காமம் சார்ந்த தேவையெழும் நாளை/நேரத்தைக்கூட ஒரு பெண்ணால் உணர்ந்துகொள்ள முடியாத அளவு பெண்மையை, பெண்ணின் காமத்தை மட்டுப்படித்தி வைத்துள்ளோம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். திருத்திக் கொள்ள வேண்டும். விலங்கினங்களில் கூட பெண் விலங்குகளின் காம தேவைக் காலங்களிலேயே தேவையறிந்து ஆண் விலங்குகள் இணைய முயற்சி செய்யும். காம வேட்கையை பசு மாடு முதலில் தன் செய்கைகளால் வெளிப்படுத்தும். உதாரணமாக நான்கு கால்களையும் மாற்றி, மாற்றி தரையில் தேய்த்து புழுதியைப் பரப்புவது, தலையையும் கொம்புகளையும் உரைய்த்துக் கொள்வது போன்று பல செய்கைகளை வெளிப்படுத்திய பின்பு காளை பசு மாட்டுடன் இணையும்.

அதே போல பெண்களின் உடலிலும் மாதவிடாய் முடிந்த பின் சராசரியாக 14 நாள்களில் பெண்ணுக்கு காமத் தேவைகள் உண்டாகும். கருத்தரிக்கத் தயாராக உள்ள துல்லியமான நாள்களில் காமத் தேவை அதிகரிக்கும். மூளையால் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் காமத்தை பெண்களிடத்தில் பேசாப்பொருளாக்கி, காமத் தேவைகளை வெளிப்படுத்தும் பெண்களை நடத்தைக்கெட்டவர்களாக்கி, பெண்களை தங்கள் உடலின் தேவைகளை அறிந்துகொள்வதற்குகூட அனுமதிக்காமல், பெண்ணுடலை காமத்திலிருந்து நுட்பமாக சமூகம் அந்நியப்படுத்தி வைத்துள்ளது.

பெண்ணுடல் ஆண்களின் பண்டம், கணவனுக்குத் தேவையெழுகின்ற பொழுதெல்லாம் பெண்ணுடல் வளைந்து கொடுக்க வேண்டும் என்று குடும்ப அமைப்பு கட்டமைத்து, பெண்ணுடலுக்கும் தேவை உள்ளது என்பதை பெண்களாலேயே உணர்ந்து கொள்ள முடியாதபடி காமத்தை சிக்கலானதாக்கி வைத்துள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை, குடும்ப வன்முறைகள், மன அழுத்தம், பூர்த்தியடையாத அல்லது புரிந்து கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்ட காமம் போன்ற காரணங்களால் இந்திய ஒன்றியப் பெண்கள் முன்கூட்டியே மெனோபாஸை அடைந்துவிடுகின்றனர். வாழ்க்கை முறையில் முற்றிலுமாக மாறுபட்டிருக்கும் மலசர் பழங்குடிப் பெண்களுக்கு மெனோபாஸ் குறித்த முழுமையான புரிதல் கூட கிடையாது. “இரத்தப் போக்கு இப்போதான் நின்னுச்சு, சனியன் நின்னதும்தான் ஏதோ அசதியா எதையோ தொலைச்ச மாதிரியிருக்கு” என்று மிகச்சாதாரணமாக கூறுகின்றனர்.

மலசர் பெண், PC: sadhashivan.com

மலசர் பழங்குடிப் பெண்களின் வாழ்க்கை முறையிலும் சில அர்த்தமற்ற சடங்குகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும் அடிப்படையில் பாலின சமத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளனர். மலசர் பழங்குடி பெண்கள் குடிப்பதாலும், காமத்தில் வெளிப்படைத்தன்மையோடு இருப்பதாலும், மலசர் பழங்குடிகளை நாகரீகமற்றவர்களாக கிராம மக்கள் கருதுகின்றனர். ஆண்கள் குடித்துவிட்டு குடும்ப பெண்களைத் தாக்குவதை சாதாரணமாகக் கருதுகின்ற கிராமத்தினர், ஆணாதிக்க கட்டமைப்போடு முரண்படுகின்ற அல்லது மாறுபட்டு நிற்கின்ற பெண்களை, ‘மலசச்சி போல நடந்து கொள்கிறாய்’, என்று ஏசுவதும் உண்டு.

கிராமத்து மக்கள் தங்களை இழிவுக்குரியவர்களாகக் கருதாமல் மதிக்க வேண்டும் என்று நினைக்கின்ற மலசர் பழங்குடிகள், மெல்ல மெல்ல தங்களது சமத்துவ மரபை இழந்து வருகின்றனர். கிராமங்களின் ஆணாதிக்கப் பண்பாடுகளுக்குள் மலசர்கள் தங்களையும் தொடர்பு படுத்திக்கொள்கின்றனர். கிராமவாசிகளாக மாறியுள்ள மலசர்கள் சமத்துவத்தை இழந்து, ஆணாதிக்க கட்டமைப்பை நோக்கி நகர்கின்றனர். கிராமங்கள் மீது அழகியல் பிம்பத்தை வைப்பது என்பது போலியான போக்காகும். பெரும்பாலான தமிழக கிராமங்கள் ஆணாதிக்கத்தாலும், சாதிய ஆதிக்கத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. கிராமங்களில் வசிக்கும் பழங்குடிகளை ஆதிக்க சாதியினர் தங்களது கட்டுப்பாட்டிலே வைத்திருக்கின்றனர். கிராமங்களை ஜனநாயகப்படுத்துவதற்கான பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கட்டுரையாளரின் முந்தைய படைப்பு:

கட்டுரையாளர்

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.