சாதி என்பது மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்ற வன்கொடுமை மிக்க அமைப்பு. சாதிய ஏற்றத்தாழ்வை சமகாலத்தில் பேச ஒவ்வாத பொருளாக மாற்றி வைத்திருக்கிறோம். சாதிக் கொடுமை எங்கோ கிராமங்களில், ஏழைகள் மட்டும் அனுபவிக்கும் விஷயமாகப் பார்க்கப் படுகிறது. “இப்போலாம் யார் சாதி பார்க்கிறார்கள்?” என்று அடிக்கடி கேள்வியுறுகிறோம். ஆனால் வாடகைக்கு வீடு தேடப்போகும் போது, காதலரின் வீட்டில் திருமணம் பேசப் போகும் போது, புதிய நண்பர்களின் குடும்பங்களை சந்திக்கும்போது என பல இடங்களில் பெயர், குடும்பம், பூர்விகம், உணவுப்பழக்கம் என பல கணிப்புகளில் நம் சாதியைத் துப்பறிய முயல்வதை அனுபவித்திருப்போம். சாதியைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் யாரவது ஒருவர், “இந்த பள்ளிகளிலெல்லாம் ஏன் சாதி கேட்கிறர்கள்?”, “என் பிள்ளைக்கெல்லாம் அவங்க என்ன சாதின்னே தெரியாம தான் வளத்திருக்கேன்” என்றெல்லாம் பெருமை பேசுகிறார்கள்.
உண்மையில் அலசிப்பார்த்தால், உங்கள் பிள்ளை சாதி தெரியாமல் வளர்வதே, நீங்கள் ஆதிக்க சாதியைச் சார்ந்தவராக இருந்தால் தான் நடக்கும். ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு குழந்தைக்கு அவரது பெற்றோர் சொல்லாவிட்டாலும் இந்த சமூகம் ஏதோ ஒரு வேறுபாட்டின் மூலம் சொல்லிக் காட்டி கொண்டே தான் இருக்கும். இந்த தொல்லையே வேண்டாம் என்று மதம் மாறியவரைக்கூட சாதியை வைத்து அடையாளம் காண்பது பரவலாக இருக்கிறது. சாதி சங்கங்கள் வைப்பது, சாதியின் பெயரால் சண்டையிட்டு மடிவது பெரும்பாலும் ஆண்கள் ஆனாலும், சாதியின் அருமை பெருமைகளைக் காப்பதும், அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் குடும்பப்பெண்ணின் கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பல காதல் சாதி எதிர்ப்பு திருமணங்களுக்கு எதிராக அம்மாக்கள் போரிடுவதற்கு காரணம் சாதிய பெருமையைக் காப்பது அவர்கள் கடமையாக பார்ப்பதால் தான். உண்மையில் இந்த சாதிய அமைப்பு எல்லா சாதிகளை சேர்ந்த பெண்களையும் ஒடுக்கவே செய்கிறது. ஆனாலும் இன்னும் குழந்தையே பெறாத என்னிடம் கூட, “எதிர்காலத்தில் குழந்தை பிறக்கும் போது, அதற்கு நாம் இன்ன ஆட்கள்” என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று குடும்பங்கள் ஏற்கனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றன.
இத்தகைய சூழலில் என் அடுத்த தலைமுறையை சாதி தெரிந்து வளர்ப்பேனா? தெரியாமல் வளர்ப்பேனா? சாதி தெரியாமல் வளர்ந்தால் எல்லாம் சரி ஆகிவிடுமா? நூற்றாண்டுகளாக மறுக்கப்படட வாய்ப்புகள், அதனால் உண்டான இடைவெளிகள், ஏற்பட்ட வலிகள் எல்லாம் மறைந்து விடுமா? எல்லாக் கோட்டையும் அழித்தால் தானே முதலிலிருந்து தொடங்க முடியும்? பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா? சாதியின் பெயரால் ஏற்பட்டிருக்கும் பிளவுகள், ஏற்ற இறக்கங்கள் எல்லாம் சமமாகி விடுமா? ஆணவக் கொலைகள் ஒழிந்து விடுமா? இத்தனை நூற்றாண்டு பாகுபாடு அத்தனை எளிதாக மறக்கடிக்க படக்கூடியதில்லை.
