வடசென்னையில்  எண்ணெய்க்  கசிவும்  கோரமண்டல  விஷவாயுவின் தாக்கமும் குறையவில்லை.  இந்நிலையில் தான்  திருநங்கை அனிதாவைச்  சந்தித்தேன். அனிதா  ஒரு  தூய்மைப்  பணியாளர்.  ன்னை மாநகராட்சியில்  ஒப்பந்த  முறையில்  தூய்மைப்  பணியாளராக  மூன்று  வருடங்களாக வேலை செய்கிறார்.   

அனிதாவிற்கு  இந்த  வேலை  எளிதில் கிடைக்கவில்லை.  சிறுவயதிலிருந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்தவர்  அனிதா. மீஞ்சூரில் பிறந்த பையன் தன்  13ஆம் வயதில்  பெண்மையை  உணர ஆரம்பிக்கிறார். அப்பாவின் கடுங்கோபத்திற்கு  ஆளானவருக்கு  அம்மாவின்  அரவணைப்பு  சற்று ஆறுதலாக  இருந்துள்ளது. ஆனாலும்  பெண்மையை உணர்ந்ததால்  அப்பாவின்  கோவத்தை  ரொம்ப  நாள் தாக்குப்பிடிக்க  முடியவில்லை. சென்னைக்கு ஓடி வந்தவர் தன்னைப்  போல்  திருநங்கைகள்  உதவியுடன்  மும்பை    சென்று பாலுறுப்பு  அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  தற்போதுள்ளது போல்  மருத்துவமனைகளில்  பாலுறுப்பு  அறுவை  சிகிச்சை  செய்வதற்கான  வசதிகள்   அப்போது  இல்லை.

திருநர்  சமூக  மக்களே  அறுவை  சிகிச்சையை    மேற்கொள்வார்கள். உயிர் நாடியை அகற்றிய போது உயிர்  போகும்  அளவிற்கு  வலி எடுக்கும்,  அத்தனை  துயரமும்  தான்  ஒரு  பெண்ணாக வேண்டும் என்கிற  வேட்கைக்காகத்தான்.

உடலால்  ஆணாகவும், மனதால்  பெண்ணாகவும் உணர்ந்தவர்  முழுமையான  பெண்ணாகச் சென்னை  திரும்பினார். திரும்பியவர்  பெற்றோருடனே          இருந்து  தக்காளி வியாபாரம்  செய்துள்ளார். வியாபாரம்   செய்யும்  இடத்தில்  ஆண்கள்  கூட்டமாகக்     கூடிவிடுவார்களாம். வியாபாரம்  நஷ்டமடைந்தது மட்டுமல்லாமல், சக வியாபாரிகளின்  வெறுப்பையும் சம்பாதிக்க  நேர்ந்ததாகத்  தெரிவிக்கிறார்.  இது  போன்ற    சூழ்நிலையில்   சுயதொழிலைத்  தொடர  முடியாமல்      பிச்சை  எடுக்கும்  நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளார். 

அனிதா, “நாங்கள்  சுயமாகத் தொழில்  செஞ்சாலும், கூலி வேலைக்குப் போனாலும் எங்கள  நிம்மதியா  வேலை செய்ய  விடுறதில்லை.  வேறு  வழியில்லாமல்  பிச்சை   எடுத்தா,  கை  கால்  நல்லா  தானே  இருக்கு   உழைச்சு  சாப்பிட  வேண்டியதுதானேனு   கேலியும்  கிண்டலும்      செய்றாங்க. பிச்சை  எடுத்தா  இப்படிப் பேசுறாங்களேனு  மறுபடியும்  கம்பெனிக்கு  வேலைக்குப்  போனேன். அங்க  எங்களுக்குனு  கழிப்பறை இல்ல, பொண்ணுங்க  டாய்லட்டுக்குப் போனா எல்லாரும்  என்ன  வித்தியாசமா  பாக்குறாங்க .  ஆம்பளங்க டாய்லட்டுக்குப்  போனா  நாங்க  எந்தப்  பாலியல் சீண்டலுக்கும்  ஆளாகாம  திரும்ப  வர  முடியாது.  நாங்க    என்னதான்  செய்றதுனு?” என்று கேட்கும்   அனிதாவின் கேள்விக்குப்  பாலின  மேலாதிக்க  சமூகத்திடம்  பதில்  இல்லை.

கம்பெனியில்  உழைத்துச்  சாப்பிட  வேண்டும்  என்று விருப்பப்பட்டாலும் சமூகம் அனிதாவை  மீண்டும் பிச்சை எடுக்க தள்ளிவிட்டது.  ஆனால், எத்தனை  துயரங்கள் வந்தாலும் பாலியல்  தொழிலுக்குச் செல்ல மாட்டேன் என்று  மன உறுதியுடன்  இருந்துள்ளார். ஒரு வழியாக அனிதாவிற்குத்  தூய்மைப்  பணியாளர்  வேலை  கிடைத்துவிட்டது.

தூய்மைப்பணியாளர்  வேலைதானே  என்று சாதாரணமாகக்  கடந்துவிட முடியாது.  தான்  செய்யும் வேலையைக்  கடவுளாக  நேசிக்கிறார். பெருக்கும்போது   இறந்து போன   பூனைகளையும்  அழுகிப்  போன பொருட்களையும்   சேர்த்து  வார வேண்டும்,  ஆனாலும்  பூமியைச் சுத்தம்  செய்யும் வேலை  எனக்கு  மகிழ்ச்சியைத்  தருவதாகக் கூறுகிறார்.

“எல்லாத்தையும்  சுத்தம்  செஞ்சுருவன்மா, நாப்கின்கள மட்டும்  அப்படியே  தூக்கி  வீசிறாங்க, அத கண்ணுல  கண்டாலே  கண்ணெல்லாம் செவந்திருது. வீட்ட  தினமும்  தண்ணீ  ஊத்தி  துடப்பம்  போட்றுவேன்.  எல்லா அழுக்குக்கு மத்தியில் வேலை செய்றோம்லமா. நோய்த்  தொற்று  வந்திருச்சுனா, நான் தனியா வேற இருக்கேன். அதான்  ஒரு  முன்னெச்சரிக்கை.”

அனிதாவைத்  தவிர  மற்ற  பெண்கள்  எல்லாம்  சட்டை பேண்ட் அணிந்திருந்தனர். அனிதா  மட்டும் சேலை  கட்டிருந்தார். ஏன்  என்று கேட்டால் பால் மாறுவதற்கான  அறுவை சிகிச்சை செய்திருப்பதால்  மற்றவர்கள் போல்  சட்டை அணிந்திருந்தால்  எரிச்சலாக இருக்கும் என்றும்  தெரிவித்தார்.

அணிதா  தன் குடும்பத்தின்  உதவியில்லாமல்  தனித்து வாழ்கிறார். அவருக்கு  இருக்கும் பிடிப்பு இந்த வேலை  மட்டும் தான். அதுவும் இல்லையென்றால் அனிதாவின் நிலை கஷ்டமாகிவிடும்.  ஒப்பந்த  முறை தொழிலில்  ஆண்களுக்கும்  பெண்களுக்கும் வேலை  உத்தரவாதமில்லாத போது  திருநங்கைகளின்  நிலை?

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையே திருநங்கைகளின் வேலையை உறுதி செய்யவில்லை என்றால்  மற்ற மாவட்டங்களில்,  கிராமப்புறங்களில்   வேலை  செய்யும்   திருநங்கைகள் நிலை  இன்னும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

படைப்பாளர்:

கு.சௌமியா, பத்திரிகையாளர்.