பெண்ணின் உடல் குறித்தும், மாதவிடாய் காலம் குறித்தும் பல விழிப்புணர்வு முன்னெடுப்புகளை ஊடகமும் சில தன்னார்வல அமைப்புகளும் எடுத்து வருகின்றன. இருப்பினும் பொதுச் சமூகத்தில் மாதவிடாய் குறித்த அணுகுமுறையில் போதுமான அளவு
முன்னேற்றமில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்களைத் தனியறையில் தங்க வைப்பதும், அவர்களுக்கென தனி பாய், தட்டு போன்றவை தனியாக எடுத்துவைக்கப்படுவதும், மாதவிடாய் காலத்தில் பெண்களைத் தொட்டால் தீட்டு என்று தலை குளிப்பதும் இன்றும் இந்திய குடும்பங்களில் தொடர்கிறது. பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படும்போது தொட்டாலே தீட்டு என்று சொல்பவர்களுக்கு, மாதவிடாய் ரத்தத்தினால் வரையப்பட்ட ஓவியம் என்றால் கூடுதல் அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தும்.
மாதவிடாய் ரத்தத்தில் ஓவியங்கள் வரைந்து, மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார் சென்னையைச் சேர்ந்த சபரிதா. இருபத்தாறு வயது நிரம்பிய சபரிதா சமூகப்பணிக்கான முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது ஒரு தன்னார்வல அமைப்பில் வேலை செய்கிறார். இதனுடன் மாதவிடாய் ரத்தத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் மூலம் மென்ஷஸ் வித் மென் (MENSES WITH MEN) என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். சிறுவயதில் ஏற்பட்ட மாதவிடாய் கசப்பான அனுபவங்கள், சமூகத்தின் மீதான கோபம் போன்றவை அவரை மாதவிடாய் ரத்த ஓவியங்கள் வரையத் தூண்டியுள்ளன.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுப்பதற்கான நோக்கம், பிரச்சாரத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார் சபரிதா.
“சிறு வயதில் என் பெரியம்மா வீட்டில்தான் வளர்ந்தேன். எனக்கு அம்மா, அப்பா இல்லை. நான் முதன்முதலில் மாதவிடாயை எதிர்கொண்ட போது கூச்சப்பட்டுக்கொண்டே என் பெரியம்மா பெண்ணிடம் தகவலைத் தெரிவித்தேன். வீட்டில் அப்போது உறவினருக்குக் காரியம் நடந்து கொண்டிருந்தது. தகவல் தெரிவித்த உடனே என் பெரியம்மா ஊரைக் கூப்பிட்டு மஞ்சத் தண்ணீர் ஊத்தினார். அப்போது விவரிக்க முடியாத வெறுப்பு என்னுள் ஏற்பட்டது. ஏன் நம் குழந்தைப் பருவத்தைக் சிக்கலுக்குரியதாக்குகிறார்கள் என்று கோபப்பட்டேன்.. மாதவிடாய் காலத்தில் பள்ளி, பேருந்து போன்ற இடங்களில் உட்காருவதற்குக் கூச்சப்பட்டேன். கறை படிந்துவிடுமோ என்று அச்சம் இருந்துகொண்டே இருக்கும்.
நான் வேலைக்குச் செல்லாத காலம் என்பதாலும், பெரியம்மா வீட்டில் வளர்ந்ததாலும் எனக்கு சௌகரியமான நேப்கின் பயன்படுத்த முடியவில்லை. வீட்டில் அவர்கள் வாங்கி வைக்கும் நேப்கினைத்தான் பயன்படுத்த வேண்டும். அது எனக்கு செங்கல் போல் உணர்வை ஏற்படுத்தும். எனக்கு மாதவிலக்கு மாதத்திற்கு ஒருமுறை வராமல், 4 மாதங்களுக்கு ஒருமுறை, 6 மாதங்களுக்கு ஒருமுறை வரும். அதனால் என்னால் என் மாதவிடாயைக் கையாள்வதில் சிரமம் இருந்தது. நான் அனுபவித்ததெல்லாம் கொஞ்சம்தான். தெருவோரத்தில் வாழும் குழந்தைகள் எவ்வாறு மாதவிடாய் காலங்களை எதிர்கொள்கிறார்கள் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அவர்களுக்கென்று தனிக் கழிப்பறை கிடையாது, பொதுக்கழிப்பறைதான், அதுவும் சுத்தமாக இருப்பதில்லை. விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு நாப்கின்கூட வாங்குவது சிரமம். விளிம்புநிலை பெண்கள் periods povertyயைச் சந்திக்கின்றனர். வளர்ந்து வரும் இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் சுகாதாரமில்லாமல்தான் மாதவிடாயைக் கழிக்கின்றனர். மாதவிடாய் காலத்தில் சுகாதாரமில்லாத காரணத்தால் மாணவிகள் பள்ளிக்குத் தொடர்ந்து செல்ல இயலவில்லை.
மாதவிடாய் குறித்துப் பேசக்கூட ஆண்களும் பெண்களும் இன்னும் தயங்குகின்றனர். மாதவிடாய் கறையையும் ரத்தத்தையும் அசிங்கமாக பார்க்கும் நிலை ஒழிய நான் எடுத்த ஆயுதம்தான், ’மாதவிடாய் உதிர ஓவியம்.’ எதைக் கேவலம் என்று இந்தச் சமூகம் நினைக்கிறதோ, எந்த உதிரத்தை வைத்துப் பெண்களைச் சமூகம் ஒடுக்குகிறதோ அதையே என் ஆயுதமாக எடுத்துள்ளேன். முதலில் என் நண்பர்கள் வட்டத்தில் பெரியளவு வரவேற்பு இல்லை. எதிர்ப்புகள் வலுவாக இருந்தன. ஆனால், தற்போது என்னுடன் சேர்ந்து ஆண்களும் வரைய விரும்புகின்றனர்.
