கயல் எழுத்து – 1
பெண்கள் தினம் வந்தாலே ஊரிலுள்ள அனைத்து நகைக்கடைகள், துணிக்கடைகளில் இருந்து வாழ்த்துகள் பறந்தவண்ணம் இருக்கும். கோலப் போட்டிகளும், சமையல் போட்டிகளும் களைகட்டும்!
சில வருடங்களுக்கு முன் என் அலுவலக நண்பர் ஒருவர், பெண்கள் தின வாழ்த்து சொல்லி மேடையில் பேசினார். “நான் காலை எழுந்து கிளம்பி வந்தால் வேலையில் மூழ்கி விடுவேன். வீட்டில் நடப்பது எது பற்றியும் தெரியாது. வீடு திரும்புவதற்குள் அனைவரும் தூங்கிவிடுவார்கள். வீட்டு நிர்வாகம், குழந்தைகள், அவர்களது படிப்பு, தனது வேலை, என அனைத்தையும் என் மனைவி பம்பரமாகச் சுற்றி பார்த்துக்கொள்கிறார். அவருக்கு நன்றி, இங்கு அதுபோல ‘சூப்பர் உமனாக’ சுழலும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ஆண்களால் நிச்சயம் இவை அனைத்தையும் செய்ய முடியாது. எங்களுக்கு பேலன்ஸ் செய்ய தெரியாது”, என்று நெகிழ்ந்து வாழ்த்தினார். உடனிருந்த தோழிகள் பலருக்கு புல்லரித்தது.
ஆனால் இப்படிப் பேசி, பெண்களுக்கு இவை எல்லாம் இயல்பாக கைவருவதாகக் காட்டுகிறார்கள். உண்மையில் பெரும்பாலான பெண்களுக்கு வேறு வழி இருப்பதில்லை. இவரைப்போல இவரது மனைவியும் நடந்து கொண்டால்? அதற்கான வாய்ப்பில்லை. “நான் இவற்றை எல்லாம் செய்யாவிட்டால் குடும்பம் என்ன ஆகும்?” என்று பெண்கள் அச்சத்திலேயே வைக்கப்படுகிறார்கள். நிதர்சனத்திலும் நம் சமூகத்தில் ஒரு குடும்பம் வீழ்ந்தால், அதனால் பெண்ணுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் இவர்கள் சொல்வதைப் போல வேலை, குடும்பம் என எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அது எளிதாகவெல்லாம் இல்லை.
“இந்த தலைமுறை இந்திய ஆண்கள் தங்கள் குடும்பத்துப் பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்புகிறார்கள். உலக சராசரியை விட இது இந்தியாவில் அதிகம்” என்று சில ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக செய்தித்தாள் ஒன்றில் படித்தேன். ஒரு நிமிடம் நான்தான் தவறாக எண்ணி விட்டதாக வருந்தினேன். ஆனால் இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், வெளிநாடுகளில் ஒரு பெண் வேலைக்குப் போனால், அந்த குடும்பத்து ஆண் வீட்டில் பாதி வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். ஆனால் நம் நாட்டில், தன் வீட்டுப்பெண் வேலைக்கு போவதால் ஆண்சந்திக்கக் கூடிய இடர்களும், கூடுதல் பொறுப்புகளும் மிகக் குறைவு. பெரும்பாலான குடும்பங்களில் வேலைக்கு போவதை கூடுதல் பொறுப்பாகத்தான் பெண் ஏற்றுக்கொள்கிறாள்.
