தென் இந்தியர்களைப் பற்றி வட இந்தியர்கள் மத்தியில் சில கருத்துகள் பொதுப்புத்தியில் பல காலமாக நிலவுகின்றன. அதே போல், வட இந்தியர்களைப் பற்றித் தென்னிந்தியர்கள் மத்தியில் சில கருத்துகள் பொதுப்புத்தியில் நிலவுகின்றன. காலம் மாற மாற இந்தப் பொதுப்புத்தி கருத்துகளும் மாறலாம். சில கருத்துகள் காலம் எவ்வளவு மாறினாலும் பொதுப்புத்தியில் அப்படியே நீடிக்கும். இன்றைய காலக்கட்டத்தில், எந்தக் கருத்துகள் எந்தக் காரணத்துக்காக இன்றளவும் நிலவுகின்றன, அந்தப் பொது புத்தி கருத்துகளால் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, அவற்றை எவ்வாறு களையலாம் என்பது பற்றிக் காண்போம்.

சுதந்திரம் கிடைத்த 1947ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கல்வி, மருத்துவம், தொழில்துறை போன்ற பல்வேறு சமூகக் காரணிகளில் ஒரே நிலையில்தான் இருந்தது. தற்போது தென் இந்தியா அனைத்துச் சமூகக் காரணிகளிலும் முன்னேறி இருக்கிறது. ஆனால், வட இந்தியா இன்னும் பின்தங்கியே இருக்கிறது என்று பல்வேறு ஊடகங்கள் தொடர்ந்து கூறுவதைக் காண முடிகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், தென் இந்தியர் பற்றி வட இந்தியரிடம் கேட்டால், ’எல்லா தென் இந்தியர்களும் ’மதராசிகள்’, தெற்கில் அனைவரும் கறுப்பாக இருப்பர், அங்கு ஆங்கிலம் தெரிந்தவர் மிகக் குறைவு; அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் குறைவு, அங்கு ஏழைகள் அதிகம், அவர்கள் தொழிலாளிகளாக மற்ற மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் செல்பவர்கள், மொத்தத்தில், தென் இந்தியர்கள் பின்தங்கியவர்கள். ஆனால், மேற்கூறிய கருத்துகளில் முதல் இரண்டைத் தவிர மற்ற அனைத்து கருத்துகளும் இன்று நேர் எதிராக மாறி உள்ளது. இந்த எண்ண மாற்றங்களுக்கு மிக முக்கியக் காரணம் அங்கு நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள். 

தென் இந்திய மாநிலங்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிப் பயணித்தது. கல்வி மற்றும் மருத்துவம் போன்ற முக்கியச் சமூகக் காரணிகள் மேல் அதிக கவனம் செலுத்தி, அவற்றின் தரத்தை மேம்படுத்தியது. இந்தியாவில் உள்ள உயர்தர கல்வி நிலையங்கள், உயர்தர மருத்துவமனைகள் அதிக அளவில் தென் இந்தியாவில்தான் இருக்கின்றன. வட இந்தியாவைவிட தென் இந்தியா முன்னேறி உள்ளது என்று கூற இன்னும் நிறைய காரணிகள் உள்ளன. இது ஒருபுறம் இருக்கட்டும். 

சமீப ஆண்டுகளாகத் தென் இந்தியாவிற்கு வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆட்கள் பல்வேறு வேலைகளுக்காக வருகிறார்கள். கட்டிட வேலையில் இருந்து ஹோட்டல் சர்வர் வரை உள்ள ’blue collar jobs’ என்று சொல்லப்படும், உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் தொழில்களில் ஈடுபடுகிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில்கூட இந்த மாதிரி வேலைகளில் வட இந்தியர்களை எளிதில் பார்க்க முடிகிறது. அவர்களில் பலருக்குத் தமிழ் தெரியாததால், பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதினால் எரிச்சல் அடையும் தமிழர்கள், வட இந்தியர்களை ’வடக்கன்’ என்று மரியாதை குறைவாக அழைக்கும் வழக்கம் தற்போது அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல், குறைந்த சம்பளத்துக்கு வட இந்தியத் தொழிலாளிகள் கிடைப்பதால் உள்ளூர்த் தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் குறைகின்றன என்பதினாலும் அவர்கள் மீது காழ்ப்பு வளர்க்கப்படுகிறது.