எவ்வாறு ரத்தத்தைக் கொண்டு ஓவியம் தீட்டுவீர்கள்?
மாதவிடாய் காலங்களில் வரும் ரத்தத்தை ஏதாவது கண்ணாடி டப்பாவில் சேகரித்து வைப்பேன். வீட்டில் இருக்கும் பெயிண்ட் பிரஷ் கொண்டு போஸ்ட் கார்டில் அல்லது கடினமான தாளில் ஓவியம் வரைவேன். வரைந்த ஓவியங்களை வெயிலில் காயவைத்து, பிளாஸ்டிக் கவரில் போட்டு வைப்பேன். இது கிருமிகளிடமிருந்து பாதுகாக்கச் செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். நான் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கிய காலத்தில் ஆண்களுக்கு மாதவிடாய் குறித்துப் புரிதல் குறைவாக இருந்தது. ஆண்களையும் மாதவிடாய் குறித்த கலந்துரையாடல்களில் உள்ளடக்கும் நோக்கத்தில் சமூக வலைதளம் மூலமாகவும் நேரடியாகவும் அவர்களுக்கு மாதவிடாய் உதிர ஓவியங்கள் வேண்டுமா என்று கேட்டு வரைந்து தருவேன். பெரும்பாலானோர் வாங்கினார்கள். ஒரு சிலர் மட்டுமே பயந்து ஓடினர்.
பிரச்சாரம் மேற்கொண்ட போது ஒருவர் என்னிடம் ஏன் இந்த ஓவியங்கள் மூலம் இவ்வளவு வன்முறையாக (violent) நடந்துகொள்கிறீர் என்றார். இந்தக் கேள்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எத்தனையோ கொலை, பாலியல் வன்கொடுமை நடக்கும் சமூகத்தில் பெண்ணின் மாதவிடாய் உதிரம் வன்முறையாக உள்ளதா? ஏன் இவர்கள் பார்வை பிற்போக்குத்தனமாக உள்ளது என்று என்னுள் கேள்வி வந்தது.
ஓவியங்கள் மட்டுமல்லாமல் மாதவிடாய் குறித்த பெண்களின் அனுபவங்களைப் பெயர், முகவரி இல்லாமல் சேகரித்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் மாதவிடாய் கறையைச் சாதாரணமானது என்பதை உணர வைக்க பெண்களிடமிருந்து மாதவிடாய் கறை படிந்த பேப்பர்களைச் சேமிக்கிறோம். இவ்வாறான முயற்சிகளை எல்லாப் பெண்களும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. அதனால் முதற்படியாக நெருங்கிய வட்டத்தில் புரிதல் ஏற்படுத்தி சேகரிக்கிறோம். மாதவிடாய் ஏற்பட்டால்தான் பெண்மை என்று கருதும் சூழல் மாற வேண்டும். ஏனென்றால் இங்கு பால்புதுமையினரும் இருக்கிறார்கள். இவ்வாறான கருத்துகள் அவர்களை மனதளவில் காயப்படுத்தும் என்கிறார்.
நாங்கள் ஒரு குழுவாக இணைந்து பயணிக்கிறோம். இந்த ஓவியங்களைச் சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் பொதுவெளியில் கொண்டுவரும் விதமாக வளசரவாக்கத்தில் உள்ள கூகை நூலகத்தில் காட்சிப்படுத்தினோம். பின்னர் ராயப்பேட்டையில் உள்ள சிந்தன் புக்ஸ் படிப்பகத்தில் காட்சிப்படுத்தினோம்.
இதன் மூலம் முற்போக்காகச் சிந்திக்கும் நண்பர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எதிர்காலத்தில் மாதவிடாய் குறித்த ஓவியங்களையும், பிரச்சாரங்களையும், பெண்களின் மாதவிடாய் அனுபவங்களையும் முழுமையாக ஆவணப்படுத்த உள்ளோம். இப்பணியின் முதற்கட்டமாக பெண்களின் மாதவிடாய் அனுபவங்களை Spotifyயில் வெளியிடத் தொடங்கிவிட்டோம். மாதவிடாய் குறித்து முற்போக்காகப் பேசும் நண்பர்கள் என் ஓவியங்களை முன்னிருத்திப் பேசத் தொடங்கியுள்ளனர். லயோலா கல்லூரி மாணவர் குணா காலேஜ் அசைன்மெண்ட்டுக்காக என்னுடைய ஓவியங்களை ஆவணப்படுத்தியுள்ளார். முன்பெல்லாம் எதிர்ப்பு அதிகமாக இருந்தது.தற்போது ஆதரவு கரங்கள் அதிகரித்துள்ளன. பெரும்பாக்கத்தில் உள்ள பெண் குழந்தைகளுடன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாதவிடாய் சுகாதாரம் குறித்து உரையாடுகிறேன்” என்றார்.
மாதவிடாய் உடலில் ஏற்படும் உயிரியல் மாற்றமே. மாதவிடாய் ரத்தம் குறித்த பல பொய்யான தகவல் பரவும் போது சபரிதாவின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால், எல்லாராலும் மாதவிடாய் ரத்தத்தை சுகாதாரத்துடன் கையாள முடியுமா? என்பதையும் மாதவிடாய் இரத்த ஓவியத்தின் மூலம் எந்த தொற்று ஏற்படாமலிருக்குமா என்பதையும் இன்னொரு முறை மருத்துவரிடம் சபரிதா உறுதிப்படுத்திக்கொள்வது முக்கியம்.
படைப்பாளர்:
கு.சௌமியா
, பத்திரிகையாளர்.