கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தொடர்பாக எழுந்த சர்ச்சை, அதையொட்டி மாணவர்கள் நடத்திய ஆதரவு – எதிர்ப்பு போராட்டங்கள், அதைத் தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருக்கும் சட்டப் போராட்டங்கள் அனைவரும் அறிந்ததே. கர்நாடகாவில் நடந்த நிகழ்வு ஊடகங்களால் இந்தியா முழுக்கத் தீயாகப் பரவின. இந்திய ஊடகங்கள் அனைத்திலும் ஹிஜாப் பிரதான செய்திகளாகின. ஹிஜாப் வழக்கு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம், ‘ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அத்தியாவசியமான வழக்கம் அல்ல’ என்று தீர்ப்பில் கூறியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி குப்தா, ‘ஆடை அணிவது உரிமை என்றால், ஆடை அணியாததும் அடிப்படை உரிமையாகும்’ எனவும் மிடி, குட்டைப் பாவாடையில் பெண்கள் தங்கள் விருப்பப்படி கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல அனுமதிக்கலாமா’ என்றும் கேள்வி எழுப்பினர். அதே போல பூணூல், ருத்ராட்சை, சிலுவை, நாமம், டர்பன் போன்றவற்றை எல்லாம் ஹிஜாப்புடன் ஒப்பிட முடியாது. அவை வேறு, இது வேறு. அவை எல்லாம் ஆடைக்கு உள்ளே போடக்கூடியவை, அவை மற்றவரின் பார்வைக்குத் தெரியாது. இதில் ஒழுக்க மீறல் இல்லை என்று பதில் அளித்தார். இதே கருத்தை எங்கேயோ கேட்டது போல இருக்குமே ஆமாம்… இதே கருத்தைதான், ‘பூணூல் சட்டைக்குள்ளதான இருக்கு’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் எச். ராஜா கூறினார். மற்றொரு நீதிபதி சுதஷுதுலியா, ‘ஹிஜாப் அணிவது அவரவர் விருப்பம்’ என்பதையும், பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதைக் குறிப்பிட்டு, கர்நாடக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இத்தகைய இரட்டைத் தீர்ப்பின் மூலம் ஹிஜாப் வழக்கு முடிவுக்கு வராமல் மீண்டும் தொடர்கதையாகி இருக்கிறது.

ஹிஜாப் அணிந்து நீட் தேர்வுக்கு செல்லக் கூடாது, வாக்களிக்க செல்லக் கூடாது, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லக் கூடாது என சமீபகாலமாக முஸ்லிம் பெண்கள் சமூக ரீதியான தாக்குதல்களைச் சந்தித்து வருகின்றனர். ஹிஜாப் குறித்து நெறியாளர் கேட்ட கேள்விக்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள், மதவாதிகள், தேச துரோகிகள், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்கிற ரீதியில் பாஜக முன்னாள் மாநில செயலாளர் எச். ராஜா இஸ்லாமியர்கள் மீதான தனது வன்மத்தை பேட்டிகளில் காட்டிவருகிறார்.

குரான் ஓதக் கூடாது, பள்ளிவாசலில் பாங்கு ஓதக் கூடாது, முஸ்லிம்களின் கடைகளில் பொருள்களை வாங்கக் கூடாது. ஏனெனில் இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்க உணவுப் பொருட்களில் மலட்டுதன்மை அதிகரிக்கும் மாத்திரைகளைக் கலக்கிறார்கள். எனவே முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என பாஜக, சங்பரிவார அமைப்புகளின் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தொடர்ந்து உமிழ்ந்து வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இளைஞர்களுக்கு எதிராக சாதிய இந்துக்களால், ‘நாடகக் காதல்’ அரசியலாக்கபடுவது போல லவ் ஜிஹாத் இந்துத்துவவாதிகளால் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிரான வன்மத்தைத் திணிக்கிறது. அவ்வாறே கொரோனா ஜிஹாத், பிரியாணி ஜிஹாத், ஹலால் ஜிஹாத், எனச் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிராச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களுக்கு எதிராகவும், குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு எதிராக முத்தலாக், புல்லி பாய் மற்றும் ஹிஜாப் எனச் சமூக மற்றும் அரசியல் ரீதியான இரட்டை ஒடுக்குதலை முஸ்லிம் பெண்களுக்கு எதிராகக் தொடுத்து வருகின்றனர்.