எந்த வேலைக்குப் போனாலும் வீட்டு பொறுப்பை சேர்த்து பார்க்காவிட்டால் அப்பெண்ணே குற்றவுணர்வுக்கு ஆளாகும்படி நாம் அவளை வளர்க்கிறோம். இருவீட்டு பெரியவர்கள் பிள்ளை வளர்ப்பதும் வேறு நாடுகளில் கிடையாது. சம்பாதிக்கிறாள் என்பதற்காக பெரிய முதலீடு, சொத்து போன்றவற்றில் பெண் தன்னிச்சையாக முடிவும் எடுப்பதில்லை. “எனக்கு பெரிதாக எந்த கூடுதல் கஷ்டமும் இல்லாமல், நீ அதிக பொறுப்பை சுமந்து, பொருள் ஈட்டி, பெற்றோருக்குகூட அதிகம் செலவு செய்யாமல் முழுதாய் குடும்ப வருமானத்தில் போடப்போகிறாய்”, எனும்போது, நோகாமல் நோன்பு கும்பிட கசக்குமா என்ன?
வழிவழியாக ஆணின் கடமை வெளியில் சென்று பொருளீட்டுவது, பெண்ணின் வேலை வீட்டை பராமரிப்பது என்றே இருந்திருக்கிறது. பெண்கள் தாங்களும் வெளியில் சென்று பொருளீட்ட விரும்பினால் , வீட்டில் தனக்கென்று இருக்கும் எல்லா வேலைகளையும் சரிவர முடித்த பின்தான் மீதமுள்ள நேரத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறார்கள். மற்ற வேலைகளுக்கெல்லாம் வெளியாள் ஒருவரை உதவிக்கு நாடினாலும், குழந்தை பிறப்பு மற்றும் வளர்ப்பில் வேறு வாய்ப்பில்லாமல், உதவியின்றி நிறைய பெண்கள் வேலையை விடுகின்றனர். மீறி குடும்ப உதவியுடனோ, காப்பகங்கள் உதவியுடனோ பிள்ளையை வளர்த்து வேலைக்கும் சென்றால், தொடர்ந்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.
முந்தைய தலைமுறைகளில் எழுத்தறிவித்தல் தந்தையின் கடனாக இருந்தது. இப்போது குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, வெளியில் பொருட்கள் வாங்கச் செல்வது, என அனைத்தையும் பெண் செய்ய வேண்டி இருக்கிறது. ஆண் வீட்டிற்கு செய்யக் கூடிய எல்லா வேலையும் ‘மனைவிக்கு செய்யும் உதவி’ என்றே வரையறுக்கப் படுகிறது. உதவி/ஒத்தாசை ஆகியவற்றுக்கு கட்டாயம் இல்லை, நேர நெருக்கடி கிடையாது. சில வேலைகளை அங்கொன்றும் இங்கொன்றும் செய்தாலும், அப்பட்டமான தேவையாக இருக்கும் வேலைகளைக் கூட, ‘நீ சொல்லவில்லை, நான் செய்யவில்லை!’ என்று தட்டிக் கழிக்க முடியும். சில இடங்களில் இந்தக் காட்சி மாறி இருக்கிறது. ஆனாலும் நம்மைச் சுற்றிப் பார்த்தால், இந்த பொண்டாட்டி ஜோக்குகள் எல்லாவற்றையும் தாண்டி வீடுகளில் அதிக பணிச்சுமையை, உடலளவிலும், மனதளவிலும் சுமப்பது யார்? நம் மனசாட்சிக்கு பதில் தெரியும்.
பணியிடங்களைப் பொறுத்த வரை, பெண்களுக்கான வாய்ப்புகள் எப்போதும் மறுக்கவே படுகின்றன.
மீறி பணி செய்யும் பெண் ஊழியர்கள் நேரம் கடந்த கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாத போதும், தேவைக்கு என்று விடுப்பு எடுக்கும் போதும், ஒரு பக்கம் பெருந்தன்மையாக விடுப்பு அளித்து, இன்னொரு பக்கம் அவர்களுக்கு வேலை மீதுள்ள பொறுப்புணர்வை கேள்வி கேட்டபடி இருக்கின்றன. குடும்பமும் பணியிடமும் மட்டுமல்ல, சமுதாயமும் தன் பங்கைச் செவ்வனே செய்கிறது.
