தாய்மை தெய்வீகமானது. 

தாய்மை உன்னதமானது.

தாய்மை தூய்மையானது. .. போன்ற துதிப்பாடல்களில் இருந்து இன்றைய பெண்கள் தூர விலகி இருக்க வேண்டும்.

இன்ஸ்டா இன்ப்ளூயர்ஸ் காலமான நவீன உலகில், எந்தத் துறையைப் பற்றியும் துளி அறிவும் இல்லாமல், வாயால் வடை சுட்டுப் பந்தியை நிரப்பித் தம் தொந்தியை நிரப்பிக் கொள்ளும் ஒரு கொள்ளைக்கூட்டம் உருவாகியிருக்கிறது.

பார்வையாளர்களைக் குற்றவுணர்வுக்கு உள்ளாக்குவதன் மூலம் சம்பாதிக்கும் ராஜதந்திரங்களால் நிறைந்துள்ளது இணையவெளி.

6 வயதில் உன் மகன் பெருக்கல் கணக்கு போடவில்லையானால், 7 வயதில் உன் மகளுக்கு ரோபாடிக் தெரியவில்லையானால் உனக்குத் தாயாக/தந்தையாக இருக்கவே தகுதி இல்லை. நல்ல அப்பனாக/ ஆத்தாளாக இருக்க வேண்டுமா? நான் விற்கும் 2 மணி நேர இணைய வகுப்பிற்குப் பணம் கட்டி சேர்.

நான் அரையும் குறையுமாக வாசித்து உருவேற்றி வைத்திருக்கும் வெளிநாட்டு அறிவியளாலர்களின் தியரிகள் எதையாவது உன் தலையில் அரைகுறையாக ஏற்றுவேன். அதுவே வேதம் என உன் வாழ்வை நடத்துவதே நல்ல பெற்றோருக்கு அழகு – என்பதான விளம்பரங்கள் சமூக வலைதளங்கள் முழுக்கக் குவிந்து கிடக்கின்றன.

வீட்டில் , அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசக்கூட நேரமில்லாததால், பிள்ளை பசிக்கு அழும் என்பதைக்கூட இந்த இன்ப்ளூயர்சர்களிடம் தான் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.

தனக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரிடமோ, குழந்தைக்குத் தடுப்பூசி போட்ட குழந்தை நல மருத்துவரிடமோ ஆலோசிக்க வேண்டிய, கேட்டு அறிந்து கொள்ள வேண்டியவற்றையும் ஆன்லைனில் தேடுவதால் உண்டாகும் விளைவு  வியாபார உத்தி தெரிந்த குறை புத்திக்காரர்களிடம் சிக்கிப் பணத்தையும் நிம்மதியையும் இழப்பது.

சமீப வீடியோ ஒன்றில் ஒரு பெண், “குழந்தை பெற்றவுடன் கடவுளைப் போல உணரவில்லையானால், உங்கள் கர்ப்பத்தில், குழந்தைப்பேறில் ஏதோ குறை உள்ளது” என உளறிக் கொட்டியுள்ளார். 10-15 பேர் முன்பு நிர்வாணமாகக் குழந்தை பெற்றுக் கொள்கிறோம் என்கிறார்.

எந்த மருத்துவமனையில் நிர்வாணமாக பிரசவம் பார்க்கிறார்கள்? அதுவும் 10-15 பேர் சூழ நின்று பிரசவம் பார்க்கிறார்கள்? உண்மையிலேயே இவர் குழந்தை பெற்றாரா என்கிற சந்தேகத்தைக் கிளப்பும்படியான கருத்துகளை உதிர்த்திருந்தார்.

ஒரு மருத்துவர், 2 செவிலியர்கள், மயக்க மருந்து நிபுணர் (தேவைப்பட்டால்), குழந்தை பிறந்த பின் குழந்தை நல மருத்துவர் ஒருவர் என மொத்தமே 5 நபர்களுக்குக் குறைவாகவே ஒரு பிரசவத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.

மேலும், நிர்வாணமாக எங்கும் பிரசவம் பார்ப்பதில்லை. நீண்ட அங்கி போன்ற மருத்துவ உடை அல்லது நைட்டி போன்ற எளிய உடைகளுடன், தேவையான அளவு உடல்பகுதி வெளிப்படுமாறே பிரசவம் நடக்கும்.