எனக்கான உடை, உணவு எப்படி இன்னொருவரின் நம்பிக்கைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதிப்பு ஏற்படுத்துவதாக அமையும்? எனது இருப்பு எப்படி மற்றவரின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். ஆனால், இதைத்தான் பாஜக அரசு தனது தார்மீக வேலையாகச் செய்துவருகிறது.

முத்தலாக் மூலம் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் காக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் கொக்கரித்துக் கொண்டவர்கள் புல்லி பாய், சுல்லி டீல் செயலி மூலம் முஸ்லிம் பெண்கள் ஏலம் விடப்பட்டபோதும் (சுல்லி என்பது இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இந்து வலதுசாரிகளால் பயன்படுத்தப்படும் வார்த்தை) பில்கிஸ் பானு வழக்கில் கைது செய்யப்பட்ட தண்டனைக் கைதிகள் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டபோதும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்தது வலதுசாரி தலைகள்.

தண்டனைக் கைதிகளுக்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் குஜராத் சட்டமன்ற உறுப்பினர், ‘பிராமணர்கள் நல்ல சன்காரம் (நல்ல நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கமானவர்கள்) கொண்டவர்கள்’ எனக் கூறி குற்றவாளிகளுக்குத் தனது ஆதரவு கரத்தை நீட்டினார். இந்தத் தண்டனைக் குறைப்பை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுபஷினி அலி உள்ளிட்ட மூன்று பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை குறைப்பு சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் அது நியாயமானதா என்று உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி உமேஷ் செல்வி போன்ற ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் கேள்வியெழுப்பியிருப்பது சிறிய நம்பிக்கையை விதைக்கிறது.

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவது ஒழுக்க மீறலாக, பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதாக, ஒருமைபாட்டுக்கு குந்தகம் விளைவிப்பதாக மதச்சார்பின்மையைச் சீர்குலைப்பதாக ஆகுமா என்ற கேள்வியே நமக்கு எழுகிறது. மதத்தைக் காரணம் காட்டி பெண்களின் அடிப்படை உரிமையை மறுப்பது அரச பயங்கரவாதம் தானே?

நான் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாவது வரை ஹிஜாப் அணிந்து சென்றிருக்கிறேன். பள்ளியில் என்னுடன் படித்த சக தோழிகள் புர்கா அணிந்தும் வந்திருக்கின்றனர். ஹிஜாபோ புர்காவோ சக மாணவர்களுடன் பழகுவதற்கோ பேசுவதற்கோ எங்களது ஒற்றுமையிலோ எந்தவொரு குந்தகத்தையும் ஏற்படுத்தவில்லை. சக தோழிகள் அதை அணிந்து பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். புர்காவை மற்ற மாணவர்கள் விரும்பியதைப் போல புர்காவிலிருந்து வெளிவர நான் விரும்பினேன். கால மாற்றம், சமூக சூழல், வாசிப்பு, புர்கா அணிய வேண்டும் என்கிற வலியுறுத்தல்கள் என எல்லாம் அந்த மாற்றத்திற்குக் காரணங்களாகின.

