உழைக்கும் மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டிய பெண்கள் தினம், இன்று பூங்கொத்துகள், கொண்டாட்டங்கள், பரிசு பொருள்கள் என்று வணிகமயமாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகப் பணியிடங்களில் தங்கள் பெண் ஊழியர்களைக் கொண்டாடும் விதமாக, அவர்களுக்கு என்று அங்கீகாரம் அளிக்கும் விதமாகப் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். ஆனால், பல்வேறு அலுவலகங்களில் பெண்கள் என்று சொல்லும் போதே, ஒரு கோலப் போட்டி, சமையல் போட்டி, தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து வருவது என்று இதை ஓர் ஆண்டு விழா போன்ற கொண்டாட்டமாக மாற்றிவிடுகிறார்கள். குடும்பங்கள் பெண்களைப் போல் தங்களால் எப்போதுமே இருக்க முடியாது என்று குறுஞ்செய்திகளையும் படங்களையும் அனுப்பி விடை பெற்றுக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களுக்கு இத்தகைய கொண்டாட்டங்களினால் என்ன உணர்வு ஏற்படுகிறது என்றுகூட யாருக்கும் அக்கறை இருப்பதில்லை.

மகளிர் தினத்திற்கு அனைவரும் ஒரே போன்ற புடவை உடுத்தி வாருங்கள் என்று சொல்வது, ஒரு சமையல் போட்டியும் கோலப் போட்டியும் நடத்துவது மீண்டும் மீண்டும் சமையலறைதான் பெண்ணின் இடம் என்றும் பெண் தன் வசதியைவிடத் தோற்றத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாகப் பல நேரங்களில் அமைகிறது. உண்மையில் உழைக்கும் பெண்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முதல் அடியை எடுத்து வைக்கும் தினமாக இந்தத் தினம் அமைய வேண்டும். அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இந்த வருடம் மகளிர் தினத்தை உங்கள் குடும்பம், சமூகம், பணியிடம் எப்படிக் கொண்டாடினால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதைச் சில பெண்களிடம் கேட்டபோது, அவர்கள் அனைவரின் பதிலும் ஒரே பாணியில் ஒரே கருத்துகளைத்தான் மீண்டும் மீண்டும் சொல்வதாக இருந்தன.

அதன் சாராம்சம் நீங்கள் எங்களை ஒருநாள் மட்டும் கொண்டாட வேண்டாம், வருடத்தின் எல்லா நாட்களிலும் சக மனுசியாக உயிருள்ள இணையாக நடத்தினால் போதும் என்பதாகவே இருந்தது. அதைத் தாண்டி இந்த ஒரு நாளைப் பயன்படுத்தி சில விஷயங்கள் செய்யலாம் என்றால் அவை என்னவாக இருக்கும்?

குடும்பத்திடம் வீட்டு வேலைகளில், குழந்தை வளர்ப்பில் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகப் பல பெண்கள் சொன்னார்கள். தங்களுக்கு என்று ஒரு நாள் விடுப்பு இன்றைய சூழலில் பல பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுயசார்பு பெற்றவர்களாக இருக்கும் போது அவசியமாக இருக்கிறது. ஆனால், வீட்டு வேலைகளில் இருந்தும் குழந்தைகள் பராமரிப்பிலிருந்தும் ஒரு நாள்கூட பெண்களுக்கு விடுமுறை எல்லை கிடைத்ததில்லை என்று பெண்கள் மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்கள். எவ்வளவு பொறுப்பு உடையவர்களாக இருந்தாலும் ஒரு நாள் ஓய்வு என்பது அவ்வப்போது அனைவருக்கும் தேவைப்படும் ஒன்று, இதற்கு பெண்கள் இவ்வளவு ஏங்கும் நிலையில் நம் குடும்பங்கள் இருக்க வேண்டியது இல்லை. குடும்பத்தில் ஆண்கள் வீட்டு வேலைகளிலும் குழந்தை வளர்ப்பில் பங்களிக்க தொடங்கும் நாளாக இந்த மாதிரி தினத்தைப் பயன்படுத்தி எந்தெந்த விஷயங்களில் பெண்களுக்கு அதிக பங்களிப்பு தேவைப்படுகிறது என்று கேட்ட தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றினாலே பெண்கள் தினத்தில் வெற்றியாக, கொண்டாட்டமாக அது அமையும். பெண்களை உழைப்பின் சிகரங்களாக, தியாகத்தின் திருஉருவகங்களாகப் பிரிப்பதை விட்டுவிட்டு, உழைப்புச் சுரண்டலில் இருந்து உங்கள் பங்களிப்பின் மூலம் வெளிக்கொணர்வதுதான் உண்மையான கொண்டாட்டமாக இருக்க முடியும்.