இந்தச் சமீபகால மாற்றங்களை ஆழ்ந்து கவனித்தால், சமூகத்தில் நடக்கும் இரண்டு வகையான ஒடுக்குமுறைகளைக் காண முடிகிறது. முதல் ஒடுக்குமுறை, ஒரு குறிப்பிட்ட குழுவைச் சார்ந்த மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு கேலி பெயர் சூட்டுவது. ’மாதரசி’ என்கிற பெயருக்குச் சற்றும் குறையாத பெயர்தான் ’வடக்கன்.’ ஒரு காலத்தில் வட இந்தியர்களால் தென் இந்தியர்கள் ’மாதரசி’ என்று அழைக்கப்பட்டனர். ஆனால், அதே பழைய காலத்தில் தென் இந்தியர்கள் வட இந்தியர்களை ’வடக்கன்’ என்று அழைக்கும் வழக்கம் இல்லை. ஏனென்றால், அப்போது வட இந்தியர்களிடம் அதிகாரம் அதிக அளவில் இருந்தது. எனவே, அவர்கள் உருவாக்கும் கருத்துகள்தான் சமூகத்தில் பரவலாக நீடித்தன, அது பொய்யாக இருப்பினும். காலப்போக்கில் அந்த அதிகாரம் பரவலாகி, தென் இந்தியர்களின் கைகளுக்கும் வரும்போது, அவர்கள் உருவாக்கும் கருத்துகளும் சமூகத்தில் நீடிக்கின்றன. எனவே, இங்கு அதிகாரம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.  

அசுரன் திரைப்படத்தில் இறுதி காட்சியில் சிவசாமி சிதம்பரத்திற்குச் சொல்லும் அறிவுரை வசனம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. ’நீ அவங்கள (ஒடுக்குறவங்கள) எதிர்த்து ஜெயிக்குகணும்னு நினைச்சினா, படி. நல்லா படிச்சி ஒரு அதிகாரத்துல போய் உக்காரு; ஆனா அதிகாரத்துக்கு வந்த அப்புறம் அவனுங்க நமக்குப் பண்றத நீ எவனுக்கும் பண்ணாம இரு.’ நாம் பிழைப்பிற்காகச் சொந்த நிலம் விட்டுப் புலம் பெயர்ந்து சென்றபோது பல காரணங்களால் பல வகையில் அனுபவித்த அனைத்து ஒடுக்குமுறைகளையும் நம் நிலத்தில் நம்மை நம்பி பிழைக்க வரும் மற்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு அதே ஒடுக்குமுறைகளை நாம் செய்வது சரியாகுமா? சரியாகாது. எனவே, ஒடுக்குமுறைக்கு தீர்வு ஒடுக்குமுறை அல்ல. 

இரண்டாவதாக, உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தரப்படாமல் விளிம்பு நிலையில் புலம் பெயர்ந்து வரும் மக்களைச் சுரண்டுவது. உள்ளூர்த் தொழிலாளிகளுக்கு வெளியூர் தொழிலாளிகள் குறைந்த சம்பளத்துக்கு வேளைக்குக் கிடைப்பதால் தாங்கள் வேலை இல்லாமல் சிரமப்படுவதாக கருதுகிறார்கள். இதனாலும்கூட வட இந்தியத் தொழிலாளிகள் பல வகை வெறுப்புகளைச் சந்திக்கிறார்கள். இந்த விஷயத்தில், வட இந்தியர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்காமலும் உள்ளூர்த் தொழிலாளிகளுக்கு வேலையே கிடைக்காமலும் சுரண்டப்படுகிறார்கள். உண்மையில், பிரச்னைக்குத் தீர்வு காண எல்லாத் தொழிலாளிகளும் சேர்ந்து ஒரு சங்கம், அமைத்து ஒரு நியாமான ஊதிய வரம்பு வகுத்து முதலாளிகளோடு ஓப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு அனைவரும் சுரண்டலில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், இவர்கள் இருவரையும் ஒன்று சேர விடாமல் மொழி வேறுபாடு வைத்து சண்டையிட செய்துவிட்டு, அநியாயமாக உழைப்பைச் சுரண்டி வாழ்வது அவர்களின் முதலாளிகள்தான். 

