கர்ப்பம் தரித்த நாளில் இருந்து ஆரம்பிக்கும் ஹார்மோன்களின் நர்த்தனம் குழந்தை பிறந்த பிறகாவது நிற்குமா என்றால் நிற்காது. சிலருக்குக் கர்ப்ப காலத்தைவிட அதன் பின்னும் கூடுதல் ஆட்டம் காட்டும். நார்மல் டெலிவரி என எளிதாகச் சொல்கிறார்கள். ஆனால், இயற்கையாகக் கருப்பை மலர்ந்து குழந்தை தானாக வெளியே வருவது என்பது இப்போது அரிதாகத்தான் இருக்கிறது. பிறப்புறுப்பைச் சற்றுக் கிழித்து (மயக்க மருந்து எல்லாம் தரமாட்டார்கள் (episiotomy) அது ஆசனவாய் வரை நீண்டு சில தையல்களுடன்தான் முடியும். அதையும் இயற்கை பிரசவம் என்கிறார்கள்.

அந்தத் தையலை காலை, மாலை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். அமர்ந்து பால் கொடுக்க முடியாது. அதில் உதிரமும் நாப்கினும் சேர்ந்து தீராத எரிச்சலைத் தர, அந்தக் கரடுமுரடான தையலுடன்தான் குறைந்தபட்சம் குழந்தை பிறந்த பத்து நாட்கள் வரை போராட வேண்டும். என்ன ஒன்று தையல் வெளியே தெரியாது அவ்வளவே.

பல்வேறு காரணங்களால் அதுவும் சாத்தியப்படாத நிலையில் தான் சிசேரியன் மூலம் குழந்தை எடுக்கப்படுகிறது. அதே போல சிசேரியனுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்க, மருத்துவர்கள் பணத்திற்காக சிசேரியன் செய்கிறார்கள் எனக் கூறுவதுபோல முட்டாள்தனம் வேறு இல்லை. முன்பெல்லாம் இவ்வளவு சிசேரியனா நடந்தது என்று கேட்பவர்களிடம், முன்பு பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பிறகும் இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன, ஒரு பெண் எத்தனை குழந்தைகள் பெற்றாள், அதில் எத்தனை உயிருடன் இருந்தது என்று கேட்டுப் பாருங்களேன். பதிலே வராது, சிசேரியன் பல சிக்கலான குழந்தை பிறப்புகளைச் சாத்தியப்படுத்தி உள்ளதுடன், பிரசவத்தின் போதான தாய் சேய் மரணத்தையும் குழந்தை கொடி சுற்றிக்கொண்டு இருந்தால், பாதம் முதலில் வந்தால் பெண்கள் அனுபவிக்கும் இரண்டு மூன்று நாள் மரண வலியைக் குறைத்துள்ளது. சிசேரியனால் பிரச்னை இல்லையா என்றால் இருக்கிறது. ஆனால், உயிர் போகும் பிரச்சினை எதுவும் இல்லை.

சிசேரியனுக்காகப் பெண்ணின் முதுகுத் தண்டில் போடப்படும் எபிடியூரல் ஊசியினால், சிலர் பிரசவம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் முதுகு வலியில் அவஸ்தைப்படுவது உண்டு. ஆனால், முறையான உடற்பயிற்சி செய்தால் அந்த முதுகு வலியில் இருந்தும் விரைவில் மீண்டுவிடலாம்.

செத்துப் பிழைத்தல் என்பார்களே, அதைத்தான் ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்தின்போது அனுபவித்து வெளிவருகிறாள். பிரசவ வலியும் அதன் தாங்கு திறனும் அனைத்துப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. அவரவர் உடல், மன வலிமை, ஆரோக்கியம் சூழல் சார்ந்தது.

குழந்தைப் பேறு காரணமாக அவள் உடலில் நடக்கும் மாற்றங்கள், வலி அனைத்தையும் சுமந்து பிள்ளை பெறும் பெண் என்ன மாதிரி மனநிலையில் இருப்பாள்? என்ன மாதிரி பிரச்னைகளை எதிர்கொள்வாள்? அவளுக்கு ஆதரவாக என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்பவர்கள் எத்தனை பேர்?

பிரசவம் வரை பெண்களிடம் காட்டும் அக்கறையைக்கூடப் பிரசவத்திற்குப் பின்னர் பலர் காட்டுவதில்லை என்பதுதான் நிஜம். பிரசவத்தை, குழந்தை பிறப்பை நிகழ்வாக, விழாபோலக் கொண்டாடிவிட்டு, அதன்பின் குழந்தைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் கொஞ்சம்கூடத் தாய்க்குத் தருவதில்லை.

