சென்ற வாரம் நானும் என் தோழியும் பணி இடத்தில் நீண்ட நேரம் பொதுவாகச் சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த போது பேச்சு திருமணம், கல்வியில் வந்து நின்றது. அப்போது அவள் கூறிய விஷயம் என்னை யோசிக்க வைத்தது.
அவளுக்குத் தெரிந்தவர் ஒருவர், கொஞ்சம் வசதியானவர். அவருடைய மருமகள் கல்லூரிப் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கி இருக்கிறார். ஆனால், திருமணத்திற்குப் பின்பு வீட்டில் இருக்கிறார். இது அந்தப் பெண்ணின் விருப்பமாக இருக்கலாம். அல்லது குடும்பத்தின் விருப்பமாக இருக்கலாம். அதில் எல்லாம் நான் மூக்கை நுழைக்கவில்லை.
ஆனால், அவர் பெருமையாகக் கூறிக்கொண்ட விஷயம் என்னவென்றால், “என்னோட மருமக கோல்ட் மெடல் வாங்கியிருக்காள். ஆனால், இப்ப வீட்டில்தான் இருக்கிறாள்.” இதுதான். இதில் பெருமையாகக் கூற என்ன இருக்கிறது என்றுதான் எனக்குத் தெரியவில்லை.
என் தோழி, “இதைக் கேட்டு எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. அந்த கோல்ட் மெடலினால் என்ன பிரஜோனம்? நாம் படித்த துறையில் மேலும் எதுவும் செய்யப் போவதில்லை என்றால், திருமணத்திற்குப் பிறகு அது வீணாகப் போகிறது என்றால் எதற்கு அந்தப் படிப்பு?” என்றார்.
இதைக் கேட்ட போது எனக்கும் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்த போது ஒரு வேதியியல் ஆசிரியை இருந்தார். அவரும் தங்கப் பதக்கம் வாங்கி இருந்தார். ஆனால், திருமணம் முடிந்து வீட்டில்தான் இருந்தார்.
மற்றொரு சம்பவம், நான் இளநிலை பயின்றது இந்தியாவில் முதல் இருபது இடங்களுக்குள் இருக்கும் ஒரு கல்லூரியில். அதில் அரசு நிதி பெறும் பிரிவில் தான் என்னுடைய படிப்பு அப்போது இருந்தது. அந்தக் கல்லூரியில் சீட் கிடைப்பது கடினம். பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்த அதே நாளில் பதினைந்து சீட்டுகள் மட்டும் கொடுக்கப்பட்டது. அதில் நானும் ஒருத்தி. என்னுடன் சில தோழிகளும் இருந்தனர். அவர்களில் சிலர், “நாங்க படிக்கறதே… கல்யாணப் பத்திரிகையில் பெயர் போடத்தான்” என்றார்கள்.
அப்போதுதான் தோன்றியது, கல்வி கற்கலாம் என்று நினைப்பது தவறில்லை. பெயருக்குப் பின்னால் பெருமைக்குப் போடுவதற்கும், திருமணத்தில் போடுவதற்கும் மட்டும்தானா கல்வி என்று நினைக்கத் தோன்றியது.
உண்மையிலே அந்தப் படிப்பைப் படித்து, அந்தத் துறையில் முன்னேற நினைத்து சீட் கிடைக்காமல் போனவர்களின் நிலையைப் பற்றி யோசிக்க வேண்டும்.
இதே இடத்தில் இன்னொன்றையும் பதிவு செய்ய நினைக்கிறேன். பல பெற்றோர்கள் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள், “ஐயோ… என் பொண்ணு நாங்க இல்லாமல் தனியாகப் போக மாட்டாள். எங்க போனாலும் நாங்களே கூட்டிட்டுப் போயிட்டு கூட்டிட்டு வருவோம்.”
“என்னோட புள்ளை வீட்டைவிட்டு வெளியே போக மாட்டாள். என்னோட புள்ளைக்கு பிரண்ட்ஸே கிடையாது.”