சமீபத்தில் சென்னையில் பிரபல பள்ளி ஒன்றில் தன் பிள்ளையை சேர்க்க நண்பர் ஒருவர் சென்றிருக்கிறார். பொதுவாக அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பது கடினம். சென்னையில் எந்தப் பள்ளியில்தான் எளிதாக இடம் கிடைக்கிறது? ஆனால் நண்பரின் மனைவி அந்தப் பள்ளி முன்னாள் மாணவர் என்பதால், தனி இட ஒதுக்கீட்டில் இவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருக்கிறார்கள். இவர்களும் நெப்போலியன் குதிரை பெயர் உட்பட அனைத்தையும் கரைத்துக் குடித்து, குழந்தைக்கும் ஊட்டி அழைத்துச் சென்றுள்ளனர்.
எல்லா கேள்விகளையும் கேட்டு, இறுதியில் குழந்தையின் தாய் வேலைக்கு செல்பவர் என்பதால் இடம் மறுக்கப்பட்டுள்ளது – நேரடியாகச் சொல்லவில்லை; ஆனால் அவர்கள் கேள்விகளில், பேச்சில் தெரிந்துள்ளது. வேலைக்கு செல்லும் தாயால் குழந்தைக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுக்க முடியாது என்பது காரணமாக இருந்தால், பள்ளியாகிய உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து பிள்ளையை வீட்டுக்கு அனுப்புவதை விட வேறென்ன வேலை?
இன்னும் எத்தனை இடங்களில் பெண்கள் தாங்கள் தற்சார்போடு இருப்பதற்கு விலை கொடுக்க வேண்டும்? இதே பள்ளி நிர்வாகம், அந்த பெண் பணியில் பெரிய நிலையை எட்டினால், மகளிர் தின விழாவிற்கு விருந்தினராக அழைக்கும்; எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவி என்று செய்தித்தாளில் அரை பக்கம் விளம்பரம் கொடுக்கும். இதற்கெல்லாம் தகுதி ஆனவர், தாயாக இருந்து தன் குழந்தையைப் பள்ளியில் சேர்க்க தகுதி அற்றவர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது சமூகம்.
இது பெரும்பாலும் மத்திய வர்க்க பிரச்சனைகள் என்றால், அடித்தட்டு பெண்களின் உலகம் இன்னும் கொடுமையானதாகவே இருக்கிறது. பணக்காரக் குடும்பத்துப் பெண்களும் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிவிட முடிவதில்லை.
குடும்பம், சமூகம், பணியிடம் என்று எல்லா அமைப்புகளும், பெண் வெளிப்பணியே இல்லாதது போல் வீட்டிலும், குடும்பம் என்ற ஒன்றே இல்லாதது போல் பணியிலும் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றன. இதில் ஆண்களுக்கு மட்டுமல்ல, இந்த அமைப்பை நம்பும் பெண்களுக்கும் பங்கு இருக்கிறது.
இந்த இரட்டை நிலைப்பாட்டை சமாளிக்க முடியாமல், படித்த, தகுதி வாய்ந்த பல பெண்கள் திணறிக் கொண்டே இருக்கின்றனர்.
இதைப்பற்றி நமக்கென்ன கவலை?!
மார்ச் மாதம் வந்துவிட்டது – “ஒரு தாயாக, சகோதரியாக, மகளாக, தாதியாக” என்று தொடங்குவோம்!
படைப்பு:
கயல்விழி கார்த்திகேயன்
திருவண்ணாமலையைச் சேர்ந்த கயல்விழி, சென்னையில் பெருநிறுவனம் ஒன்றில் மேலாண்மை நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர். ஹெர் ஸ்டோரீஸுக்காக அவர் எழுதும் முதல் கட்டுரை இது!
Amazing article Kayalvizhi… you have nailed it !!