திருமணங்களை அறிவியல்ரீதியாக அணுகுவது பற்றி எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து திருமணங்களைச் சமூகம் எப்படி அணுகுகிறது என்பதைப் பற்றி சிந்திப்பதும் அவசியம். திருமணக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா போன்ற நாடுகளில் திருமணங்களுக்கான சட்டங்களும், நிபந்தனைகளும் அதிகம். அதுவும் குறிப்பாக சாதி, மத படிநிலைகளைக் கருத்தில் கொண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருமணங்களுக்கான சட்டங்களை வரையறுத்துள்ளது. ஆனால், இங்கு நடக்கும் திருமணங்களில் எழுதப்படாத சட்டமாக இருக்கும் சில ஒருதலைபட்சமான, நாம் கவனிக்க மறந்த அல்லது எளிமையாகக் கடந்து சென்ற நிகழ்வுகளைப் பற்றிய பல கோணப் பார்வையை முன்வைக்க வேண்டும்.
டாக்டர் ஷாலினி முகநூலில் எழுதிய பதிவிலும் சரி, சமீபத்தில் நடந்த நடிகர் நெப்போலியன் மகன் திருமணத்திலும் சரி, இந்தச் சமூகம் திருமணம் மீது வைத்திருக்கும் ஒரு பொதுவான பார்வையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். “எங்களுக்குப் பின் உடல்நலம் சரியில்லாத என் மகனைப் கவனித்துக் கொள்வதற்காக அவனுக்குத் திருமணம் செய்து வைக்கத்தான் வேண்டும்” என்கிற பொதுவான கருத்தையோ சிந்தனையையோ இங்கு பெரும்பான்மையாகக் கொண்டிருப்பது ஆண்களின் பெற்றோரே. இதுவே ஒரு பெண் உடல் அல்லது மன வளர்ச்சிக் குறைபாடோடு இருந்தால் அந்தப் பெண்ணின் திருமணத்தை இந்தச் சமூகம் ஒரே மாதிரியாக அணுகுமா?
இதுபோன்ற திருமணங்களில் பொருளாதாரமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. சரி நிகர் சமமான பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட ஒரு நபரை இது போன்ற திருமணங்களில் பங்கேற்க இச்சமூகமும் சரி குடும்பமும் சரி அனுமதிப்பதில்லை. வெளிநாடுகளில் நடக்கும் திருமணங்களுக்கும் இந்தியாவில் நடக்கும் திருமணங்களுக்கும் எண்ணற்ற வித்தியாசங்கள் உண்டு. இங்குள்ள குடும்பச் சூழலும் சமூகப் பார்வையும்கூட மற்ற நாடுகளிலிருந்து வேறுப்பட்டதாகத்தான் இருக்கிறது. அந்த நபருக்கான மருத்துவச் சிகிச்சையில் தொடங்கி பராமரிப்பு வரை அத்தனையையும் இந்தியக் குடும்பங்கள் பெண் மீது சுமத்தி, அவளைத் தியாகியாக்குகின்றன. ஆனால், அந்தப் பெண்ணின் பார்வையிலிருந்து திருமணத்தை அணுகுவதைப் பற்றி யாரும் யோசிப்பதுகூட இல்லை.
மனித உணர்வுகளின் பரிமாற்றம் தொடுகையில் வெளிப்படுகிறது என்பது மானுடவியலாளர்களின் கருத்து. ஆனால், ஒரு சில மரபணுக் குறைபாடுகள் கை கால்களை முற்றிலுமாகச் செயலிழக்கச் செய்துவிடும். இந்நிலையில் அந்த நபரைத் திருமணம் செய்துகொள்ளும் ஆணோ பெண்ணோ மனிதனின் அடிப்படை தேவையான தொடுகையின் பற்றாக்குறையை வாழ்நாள் முழுவதும் சந்திக்க நேரிடும். இது போன்ற தனக்கான சில அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதை முற்றிலும் துறந்து இணையரின் பராமரிப்பில் மட்டுமே முழுக் கவனம் செலுத்துவது இங்கு ஒருவிதமான சமநிலை குலைவை ஏற்படுத்துகிறது. இங்கு பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
உதாரணமாக, எங்கள் வீட்டின் அருகே இரு ஆண் பிள்ளைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கடைகளுக்கோ பொது வெளிக்கோ அழைத்து வருவதில் பெற்றோர்கள் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. ஆனால், இதுவே ஒரு பெண் பிள்ளையாக இருந்தால் பொது வெளிக்கு அவர்களை அழைத்து வருவதில் குடும்பத்தினருக்குத் தயக்கம் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று அப்பாவிடம் கேட்ட போது அவர் ஒரு மிக முக்கியமான விஷயத்தைச் சொன்னார்.
