“த எம்பயர் டிஜிட்டல் மார்கெட்டிங், ஐ..யாம் வான்மதி. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” என மிக இனிமையாக ஒலித்த பெண்ணின் குரலில் தொடர்ந்து பேசும் தைரியம் உண்டானது சுப்ரியாவுக்கு.
“வாட்ஸப்ல உங்களோட விளம்பரம் ஒண்ணு பார்த்தேன், மேம். அத பத்தின டீடைல்ஸ் தெரிஞ்சுக்கதான் போன் பண்ணேன்” என்றாள்.
“உங்க யூடியூப் சேனல ப்ரோமோட் பண்ணணுமா?”
“இல்ல மேடம் வீட்டுல இருந்தே செய்யற மாதிரி ஒரு பார்ட் டைம் ஜாப் பத்தி ஆட் குடுத்திருந்தீங்க இல்ல, அதுதான். ரியலி ஐ ஆம் இன்ட்ரஸ்டட்” என்றாள்.
“ஓஹ், ஓகே… ஓகே… யுவர் குட் நேம்?”
“சுப்ரியா, மேம்.”
“ஒர்கிங்கா?”
“இல்ல, மேம், ஹோம் மேக்கர்.”
“ஹஸ்பன்ட் எங்க வேல செய்யறாரு?”
ஆனந்த் வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் பெயரைச் சொன்னாள்.
“உங்களுக்கு யூடியூப், இன்ஸ்டாலல்லாம் அக்கவுண்ட் இருக்கா?”
“இல்ல, மேம். எஃப்.பில மட்டும்தான் இருக்கு. அதுலயும் ஆக்டிவா இருக்க மாட்டேன்.”
“ஆனா, இந்த வேலைக்கு யூடியூப் அன்ட் இன்ஸ்டால அக்கவுண்ட் இருக்கறது மஸ்ட்.”
“ஐயோ… இல்லையே…”
“ஒண்ணும் பிரச்ன இல்ல. புதுசா ஒரு ஐ.டி. கிரியேட் பண்ணிடுங்க.”
“ஓகே” என இழுத்தாள் தயக்கத்துடன்.
“உங்களுக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கில்ல?”
“இருக்கு… மேம்…”
“நோட்டிபிகேஷன்ஸ் எல்லாம் உங்க போனுக்குத்தான் வருமா?”
“இல்ல, மேம். அது ஜாயிண்ட் அக்கவுண்ட். நோட்டிபிகேஷன்ஸ் ஹஸ்பன்ட் மொபைலுக்குத்தான் போகும்.”
“ஒண்ணும் பிரச்ன இல்ல, ஒன்ஸ் எங்க பிராஜெக்ட்ல ஜாயின் பண்ணிட்டீங்கன்னா ஒவ்வொரு அசைன்மென்ட்டுக்கும் பேமெண்ட் போடுவோம். அத செக் பண்ணத்தான். இதுல, சில்வர், கோல்ட், டயமண்ட், கோரல், பேர்ல்னு நிறைய பேக்கேஜ் இருக்கு. பேக்கேஜுக்குத் தகுந்த மாதிரி உங்களுக்கு ஜாப் அசைன் பண்ணுவோம். அதுக்குத் தகுந்த மாதிரி நீங்க எர்ன் பண்ண முடியும். சோ, இந்த அக்கவுண்ட் ஓகேன்னா அத யூஸ் பண்ணுங்க. இல்லனா நீங்க மட்டும் ஹேண்டில் பண்ற மாதிரி வேற ஒரு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணிட்டு, உங்க டீடைல்ஸ் எல்லாத்தையும் எனக்கு வாட்சப் பண்ணிடுங்க. ஆல் தி பெஸ்ட்” என்றாள் வான்மதி.
இதெல்லாம் நடைமுறைக்குப் பொருந்தவே பொருந்தாது என்று தோன்ற, சப்பென்று ஆகிப்போனது சுப்ரியாவுக்கு.
“ஓகே, தேங்க்யூ” என அழைப்பைத் துண்டித்தாள்.
மனதுக்குள் ஏமாற்றம் பரவியது. அவ்வளவுதான், இதை இப்படியே விட்டுவிடலாம் என முடிவு செய்தாள். ஆனால், அந்த முடிவில் அவளால் உறுதியாக இருக்க முடியாமல் போனது. காரணம் அடுத்தடுத்த நாள்களில், “என்ன மேடம், என்ன முடிவு செஞ்சிருக்கீங்க” என அந்த வான்மதியிடமிருந்து தொடர் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.
