பண்பாட்டுப் படையெடுப்பால் எப்போதுமே எதிர்மறையான சமூகத்திற்குத் தீங்கு மட்டுமே விளையும் என்று கருதப்படுகிறது. முந்தைய கட்டுரையில், வட அமெரிக்கப் பழங்குடிகளின் வாழ்வியலுக்கு ஐரோப்பிய மிஷனரிகள் செய்த பண்பாட்டுப் படையெடுப்பு நடவடிக்கைகள் மூலம் நிகழ்ந்த எதிர்மறை விளைவுகள் குறித்து விரிவாகப் பார்த்தோம். இந்தியாவில் மிஷனரிகள் வருகைக்குப் பிறகு நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்பினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழ்ந்த பல பயனுள்ள நேர்மறை விளைவுகள் குறித்தும் பார்த்தோம். குறிப்பாக, அதுவரை கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கும் மிஷனரிகள் வருகையால் கல்வி வழங்கப்பட்டது என்று அறிந்தோம். மிஷனரிகளின் வருகைக்குப் பிறகுதான் இந்தியாவில் அனைவருக்கும் சமமாக கல்வி கிடைக்க வாய்ப்பு அமைந்தது என்றால், அதற்கு முன் இருந்த இந்தியக் கல்விமுறையில் சமத்துவம் இல்லையா? பாரம்பரிய இந்தியக் கல்விமுறையில் யாருக்கெல்லாம் கல்வி கிடைத்தது? யாருக்கெல்லாம் கல்வி மறுக்கப்பட்டது? ஏன்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் காண்போம்.

காலனித்துவ காலம் முன் இந்தியாவில் பரவலாக இருந்த கல்வி முறை குருகுல கல்வி முறை. குருகுலங்கள் இன்றைய பள்ளிக்கல்வி முறையின் ஆரம்ப வடிவங்களில் ஒன்றாகும். அவை பொதுமக்களின் நன்கொடையால் நிறுவனப்படுத்தப்பட்டவை. இருந்த போதும் அந்தக் குருகுலங்களில் பொது மக்கள் அனைவராலும் அனைத்து வகை கல்வி அறிவையும் பெறமுடிந்ததா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். இந்தியச் சமூகம் சாதிகளால் ஆனது. இதில் எந்த இரு சாதிகளும் சமம் கிடையாது. எனவே, தரப்படுத்தப்பட்ட சமத்துவம் இல்லாத சமூகத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கடமை விதிக்கப்பட்டது. இந்த விதிகள்தாம் வர்ணாசிரம தர்மம்.

இந்த வர்ணாசிரம தர்மப்படி மக்கள் நான்கு வர்ணங்களாக, பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் எனப் பிரிக்கப்பட்டனர். பிராமணர்கள் வேதம் மற்றும் மதம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்; க்ஷத்திரியர்கள் போர்க்கலைகள் அனைத்தும் கற்றுக்கொள்ள வேண்டும்; வைசியர்கள் வர்த்தகம் மற்றும் பிற குறிப்பிட்ட தொழிற்கல்வி படிப்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். சூத்திரர்கள் உடலை வருத்தி சிரமப்பட்டுச் செய்ய வேண்டிய அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமான வேலைகள் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு வர்ணத்திலும் நூற்றுக்கணக்கான சாதிகள் உள்ளன. எனவே, வர்ணாசிரம தர்மப்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கல்வி / தொழில் வகுக்கப்பட்டது.

இந்தச் சமத்துவம் அல்லாத கல்வி மற்றும் சமூக கட்டமைப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் போராடினர். அப்படிப் போராடியவர்களை சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய மக்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்கினர். அவர்களை ஊரைவிட்டு ஒடுக்கி தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, தனிமைப்படுத்தினர். அவர்கள் ஐந்தாம் வர்ணத்தவர் என்று பிற்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டனர். இவர்களுக்குக் கல்வி வழங்கப்பட்டால் சமத்துவமற்ற சமூகத்தைச் சீர்செய்ய மேலும் கேள்வி எழுப்பிப் போராடுவார்கள் என்ற காரணத்தால், ஆதிக்கச் சாதியினரால் இவர்களுக்குக் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்டது. இந்தியா முழுவதும் வர்ணாசிரம தர்மத்தின்படி இவ்வாறு தரப்படுத்தப்பட்ட சமத்துவமற்ற கல்விமுறையே நிலவியது.

தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இரண்டு வர்ணத்தைச் சேர்ந்த சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் மக்கள்தான் பொரும்பாலும் உள்ளனர். தமிழ்நாட்டில், மிஷனரிகள் வருகைக்கு முன், பிராமண வர்ணத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் கல்வி வழங்கப்பட்டது. கல்வி மட்டுமின்றி சமூகத்தின் அனைத்துச் சலுகைகளும் சவுகரியங்களும் பிராமணர்களுக்குத் தடையேதுமின்றி கிடைத்தன. ஆனால், இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் பிராமண வர்ணத்தைச் சேர்ந்தவர்களின் மொத்த மக்கள் தொகை இன்று வரை மூன்று சதவீதத்திற்குக் கீழ்தான் இருக்கிறது. இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் ஒரு வர்ணத்தைச் சார்ந்த மக்கள் எப்படித் தமிழ்நாட்டில் உள்ள மற்ற பெரும்பான்மை மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடிகிறது?

பொதுவாக, பண்பாட்டுப் படையெடுப்பு என்பது சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் சிறுபான்மை மக்கள் மீது செய்யும் ஆதிக்கமாகக் கருதப்படுகிறது. ஒருவர் தான் பிறந்து வளர்ந்த பண்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பண்பாடு உள்ள நாட்டிற்குக் குடிபெயரும்போது, அந்தப் பண்பாட்டிற்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழ்தல் அவசியமாகிறது. அப்படித் தகவமைத்துக்கொண்டு வாழத் தவறுகிறவர்கள் அந்தச் சமூகத்தில் தொடர்ந்து வாழ பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். உதாரணத்திற்கு, இன்றளவும் பெண்கள் வேலைக்குச் செல்ல தடை விதிக்கும் இந்தியா போன்ற பண்பாட்டுப் பின்னணியில் இருந்து கனடா போன்ற முன்னேறிய, வசதியான வாழ்க்கை முறை உள்ள நாடுகளுக்குக் குடிபெயரும் நடுத்தரவர்க்க ஆண்கள், தங்கள் வீட்டுப் பெண்களை வேலைக்குச் செல்ல அனுமதிக்காமல் இரண்டு அல்லது மூன்று வேலைகளுக்குச் சென்று குடும்பச் செலவுகளைச் சமாளிக்கிறார்கள்.

இது போன்ற பல நடைமுறை சிக்கல்களை, கனடா போன்ற அதிக அளவில் குடிபெயர்வு நடக்கும் நாடுகளில் குடியேறிகள் எதிர்கொள்கிறார்கள். எனவே, பெரும்பான்மை பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாறிக்கொள்வது நிலையான வாழ்க்கை நடத்துவதற்கு அவசியமானதாகிறது. ஆனால், இந்தியாவில் இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு எதிர்மறையாக நிகழ்ந்தது. இந்தியாவில் சிறுபான்மை சமூகமாக இருக்கும் பிராமண சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை, பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் பண்பாட்டிற்குள் உள்வாங்கிக்கொண்டனர். இது எப்படி சாத்தியமானது?

பிராமணர்கள் சமுதாயத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களின் பண்பாடுதான் மேன்மையானது என்று பொதுப்புத்தியில் கருத்தப்படுகிறது. இந்தப் பொதுப்புத்தி சிந்தனை, பெரும்பான்மை பூர்வகுடிகளைத் தங்கள் சொந்தப் பண்பாட்டுக் கூறுகளை விடுத்து, கல்யாண சடங்குகள் முதல் கருமாதி சடங்குகள் வரை பிராமணர்களின் பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கிக்கொள்ளச் செய்தது. இந்த எதிர்மறையான பண்பாட்டுப் படையெடுப்பிற்கும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் மீது ஆதிக்கம் செலுத்தவும் முழு முதல் காரணம், அதிகாரம்.