ஒருமுறை அப்பா மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது அங்கு ஒரு மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பதின்பருவப் பெண்ணைப் பார்த்ததாகச் சொன்னார். அந்தப் பெண் தன் ஆடையைக் கழற்ற முயற்சித்துக் கொண்டே இருந்ததாகவும், அது அப்பெண்ணின் பெற்றோரையும் சுற்றியிருப்பவர்களையும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியதாகவும் சொன்னார். அப்பெண்ணின் இடத்தில் ஓர் ஆண் இருந்திருந்தால் பெற்றோரும் சுற்றத்தாரும் அந்த நிகழ்வை எப்படிக் கையாண்டிருப்பர்? இந்தச் சமூகம் பெண்ணுடல் மீது வைத்திருக்கும் கட்டுப்பாடுகள்தான் இது போன்ற சூழலில் பெண்ணைப் பொதுவெளிக்கு அழைத்து வருவதைப் பெற்றோர் தவிர்ப்பதற்கான ஒரு முக்கியக் காரணம். மருத்துவமனைகளுக்குக்கூட அழைத்து வராமல் வீட்டிலேயே மருத்துவம் பார்த்த சில பெண்களின் பெற்றோரும் இங்கு உள்ளனர்.
உடல் மற்றும் மன நல பாதிப்பு எதுவாக இருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் இயக்கம். அதாவது ஓர் ஆண் ஆரோக்கியமாக இருந்தாலும், குறைபாடோடு இருந்தாலும், எப்படி இருந்தாலும், அவன் தன்னை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்திக் கொள்கிறான். அதைக் குடும்பமும் சமூகமும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால், இதுவே பெண் தன்னை நகர்த்திக் கொள்வதைக் குடும்பமும் சரி, சமூகமும் சரி ஏற்றுக் கொள்வதில்லை. இந்தப் பெரும் வித்தியாசம்தான் திருமணத்திலும் அடிப்படையாக அமைகிறது.
ஆணின் நகர்வும், அவனின் குடும்பப் பின்புலமும் அவனுக்கான இணையை அமைத்துக் கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதுவே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் அவளுக்கான ஓர் இணையைத் தேடுவதிலோ அல்லது அவளின் நகர்விலோ பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை. பெண்களைத் தியாகியாக்கியோ அல்லது அவளது பொருளாதாரத் தேவையைக் குத்திக்காட்டியோ எப்படியோ பாதிக்கப்பட்ட ஆணை அவள் திருமணம் செய்துக் கொள்வதை இச்சமூகம் ஆதரிக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்தை ஆதரிப்பதில்லை.
திருமணம் செய்துக் கொள்வதிலேயே இத்தனை ஏற்ற இறக்கங்கள் என்றால், திருமணத்திற்குப் பிறகு? உடல் அல்லது மனநலம் குறைபாடுடைய இணையருடனோ அல்லது குறைபாடுடைய அவர் குடும்பத்தினருடனோ வாழ்வது என்பது அத்தனை சிக்கலானது. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் இருக்க வேண்டிய ஒரு நபருடன் இருப்பது என்பது மனச்சோர்வை எளிதில் ஏற்படுத்தக் கூடியது. அம்மாவோ மனைவியோ தான் குடும்ப நலத்தைப் பேணிகாக்க வேண்டும் என்கிற பொதுப்புத்தியை இதுபோன்ற சூழலிலும் சமூகம் கடைப்பிடிக்கிறது. பாதிக்கப்பட்டது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இரண்டிலும் பாதிப்பது என்னவோ பெண்களின் நகர்வும் இயக்கமும்தான். ஒரு கடைக்குப் போக வேண்டும் என்றால்கூட அவ்வளவு சுலபமாக நினைத்ததும் போய்விட முடியாத ஒரு முடக்கத்தைப் பெண்களுக்கு ஏற்படுத்துகிறது இதுபோன்ற திருமணங்கள்.
சரி, இதுவே ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ஆணை பற்றி யோசிப்போம். பிரியமானவளே படத்தின் இறுதியில் இடுப்பெலும்பு முறிந்த தன் மனைவியை எங்கு போனாலும் முதுகில் சுமந்து செல்லும் ஓர் ஆணை பற்றிய காட்சி வரும். அதைப் பார்த்ததும் பூரித்துப் புளகாங்கித்துப் போகும் நம்மில் நிறையப் பேர் அந்தக் காட்சியின் உண்மைத்தன்மையை மறந்து விடுகிறோம். உண்மையில் அப்படியோர் ஆண் இல்லையா என்று கேட்டால், இருக்கிறார்கள். ஆனால், எத்தனை என்பதுதான் வாதம். அப்படிப்பட்ட ஆண்களை விரல்விட்டு எண்ணி விடலாம். எண்ணிக்கையில் எத்தனை ஆண்கள் இருந்தாலும் அவர்களைவிடக் குறைந்தது பத்து மடங்கு பெண்கள், பாதிக்கப்பட்ட ஆண்களையும், அவர்கள் குடும்பத்தையும் தினமும் தூக்கிச் சுமக்கின்றனர்.
