அண்மையில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில், DINK (Double Income No Kids) என அழைக்கப்படும் இரட்டை வருமானம் குழந்தைகள் இல்லாத வாழ்க்கை முறை பற்றிய விவாதம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைப்பு சார்பாக முக்கியமான விடயங்கள் பேசப்படவில்லை. பேசப்பட்ட ஒரு சில கருத்துகளும் கூடசரியாக ஏற்றுக் கொள்ளப்படவும் இல்லை. DINK வாழ்வியல் முறை பற்றி விளங்கிக் கொள்ள சமூக மறுஉற்பத்தி எனும் ஒரு கோட்பாட்டை ஆழமாக நோக்க வேண்டியுள்ளது.
குழந்தைகளைப் பராமரிப்பதற்கான செலவுகள் என்ன, சமூக மறு உற்பத்திக்கான செலவினங்கள் என்ன? செலவுகள் பணச் செலவுகளாக இருக்கலாம்; வாய்ப்புகளைத் தவறவிட்டதாக இருக்கலாம்; நேரம் மற்றும் உழைப்பின் செலவினங்களாக இருக்கலாம். இவை தனிநபர், குடும்பம், குழு, சமூக நிறுவனம் அல்லது ஒட்டுமொத்த சமூகத்தின் மட்டத்தில் இருக்கலாம்.
உணவு உடை உறையுள், கல்வி, சுகாதார வசதிகளுக்கான செலவுகள் நேரடி செலவினங்கள். இதற்கான பங்கை பெண்களும் அவர்களின் ஊதியம் ஈட்டும் வேலைகளின் மூலம் செய்கிறார்கள். தனிப்பட்ட தெரிவுகள், பயணங்கள், பொழுது போக்கு விடயங்கள் போன்றவற்றை குறைத்து அல்லது முற்றாக தவிர்த்து, பெரும்பாலும் பெண்கள் குறுகிய கால பிற வாய்ப்பு இழப்புகளை ஏற்கின்றனர் (Opportunities Cost).
சம்பாத்தியம், வேலைகளில் முன்னேற்றம், ஊதிய உயர்வு, பொருளாதாரத் தன்னிறைவு, வேலைக்குரிய திறன் பெருக்கல், பட்டப்படிப்பு போன்ற விடயங்களைச் செய்ய முடியாமல் போவது, போன்றவை நீண்ட கால இழப்பாகும். குழந்தைப்பேறின் போது எடுக்கும் விடுப்பு, அதன் பின்னரான குழந்தைப் பராமரிப்பு மற்றும் உடல் நிலை பேணல் போன்ற காரணங்களால் பெண்களையே இது பாரபட்சமான முறையில் பாதிக்கிறது. இதற்கு குழந்தைப்பேறு என்னும் ‘இயற்கை’ மட்டும் காரணமில்லை. அதைச் சூழ்ந்தும், குழந்தை பிறப்பின் பின்னரும் எழும் பராமரிப்பு வேலைகள் இரு பாலரும் செய்யக்கூடியவை. இருப்பினும் சமூகக் கற்பிதங்களால் ஆண்கள் தம் பங்கைச் சரிவர ஆற்றுவதில்லை.
பாலின ரீதியிலான வகிபாகங்கள் சமூகத்தில் ஏலவே வடிவமைத்து காணப்படுவதால், பெண்கள் உணவு, உடை உறையுள் சம்பந்தப்பட்ட வேலைகளை சுமக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
நண்பர்களுடன் நேரம் செலவிடுதல், சுய பாரமரிப்பு, அதாவது உடல் நலம் மற்றும் மனநலம் பேணுவதற்கு நேரமின்மை என்ற இக்கட்டான சூழ்நிலை பெண்களுக்கே ஏற்படுகிறது. இருபத்தி நான்கு மணிநேரமும் ஏழு நாள்களும் ஓய்வின்றி குழந்தை வளர்ப்பதற்காகவும் வீட்டை பாரமரிப்பதற்கும் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுகின்றனர். இந்த Emotional labour பற்றி ஏற்கனவே பேசியிருந்தோம்.