சிசரியன் என்றால் வயிற்றுப்பகுதி மட்டுமே வெளியில் தெரியும். குழந்தை பெற்ற அனைவருக்கும் தெரிந்த உண்மை இது. இதையே மாற்றி ஒருவிதமாகச் சொல்ல முடிபவர்கள் இன்னும் எவ்வளவு பொய்தான் சொல்ல மாட்டார்கள்.

குழந்தை பிறந்தவுடன் மயங்கிவிடும், குளிர்காய்ச்சல் வரும், வலிப்பு வரும், ஒரு வெறுமை வரும், உறக்கம் வரும் இப்படி என்ன உணர்வு வேண்டுமானால் பிரசவித்த தாய்க்குத் தோன்றலாம்.

அவள் அனுபவித்த கர்பகால வாழ்வியல், உறவினர் கணவரின் அனுசரணை அல்லது பாராமுகம், உடலின் தாங்குதிறன், பிரசவத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள் என எத்தனையோ இருக்கின்றன.

“குத்துனது நண்பனா இருந்தா, கத்தாம சிரிச்சிட்டே சாகணும்” என்பது போல, “கடவுளைப்போல உணரலைன்னா உன் தாய்மையில் கோளாறு” என்பது முட்டாள்தனமான பேச்சு இல்லையா?

முட்டாள்தனம்தான். அவர்களது கூற்றுகளை உண்மையென நம்பி, குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகி, “எப்படிச் சிரித்துக்கொண்டே பிள்ளை பெற்றுக்கொள்வது?” என அவர்களிடமே போய் நின்றால் நிச்சயம் முட்டாள்கள்தான்.

எங்களது (அ) நாங்கள் பரிந்துரைக்கும் பிரசவ மையங்களில் சேர்ந்தால் வலிக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். நாங்கள் நடத்தும் கர்ப்பகால வகுப்புகளில் கலந்து கொண்டால் வயிற்றிலேயே குழந்தையை ஐன்ஸ்டைன் ஆக்கிவிடலாம் என்றெல்லாம் அளந்துவிட்டு, அதன் மூலம் தொழிலைப் பெருக்கிப் பெரும் வருமானம் ஈட்டுகின்றனர்.

பேசாமல் சைகை மூலமாக ரீல்ஸ் போட்டுப் பிரபலமான இன்ப்ளூசர் ஒருவர், பின் கர்ப்பகால வகுப்புகள் என ஆரம்பித்தார். பின் பிரசவ மையம். குழந்தை வளர்ப்பு என ஒரு கஷ்டமர் பிடித்தால் 4 வருடங்களுக்குச் சுலபமான வருவான வழி.

உடனே பெண்கள் முன்னேறினால் பிடிக்காதா? எனக் கட்டையை எடுத்துக் கொண்டு அடிக்க வராதீர்கள். பெண்கள் தன் சக பெண்களைக் குற்றவுணர்விற்கு ஆளாக்கி அதன் மூலம் முன்னேறலாமா என்பதுதான் கேள்வி. 

ஒரு குழந்தை 9 மாதத்தில் நடக்கும், அதே குழந்தை பிறந்த அதே நேரத்தில் அதே மருத்துவமனையில் பிறந்த இன்னொரு குழந்தை 11வது மாதத்தில் நடக்கலாம். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையானது.

இரட்டைக் குழந்தைகளானாலுமே இரண்டும் வெவ்வேறு உயிர்கள். ஒவ்வொரு குழந்தையும் வேறானதுதான். அவர்கள் தங்களுக்கான காலத்தை எடுத்துக் கொண்டே கற்றுக் கொள்வார்கள். இது இயற்கை. இதுதான் இயல்பு. 

என் பிள்ளை 9 மாதத்தில் நடந்துவிட்டது, உன் பிள்ளை நடக்கவில்லை. அப்படியெனில் நீ தூய்மையான தாய் இல்லை. உன் தாய்மையில் பிரச்னை உள்ளது. நீ நல்ல தாயாக மாற வேண்டுமானால் உன் பிள்ளை 9 மாதத்திலேயே நடக்க வேண்டுமானால் நீ என்னிடம் வந்து கற்றுக் கொள் என்பது எத்தகைய அரக்ககுணம். 

இத்தகைய அரக்ககுணங்களையே இந்தத் தாய்மையைப் புனித பிம்பமாக்கி, பணமரமாக மாற்றுபவர்கள் செய்கிறார்கள்.

இவர்கள் பேசுவதெல்லாம் உண்மை என நம்பி, பின்பற்றிப் பாதிக்கப்படுவது, மன உளைச்சலுக்கு ஆளாவது சக பெண்களே.