சொந்தக்காரர் வீட்டிற்கு புர்கா அணியாமல் சென்றதால், ’எங்க பொம்பள பசங்கள காணும், ஆம்பள பசங்கதா வந்திருக்காங்கனு’ கேட்டார் அந்த மாமா. புர்கா போட்டால்தான் காலேஜுக்குப் படிக்க போகணும் இல்லை, படிப்பே தேவை இல்லை என்று முரண்டு பிடித்த அம்மா, புர்கா போட்டால்தான் ஒழுக்கமான பொண்ணு என்று சொல்லி வளர்க்கும் குடும்ப உறவுகள், புர்கா பெண்ணுக்கான மிகப்பெரிய பாதுகாப்பு கவசம் என்று கம்பு சுற்றும் ஆண்கள், புர்கா போடவில்லை, நீ எல்லாம் முஸ்லிமா என்று கேட்ட சமூக உறவுகள், பேருந்தில் புர்காவில் இருக்கும் போது என் புட்டத்தை அமுக்கிய அந்த நபர் எனப் பல காரணங்கள் என்னைப் புர்காவை எதிர்நிலையில் வைத்து யோசிக்கவைத்தன.

எல்லா சமூக அமைப்பிலும் நிகழக்கூடிய ஆணாதிக்கமும் சமய அடிப்படை வாதமும் பிற்போக்குதனங்களைக் கேள்விக்குட்படுத்தாமல் நடைமுறைபடுத்துவதில் கராராக இருக்கின்றன. தாலி பெண்களுக்கு வேலி என்கிற கதையும் புர்கா பெண்களின் கவசம் என்கிற கதையும் ஒன்றுதான். இதிலே முஸ்லிம்களிடையே மட்டும்தான் பெண் அடிமைத்தனம் இருக்கிறது என்கிற உருட்டுகள் எல்லாம் இஸ்லாமியர்களின் மீது வீசப்படுகிற விஷப்பிரச்சாரம் மட்டுமே. இந்தியாவில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக நடைபெறுகிற போராட்டத்தைக் குறித்துக் கட்டுரை எழுதலாம் என இருந்தால், வேண்டாம் வேண்டாம் ஈரானில் நடைபெறுகிற ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களைக் குறித்து கட்டுரை எழுதி தாருங்கள் என்று கேட்கின்றன ஊடகங்கள். இந்தியாவில் நடைபெறுகிற ஹிஜாப் விவகாரம் முஸ்லிம் பெண்களுக்கான பிரச்னையாக ஊடகங்கள் நினைப்பதே இல்லையா?

முதுகலை படிக்கும் வரையிலும் நான் புர்காவில் வலம் வந்தேன். அதே சமயத்தில் நான் புர்காவில்தான் வருகிறேன் என்பது என் வகுப்பு தோழர்களுக்கே நீண்ட நாட்களுக்குப் பின்புதான் தெரிந்தது. பல்கலைக்கழகம் வாசல் தொட்டதும் புர்காவை கழற்றத் தொடங்கிவிடுவேன். அதுவும் தலையில் துப்பட்டா இருக்காது. முழுக் கையை முழங்கை வரை சுருட்டிக்கொள்வேன். நடுவில் பொத்தான் வைத்த புர்காவாக இருந்தால் கீழே இரண்டு பொத்தான் போட்டிருக்காது. அப்படியான கோலம்தான். வீட்டுக்குத் திரும்பும்போது வீட்டுக்குக் கொஞ்ச தூரத்துக்கு இடையில்தான் பையிலிருந்து புர்காவை எடுத்து மாட்டும் வழக்கம் வைத்திருந்தேன். பேருந்திலேகூட புர்காவை மாற்றியிருக்கிறேன். அப்படிப் போடும்போது மற்றவர்களின் பார்வை வேறு மாதிரியாக நான் ஏதோ திருட்டுத்தனம் செய்துவிட்டு வருகிறேன் என்பது மாதிரியாக இருக்கும். அதன் பிறகே வழியில் புர்கா மாற்றுவதை நிறுத்தினேன்.

மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் திரைப்படத்தில் கதாநாயகி வீட்டின் அருகில் சென்றதும் தனது புர்காவை எடுத்து மாட்டிக்கொண்டு வீட்டுச் சுவரை ஏறிக் குதிப்பாள். அந்தக் காட்சி நெருக்கமாகவும், நம்மோடு ஒன்றி போவதாகவும் இருக்கும். அதன் பின் புர்கா போடுவதை நிறுத்தினேன். வீட்டில் எதிர்ப்புகள் வந்தது சமாளித்தேன். அதன் பிறகும் சில நேரங்களில் புர்கா அணிந்து கொண்டு வெளியில் சென்று வந்திருக்கிறேன். பல நேரங்களில் புர்கா மற்ற பெண்களைக் காட்டிலும் பல செளகரியங்களை எனக்கும் கொடுத்திருக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது ஸ்போர்ட்ஸ் பிளேயராக இருந்ததால் ஷார்ட்ஸோடு வீட்டுக்கு வந்திருக்கிறேன், திடீரென்று முடிவெடுத்து வெளியில் செல்கையில் என்ன உடை உடுத்தி இருக்கிறோம் என்பது பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை புர்கா இருக்கும் தைரியத்தில்.

எனது அக்கா முதுகலை படிக்கும் காலத்தில் வீட்டின் பொருளாதாரச் சூழல் காரணமாக நல்ல நேர்த்தியான உடை என்பதெல்லாம் அவரிடத்தில் இருக்காது. மேல் சட்டை ஒரு நிறம், கால்சட்டை ஒரு நிறம் இருக்கும். அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் இருக்க காரணம் புர்கா. ஆடை முழுக்க மாதவிடாய் ரத்தம் தோய்ந்த போதும் எந்தப் பதற்றமும் மற்றவர்களின் அச்சமுறுத்தும் பார்வையிலிருந்து தப்பித்து வீடு வந்துசேர உதவியது புர்கா என்று தனது கதையைக் கூறுவாள் அக்கா. மற்ற பெண்கள் உடனடியாக வெளியே கிளம்புவதற்குப் பல சிக்கல்கள் இருக்கும். அந்த வகையில் முஸ்லிம் பெண்களுக்கான சிக்கல்கள் குறைவே. அதனாலேயே பலரின் கிண்டலுக்கும் ஏளனத்திற்கும் ஆளாகும் நிலையும் ஏற்படும். அவற்றிலெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் வெளிப்படுவதை மட்டுமே பார்க்க முடியும்.

ஆனால், இன்று புர்கா அணிவது என்பது அரசியல் எதிர்ப்பியக்கமாக மாறி இருக்கிறது. இன்று புர்கா அணிந்து இரவு நேரத்தில் தாமதமாக வருவதற்கே அஞ்சும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் இன்று வளர்ந்திருக்கும் இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளின் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியல். இந்துத்துவ கொள்கை முஸ்லிம்களை மட்டுமல்ல, முஸ்லிம் பெண்களையும் அவர்களின் பிரச்னைகள் குறித்து சிந்தித்து, பேசி செயல்படவிடாமல் மீண்டும் ஆண்மேலாதிக்கக் கருத்துநிலை தொடர்ந்து இருப்பதையே ஊக்குவிப்பதாக்கிவிடுகிறது. எந்தவொரு மதமும் சீர்திருத்தத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மத நம்பிக்கையின் பெயரால் தனிநபர் உரிமையை மறுப்பதோ தனி நபர் சுதந்திரம் என்கிற பெயரால் மத அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. ஹிஜாப் தடைக்கு எதிராகப் பெண்ணிய அமைப்புகள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது, ‘எந்த ஆடை உடுத்த வேண்டும், வேண்டாம் என்பது அந்தப் பெண்ணின் விருப்பத் தேர்வைப் பொறுத்தது. ஒழுக்கத்திற்கும் ஒழுங்கீனத்திற்கும் அளவுகோலாக அதைப் பார்க்க முடியாது. கல்வி நிலையங்கள் மாணவர்களின் தலைக்குள் என்ன இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டுமே தவிர, அவர்களின் மீது என்ன இருக்கிறது என்பதில் அல்ல” என்பதே ஹிஜாபை எதிர்ப்பவர்களுக்கான பதிலாக இருக்க முடியும்.

படைப்பாளர்:

மை. மாபூபீ, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.