சமூக மறு உற்பத்திக்கான இந்தச் செலவினங்களுக்கு யார் பொறுப்பேற்கிறார்கள்?
*மகபேற்று கால விடுமுறையில் குழந்தை பராமரிப்பு பணிகள், அதன் பின்னர் பகுதி நேர/ முழுநேர ஊதியம் தரும் வேலைகளைச் செய்யும் பெண்கள். இவர்களே பிரதானமாக சமூக மறு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர் என கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.
*முழுநேர தொழில் புரியும் ஆண்கள் பொருளாதார ரீதியாக பங்கெடுக்கின்றனர்.
*மேலை நாடுகளில், அரசு வழங்கும் மானியங்கள், சலுகைகள், இலவச சுகாதாரம், இலவச குழந்தைப் பராமரிப்பு (குறிக்கப்பட்ட மணித்தியாலங்கள்)
சமூக மறு உற்பத்தி என்பது இனப்பெருக்கத்தின், குறிப்பாக – கருத்தரித்தல் முதல் பிரசவம் வரையிலான உயிரியல் செயல்முறைகளைக் குறிக்கலாம். இது உயிரியல் இனப்பெருக்கம் மற்றும் இனப்பெருக்க நடத்தை தொடர்பான சிக்கல்களை உள்ளடக்கியது – பாலியல் உறவுகளின் வடிவங்கள், குடும்ப கட்டமைப்புகள், உயிரியல் திறன்கள் அல்லது கருத்தரிக்க முடியாமை, கருத்தடை நடைமுறைகள், கருக்கலைப்பு, சிசுக்கொலை மற்றும் தாய் சேய் ஆரோக்கியம் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
மறு உற்பத்தி என்பது ஒவ்வொரு தலைமுறையிலும் மனித மக்கள்தொகை மாற்றப்படும் வழிகளைக் குறிக்கலாம். அதாவது, ஒவ்வொரு தனிமனிதனும், குடும்பமும் அல்லது குழுவும், புதிய மனிதர்களாக தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில், மறு உற்பத்தி என்பது குழந்தைகளை வளர்ப்பது, பயிற்சி செய்தல் மற்றும் கல்வி கற்பித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. சமூகவியலாளர்கள் ‘சமூகமயமாக்கல் செயல்முறை’ என்று இதனைக் குறிப்பிடுகின்றனர். இந்த மறு உற்பத்தி, குறுகிய கால அடிப்படையில் தினசரி, வாராந்திர அல்லது வருடாந்திர உயிர்வாழ்வு மற்றும் வாழ்க்கை பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. இந்தச் செயல்முறைகள் ஆரோக்கியத்தையும் அன்றாட வாழ்க்கையையும் பராமரிக்க தூங்குவது மற்றும் சாப்பிடுவது போன்ற தினசரி குடும்பம் அல்லது வீட்டு அடிப்படையிலான செயல்பாடுகளை உள்ளடக்கியிருக்கலாம். இந்தச் சொல்லின் மற்றொரு பொருள், முழு சமூகத்தின் இனப்பெருக்கம் மற்றும் அந்தச் சமூகத்தின் குணாதிசயமான சமூகக் கட்டமைப்புகள் மற்றும் சமூக உறவுகளைக் குறிக்கிறது.

மார்க்ஸ், எளிய மறுஉருவாக்கம் மற்றும் நீட்டிக்கப்பட்ட அல்லது விரிவாக்கப்பட்ட மறுஉருவாக்கம் என்ற பதத்தை பயன்படுத்தினார். முதலாளித்துவம் எவ்வாறு தன்னைப் பராமரிக்கிறது (எளிய மறு உற்பத்தி) அல்லது மூலதனக் குவிப்பு (விரிவாக்கப்பட்ட மறு உற்பத்தி) மூலம் தன்னை எவ்வாறு விரிவுபடுத்துகிறது என்பதைக் காட்டும் பொருளாதார மாதிரிகளில் இவை மார்க்ஸால் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான மூலதன கட்டமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதாரம் என்ற பொருளிலும் மறுஉற்பத்தி பயன்படுத்தப்படுகிறது.
