையலுக்குப் போட்ருக்கேன்.”

“சூப்பர். என்னா ப்ளானிங்… குளிச்சதும் பசிக்கும்னு தெளிவா இருக்கீங்கக்கா. இந்தக் களைப்புல சமையல் கட்டுக்குள்ள நுழையவே முடியாது. அன்பு இப்டில்லாம் ப்ளான் பண்ணவே மாட்டான்கா. லவ் யூக்கா” என்று ஈரத்துணியுடன் வேம்பைக் கட்டி முத்தமிட்டாள் விஜி.

அவள் கன்னம் விட்டு விஜியின் உதடுகள் சற்றுத் தாமதமாகப் பிரிந்த விபரம் வேம்பின் கன்னத்தில் திட்டாக இருந்தது. விஜியை இறுக்கமாக அணைத்துக்கொள்ள வேண்டுமாக இருந்தது வேம்பிற்கு.

இரவு நேரத்தில் மொட்டை மாடியில் தூங்குவதுதான் வேம்பின் வழக்கம். விஜிக்கும் அது பிடித்திருந்தது. அன்பு இதையெல்லாம் விரும்பாதவன். ஏசியை விட்டுப் பிரிந்தால் அவன் தூக்கம் அவனுக்கில்லை.

பத்து நாள்களாகவும் வேம்பின் தலையணையும் விஜியின் தலையணையும் ஒன்றாக ஆகியிருந்தது. இரவில் மொட்டை மாடியில் படுத்தபடியே நட்சத்திரங்களை இணைத்து வேண்டுமானதை வரைந்துகொண்டார்கள் இருவரும். தனது இருபத்தி நான்கு வருடக் கதையையும் வேம்பிடம் சொல்லியிருந்தாள் விஜி.

விஜியை இடைமறிக்காமல் மொத்தமாக வாங்கிக்கொண்டாள் வேம்பு. விஜியைப் பிரிவது இனி வேம்பிற்கு இயலாத காரியம். விஜியின் அணுக்கமும் தூக்கம் முற்றிய சாமத்தில் அவளின் வாசமும் வேம்பை இனி தனிமைக்கு வீசாது.

அன்பு அழைத்தால் அவனுடன் செல்ல மறுக்கும் மனநிலைக்கு விஜியும் மாற்றம் கண்டிருந்தாள். அதற்கு ஏற்றார்போல் அன்பிற்கு ஓர் அவசர அழைப்பு, அவன் கனடா செல்ல வேண்டிய சூழல். மூன்று மாதங்கள் ஆகும் திரும்ப. ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்த முடிவின்படி விஜி அன்புடன் செல்லவில்லை. நகரத்து அடுக்கு மாடியில் தனித்து விடப்படும் அவளை, கிராமம் இளம்பச்சையில் சீராட்டியது.

வேம்பின் கனவிற்குக் கனிந்த காலமாக அமைந்தது அந்த நாள்கள். விஜியிடம் தன் காதலை எப்படிச் செலுத்துவது என ஒத்திகை பார்த்தவாளாகத் திணறினாள் வேம்பு. விஜியின் அசைவற்ற தூக்கத்தில் காதலைக் கடத்தியது போதவில்லை அவளுக்கு.

அன்பிற்குத் தெரிந்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்ற தவிப்பும் வேம்பிற்கு இல்லாமல் இல்லை. இது கேவலமாகப் பார்க்கப்படும் காதல். எல்லாரும் காரித் துப்புவார்களே!

விஜி ஏற்றுக்கொண்டால் எந்தத் தீங்கும் இல்லை. இக்காதல் தானாகத் தகிக்கும் கருவின் தனல். மண்கொண்டும் மூட முடியாத கொடுந்தனல். அடுத்த கட்டத்திற்கு வேம்பின் காதல் முன்னேறியது.

விஜியும் வேம்பும் வயக்காடும் வரப்புமாக வளர்ந்திருந்தார்கள். வேம்பைவிட்டு விலகுவதே இல்லை விஜி. பத்து வயது சிறுமி என விஜியின் எண்ண எல்லைகள் சுருங்கி இருந்தன. வேம்பால் அவை இளைத்திருந்தன.