இதில் பெருமைப்படும் விஷயம் எதுவும் கிடையாது. இவை எல்லாம் பெண்களைச் சுயமாகச் சிந்திக்க, செயல்பட வைக்க முடியாமல் வைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பழைய எச்சத்தின் மிச்சம்தான்.
அந்தப் பெண் திருமணத்திற்குப் பின் எதுவும் செய்யவில்லை. இந்தப் பெண்ணால் தனியாக எதுவும் செய்ய முடியவில்லை என்று யாரையும் குறை சொல்ல வரவில்லை. இந்த முடிவுகள் எல்லாம் அந்தப் பெண்ணால் தெளிவாக யோசித்து முடிவெடுக்கப்பட்டதா இல்லை, இதுதான் காலங்காலமாக நடக்கிறது என்பதால் ஏற்றுக்கொண்டு விட்டாரா என்பதுதான் இங்கு விஷயம்.
இவ்வளவு பேசுகிறாயே நீயும் இப்படி ஒரு சூழ்நிலையில் நிற்கும் போது என்ன செய்வாய் என்று சிலர் கேட்கலாம். ஃபேஸ்புக்கில் என்னை 1500 பேர் பின் தொடர்கிறார்கள். ஆனால், 90 யூ டியூப் பின்தொடர்பவர்களால் (பெரும்பாலும் சொந்தம், சுற்றம், நண்பர்கள்) நின்று விட்டது. (அதில் எனக்கு நிம்மதிதான்.)
நான் பள்ளி முதல் கல்லூரி வரை டாப்பர். விளையாட்டையும் விட்டது இல்லை. எந்த வேலை செய்தாலும் பர்ஃபெக்ட் என்ற பெயர் உண்டு. இரண்டு மாஸ்ட்ர் டிகிரிகளை ஒரே நேரத்தில் படித்திருக்கிறேன். ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயார் செய்து வருகிறேன். ஆனால், எனக்குப் பார்த்த மாப்பிள்ளையில் ஒருவன் ஒரு டிகிரி படித்திருந்தான். பெண் பார்த்து விட்டுச் சென்ற மாலையே பிளாக் மெயில் செய்தனர்.
“கல்யாணத்திற்குப் பிறகு இந்த யூ டியூப் எல்லாம் நிறுத்திடணும். சமைக்கணும். துவைக்கணும். சமைக்கணும். துவைக்கணும்” என்று சொன்னதையே சொன்னார்கள். அது நின்றுவிட்டது.
பெண் பார்க்கும் முன்பே நாங்கள் பெண்ணைப் படிக்க வைப்போம். அது செய்வோம் என்ற வாக்குறுதிகளும் காற்றில் போய்விட்டன.
‘டிராபி வொய்ஃப்’. அதாவது கணவனுக்கு வெளியிடத்தில் பெருமையும் மரியாதையும் வாங்கிக் கொடுத்து, வீட்டிற்குள் அவனுக்கு அடிமையாக நடந்துகொள்ள வேண்டும். இதை அப்படியே ‘டிராபி’ மருமகள்கள் என்றும் கூறிக்கொள்ளலாம்.
ஒரு பதக்கம் என்பது பார்க்க அழகாக, பெருமையாக மற்றவர்கள் கண்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், நம் வீட்டு ஷோ கேஷில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதக்கத்திற்கு உயிர் இல்லை. உணர்வில்லை. ஆனால், பெண்களுக்கு உயிரும் உணர்வும் இருக்கிறதே.
“I decided to not be anyone’s trophy. Because I am a human with brain who wants to use it and do good things.”
மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் பெண்களை டிராபியாக, ஓர் உடைமையாகப் பார்க்கும் மனோபாவத்தின் தொடர்ச்சிதான். நான் பேசிய விஷயத்தில் பல பரிமாணங்களும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய வலைகளும் பின்னிக் கிடக்கும். விழித்துப் பாருங்கள் தெரியும்.
படைப்பாளர்:
மனோஜா. ஆசிரியராக இருக்கிறார். உளவியல் முதுகலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். திருப்பூரில் வசிக்கிறார்.