“இல்ல, எனக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இல்ல.”
“அப்படி இல்ல, நீங்க கொஞ்சம் டிரை பண்ணிப் பாருங்க, உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போகும்.”
“எனக்கு வீட்டு வேலையே சரியா இருக்கு, டைம் இல்ல.”
“வீட்டு வேலைதான் தினமும் செய்யறீங்களே! அத மதிச்சு உங்களுக்கு யாராவது கிரெடிட் குடுக்கறாங்களா என்ன? சொந்த இன்கம் எவ்வளவு முக்கியம்? அதுவும் இந்த வேலைக்கு அதிக நேரம் எடுக்காது. ஒரு நாளைக்கு ஹாப் அன் ஹவர் ஸ்பென்ட் பண்ணாகூடப் போதும். உட்கார்ந்த இடத்துல வீக்லி, நீங்க மினிமம் டூ தவுசன்ட் வரைக்கும் எர்ன் பண்ணலாம். நேரம் கிடைக்கும்போது அதிக டைம் எடுத்துச் செய்ங்க. கிடைக்கற நேரத்த உங்க சொந்த இன்கம்மா கன்வெர்ட் பண்ணுங்க.”
“ஆனா, எனக்கு சோஷியல் மீடியால்லாம் ஹேண்டில் பண்ண பயமா இருக்கு.”
“இதுல என்ன பயம். நாம கொஞ்சம் அலர்ட்டா இருந்தா எந்த பிராப்ளமும் வராது.”
“வீட்டுல மத்தவங்களுக்குத் தெரிஞ்சா பிரச்னைங்க.”
“ஏன் சொல்லிட்டு இருக்கீங்க? வேற பேர்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க. சோஷியல் மீடியா யூஸ் பண்ற நிறையப் பேர் அப்படித்தான் இயங்கிட்டு இருக்காங்க. யாரெல்லாம் தொந்தரவுன்னு நினைக்கறீங்களோ அவங்கள முதல்லயே ப்ளாக் பண்ணிடுங்க.”
இவளும் மறுப்பாக ஏதேதோ சால்ஜாப்பு சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தாள். ஆனால், வான்மதி விடுவதாக இல்லை.
சுப்ரியாவின் மனதிற்குள்ளே ஏதோ ஒரு நம்பிக்கை துளிர்த்தது. “என்ன மாதிரியான ஜாப்? இதுக்கு ஏதாவது ட்ரைனிங் குடுப்பீங்களா?” என்று கேட்டு வைத்தாள்.
“இதுக்குப் பெருசா ட்ரெய்னிங்னு எதுவும் தேவைப்படாது, மேம். நாங்க அசைன் பண்ற வேலைய அப்படியே செஞ்சிங்கன்னா போதும். பிராக்டிஸ்ல பிக்கப் ஆயிடும்” என்கிற வான்மதி, “உங்களுக்கு யூடியூப் மானிட்டைசேஷன் பத்தி ஏதாவது தெரியுமா?” என்று கேட்டாள்.
“சாரி தெரியாது.”
“தெரியாதா? யூடியூப் சேனல்ஸ்ல கன்டென்ட் போட்டா, அட்வெர்டைஸ்மென்ட்ஸ்க்குப் பணம் கொடுப்பாங்கல்ல” என வான்மதி சொல்ல, சுப்ரியாவுக்குத் தலையிறக்கம் ஆகிப் போனது.
“தெரியுமே, சில்வர் பிளே பட்டன், கோல்டன் பிளே பட்டன்ன்னு எல்லாம் சொல்லி வீடியோ போடறாங்களே” எனச் சமாளித்தாள்.
“அதெல்லாம் ஒரு சேனல் ஆரம்பிச்சு எக்கச்சக்க கன்டென்ட்ஸ் போட்டு, மில்லியன்ஸ்ல சப்ஸ்கிரைபர்ஸ் வரும்போது யூடியூப்ல இருந்து கொடுப்பாங்க. ஆனா, புதுசா ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சா அது மக்கள்கிட்ட அவ்வளவு சுலபமா போய்ச் சேராது. பைசா தேறாது.”