இந்தப் புனிதப்படுத்தல்களின் கோரமுகம் எப்படிப்பட்டது எனில், சுகப்பிரசவம்? ஆனால், தான் நல்ல தாய் இல்லையேல் நீ தாயாக இருக்க தகுதியில்லை எனச் சொல்லிச் சொல்லிப் பிரசவ மையங்களுக்கு வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறார்கள்.

இவர்களை அணுக இயலாத பெண்கள், வீட்டிலேயே சுகப்பிரசவம் என இறங்கி உயிரை விடுகிறார்கள். சமீப ஆண்டுகளில் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்துச் செய்திகளில் இடம்பெற்ற தாய்மார்களின் ஆவிகளுக்குக் கண்ணீர் வருமானால் அது ஒரு சிறுகுளமாகியிருக்கும்.

சுகப்பிரசவம் என்கிற ஒன்று இருக்கிறதா என்ன? எது சுகப்பிரசவம்? யாருக்கு சுகம்? பிள்ளைப் பெறும் வலி என்ன என அறியாத யாரோ எழுதி வைத்த வார்த்தையாக இருக்க வேண்டும். 

இந்த ‘சுகப் பிரசவத்தால்’ நம் முந்தைய தலைமுறைகளில் எத்தனை மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதும் இப்போது நவீன மருத்துவத்தின் உதவியால் எத்தனை மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன என்பதும் முகத்தில் அடித்தாற்போல புரிய வேண்டுமானால், தற்காலத்தில் ஏதேனும் ‘சித்தி கொடுமை’ கதைகளோ, திரைப்படங்களோ வந்திருக்கின்றனவா எனத் தேடுங்கள். 

சில பத்தாண்டுகளுக்கு முன் எத்தனை ‘சித்திக் கொடுமை’ கதைகள் நம் சமூகத்தில் இருந்தன என்பதைக் கண்டறியுங்கள்.

பெண்கள் பிரசவத்தில் சாகாமல், பிள்ளைகள் சித்திக் கொடுமைகள் எனப்படும் தகப்பனின் இயலாமையை எதிர்கொள்ளாமல் வாழ்வதற்கு நவீன மருத்துவ முன்னேற்றமும் மருத்துவர்களும் தான் காரணமேயன்றி சமூகவலைதள தூண்டிகள் அல்ல.

கொஞ்சமும் மனதில் ஈரமும் இரக்கமும் இல்லாத காட்டுமிராண்டித்தனம் நிரம்பியவர்களால் மட்டும்தான், நான் சொல்லும் இலக்கணத்திற்குள் இல்லையானால், நீ வாழவே தகுதியில்லை என்பதான அரிய முத்துகளை உதிர்க்க இயலும். 

சரி அப்படி அரிய முத்துகளை உதிர்க்கிறார்களே, இவர்களுக்குத் தொடர்புடைய துறையில் எந்த அளவுக்கு நிபுணத்துவம் இருக்கிறது எனப் பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும்.

இணையவழியே இவர்களைப் போன்ற யாராவது நடத்தும் வகுப்புகளில் கலந்துகொண்டு வாங்கிய சான்றிதழ் + வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் /கட்டுரையாளர்களின் அறிக்கைகளில் சில சுடப்பட்ட வார்த்தைகள் + புகழ்மிக்க மனோதத்துவ நிபுணர்களின் சில ஆலோசனைகள் அத்தனையும் 

 கலந்து அடித்து ஓவனில் வைத்து சூடான கப் கேக்குகளாக நீட்டுகிறார்கள். மேலே தூவப்படும், “உன் குழந்தையோட எதிர்காலமே இதுலதான் இருக்கிறது” என்பது போன்ற சாக்லேட் சிப்ஸ்களில் மயங்கி கேக் வாங்கித் தின்று சர்க்கரை வந்தபின், குய்யோ முய்யோ எனக் கூப்பாடு போடுவதற்குள் காலம் கடந்துவிடும்.

பேக்கரி உச்சத்தில் இருக்கும். எதிர்க்கவே ஆள் இருக்காது.

உங்கள் சுகருக்கு நீங்கள்தான் பொறுப்பே தவிர, பேக்கரி இல்லை அல்லவா?

படைப்பாளர்:

ராஜலட்சுமி நாராயணசாமி . நாவலாசிரியர், சிறார் எழுத்தாளர்.