விஜியின் மேனிக்கெனவே குளியல்பொடி ஒன்றைத் தயார் செய்திருந்தாள் வேம்பு. அம்மணம் நாசித்துளைகள் வழி உயிர் உருக்கத் துவங்கியிருந்தது. பொடியை வேம்பின் கைகள் குழைக்க குழைக்க அவள் காதலின் நிறம் கிண்ணியின் வரம்பைக் கடந்தது. கைகளைக் கிண்ணியைவிட்டு வெளியே எடுத்தாள். கைவிரலை விட்டுப் பிரிந்து அவளின் கால்விரலில் சொட்டியது அத்தேமாக்காதல். விஜியின் அங்கங்கள் வேம்பிடம் இருந்தாலும் அள்ளத் துடிப்பது பால் துறப்பு.

“அக்கா பொடி ரெடியா? கொடுங்க” என்று குளியலறையிலிருந்து கையை மட்டும் நீட்டினாள் விஜி.

பொடியும் கிண்ணியும் காதலும் வேம்புமாகக் குளியலறையை மணத்தினர். விஜி களைத்திருந்தாள்.

ஒற்றைத் தலையணைக்காக இரவு வரைக் காத்திருப்பதில்லை இப்போதெல்லாம் அவர்கள்.

முன்னறிவிப்பின்றி மூன்று மாதங்கள் முடிவதற்குள்ளேயே திரும்பி இருந்தான் அன்பு.

அவனை முற்றாக மறந்திருந்தாள் விஜி. துணிமணிகளையும் விஜியின் பொருட்களையும் ஒன்றுவிடாமல் கவனமாக எடுத்துக்கொண்டிருந்தான் அவன். தட்டுபட்டதையெல்லாம் விழுங்கும் பெருவெள்ளமென அனைத்தையும் மீட்டுக்கொண்டிருந்தான். கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த விஜியின் பொட்டைக்கூட விட்டு வைக்கவில்லை.

மொத்த அறையையும் பைகளாக்கிய பின்தான் நிமிர்ந்தான். கதவோரமாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்த விஜியை நெருங்கினான். விஜியின் கழுத்தில் வேம்பின் பற்கள் சிவந்து ஒளிந்தன. அதை மெல்ல வருடினான். அவன் கண்களுள் நீர் பூத்தது.

சமையற்கட்டிலிருந்து வெளிப்படவே இல்லை வேம்பு. கீரைக் கட்டிலிருந்து கீரையைப் போலவே உருக்கொண்டிருந்த களைகளைப் பிரித்துக்கொண்டிருந்தாள் காவேரி.

விஜியும் அன்பும் தங்கள் அறையைவிட்டு வெளியே வந்தனர். சமையற்கட்டிலிருந்து வந்த வேம்பு , “அன்பு” என்று அழைத்தாள்.

திரும்பிப் பார்த்தவன் வேம்பு நின்ற திசைக்கு விஜியை மறைத்தான். இரண்டு கைகளால் வேம்பைப் பிய்த்தெறிய முழுதாக அவன் உடல் தயாரானது. உடலைக் குலுக்கிக் கொண்டான். தலைக்குமேல் இரு கைகளையும் தூக்கி கண்மூடி அவளைக் கும்பிட்டான்.

விஜியை ஒரு கையில் பிடித்துச் சென்று அவளை காரில் ஏற்றினான்.

மொத்தமும் உடைந்தவனாக இடப்புறம் இருந்த விஜியின் வலக்கையைப் பிடித்துக்கொண்டான். அவன் கைகளை உள்வாங்கி இறுக்கிக்கொண்டாள் விஜி. அவனை முத்தமிட்டுத் தேற்றியவள் கைப்பைக்குள் குளியல் பொடி இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொண்டாள்.

அன்பு, விஜியுடன் குளியல் பொடியும் பயணித்தது.

பெருங்காரியம் ஒன்றைத் தீர்த்தவளாக வெறுங்காலுடன் வெளியேறினாள் காவேரி.

படைப்பாளர்:

அருணா சிற்றரசு

ஆங்கிலமொழி ஆசிரியர் . அரசு உயர்நிலைப்பள்ளி எடகீழையூர், திருவாரூர் மாவட்டம். மன்னார்குடியைச் சேர்ந்தவர். 2012 ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெற்றவர். நாவல்கள் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். தமிழ் புதினங்கள் படித்து கருத்துக்களை தன் நடைக்கு வளைத்துக்கொள்பவர்.பாவ்லோ கோலோ , கொலம்பிய எழுத்தாளர் மார்க்கீஸ் மீது தீராக் காதல் கொண்டவர். தன்னுடைய யூட்யூப் சேனலில் மாணவர்களுகள் மற்றும் போட்டித் தேர்வாளர்களுக்கான காணொலிகளை வழங்கி வருகிறார்.