“ஒஹ்… அப்படியா?”
“எஸ்… அதுக்கு அந்த சேனல்ல விளம்பரம் வரணும் இல்ல?”
“வீடியோ போட்டா விளம்பரம் வராதா?”
“சும்மா வீடியோ போட்டாலாம் விளம்பரம் வராது. அதுக்குச் சில கண்டிஷன்ஸ் இருக்கு.”
“ஓ…”
“ஆமாம்… அதுக்கு தௌசன்ட் சப்ஸ்கிரைபர்ஸ் வரணும். நாலாயிரம் வாட்ச் ஹவர்ஸ் வேணும்.”
“ஐயோ, நாலாயிரம் ஹவர்ஸா?!”
“ஆமாம்… அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. கன்டென்ட் இருந்தா வந்துரும்? இல்லன்னா ஷார்ட் வீடியோஸ் வருது இல்ல அதுல ஒன் கிரோர் வியூஸ் வேணும்.”
“என்ன ஒன் கிரோர் வியூஸா… அதுக்காகத்தான் எல்லாரும் கண்டபடி வீடியோ போட்டுட்டு இருக்காங்களா?”
“ஏன் மேடம், நல்ல வீடியோஸ் எவ்வளவு வருது…”
“ம்ம்…”
“இதல்லாம் நடந்தாதான் சேனல் மானிட்டைஸ் ஆகும்.”
“அம்மா… எவ்வளவு கஷ்டம் இல்ல…”
“கஷ்டம்தான், ஆனா அத ஈசியா ஆக்கதான் நாங்க இருக்கோம், அதுக்குதான் உங்கள மாதிரி நிறைய பேரை ஹயர் பண்றோம். புதுசா சேனல் ஆரம்பிச்சு பணம் சம்பாதிக்க முயற்சி செய்யறவங்களுக்கு சப்போர்ட் கொடுக்கறோம்.”
“அப்படியா? இதுல நான் என்ன செய்ய முடியும்?”
“சப் பார் சப்னு (Sub for sub) ஒரு கான்சப்ட் இருக்கு. அதாவது நீ என் சேனல சப்ஸ்கிரைப் பண்ணு, நான் உன் சேனல சப்ஸ்கிரைப் பண்றேன். இதுதான் பேசிக். ஆனா, இது கொஞ்சம் ஸ்லோ ப்ராசஸ். இப்படிச் செய்யும்போது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யூடியூப் கண்டிஷன்ஸ அச்சீவ் பண்ணிடலாம். இன்னும் ஃபாஸ்ட்டா இந்த அல்காரிதம் ப்ரேக் பண்ண நிறைய சோர்ஸ் வேணும். அதத்தான் நம்ம கம்பெனில கொடுக்கறோம்.”
“ஓஹ்… ஓகே…”
“ரொம்ப சிம்பிள்தான் மேம். இது இல்லாம கமெண்ட்ஸ் பண்றது, ப்ராடக்ட் ரெவ்யூ போஸ்ட் பண்றதுன்னு நிறைய இருக்கு. ஸ்டெப் பை ஸ்டெப் உங்களுக்கு ஒர்க் அலாட் பண்ணுவோம். ஹெசிட்டேட் பண்ணாதீங்க. சும்மா ட்ரை பண்ணிப் பாருங்க. உங்களுக்கு செட் ஆகலன்னா விட்டுடுங்க” என மேலும் மேலும் இவளுக்கு நம்பிக்கை கொடுத்தாள் வான்மதி.
ஓர் அசட்டுத் துணிச்சலில், செய்துதான் பார்க்கலாம் என முடிவெடுத்துவிட்டாள்.
புதிதாகச் சில மின்னஞ்சல் / கூகிள் கணக்குகளை ஏற்படுத்தி, யூடியூப், இன்ஸ்டகிராம், முகநூல் போன்றவற்றில் புதிதாகக் கணக்குகளைத் தொடங்கினாள் ஸ்ரீஷா என்கிற புனைபெயரில்.
இதுகூட அவ்வளவு சிக்கல் இல்லை. கைப்பேசியிலேயே எப்படியோ தட்டுத் தடுமாறிச் செய்து முடித்துவிட்டாள். ஆனால், தனிப்பட்ட ஒரு வங்கி கணக்கைத் தொடங்குவதுதான் அவளுக்குப் பெரும் சவாலாக இருந்தது.