சமூக மறுஉற்பத்தி பற்றி விவாதிக்கும் போது ஃபோப்ரே (Folbre), முதன்மையாக குழந்தைகளைப் பெற்றெடுப்பது, வளர்ப்பது, சமூகமயமாக்குதல் மற்றும் கல்வி போன்றவற்றுடன், மக்கள்தொகையில் ஊனமுற்றோர், நோயுற்றோர், முதியோர் போன்ற பிறரைச் சார்ந்தோரை கவனிப்பது அடங்கலாக சமூக மறு உற்பத்தி போதுமான அளவு கட்டமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்படுவதை உறுதிசெய்ய சமூக அமைப்பு மாற வேண்டும், மேலும் சமூக மறு உற்பத்தி தொடர்பான செலவுகள் சமூகத்தின் உறுப்பினர்களிடையே சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்று செவ்வனவே கூறுகிறார்.
ஐக்கிய இராச்சியத்தில் 15.4 சதவீத குடும்பங்கள் இப்போது ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களாக உள்ளன; லண்டனில் உள்ள 25 சதவீத குடும்பங்கள் ஒரு நபர் குடும்பங்கள், 20 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் 28 சதவீதம் பேர் பெற்றோருடன் வாழ்கின்றனர். ஐரோப்பிய யூனியன் முழுவதும், ஒற்றை நபர் குடும்பங்களின் விகிதம் வேகமாக அதிகரித்துள்ளது. தம்பதிகளாக வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை வீழ்ந்துள்ளது. இது தவிர்க்க முடியாத வளர்ச்சியல்ல, பல்வேறு நாடுகளில் பழமைவாத தீவிர வலதுசாரிகள் இதைத் தலைகீழாக மாற்றுவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் தொழிலாளர்கள் தங்கள் இரட்டைப் பொறுப்புகளைச் (வீட்டையும் குழந்தைகளையும் பராமரித்தலும் ஊதியம் செய்யும் தொழில் ஈடுபடுதலும்) செய்ய ஏதுவாக, பெண்களுக்கான பகுதி நேர வேலையின் பரவலானது, பெண்களுக்கு கிடைத்த பெரும் சலுகையாகத் தோன்றுகிறது. உண்மையில், அது அப்படி ஒன்றும் இல்லை.
இன்று பிரிட்டனில் உள்ள பெண் தொழிலாளர்களில் 44 சதவீதம் பேர் பகுதி நேர வேலையில் ஈடுபட்டுள்ளனர். உண்மையில் இது பெண்களுக்கு வழங்கப்படும் சலுகையாக இல்லை. குறைந்த வேலை உரிமைகள், வேலை வாய்ப்புகள் மற்றும் ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச சாத்தியமான செலவில் பெண் தொழிலாளர்களின் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் ஒரு முக்கியமான சாதனமாகத்தான் காணப்படுகிறது.
வரலாற்று ரீதியாக, பெண்களுக்கு பகுதிநேர வேலை செய்யும் போக்கு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தங்களுடன் ஒத்துப்போனது. பிரித்தானியாவில் 2019இல் பெண் ஊதியம் ஈட்டும் விகிதம் 72.4 சதவீதமாக உயர்ந்தது, ஆனால் அதில் பாதி பகுதிநேர, பூஜ்ஜிய நேர ஒப்பந்தங்களில் கிடைத்தது. இத்தகைய ஒப்பந்த ஏற்பாடுகளின் ஆதிக்கம் ‘நெகிழ்வுத்தன்மை’ என்ற பெயரில் அடிக்கடி நியாயப்படுத்தப்படுகிறது. இவை குடும்பங்களில் பெண்களுக்கு உதவியாக உள்ளதாகப் பேசப்பட்டாலும் உண்மையில், இதற்கு நேர்மாறான நிலைமை உள்ளது. சீரான வருமானம் குறித்து நிச்சயமற்ற தன்மை, குறைந்த ஊதியம் மற்றும் மலிவான குழந்தை பராமரிப்பு வசதிகள் இல்லாமை ஆகியவை சேர்ந்து, பெண்கள் மீதான சுமையை அதிகரிக்கிறது. பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு குறைவாக ஊதியம் பெறுகிறார்கள். முதலாளித்துவம் பெண்களை அதிகமாகச் சுரண்டுவதையும் ஒடுக்குவதையும் சார்ந்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, குழந்தை பெற்றுக் கொள்வது மற்றும் அதன் வளர்ப்பைச் சுற்றி ஒரு பெரும் வர்த்தகம் நடைபெறுகிறது. முதலாளித்துவ சந்தை இதைப் பெருமளவு கையில் எடுத்துள்ளது. கணவன், மனைவி அல்லது இணையர் ஒரு குழந்தை பெற முயலும்போது என்னென்ன செலவுகள் ஏற்படுகின்றன?