கர்ப்ப காலத்திலாகட்டும், பிரசவத்திற்குப் பின்னாகட்டும் அதிகளவில் ஹார்மோர்ன் ஏற்ற இறக்கங்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர். பலருக்கும் அது தானாகவே சரியாகிவிடும் என்றாலும், சிலருக்கு நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சிக்கலை ஏற்படுத்தும். உடல் ரீதியாகச் சிலருக்கு ஏற்படும் பிரச்னைகள் என்றால், தையலில் சீழ் கோத்துக்கொள்வது, அதீத உதிரப்போக்கு, தலைமுடி கொட்டுதல், மார்பு காம்பு வெடித்துக் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் வலியில் துடிப்பது எனப் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்வார்கள்.

அதிலும் முதல் முறை குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும் பெண்களில் சிலருக்குப் பிரசவ வலியின் வேதனைகளும் உபாதைகளும் முற்றிலும் விலகாத நிலையிலேயே மார்பக முலைக்காம்பின் மிருது தன்மை குறைந்து, கடும் வலியை அனுபவிப்பார்கள். அந்த வலி பிரசவ வலிக்கு ஈடானதாக, சில நேரத்தில் அதைவிடக் கொடூரமானதாக இருக்கும்.

மார்பகத்தின் முலைக்காம்புகள் வெடித்துப் புண் உருவாகும். குழந்தை பால் அருந்தும்போது இந்த வலி உயிர் போவது போல இருக்கும். இதற்கு நோய்த் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மார்பகங்கள் பெரிதாவதால் முலையில் வறட்சி ஏற்பட்டு, அதனால் வெடிப்பும் புண்ணும் வரும் என்றுதான் கூறப்படுகிறது. வலி காரணமாக குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும் என்பதே அந்தப் பெண்ணுக்குப் பெரும் பீதியைத் தரக்கூடியதாக இருக்கும். சிலர் இதற்குப் பயந்து தாய்ப்பால் தருவதை நிறுத்தும் அளவு சென்றுவிடுவார்கள்.

இதற்காகப் பால் தருவதை நிறுத்தத் தேவையில்லை, மருத்துவரை அணுகி பிரச்னையைச் சரி செய்துவிடலாம் என்பதுடன் புண் இருந்தாலும் குழந்தைக்குப் பால் கொடுப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நமது சமூகத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவதையோ நிறுத்துவதையோ சம்மந்தப்பட்ட பெண் மட்டும் எளிதில் முடிவு செய்துவிட முடியாது. மாமியாரும் கணவரும் சேர்ந்து தன் குழந்தை தாய்ப்பால் குடித்துதான் வளர வேண்டும் என்ற நிர்பந்திக்கும் கொடுமையும் உண்டு.

உடல் ரீதியான உபாதைகள் பிறர் கண்ணுக்குத் தெரிவதால் அதற்கு மருத்துவ ஆலோசனைகளும் தீர்வுகளும் கிடைக்க வாய்ப்பு இருக்க, வெளியே தெரியாமல், சம்மந்தப்பட்ட பெண்ணுக்குமே தெரியாமல் அவளுக்குள் நடக்கும் களேபரங்கள் பற்றிய புரிதல் பலருக்கும் இருப்பதில்லை. நம் நாட்டில் பெண்களுக்கு இந்தப் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாததுடன், நமது கலாச்சாரம், வாழ்க்கை முறையில் இது தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டு, உறவு சார்ந்த சிக்கலாகப் புரிந்துகொள்ளப்படுவதுதான் வேதனை,

கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் எதிர்கொண்டவர்கள், எதிர்கொள்ளாதவர்கள்கூடப் பிரசவகாலத்திற்குப் பின் மன அழுத்தம் அதாவது postpartum depression எதிர்கொள்வார்கள். அந்தப் பெண்ணே தனக்கு என்ன நடக்கிறது, தான் ஏன் இவ்வாறு இருக்கிறோம் என உணர முடியாமல் திணறும் போது, வீட்டில் இருப்பவர்கள்தாம் அவள் மாற்றத்தை உணர்ந்து மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லை அந்த மன அழுத்தம் பல்வேறு விபரீதங்களுக்கு வித்திடும்.