பணியிடப் பாதுகாப்பு

ஓரிரண்டு தலை முறைகளாகப் பெண்கள் வீட்டிற்கு வெளியே வேலைக்குச் சென்று வருகிற போதும் பணியிடங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பானவையாக இருப்பதில்லை. இதை அமைப்பு ரீதியாகச் சரி செய்ய வேண்டிய பொறுப்பில் பணியிடங்கள் இருக்கின்றன. நன்றாகப் படித்து அனைவரும் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், ஆண்களுக்குக் குடும்பப் பொறுப்புகள் பாரமாக இருக்காததால் எளிதாகப் பணிகளில் முன்னேறி, பெண்கள் பின்னடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதைத் தவிர்க்க தேவையான சட்ட திட்டங்களைப் பற்றிச் சிந்திக்கிற முக்கியமான ஒரு நாளாக இந்த நாளை பணியிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். பெண்களுக்குப் பூக்களும் பரிசுகளும் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணுவதற்காகச் சில வழி முறைகளை இலவசமாகப் பணியிடங்கள் செய்து கொடுக்கலாம். இது பெரும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கானது மட்டுமல்ல. நம் வீடுகளில் நம் வீட்டு வேலைகளில் பங்கெடுக்க வரும் பெண் ஊழியர்கள், உதவியாளர்கள் இருந்தால் அவர்களுக்கு என்று ஏதோ ஒன்று செய்வதற்காக இந்த ஒரு நாளை அடையாளமாக நாம் பயன்படுத்தலாம். அவர்களுக்கு என்று ஒரு மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கு வழி செய்யலாம். நீண்ட நாட்களாக அவர்கள் தவிர்த்து வரும் ஒரு மருத்துவ ஆலோசனையை அமைத்து தரலாம்.

ஒவ்வொரு பெண்கள் தினச் சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் பெண் சாதனையாளரிடம், “தனிப்பட்ட வாழ்வையும் சாதனையையும் எப்படிச் சமன் செய்தீர்கள்?” என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. இது பெண் சாதனையாளர்களிடம் கேட்கப்பட்டு, ஆண்களிடம் கேட்கப்படாததே இலைமறை காயாக ஓர் அழுத்தத்தைப் பெண் மீது திணிக்கிறது. என்ன சாதனை புரிந்தாலும் குடும்பச் சுமைகளை நீ சுமந்தே தீர வேண்டும் என்பதாக அந்தக் குரல் ஒலிக்கிறது. இத்தகைய மறைமுக அழுத்தங்கள் பெண் ஆண்மைய சமூகத்தில் வெற்றி பெற விரும்பினால் இரட்டை உழைப்பைத் தர வேண்டும் என்று கோருகிறது.

நம் சமூகம் வைத்திருக்கும் பொது விதிகளுக்கு உட்பட்டு வாழும் பெண்களை கொண்டாடி, விதிகளை மீறும் பெண்களை தண்டிப்பதை விடுக்கவும், பெண்களின் சமூகப்பங்களிப்பை ஊக்குவிக்கும் அளவிற்கு ஆணின் குடும்பப் பங்களிப்பை ஊக்குவிக்கவும் வழி வகைகள் செய்ய இந்த மகளிர் தினம் ஒரு வாய்ப்பாக அமையட்டும்!

(தொடரும்)

படைப்பாளர்:

கயல்விழி கார்த்திகேயன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த கயல்விழி, சென்னையில் பெருநிறுவனம் ஒன்றில் மேலாண்மை நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர்.