- செயற்கை கருத்தரிப்பு நிலையங்களின் சேவைகள் (இயற்கை முறையில் கருத்தரிக்க முடியாமல் போகும் பட்சத்தில் அல்லது தனிப்பட விருப்பு அடிப்படையில்)
- கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து
- மருத்துவ செலவுகள் – பல நாடுகளில் இலவச மருத்துவம் முற்றாக வழங்கப்படுவதில்லை. Scan போன்றவற்றிற்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது.
- கர்ப்பிணி பெண்களுக்கான உடைகள்
- குழந்தைகளுக்கான உடைகள் – குழந்தைகள் வேகமான வளர்பவர்கள், ஒவ்வொரு வருடமும் ஆடைகள், சப்பாத்துகள் என்று அடிக்கடி மாற்ற வேண்டி வரும். மேலை நாடுகளில் நான்கு பருவ காலங்களுக்கும் ஏற்றவாறு இவற்றை மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
- குழந்தை பராமரிப்பிறகான உபகரணங்கள் – பாலூட்டும் போத்தல்கள் தொடக்கம் குழந்தை தள்ளுவண்டிகள்(Pram/buggy)
- குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள்
- குழந்தை பாரமரிப்பு நிலையங்கள் (daycare/nursery)
- சிறார் பள்ளிப்பருவ செலவுகள் ( பாடசாலை கட்டணம், சீருடை, பாடப்புத்தகங்கள், புத்தகப்பை,பென்சில், பேனா போன்ற உபகரணங்கள்)
- மேல்நிலைப்பள்ளி செலவுகள் – மேற் சொன்னவையோடு மேலதிக வகுப்புகளுக்கான கட்டணங்கள்
- பல்கலைக்கழக கட்டணங்கள், இருப்பிடம் மற்றும் போக்குவரத்து கட்டணங்கள்
- குழந்தைகள்/சிறார்களுக்கான மருத்துவ செலவுகள்- சாதாரண காய்ச்சல், தலைவலி தொடக்கம் சிறு விபத்து பராமரிப்பு போன்றவற்றிற்கான பிரத்தியேக மருந்துகள்
மேற்கூறியவை அத்தியாவசிய செலவுகள் மட்டுமே, இவற்றை விட சமூக அழுத்தத்தால் வளைகாப்பு, குழந்தைக்குக் காது குத்துதல் போன்ற சடங்கு சம்பிரதாயங்களும் பிறந்த நாள் கொண்டாட்டம், புகைப்பட படைப்பு (Photoshoot) போன்ற ஆடம்பரச் செலவுகளும் ஏற்படுகின்றன.
குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் இது சம்பந்தப்பட்ட சகல வியாபார நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகும். இவ்வளவு செலவினங்களையும் உடல் உள தியாகங்களையும் கொண்ட குழந்தைப்பேறும் வளர்ப்பும் தனி ஒரு குடும்பத்தில் தங்கி விட முடியுமா? அதுவும் சமமற்ற முறையில் பெண்களில் மட்டும் தங்கியிருக்கும் சமூக அமைப்பு சரிதானா? இதற்கு சமூக மறு உற்பத்தியின் வரலாற்றுப் பார்வை அவசியமாகிறது. அடுத்த அத்தியாயத்தில் நம் முன்னோர்கள் ஏற்கனவே முன் மொழிந்தவை என்ன என்று பார்ப்போம்.
படைப்பாளர்
அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர், MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
Very nicely written
ஒரு குழந்தைக்குப் பின்னால் இவ்வளவு வியாபாரங்களா!