பண்பாட்டுப் படையெடுப்பு என்பது பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தால் சிறுபான்மை சமூகத்திற்கு நடக்கும் ஒன்று இல்லை; அது சமூகத்தில் அதிகாரம் உடையவர்களால் அதிகாரம் இல்லாதவர்களுக்கு நடக்கும் ஒன்றாகும். அதிகாரம் சில சமூகங்களில் சிறுபான்மை மக்களிடம் குவிந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் சிறுபான்மை சமூகமாக இருக்கும் பிராமண சமூகத்திடம் அதிகாரம் மொத்தமாகக் குவிந்து இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியமானது?

உலகம் முழுவதும் தங்கள் அதிகாரத்தை விரிவாக்க ஐரோப்பியர்கள் மதத்தைப் பயன்படுத்தி மிஷனரிகள் மூலம் செயல்பட்டதுபோல், இந்தியாவில் ஆரியர்களாக வருகை தந்து பின் பிராமண சமூகமாக அடையாளப் படுத்தப்படுபவர்கள் கடவுள் எனும் கோட்பாடு கொண்டு மண்ணின் பூர்வகுடிகளைக் கட்டுப்படுத்தினர். பெரும் முடி அரசர்களை கடவுள் கோட்பாடோடு சேர்த்து ஜோதிடம் போன்ற இதர விஷயங்கள் கொண்டு கட்டுப்படுத்தினர். இவ்வாறு, சமூகத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும் பிராமணர்களால் பெரும்பான்மை பூர்வகுடிகள் கட்டுப்படுத்தப் படுகிறார்கள்.

பொதுவாக, நம் நட்பு வட்டத்தில் அல்லது நம் சுற்றத்தார் மத்தியில் யாரவது வாழ்வில் சகல வசதிகளோடு சீரும் சிறப்புமாக வாழ்வதைப் பார்க்கும் போது நாமும் அவரைப் போல் சிறப்பாக வாழ அவர்கள் செய்யும் அனைத்தையும் செய்வோம். அதேபோல், சமூகத்தில் அதிகாரம் மிகுந்த சகல வசதிகளோடும் மரியாதையோடும் வாழும் பிராமணர்களை கவனிக்கும் மற்ற சமூகத்தினரும் அவர்களைப் போல் வாழ ஆசைப்பட்டு அவர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றினர். இதைப் போலச் செய்தல் என்று கூறுவர். இதன் அடிப்படையில், இந்தியாவில் உள்ள மற்ற சமூகங்கள் பிராமணர்களின் பண்பாட்டுக் கூறுகளைத் தங்கள் பண்பாட்டிற்குள் உள்வாங்கிக்கொண்டனர். இவ்வாறு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் சிறுபான்மையினர்களால் பெரும்பான்மை மக்கள் மீது பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்தது.

‘பண்பாட்டுப் படையெடுப்பு’ என்பது அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களால் அதிகாரம் இல்லாதவர்களுக்கு நிகழும் ஒன்று என்று அறிந்தோம். இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்பதற்குச் சமூகத்தின் அனைத்துப் படிநிலைகளில் உள்ள மக்களிடமும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதன் மூலம் அனைவரும் சமமான சமூகத்தை நோக்கிப் பயணிக்கவேண்டும். இதன் விளைவாக அவரவர் சூழலுக்குப் பொருத்தமான பண்பாட்டைப் பின்பற்றி ஆதிக்க சமூகத்தின் பண்பாட்டுப் படையெடுப்பிற்குப் பலி ஆகாமல் சுதத்திரமாக சுயமரியாதையோடு வாழலாம். எனவே, சமத்துவம் பழகுவோம்!

(தொடரும்)

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