நான் வருங்காலத்தில் ஒரு பிள்ளையை வளர்ப்பதானால் இதை சொல்லித் தான் வளர்ப்பேன்:
சாதி இன்னும் ஒழிந்து விடவில்லை. பலர் மனைகளில், மனங்களில் வாழ்ந்துகொண்டு இருக்கிறது. இன்றும் பலர் எந்தத் தவறும் செய்யாமல் தண்டிக்கப்படுகிறார்கள். நீ எந்த முயற்சியும் செய்யாமல், ஏதோ ஒரு நிகழ்தகவில் இந்த ஒரு சாதியில் பிறந்திருக்கிறாய்! இந்த சாதி சிலரை ஒடுக்கியும் சிலரால் ஒடுக்கப்பட்டும் இருந்திருக்கிறது. உன் அறிவால், கல்வியால், பின்புலத்தால் உனக்கான உரிமைக்கு நீ குரல் கொடுக்க முடியும். ஆனால், பலரால் அப்படி வெளிப்படையாகத் தங்களுக்காகப் பேச முடியாமல் போகலாம். ஆனால், அவர்கள் கடந்துவந்த பாதை ரணங்கள் நிறைந்ததாக இருந்திருக்கலாம். அத்தகைய சூழலில் நீ அவர்களுக்குக் குரல்கொடுக்கத் தவறக் கூடாது. அவர்கள் உனக்குச் சமமானவர்கள். உன் முன்னால் உன் நண்பனை ஒருவர் அடித்தால் எப்படித் தட்டிக் கேட்பாயோ அப்படித்தான் இதுவும். சாதி விஷயத்தில் எவர் ஒடுக்கும் சாதி, ஒடுக்கப்படுகிற சாதி என்று சரியாகப் பிரிக்க முடியாது. சாதி, நிறம் போல் இல்லை. கறுப்பு, வெள்ளை என்று சொல்வதற்கு. ஒவ்வொரு சாதியையும் தனக்குச் சாதியப்படி நிலையில் மேல் வைக்கப்பட்டிருக்கும் சாதியால் ஒடுக்கப்படுகிறது. தனக்குக் கீழ் வைக்கப்பட்டிருக்கும் சாதியை ஒடுக்குகிறது. பல நூற்றாண்டுகள் இந்தச் சாதியின் காரணத்தால் உழைப்புச் சுரண்டல் நடந்திருக்கிறது. அடிமைகளாக, மிருகங்களுக்கும் கீழாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். இப்போது நிலைமை மாறி வருவது உண்மை தான். ஆனால், இன்னும் முழுமையாக மாற்றம் வரவில்லை. நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வாய்ப்புகளில் பலர் தங்கள் சாதிக்கான இடங்களைப் பற்றிக்கொள்கிறார்கள். இழிவென கருதப்படும் சில வேலைகளில் சில குறிப்பிட்ட சாதிகளை மட்டும் தொடர்ந்து பணி அமர்த்துகிறார்கள். அரசு இத்தகைய சூழலைச் சமன்படுத்த பல சமூக நீதி திட்டங்களை வகுத்திருக்கிறது. அதில் இட ஒதுக்கீடும் ஒன்று.
இட ஒதுக்கீடு என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல; சலுகையும் அல்ல. பல்லாண்டுகளாக நடந்து வரும் பாகுபாடுகளைச் சரிசெய்து பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக இருக்கும் ஓர் அமைப்பு. இட ஒதுக்கீட்டால் ஒருவர் வாய்ப்பை வேறொருவர் பறித்துக்கொள்வதாகச் சொல்வார்கள். அதுவல்ல உண்மை. தலைமுறைகளாகத் திட்டமிட்டு பறிக்கப்பட்ட வாய்ப்புகளைச் சமன் செய்யும் முறை இது. உனக்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் வேண்டியதில்லை. அது உன்னை எந்த விதத்திலும் குறைந்தவர் ஆக்காது.
இட ஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் செய்யாமல் சாதி அடிப்படையில் செய்ய காரணம் இருக்கிறது. சொகுசு கார் வைத்திருக்கும் ஒரு தலித்தையும் ஏழைகளாக இருக்கும் முன்னேறிய வகுப்பினரையும் நீ காண நேரிடலாம். அதனால் இட ஒதுக்கீடு இனிமேல் தேவையில்லை என்றாகாது.
இதை நான் சொல்ல இரண்டு காரணங்கள் இருக்கின்றன:
1. விதிவிலக்குகள் விதிகளாக மாட்டா. தரவுகளைப் புரிந்துகொள்கிற வயது வந்ததும் தேடிப் படி. இந்த நாட்டில் யார் எவ்வளவு செல்வத்தை வைத்திருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியவரும்.
2. பொருளாதார நிலையை மனித முயற்சியால் மாற்றிவிடலாம், ஆனால், சாதியை அப்படி மாற்றிவிட முடியாது. ஒருவர் சொகுசு காரில் வரும் போதும் அவர் சாதியக் காரணங்களுக்காக ஒடுக்கப்படலாம். நாட்டின் மிக நல்ல கல்விக்கூடங்கள் என நான் படித்த இடங்களில் நான் இதைக் கண்டிருக்கிறேன். அது போன்ற இடங்களில், வேலை சார்ந்த சூழலில் பலரும் சாதியைப் பற்றி பேசுவதில்லை.
சாதியைப் பற்றிப் பேசாமல் இருப்பது எளிது. பேசினால் உன்னைத் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லலாம், தகுதியை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்புபவர் என்று சொல்லலாம். அதனால் என்ன? இந்த உலகில் எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலைமையாக இருப்பதும்கூட நாம் செய்யும் அநீதி தான். முடிகிற போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நில். அவர்களுக்குத் தேவைப்படுவதை, உன்னால் ஆனதைச் செய். நீ அவர்களுக்குக் காவலன் அல்ல, அவர்களைக் காத்துக்கொள்ள அவர்களால் முடியும். அதற்கான சூழல் அமைய உன்னால் இயன்ற வரை உதவி செய். இதை உன் சமூகக் கடமையாகக் கொள்!
இவற்றையெல்லாம் நீ உன் அடுத்த தலைமுறைக்குச் சொல்கிற நிலை வராமல் இருக்க நான் விழைகிறேன். அதற்குள்ளாவது காட்சி மாறட்டும். ஆனால், அந்த நாள் வரும் முன்னரே வந்து விட்டதாக நாம் நடிக்க வேண்டாம். முடிந்த அளவு மனிதர்களிடம் கனிவோடு பழகு. புரிந்துகொள்; புரிய வை. ஆனால், தேவை ஏற்பட்டால் கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்.
(தொடர்வோம்)
படைப்பு:
கயல்விழி கார்த்திகேயன்
திருவண்ணாமலையைச் சேர்ந்த கயல்விழி, சென்னையில் பெருநிறுவனம் ஒன்றில் மேலாண்மை நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர்.