பிரசவம் முடிந்தபின் எப்போதும் மெளனமாக அல்லாது சோகமாக இருப்பது, காரணமின்றி அழுவது, சரியாகத் தூங்காமல், அல்லது எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பது, தனிமையில் ஒடுங்குவது, சரியாக உணவு எடுக்காமல் இருப்பது ஆகியவற்றைக் கண்காணித்து, அவரிடம் மனம்விட்டுப் பேசி என்ன மாதிரி சிக்கல்களைத் தனக்குள் வைத்துப் புழுங்கிக் கொண்டு இருக்கிறார் என்பதை உணரத் தலைப்பட வேண்டும். அவரின் பிரச்னைகளுக்கு உங்களால் தீர்வு காண முடியாது என்று தோன்றினால், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும்.

பிரசவத்திற்குப் பிறகான சோர்வு, இரவில் குழந்தைக்குப் பால் கொடுக்கவும் துணி மாற்றவும் அடிக்கடி எழுவதால் சரியான உறக்கமின்மை, அனுபவஸ்தர்கள் தரும் ஆலோசனைகளால் உண்டாகும் குழப்பங்கள், அதன் விளைவாகத் தான், சரியான தாய் இல்லையோ என்ற சந்தேகம், உடல் எடை கூடுவதால் ஏற்படும் பீதி, தனக்கென நேரம் இல்லாமல் போவது ஆகியவற்றால் மன அழுத்தங்கள் ஏற்படுவது சகஜம் என்றாலும், அதன் வீரியம் பொறுத்து மன அழுத்தம் இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.

ஏனென்றால் இந்த மன அழுத்தம் கவனிக்கப்படாமல் விட்டால் தற்கொலை, குழந்தையை வெறுப்பது, காயப்படுத்துவது, சில நேரத்தில் குழந்தையைக் கொலை செய்யும் தீவிர எண்ணம், தன்னைக் காயப்படுத்திக் கொள்வது, குழந்தை மீது நாட்டமின்றி இருப்பது, அதன் காரணமாகக் குற்ற உணர்வில் உழல்வது எனப் பல தீவிர மீள முடியாத மனநிலைக்குள் தள்ளிவிடும்.

மருத்துவர்கள் சாதாரண கேள்விகள் மூலம் பெண்கள் மன அழுத்தம் எதிர்கொள்கிறார்களா என்பதைக் கண்டறிய முயலும்போது, அவற்றுக்கு மனதைத் திறந்து நேர்மையாகப் பதில் சொன்னாலே எளிதில் புரிந்துகொள்வார்கள். ஆனால், ஐயோ நமக்கு இப்படியான எண்ணம் எல்லாம் வருகிறது என்று சொன்னால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள், இதை மருத்துவரிடம் எப்படிச் சொல்வது என்று நம் குழப்பங்களை மறைக்க முயன்றால் அது நமக்குதான் சிக்கலை ஏற்படுத்தும்.

குழந்தை பிறந்து இரு வாரங்கள் கழித்தும் மனம் சார்ந்த அழுத்தங்கள், குழப்பங்கள் சீராகாமல் அதிகரித்தால், வேலைகளில் கவனம் செலுத்த முடியாமை, குழந்தையைக் கவனிக்க முடியாமை, தற்கொலை எண்ணங்கள், காரணமின்றி அழுகை போன்ற உணர்வுகள் இருந்தால் தயங்காமல் மருத்துவரிடம் கூறிவிடுங்கள். குடும்பத்தினரின் கண்காணிப்பு இந்தக் காலகட்டங்களில் அவசியமான ஒன்றாகும்.

அதற்கு முன் குழந்தை பெற்ற பெண்களுக்குப் போதிய ஓய்வு தேவை என்பதை குடும்பத்தினரும், உறவினர்களும் புரிந்துகொள்ளுங்கள். குழந்தையைப் பார்க்கச் செல்கிறேன் என நேரங்காலம் தெரியாமல் சென்று உறங்கும் தாயையும் குழந்தையையும் எழுப்பிவிடுவதைத் துளிக்கூட லஜ்ஜையின்றி செய்வதைத் தவிருங்கள். அதேபோல அவள் உடல் நிலை, மனநிலை பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல், குழந்தைக்குப் பேர் வைக்கிறோம், தீட்டு கழிக்க ஹோமம் பண்ணுகிறோம் என டார்ச்சர் செய்யாமல் இருப்பது அந்தப் பெண்ணுக்கு நீங்கள் செய்யும் கூடுதல் உதவி.

(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.