வட இந்தியத் தொழிலாளிகளுக்கும் தமிழ் நாட்டுத் தொழிலாளிகளுக்கும் இடையே மொழி ஒரு வேறுபட்டதாக இருக்கிறது; அதுவும் நம்மை ஆதிக்கம் செய்யும் மொழியை அவர்கள் பேசுவதால், இரு தொழிலாளிகளைச் சேர்த்துப் போராடி நியாயமான ஊதியத்தைப் பெற விடாமல் முதலாளிகள் எளிதில் தடுத்து விடுகிறார்கள். இதுவே, தமிழ்ப் பேசும் தொழிலாளிகளிடையே ஊதிய பிரச்னை இருந்தால், அவர்களுக்கிடையே உள்ள சாதி, மதம் போன்ற மற்ற வேறுபாடுகளைப் பயன்படுத்தி அவர்களின் நியாயமான உரிமைகளைப் பெற ஒன்று சேர்ந்து போராட விடாமல் தடுப்பார்கள் அந்த முதலாளிகள். எனவே, நம் எதிரியையும் தோழமையையும்  சரியாகக் கண்டறிந்து செயல்படுவது மிக அவசியமாகிறது. 

மேற்கூறிய சுரண்டல்களோடு சேர்ந்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேலி கிண்டல்களுக்கு வட இந்தியத் தொழிலாளிகள் ஆளாகிறார்கள். வட இந்திய தொழிலாளிகளின் பேச்சு முதல் உடல் மொழி வரை அனைத்தும் இழிவாகப் பார்க்கப்படுகின்றன. அதிலும், அவர்களின் சொந்த மாநிலங்கள் பின்தங்கிய வளர்ச்சியில் இருப்பதைக்கூடச் சொல்லிக் கிண்டல் செய்யப்படுகிறார்கள். அவர்கள் மாநிலம் பின்தங்கி இருப்பதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? பின்தங்கிய மாநிலத்தில் பிறந்தது அவர்களின் தவறு இல்லையே. அதே போல், முன்னேறிய மாநிலத்தில் பிறந்த காரணத்திற்காக நாமும் பெருமைப்பட்டுக் கொள்ள  முடியாது. நாம் யாரும் இங்கு இந்த ஊரில்தான் பிறப்பேன் என்று ‘வரம்’ வாங்கிப் பிறக்க வாய்ப்பில்லை. ஒரு வேலை தென் இந்திய மாநிலங்கள் முன்னேறி இருப்பதை எண்ணி பெருமைப்பட தார்மீக உரிமை உள்ளவர்கள் யார் என்றால், அந்த முன்னேற்றத்தை அடைய சரியான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுத்து தீவிரமாக உழைத்த அரசியல் தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும் தான். 

ஆனால், இந்த அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் கடமை மக்களுடையதுதானே; எனவே ஒரு மாநிலம் முன்னேறியதற்கும் பின்தங்கி இருப்பதற்கும் மக்கள் சரியான அரசியல் தலைவரைத் தேர்ந்தெடுக்காததுதான் காரணம் என்று எல்லாப் பழியையும் மக்கள் மீது எளிதில் போட்டுவிடலாம். உண்மையில், பொதுபுத்தி என்னும் சூழல் மனநிலையில் பல காலங்களால் தலைமுறை தலைமுறையாகச் சிக்கிச் சுழன்றுகொண்டிருக்கும் பொது மக்களை அனைவருக்குமான ஒன்றிணைந்த வளர்ச்சியைப் பற்றித் தொடர்ந்து பேசி, பிரச்சாரம் செய்து அரசியல் படுத்த வேண்டிய கடமை உண்மையில் அரசியல் தலைவர்களூடையதுதான்.  

எனவே, வட இந்தியத் தொழிலாளர்களின் பிற்போக்குத் தனங்களையும் இந்திதான் தேசிய மொழி என்று கருதும் அறியாமையையும் நாம் பொத்தாம்பொதுவாக இழிவு படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நமக்குக் கிடைத்த கல்வியும் அறிவும் அதே தரத்திலும் வேகத்திலும் அவர்களுக்குக் கிடைத்து இருந்தால் அவர்களும் நம்மைப் போல் முன்னேறி இருப்பார்கள் என்கிற புரிதலோடு அவர்களின் இன்றைய நிலை மாற நம்மால் முடிந்த செயலைச் செய்ய வேண்டியது நமது கடமை. நாம் பெற்ற கல்வியும் அறிவும் நம் முன்னேற்றத்திற்கு உதவுவதோடு நின்றுவிடாமல் நம்மைச் சுற்றி உள்ள சக மனிதர்களுள் சிலரின் முன்னேற்றத்திற்கும் சேர்த்து உதவும்படி நாம் செயல்படும் போதுதான் அந்தக் கல்வி 100 சதவீதம் பயன் அளித்திருக்கிறது என்று பொருள்.  

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