இதில் வேதனைக்குரியது என்னவென்றால், ஆண்களுக்குக் குறைபாடிருப்பதை மறைத்து திருமணம் செய்து வைப்பது. திருமணத்திற்குப் பிறகு ஆணுக்கிருக்கும் குறை தெரியவந்தால் அதை ஏற்றுக் கொள்ளச் சொல்லி பெண்ணைச் சமூகமும் குடும்பமும் வற்புறுத்தும். இதுவே ஒரு பெண்ணிற்குக் குறையிருப்பதை மறைத்து திருமணம் செய்து வைத்தப்பிறகு அக்குறைத் தெரியவந்தால், அப்பெண்ணை ஏற்றுக் கொள்ளச் சொல்லி சம்மந்தப்பட்ட ஆணை இச்சமூகம் வற்புறுத்துமா? நிச்சயமாக இல்லை. இங்கு உறவுகளுக்குள் நடக்கும் திருமணமும் விதிவிலக்கல்ல. பொறுப்பற்றுச் சுற்றும் ஆணைத் தெரிந்தே தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோரையும் கடந்துதான் வந்திருக்கிறோம். கேட்டால், “கல்யாணம் ஆகிட்டா சரி ஆகிருவான். நீ அவன மாத்திருவ” போன்ற சர்க்கரை தடவிய வார்த்தைகள். உளவியல் ரீதியாக திருமணத்திற்குப் பின் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
விட்டுக்கொடுத்தல், பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு, தியாகம் போன்ற வார்த்தைகள் எல்லாம் பெண்களின் கடிவாளம். சுயநலத்தின் பேரில் நடக்கும் சுரண்டல்களைப் பெரிதும் எதிர்கொள்வது பெண்கள்தான். சில மரபணுக் குறைபாடுகள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் கடத்தப்படக் கூடியவை. அதுபோன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் அறியாமையும் அலட்சியமும் பெண்ணை மட்டுமல்ல அடுத்த தலைமுறையையும் பாதிக்கும். எல்லா மரபணுக் குறைபாடுகளும் கட்டாயம் அடுத்த தலைமுறையைப் பாதிக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ஏற்கெனவே இணையரின் பராமரிப்பிலும் சிகிச்சையிலும் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடும் ஒரு பெண்ணிற்கு, பிறக்கும் குழந்தையும் குறைபாடுடன் பிறந்தால், அவள் மனநிலை என்னவாக இருக்கும்? உளவியல் ரீதியாக எவ்வளவு பாதிப்பை அது ஏற்படுத்தும்? தொடர் சோர்வு, மன அழுத்தம் எல்லாம் அவளை உடல் மற்றும் மனதளவில் பலவீனப்படுத்திவிடும்.
குறைபாடுடையவர்கள் திருமணமே செய்து கொள்ளக் கூடாதா என்று கேட்டால், நிச்சயமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், அந்தத் திருமணத்திற்குப் பின்பான வாழ்வியல் மாற்றத்தையும், வருங்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்தையும் பற்றிய புரிதலோடு திருமணங்கள் நிச்சயிக்கப்பட வேண்டும். பாலினத்தின் அடிப்படையில் நடக்கும் உழைப்புச் சுரண்டலைத் திருமணத்தின் பெயரில் அனுமதிப்பது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்காது. கொஞ்சம் விழிப்புணர்வும் பரந்த மனப்பான்மையும் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்.
படைப்பாளர்:
![](https://herstories.xyz/wp-content/uploads/2023/07/IMG_20230708_132320.jpg)
வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகுக்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech, Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech, Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.
தனி மனிதர்களின் பரந்த மனதினால் எட்டப்பட வேண்டிய தீர்வு. ஆனால் சமூகமாக எது சரியோ அதை நாம் பேசவேண்டும். அப்போது தான் தனிமனிதர்களின் மனதின் சாட்சிகளை நாம் கொஞ்சமேனும் அசைத்துப்பார்க்கமுடியும். தெளிவாகவும் தீர்க்கமாகவும் எழுதியிருக்கிறார் வெண்பா.
Beautiful write up