இதுவரை தனித்து எதுவும் செய்ததில்லை. வீட்டைப் பூட்டிக்கொண்டு தனியே எங்கேயும் சென்றதுமில்லை. வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்குக்கூட சாமி உண்டியலிலிருந்து ஆயிரம் ரூபாயை உருவி எடுத்தாள்.
வீட்டிற்கே வந்து வங்கிக் கணக்கு ஏற்படுதிக் கொடுக்கும் வசதி இருந்தும், ஏற்கெனவே கணக்கு இருக்கும் வங்கியில் இல்லாமல் வேறு வங்கிக்கு நடையாக நடந்தாள். நிறைய சந்தேகம், எக்கச்சக்க தயக்கம் அவளை அலைக்கழித்தது! ஏடிஎம் கார்டு பெற, இணையப் பரிவர்த்தனை மற்றும் யூபிஐ கணக்கு ஏற்படுத்த என, அதிக நாள்கள் கடந்துபோயின. அதற்குள் அந்த வான்மதி அவளை நச்சரித்துவிட்டாள்.
குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல், குறிப்பாக ஆனந்துக்குத் தெரியாமல் ஒவ்வொன்றையும் செய்யும்போது உயிரைப் பணயம் வைத்து ஏதோ சாகசம் புரிவதுபோல அவ்வளவு திகிலாக இருந்தது சுப்ரியாவுக்கு. ஒருவித பதற்றமும் படபடப்பும் அகலாமல் இருந்தது. ஆனாலும் அனைத்தையும் செய்துமுடித்துவிட்டு வான்மதிக்குத் தெரியப்படுத்தினாள்.
அவர்களுடைய இணையதளத்தில் இவளை உறுப்பினராகப் பதிவு செய்யச் சொல்லிவிட்டு, அத்துடன் தன் கடமை முடிந்ததென்று தொடர்பற்றுப் போனாள்.
அடுத்த நாளே இவளை ‘சில்வர் ஸ்டார்ஸ்’ எனும் வாட்ஸப் குழுவில் இணைத்தார்கள். ரஞ்சனா என்பவள் நிர்வாகியாக இருக்கும் அந்தக் குழுவில் இவளைப் போன்றே நிறையப் பகுதிநேர ஊழியர்கள் உறுப்பினராக இருந்தனர்.
ரஞ்சனா இவளை அங்கே எல்லாருக்கும் அறிமுகம் செய்தாள். தொடர்ந்து சிலர் வரவேற்று வாழ்த்துக் கூறினர். அதன்பின் ‘அமுதாஸ்’ என்னும் சேனலை சப்ஸ்கிரைப் செய்துவிட்டு, அந்த சேனலில் உள்ள பத்து வீடியோக்களை முழுவதுமாகப் பார்த்து, ஒவ்வொன்றுக்கும் கமெண்ட் செய்யும்படி இவளுக்கு ரஞ்சனா மூலம் தகவல் வந்தது.
அவள் அனுப்பியிருந்த இணைப்பை அழுத்தி உள்ளே போய், பெல் பட்டனை கிளிக் செய்து ‘அமுதாஸ்’ சேனலை சப்ஸ்கிரைப் செய்தாள் சுப்ரியா.
உண்மையில் அமுதாவின் நடனம் மிகவுமே நன்றாக இருக்க, இவளுக்குப் பிடித்துதான் இருந்தது. ஒவ்வொரு வீடியோவாகப் பார்த்துப் பின்னூட்டம் இடத் தொடங்கினாள்.
அடுத்தடுத்து வேறுவேறு சேனல்கள், வேறுவேறு வீடியோக்கள். கரும்புத் தின்னக் கூலிபோல கிடைத்த வருவாயில் அந்த வார இறுதியில் சாமி உண்டியலிலிருந்து எடுத்த பணத்திற்கு நூறு ரூபாய் வட்டி சேர்த்து அதை அந்த உண்டியலில் திரும்பச் செலுத்தினாள். பயம் தெளிந்து அவள் மனம் சந்தோஷ வானில் சிறகுகள் விரித்துப் பறக்கத் தொடங்கியது.
(தொடரும்)
படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.




